ஜக்ஸனின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை ஒரு மில்லியன் பேர் கலந்து கொள்வார்கள் என மதிப்பீடு
பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜக்ஸனின் மரணச்சடங்கானது எதிர்வரும் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு கலிபோர்னியா மாநிலத்திலுள்ள "ஸ்டப்லஸ்' மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
20,000 ஆசனங்களைக் கொண்ட மேற்படி மைதானத்தில் நடைபெறும் மைக்கேல் ஜக்ஸனின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்காக 11,000 இலவச அனுமதிச் சீட்டுகள் விநியோகிக்கப்படவுள்ளன.
மேற்படி பொது மரணச்சடங்கிற்கு முன் மைக்கேல் ஜக்ஸனின் குடும்பத்தினர் பிரத்தியேக சடங்கொன்றை நடத்தவுள்ளதாக ஜக்ஸனின் சகோதரர் ஜெர்மெயின் ஜக்ஸன் தெரிவித்தார்.
மைக்கேல் ஜக்ஸன், தான் இறப்பதற்கு இரு இரவுகளுக்கு முன் லண்டனில் நடைபெறவிருந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக "ஸ்டப்லஸ்' மைதானத்திலுள்ள அரங்கில் ஒத்திகையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் போது ஜக்ஸன் தனது "ஹிஸ்டறி' இசைத் தொகுப்பிலுள்ள "தே டோன்ட் கெயார் எபவுட் அஸ்' என்ற பாடலைப் பாடி, 8 ஆண் நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி ஒத்திகை செய்தமை குறிப்பிடத்தக்கது.
நெவர்லான்ட் பண்ணை இல்லத்தில் மைக்கேல் ஜக்ஸனின் உடலை பொது மக்கள் பார்வைக்கு வைப்பதற்கும் பிரத்தியேக மரணச்சடங்கை நடத்துவதற்கும் முன்னர் முன் வைக்கப்பட்ட திட்டம் சட்ட மற்றும் நிதியியல் சவால்களையடுத்து கைவிடப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நெவர்லான்ட் பண்ணை இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு மைக்கேல் ஜக்ஸனின் உடலை வைக்க அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சட்ட அமுலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment