கள்ளக்காதலும், போதைப்பழக்கமும் குடும்பத்தை சீரழித்து விட்டது: மகனை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்காதலும், போதைப்பழக்கமும் எனது குடும்பத்தை சீரழித்து விட்டது என மதுரையில் மகனை கொன்ற தாய் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மதுரை பொன்மேனி நகர் 1வது தெருவை சேர்ந்த மேரி (47), தனது கள்ளக்காதலன் பாட்ஷா (38) உடன் சேர்ந்து மகன் கிருஷ்ணமூர்த்தியை (23) கொலை செய்தார். அவரது உடலை துண்டு துண்டாக்கி பல்வேறு பகுதிகளில் வீசினார். இதுதொடர்பாக மேரி, பாட்ஷா, ஜோசப் ஆண்டனி ஆகியோரை எஸ்எஸ் காலனி போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மேரி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
கணவர் துரைராஜ் இறந்தவுடன் அவர் பணியாற்றிய காதி நிறுவனத்தில் எனக்கு வேலை வழங்கப்பட்டது. எனது மகன் கிருஷ்ணமூர்த்தி கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானான். நான் வாங்கும் சம்பளத்தை மகன் அடிக்கடி தட்டி பறித்து கொள்வான். மகனுக்கு பணம் கொடுத்தே கடனாளியானேன். கடனிலிருந்து மீள்வதற்கும், வாழ்க்கைகக்கும் ஒரு துணை தேவைப்பட்டது. அப்போது தான் பாட்ஷாவுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் அடிக்கடி எனது வீட்டுக்கு வருவார். போதை ஊசி போட்டு உல்லாசமாக இருப்போம். அதனால் ஒரு நாள் கூட நாங்கள் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. எங்கள் தொடர்பை சாதகமாக பயன்படுத்தி, பாட்ஷாவிடம் பணம் வாங்கி தருமாறு எனது மகன் என்னை அடித்து துன்புறுத்தினான். இரண்டு மாதத்துக்கு முன்பே எனது மகனை கொல்ல திட்டமிட்டோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நகை வியாபாரி கொலையான விதம் குறித்து செய்தி தாள்களில் பார்த்து தெரிந்து கொண்டோம். அதேபாணியில் கொலை செய்வதற்கு கத்தி மற்றும் கேரி பேக்குகளை 24ம் தேதி வாங்கினோம். 25ம் தேதியன்று இரவு எனது மகனை அடித்து கொன்று உடலை துண்டு துண்டாக்கினோம். உடல் பகுதிகளை பிரிட்ஜில் வைத்து அடைத்தோம். ஒவ்வொரு பாகமாக எடுத்து சென்று பல்வேறு பகுதிகளில் பாட்ஷா வீசி வந்தார். கள்ளக்காதலும், போதை பழக்கமும் எனது குடும்பத்தை சீரழித்து விட்டது.
இவ்வாறு அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கொலையான கிருஷ்ணமூர்த்தியின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இவரது உறவினர்கள் யாரும் உடலை வாங்குவதற்காக இதுவரை வரவில்லை. அதனால் உடலை யாரிடம் ஒப்படைப்பது என போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment