விஜித ரோஹன டிசில்வா இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களை கொல்வதற்கு மேற்கொண்ட கொலை முயற்சி பயனளிக்காத நிலையில் அதனை நிறைவேற்றிய பிரபாகரன்
இலங்கை ராணுவத்தின் கூட்டுப்படை தளபதியாக இருந்தவர் சிறில் ரணதுங்கா. ஓய்வு பெற்று விட்ட இவர் “சமாதானத்தில் இருந்து போர், கிளர்ச்சியில் இருந்து பயங்கரவாதம்” என்று ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார் அதில் அவர் இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவம் பற்றி எழுதி உள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
இலங்கை ஜனாதிபதியாக இருந்த திரு ஜே.ஆர் ஜெயவர்த்தனா இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவின் உதவியை 1987-ம் ஆண்டு நாடினார். இதையடுத்து இந்தியா-இலங்கை ஒப்பந்தம் ஒன்றை இருநாடுகளும் இணைந்து தயாரித்தன. அப்போது ஜெயவர்த்தனா தனது பாதுகாப்பு ஆலோசகராக அவரது மகன் ரவி ஜெயவர்த்தனாவை நியமித்திருந்தார். முப்படைகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி ரவி வழங்கும் அறிக்கைகளைப்படித்த பிறகே ஜெயவர்த்தனா எந்த முடிவையும் எடுப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.
1987-ம் ஆண்டு ஜூலையில் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் ஜெயவர்த்தனாவும், ராஜீவ் காந்தியும் கையெழுத்திட்டனர். அதற்காக ராஜீவ்காந்தி இலங்கைக்கு சென்றிருந்தார்.ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் இடம்பெற்ற ராணுவ அணிவகுப்பு மரியாதையை ராஜீவ் அவர்கள் ஏற்றுக்கொண்டபோது ராணுவ வீரரான விஜயமுனி விஜித ரோஹன டிசில்வா துப்பாக்கியால் ராஜீவ் காந்தியைத்தாக்கினார். ராஜீவ் சாதுர்யமாக விலகிக்கொண்டதால் துப்பாக்கியின் பின்புறப்பிடியின் அடியிலிருந்து தப்பினார். இந்த சம்பவம் அப்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப்பேசப்பட்டது. இச்சம்பவத்தை பல நாடுகள் கண்டித்ததால் ராஜீவ் காந்தியிடம் ஜெயவர்த்தனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வருத்தமும் தெரிவித்தார்.
இந்தியா-இலங்கை ஒப்பந்தத்திற்கு இச்சம்பவத்தால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ராஜீவ் காந்தி அவர்கள் இதைப்பெரிது படுத்த வில்லை. ஆனால் ராணுவ அணி வகுப்பின் போது அவரை சுட்டுக்கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டிருந்தது இப்போது தெரியவந்துள்ளது. ராஜீவ் காந்திக்கு ராணுவ அணி வகுப்பு மரியாதை வழங்கும்போது ராணுவத்தினர் வைத்திருக்கும் துப்பாக்கிகளில் குண்டுகள் இருக்கக்கூடாது ராணுவத்தினர் குண்டுகள் இல்லாத துப்பாக்கிகளை ஏந்தியவாறு தான் அணி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் ரவி ஜெயவர்த்தனா தனது தந்தையிடம் கேட்டுக்கொண்டார். அதிபர் ஜெயவர்த்தனா இதை ஏற்றுக்கொண்ட போதிலும் அப்போதைய ராணுவத் தளபதியாக இருந்த லெப்டினெட் ஜெனரல் டி.ஜே.வீரதுங்கா இதை ஏற்காமல் எதிர்ப்பு தெரிவித்தார்.
துப்பாக்கியிலிருந்து குண்டுகளை அகற்றுவது படை வீரர்களின் மனநிலையைப்பாதிக்கும் படை வீரர்களின் மீதான நம்பிக்கையைத் குறைத்து விடும் என்று வீரதுங்கா தெரிவித்த தோடு குண்டுகளை அகற்ற கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்தார். ஆனால் ரவி ஜெயவர்த்தனாவின் ஆலோசனைப்படி குண்டுகள் அகற்றப்பட்ட துப்பாக்கியை அணிவகுப்பு மரியாதையின் போது பயன்படுத்தினர்.
துப்பாக்கியிலிருந்து குண்டுகள் அகற்றப்பட்டதால் தான் ரோஹன டிசில்வா வேறு வழியின்றி துப்பாக்கி பிடியால் ராஜீவ் காந்தியைத்தாக்கும் சம்பவத்தை நிகழ்த்தினார். இந்த அணி வகுப்பின் போது துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்திருந்தால் அந்த ராணுவ வீரர் ராஜீவ்காந்தியை சுட்டுக்கொன்றிருப்பார். ரவி ஜெயவர்த்தனா இது போன்ற ஆலோசனையை வழங்கியிருக்கா விட்டால் ராஜீவ் காந்தி இலங்கையில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்திருக்கலாம்.
இப்படிப்பட்ட ஆலோசனையை ரவி வழங்கியதற்கு கூறிய காரணம் எகிப்து நாட்டில் அதிபர் அன்வர் சதாத் ராணுவ அணி வகுப்பு மரியாதையை ஏற்கையில் தான் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது தான். ராஜீவ் காந்தியை துப்பாக்கியின் பிடியால் தாக்கிய ராணுவ வீரன் முக்கியமான சம்பவத்தை நாளை நிகழ்த்த உள்ளேன். ஆகவே வீட்டிற்கு உயிருடன் திரும்பி வராமல் இருக்கலாம் என தனது நண்பனிடம் ஏற்கனவே கூறி உள்ளான். இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்த இராணுவ வீரனால் செயற்படுத்த முடியாதுபோன படுகொலையினை பிரபாகரன் என்னும் தமிழன் நிறைவேற்றியமையே இன்று வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு எற்பட்டுள்ள அவலநிலைக்கு வழிகோலியது.
0 விமர்சனங்கள்:
Post a Comment