இலங்கையில் பார்த்தது..!
போரினால் தன் சொந்த நாட்டிலேயே சொந்த பந்தங்களையும்வீடு வாசல்களையும் இழந்து அகதிகளாக மாறியிருக்கும் ஈழத் தமிழர்களை, அவர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம் களுக்குச் சென்று சந்தித்ததோடு, இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்ஷேவையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், 'இந்து' நாளிதழின் முதன்மை ஆசிரியர் என்.ராம். ''ஈழத் தமிழர்கள் அடை பட்டுக் கிடக்கும் முகாம்கள், இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான அகதிகள் முகாம்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது...'' என்று அவர் செய்தி வெளியிட்டிருக்கிறார்.
இதையட்டி அவர் வெளி யிட்டிருக்கும் படங்கள் மற்றும் கருத்து களை கடுமையாக விமர்சிக்க ஆரம் பிக்கின்றன, ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்கள். இணைய தளங்கள் வழியாகக் கடுமையான கருத்துகள் பரிமாறப்பட்டு வரும் சூழ்நிலையில், 'இந்து' ராமை அவருடைய அலுவலகத் தில் சந்தித்தோம்.
இலங்கைப் பயணத்தின் முன்னோட் டத்தை முதலில் பகிர்ந்து கொண்டார் ராம்.
''இலங்கையில் ராணுவ அதிகாரிகள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள்,
தமிழர் பிரதிநிதிகள் என்று பலரையும் பத்திரிகையாளர் என்ற முறையில் தொடர்புகொண்டு, தொடர்ந்து பேசி வந்திருக்கிறேன். அதேபோல இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜ்பக்ஷே என்னுடைய தொடர்பில் இருக்கக்கூடிய ஒருவர்தான். அவ்வப்போது என்னுடன் அவர் தொலைபேசியில் பேசுவார். ஆஃப் தி ரெக்கார் டாகவும் அவ்வப்போது பல விஷயங்களைப் பேசு வார்.
பிரபாகரனின் மரணத்துக்குப் பிறகு, அங்கிருக்கும் நிலைமை குறித்து அறிந்துகொள்ள, நான் இலங்கை சென்றுவர விரும்பினேன். ஜூன் 30-ம் தேதி இலங்கை சென்று, இரண்டு நாள் தங்கியிருந்தேன். இரவு ஜனாதிபதி ராஜபக்ஷேவுடன் உணவு அருந்தினேன். அப்போது அவரைப் பேட்டி கண்டேன். ஜனாதிபதி ராஜபக்ஷேவின் பேட்டி, இரவு பதினொரு மணியைத் தாண்டியும் நீண்டது. அப்போது, 'தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு சென்று நேரில் பார்த்து வாருங்களேன். அதற்கு ஏற்பாடு செய்கிறேன்...' என்றார் அவர். எனக்கும் அதுகுறித்து அறியும் ஆர்வம் இருக்கவே, ஒப்புக்கொண்டேன். எத்தனை மணிக்கு கொழும்பிலிருந்து கிளம்பவேண்டும், எப்படிப் போக வேண்டும் என்று துவங்கி பல விஷயங்களை அவரே என்னிடம் விளக்கினார்.
அடுத்த நாள் காலை பதினோரு மணிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பி னோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணத்தில் வவுனியா சென்றோம். வவுனியா முகாமில் சுமார் மூன்று மணி நேரம் இருந் தேன். இலங்கையின் பல்வேறு முகாம்களில் மொத்தம் மூன்று லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். சுமார் 1,500 ஏக்கருக்குப் பரந்து விரிந்திருக்கும் இந்த முகாமில் மட்டும் ஒரு லட்சம் பேர் தங்கவைக்கப் பட்டிருக் கிறார்கள். அங்கு நான் பார்த்த வரையில், ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த அதிகாரி கள் இருக்கிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள், அங்கு தங்கி தமிழர்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கின்றன. ஏன், நம் நாட் டில் இருந்துகூட எட்டு டாக்டர்களும் நான்கு செவிலியர்களும் அங்கு சென்று சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த பத்திரி கையாளர்கள் அங்கு போக வேண்டும், போகக்கூடாது என்பதில் அரசுத் தரப்பினர் கவனமாக இருக்கிறார்கள். தற்போதுதான் போரிலிருந்து மீண்டிருக்கிறார்கள் அவர்கள். இந்தச் சூழ்நிலையில், முகாமில் தங்கவைக்கப் பட்டிருக்கும் மக்களை சந்திக்கச் செல்கிறோம் என்ற பெயரில், அங்கே மேற்கொண்டு எந்த குழப்பமும் யாரும் செய்துவிடக்கூடாது என்பதால்தான் அவர்கள் இத்தனை தூரம் கவனமாக இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன்'' என்றவரிடம் நம் கேள்விகளை வைத்தோம் -
''அந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் நிலைமை மிகமிக மோசமாக இருப்ப தாகத்தானே செய்திகள் வருகின்றன?''
''அவை தவறானவை. ஒரே ஒரு பிரச்னை மட்டும் இருக்கிறது. அதுவும் தலையாய பிரச்னை... கழிவறைகள் போதுமான அளவுக்கு இல்லாததுதான் அந்தக் குறை பாடு. இதை ஜனாதிபதி ராஜபக்ஷே, என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவரே சொன்னார். இந்த விஷயத்துக்குப் பொறுப்பேற்றிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் மிகமிக மெதுவாக செயல் படுவதால்தான் இந்த நிலைமை என்றும் சொன்ன அவர், 'அதற்கான நிதியை ஏனோ இலங்கைக்கு விரைந்து அனுப்ப ஏற்பாடு செய்யாமல் இருக்கிறார்கள்...' என்று சொல்லி வருத்தப்பட்டார்.''
''வவுனியா முகாம்களில் திறந்தவெளி சிறைச் சாலை மாதிரி - சொல்லப்போனால், மின்சாரம் பாயும் இரும்பு வேலிகளுக்குள்ளே அவர்கள் அடைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று செய்திகள் வருகிறதே..?''
''இந்த முகாம்களில் இருக்கும் தமிழர்கள், அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாது என்பது உண்மை. முகாமைச் சுற்றி வேலி இருப்பதும் உண்மை. அங்கே காவலுக்கு ராணுவம் இருப்பதும் உண்மை. ஆனால், மின்சாரம் பாயும் இரும்பு வேலிகள் என்ப தெல்லாம் வெறும் கற்பனை. இப்படிச் சொல்வதால் அங்கே வேறு பிரச்னைகள் வரவே வாய்ப்பில்லை என்று அர்த்தமில்லை. மழை வந்தால் அங்கே புது பிரச்னைகள் வரலாம். ஆனால், நம்மூரில் இருக்கும் அகதிகள் முகாம்களைவிட அவை பல மடங்கு மேம் பட்டதாக இருக்கிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்!''
''முகாம்களில் சாப்பாடு, தண்ணீர் வசதி எல்லாம் எப்படி இருக்கிறது? நீண்ட க்யூ வரிசையில் மணிக் கணக்கில் மக்கள் நிற்க வேண்டியிருக்கிறதாமே..?''
''சாப்பாட்டுக்குப் பிரச்னையில்லை. தண்ணீருக்கும் பிரச்னையில்லை.''
''முகாமில் இருப்பவர்களுக்கெல்லாம் போதுமான அளவுக்கு சாப்பாடு வழங்கப்படுகிறதா?''
''அவர்களுக்கு சாப்பாடு வழங்கும்போது நான் பார்க்கவில்லை...''
''முகாம்களில் இருக்கும் மக்களிடம் நீங்களே பேசினீர்களா?''
''முகாமில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் முன்னி லையில், அவர்களிடம் பேசும்போது இரண்டு பேருக் குமே தர்மசங்கடங்கள் ஏற்படலாம். அதனால், அங்கி ருக்கும் மக்களிடம் நான் பெரிய அளவில் பேச முடியவில்லை. இருந்தாலும், 'எங்கிருந்து வர்றீங்க. என்ன படிக்கறீங்க?' என்பது மாதிரி பொதுவான கேள்விகளைக் கேட்டேன். ஒருசிலர் தாங்களாகவே முன்வந்து அவர்களின் குறைகளை சொன்னார்கள். எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அங்கிருந்த படியே ஆசிரியர் பணியில் இருக்கும் சிலர், 'எங்களுக்கு சம்பளம் மட்டும்தான் கிடைக்கிறது. படிகள் எதுவும் கிடைப்பதில்லை' என்றார்கள். வயதான ஒருவரிடம் 'இங்கே உங்களை யார் பாத்துக்கறது?' என்று கேட்டேன். அதற்கு அவர் கொஞ்சம்கூட யோசிக்காமல், 'என் உழைப்பு என்னை பாத்துக்கும்...' என்றார். நான் அவர்களை வியந்து பார்த்தேன்...''
''நீங்கள் சென்ற முகாமில் இளைஞர்களைப் பார்த் தீர்களா? இளைஞர்களை எல்லாம் ராணுவம் பிரித்து, வதை முகாமுக்குக் கொண்டு போய்விட்டதாகச் சொல்கிறார்களே? அதே மாதிரி குடும்பங்களை குலைப்பது மாதிரி கணவன் ஓரிடம், மனைவி ஓரிடம், பிள்ளைகள் ஓரிடம் என்று தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகச் சொல்கிறார்களே...''
''எனக்குக் கிடைத்த தகவலின்படி வெறும் ஒன்பது ஆயிரம் பேர்... அதாவது புலிகளின் சார்பாக இலங்கை ராணுவத்தோடு போரிட்டவர்களைத்தான், இலங்கை ராணுவம் தனி முகாமில் வைத்திருக்கிறது. அவர்களைகூட சரியாகவே ராணுவம் நடத்தி வருகிறது. நான் பார்த்த முகாமில் மக்கள் குடும்பம் குடும்பமாகத்தான் இருந்தார்கள். அங்கே ஒருவர்கூட அழுது, நான் பார்க்கவில்லை. அவர்கள் மிக தைரியமாக இருக்கிறார்கள். இத்தனை குறுகிய காலத்துக்குள் அவர் கள் தங்களை எப்படி போரின் பாதிப்பிலிருந்து மீட்டெடுத்தார்கள் என்பது எனக்கே வியப்பாக இருந்தது. இன்னொரு விஷயம், பலர் தங்கள் வீடு வாசலை விட்டுவிட்டு ஓடிவந்த போதுகூட தாங்கள் சேமித்து வைத்த பணத்தையும் தங்க நகைகளையும் எடுத்துக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். இந்தப் பணத்தையும் தங்க நகைகளையும் பத்திரப்படுத்த இலங்கை அரசு, இந்த முகாமில் இரண்டு வங்கிகளை நடத்துகிறது. நான் போனபோது மாணவர்கள் பலர் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தார்கள��
�. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்த மாணவர்கள் 'ஏ லெவல்' பரீட்சைக்கு (அந்த ஊர் பிளஸ்-2) தயாராகி வருகிறார்கள். இன்னும் ஒரு மாதத்தில் பரீட்சைகள் நடக்கவிருக்கிறதாம். இலங்கை ராணுவத்தைப் பற்றி யாரும் என்னிடம் எந்தக் குறையும் சொல்லவில்லை.
இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றபோதுகூட பெண்கள் தொடர்பான சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், இலங்கை ராணுவம் பற்றி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை யாரும் சொல்லவில்லை. அந்த முகாமில் திருட்டு குற்றச்சாட்டுகள்கூட எழவில்லை.''
''பிராபாகரன் உயிரோடு இருக்கிறாரா?''
''மே 19-ம் தேதி பிரபாகரன் உடம்பை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கிறார்கள்...''
''அப்படியானால், இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷே பேசும்போது, பிரபாகரன் இறந்த சேதியை ஏன் அவர் தன் வாயால் அறிவிக்கவில்லை!''
''அவர் நாடாளுமன்றத்தில் பேசியதற்குப் பிறகுதான் பிரபாகரனின் உடலை ராணுவத்தினர் கண்டெடுத்திருக் கின்றனர். பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதில் யாருக் கும் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. புலிகளின் இயக்கத்தை சேர்ந்தவர்களே, இதை ஒப்புக்கொண்டு விட்டார்களே..! பொதுவாகச் சொல்வதானால், பிரபா கரனை பற்றி ஜனாதிபதி ராஜ்பக்ஷே மட்டுமல்ல... ராணுவத்தினரே மரியாதையாகத்தான் பேசினார்கள். ஆனால், பொட்டு அம்மான் பற்றித்தான் ராணுவத்தால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.''
''விடுதலைப்புலிகள் மீண்டும் அங்கே தலையெடுக்க எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது?''
''ராணுவரீதியாக அவர்களால் இனி தலையெடுக்க முடியாது. ஆனால், அவர்களிடம் பெரும் பணம் இருக் கிறது. இன்னமும் அவர்கள் வெளிநாடுகளில் பணம் வசூலித்து வருகிறார்கள். தாங்கள் வசூல் செய்யும் பணத்துக்குக் கணக்கு காட்டும் நோக்கத்தில், அவர்கள் இலங்கையில் ஏதாவது வன்செயலில் ஈடுபடக்கூடும் என்று ராஜபக்ஷே நினைக்கிறார்...''
''முகாம்களில் இருக்கும் மக்கள் அவர்கள் சொந்த ஊருக்குப் போவது எப்போது?''
''முகாம்களில் இருக்கும் மக்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுமானால், அவர்கள் வாழ்ந்த ஊர்களில் மண்ணுக்கடியில் புதைத்து வைக்கப் பட்டிருக்கும் கண்ணி வெடிகள் அகற்றப்பட வேண்டும். இதில் இலங்கை ராணுவம், இந்திய ராணு வத்தினர், ஐ.நா. அமைப்பை சேர்ந்தவர்கள் என்று பலதரப்பட்டவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். இலங்கை ராணுவமும் இந்திய ராணுவமும் அங்கே வேகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், என்ன காரணத்தினாலோ ஐ.நா. இதில் மிகமிக மந்தமாக இருக்கிறது என்று ராஜபக்ஷேகூறினார்.''
''உங்களின் 'இந்து', பாரம்பரியம் மிக்க பத்திரிகை. இதில், இலங்கை ராணுவத் தரப்பு செய்திகள்தான் அதிகமாக இடம்பிடிக்கிறது என்றும் விடுதலைப் புலிகள் தரப்பு செய்திகளோ அங்கே இருக்கும் தமிழ் மக்களின் நிஜமான நிலைமைகளோ வெளிவருவதே இல்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி...?''
''எங்கள் பத்திரிக்கையை சரியாகப் படிக்காதவர்கள் சொல்லும் கருத்து இது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பல புகைப்படங்களையும் செய்திகளையும் நாங்கள் அதிகமாக வெளியிட்டிருக்கிறோம். ஏன், பிரபாகரனின் பேட்டியையே நாங்கள் வெளி யிட்டிருக்கிறோம். அதேபோல் இலங்கை அரசை விமர்சனம் செய்தும் பல செய்திகள் வெளியிட் டிருக்கிறோம். ஆனால், அதேசமயம் கருத்துரீதியாக விடுதலைப்புலிகளை எதிர்த்து வந்திருக்கிறோம்.''
''ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் பான் கீ மூன், இலங்கையின் உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் சில்வா ஆகியோரெல்லாம்கூட இந்த முகாம்கள் குறித்து வேதனையோடு கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்க... நீங்கள் மட்டும் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபடுகிறீர்களே..?''
''அவர்கள் எதை வைத்து அப்படிச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் அங்கே பார்த்ததைத்தான் சொல்கிறேன், எழுதினேன். அற்கான ஆதாரங்களையும் புகைப்படங்களையும் கொண்டு வந்திருக்கிறேன். பிரசுரித்திருக்கிறேன்...''
- வி.அர்ஜுன்,
விகடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment