என்னை சடலம் போன்று மாற்றுங்கள் என மைக்கேல் ஜக்ஸன் கெஞ்சினார் - முன்னாள் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மருத்துவ தாதி
பொப் இசைப்பாடகர் மைக்கேல் ஜக்ஸன் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை உயிரற்ற சடலம் போன்ற நிலைக்குத் தன்னை உள்ளாக்குவதற்காக அதிசக்தி வாய்ந்த "டிப்றிவன்' தூக்க மாத்திரையை வழங்கும்படி கெஞ்சியதாக அவரது முன்னாள் மருத்துவ தாதி கத்ரைன் புஷெல்லி தெரிவித்தார்.
ஜக்ஸனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவரிடம் நீண்டகாலமாகப் பணியாற்றியவர் கத்ரைன் புஷெல்லி என்பது குறிப்பிடத்தக்கது. ஜக்ஸன் வெண்மை நிறத்தைப் பெறும் முகமாக விசேட சிகிச்சை ஒன்றுக்கு உள்ளாகிய போது, அவரது மேல் தோலை தொடர்ச்சியாக லேசர் கதிரை உபயோகித்து உரித்ததால் ஏற்பட்ட வலியைத் தாங்குவதற்கு அவருக்கு "டிப்றிவன்' மருந்து வழங்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்தே அம்மருந்து பாவனைக்கு பாடகர் பழக்கமானதாகவும் கத்ரைன் புஷெல்லி தெரிவித்தார்.
மைக்கேல் தனது தோற்றம் தொடர்பில் கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மை காரணமான அவர் மிகவும் அதிகளவு தோல் சிகிச்சைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டதாகவும் அதன் விளைவாக அவர் "டிப்றிவன்' மருந்துக்கு மேலும் மேலும் அடிமையாக நேர்ந்ததாகவும் கத்ரைன் கூறினார்.
அவரது மேல் தோல் சுட்டுப் பொசுக்கி அகற்றப்பட்டதும் அவர் சடலம் போன்று காணப்படுவார். 90 களின் பிற்பகுதியில் நடமாடும் இறந்த ஒருவராகவே அவர் காணப்பட்டார் என அந்த மருத்துவதாதி மேலும் தெரிவித்தார். மைக்கேல் ஜக்ஸனின் பிரேத பரிசோதனையில் பங்கேற்ற அதிகாரிகள், டிப்றிவன் மட்டுமல்லாது டெமரோல், மெதடோன், வலியம், திலோடிட், அம்பியன், பென்தனைல், ஸானக்ஸ் மற்றும் விகோடின் ஆகிய மருந்துகள் அவரது உடலில் காணப்பட்டதாக தெரிவித்தார்.
"டிப்றிவன்' மருந்துக்கு அடிமையான ஜக்ஸன், தனக்கு அவசியமில்லாத நிலையிலும் அழகு சிகிச்சைகளை மேற்கொள்ள கோரியதாக தெரிவித்த கத்ரைன், அவர் மருத்துவமனைக்கு வருவதற்கான ஒரே நோக்கமாக மருந்துகள் மாறின. ""அவர் மருத்துவமனையில் ஒரு சில நாட்கள் தங்கியிருப்பார். சில சமயங்களில் 72 மணிநேரம் வரை அவர் சடலம் போன்று மயக்கநிலையில் இருப்பார். மைக்கேல் தன்னைத்தானே சடலமாக மாற்றிக் கொண்டார்'' என்று கூறினார்.
1999 ஆம் ஆண்டு "டிப்றிவன்' மருந்து உபயோகத்தின் போது ஜக்ஸன் மரணத்தின் விளிம்பைத் தொட்டதாகவும் மிகவும் சிரமப்பட்டே அவரை விழித்தெழச் செய்ததாகவும் கத்ரைன் குறிப்பிட்டார்.நடன நிகழ்ச்சியொன்றின் போது இடம்பெற்ற விபத்தையடுத்து பாதிக்கப்பட்ட மூக்கை பிளாஸ்ரிக் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொண்ட பின்னரே, மைக்கேல் தனது தோலை வெண்மையாக்கும் முயற்சியில் களம் இறங்கியதாக கத்ரைன் தெரிவித்தார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட தனது தோலை வெண்மையாக்க முடியும் என மருத்துவர்கள் கூறியதை கேட்டு ஜக்ஸன் பரவசமடைந்ததாக தெரிவித்த கத்ரைன், இரசாயன அமிலம் ஒன்றை அவரது முகத்தில் பூசி அவரது தோல் மேற்பட்டையை அகற்றிய பின் லேசர் கதிரைப் பயன்படுத்தி அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாக கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment