கே.பி. கைது நிலைவரம்
விடுதலைப்புலிகளை மீண்டும் இயங்கவைக்க உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்திருக்கும் இலங்கைத் தமிழர்களில் சில பகுதியினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு குமரன் பத்மநாதன் கைது பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனின் மரணம் குறித்து ஒருபோதும் கூறாத புலம்பெயர் இலங்கைத் தமிழரில் ஒரு சாராரின் முயற்சிகளுக்கு இது பின்னடைவை தந்திருக்கிறது என்று இந்தியாவின் ஓய்வுபெற்ற அமைச்சரவை மேலதிக செயலாளர் வி. ராமன் தெரிவித்துள்ளார். அவுட் லுக் சஞ்சிகையில் குமரன் பத்மநாதன் கைது தொடர்பாக ராமன் எழுதியிருப்பதாவது;
2009 ஆகஸ்ட் 6 இல் மலேசிய பாதுகாப்பு முகவர் அமைப்புகள் இலங்கையின் பாதுகாப்பு முகவர் அமைப்புகளிடம் குமரன் பத்மநாதன் அல்லது கே.பி.யை கையளித்துள்ளனர். ஹோட்டல் ஒன்றிலிருந்து அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கே.பி. மலேசியாவில் சில வருடங்களாக வசிப்பதாக விசாரணை மற்றும் புலனாய்வு முகவரமைப்புகளால் சந்தேகிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் தமிழ் சமூகத்தின் மத்தியிலிருந்த விடுதலைப்புலிகளின் அனுதாபிகளின் உதவியுடன் அங்கு அவர் இயங்கிவந்ததாக கூறப்பட்டது. மலேசியாவிலுள்ள உள்ளூர் தமிழ் சமூகத்தினர் மத்தியில் இலங்கையரும் இந்திய வம்சாவளியினரும் அடங்கியுள்ளனர். கடந்த 20 வருடங்களாக பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் பாரிய சொத்தாக கே.பி. இருந்தார். விசேடமான அரசியல் அந்தஸ்தை அவர் கொண்டிருக்காவிடினும் அதிகளவிற்கு பகிரங்கமான முறையில் கவனத்தை கவராத விதத்தில் தலைமறைவாக வேலைகளைச் செய்யும் அவரின் ஆற்றலினால் அவர் பிரபாகரனுக்கும் புலிகள் அமைப்புக்கும் பெறுமதியான சொத்தாக இருந்தார்.
விடுதலைப்புலிகளின் ஆயுதக் கொள்வனவு, நடுக்கடலில் கப்பல்களில் இருந்து ஆயுதக் கொள்ளை, சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் வர்த்தக கப்பல்துறை கட்டமைப்புகள் என்பனவற்றில் பின்னணியிலிருந்த பிரதான மூளையாக அவர் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. கே.பி.யின் தலைமறைவான வேலைகள் இந்தளவு தூரத்திற்கு இல்லாவிடின் விடுதலைப்புலிகள் மரபுரீதியான போராடும் சக்தியாக உருவாகும் ஆற்றலை விருத்தி செய்திருக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்தத் தொடர்பாடலின் பிரகாரம் அவர் தென்கிழக்காசியா, கிழக்கு ஐரோப்பா, தென்னாபிரிக்கா போன்ற பகுதிகளுக்கு அடிக்கடி பயணத்தை மேற்கொண்டிருந்தார். உள்ளூர் புலனாய்வு முகவரமைப்புகளால் பிடிக்கப்பட்டுவிடுவார் என்ற அச்சத்தினால் அவர் அடிக்கடி பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஆனால், அவரின் தளம் மலேசியாவில் இருப்பதாக கூறப்பட்டது. அங்கிருந்தவாறு ஆயுதக் கொள்வனவு, பணப் பரிமாற்றக் கட்டமைப்புகளுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கிவந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
கப்பல்துறை மூலமாக பணத்தை சுதந்திரமாக அவர் கையாள்வதற்கு பிரபாகரன் அனுமதித்திருந்தார். போதைவஸ்து கடத்தல், புலம்பெயர் தமிழ் சமூகத்திடமிருந்து பணத்தை வசூலித்தல், ஆயுதங்களின் விலைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துதல், அவற்றை கப்பல்களில் ஏற்றுதல் என்பனவற்றில் கே.பி. மீது பிரபாகரன் நம்பிக்கை கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவுகள் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவால் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதை மலேசிய அதிகாரிகள் தவிர்த்துக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. அவர் தன்னை பிரசித்தப்படுத்தாத தன்மையும் அதிகளவிற்கு பேசாமல் இருக்கும் அவரின் ஆற்றலும் உள்ளூர் பாதுகாப்பு முகவரமைப்புகள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு துணை செய்திருந்தன.
இந்த வருட ஜனவரியில் இவை யாவும் மாற்றமடைந்துவிட்டன. அவரை சர்வதேச உறவுகள் திணைக்களத்திற்கு பிரபாகரன் ஜனவரியில் பொறுப்பாக நியமித்திருந்தார். அவரை இந்தப் பணிக்கு பிரபாகரன் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது ஒருவருக்கும் தெரியாது. மலேசியாவுக்கு வெளியே கே.பி.க்கு எந்தவிதமான அரசியல் தொடர்பும் இருந்திருக்கவில்லை. சர்வதேச சமூகத்தின் மனிதஉரிமைகள் அமைப்புகள் மத்தியில் இவர் நன்கு அறியப்பட்டவராகவோ அல்லது மதிக்கப்பட்டவராகவோ இருக்கவில்லை. கைது செய்யப்படுவார் என்ற அச்சம் இல்லாமல் அவரால் மேற்கு நாடுகளுக்கு பயணம் செய்ய முடிந்திருக்கவில்லை. இவர் அன்ரன் பாலசிங்கம் போன்றவர் அல்ல. தமிழ்ச்செல்வன் போன்றவரும் அல்ல. சில விடயங்களில் இலங்கைத் தமிழரின் கருத்துப்படி இவர் தாவூத் இப்ராஹிம் போன்றவர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். தாவூத் மாபியா தலைவராகும். கே.பி. அவ்வாறு இல்லை. ஆனால், தாவூத்திற்கும், கே.பி.க்கும் ஆயுதக்கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் என்பனவற்றில் ஒத்த தன்மையான ஆற்றல்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்ட பின்னர் தாழ்ந்த மட்டத்தில் அறியப்பட்டிருந்தவராக இருந்த கே.பி. அதிகளவிற்கு அறியப்பட்டவராக உருவானார். தென்கிழக்காசியாவிலுள்ள தனது பாதுகாப்பான இடத்திலிருந்துகொண்டு அவர் பத்திரிகையாளர்கள், அரசு சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு ஆரம்பித்தார். பிரபாகரனின் மரணத்தின் பின்னர் அவர் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் குழுக்களின் மத்தியில் தலைவராக சுயமாகவே உயர்த்திக்கொண்டார். புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் ஒரு பகுதியினர் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள எழுச்சி பெற வைப்பதற்கு முயற்சித்தனர். பிரபாகரன் தலைமைதாங்கிய அந்த அமைப்பின் சுதந்திர தமிழீழம் என்ற அதே நோக்கத்தை முன்னெடுப்பதற்கான இந்த புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் புலிகள் அமைப்பை மீண்டும் எழுச்சி பெற வைப்பதற்கு முயன்றனர். ஆனால், அஹிம்சாவளியில் இந்த நோக்கத்தை வென்றெடுக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் இவர் எவ்வாறு தலைமைதாங்கினார் என்பது குறித்து உண்மையாக எவருக்கும் தெரியாது. ஆனால், புலம்பெயர் சமூகத்தினர் அவருக்கு ஆதரவு வழங்க தயாராக இருந்தனர். எவ்வாறாயினும், விடுதலைப்புலிகள் அமைப்பு பீனிக்ஸ் போன்று மீண்டும் எழுச்சி பெறும் எனவும் சுதந்திர ஈழத்திற்கான இலக்கை எட்டுவதற்கு மீள நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் மத்தியில் உள்ள சில சக்திகள் தொடர்ந்து எதிர்பார்ப்புடன் இருந்தனர். அவர்களில் சிலர் கே.பி.யின் பின்னால் அணிதிரண்டிருந்தனர். விடுதலைப்புலிகள் தொடர்பாக புதிய நடவடிக்கையை கே.பி. ஆரம்பிப்பதற்கு முன்னராகவே அவரை பிடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஆர்வம் காட்டியிருந்தது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை முகவரமைப்புகளின் போராட்டம் முடிவடைந்திருக்கவில்லை. அதன் தலைமைத்துவத்தின் அநேகமானவர்கள் அழிந்திருந்தும் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையிலும் இலங்கை முகவரமைப்புகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் முடிவடைந்திருக்கவில்லை. புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலுள்ள ஆதரவாளர்களை அடையாளம் கண்டுகொள்வது போன்ற அதிகளவிலான வேலைகள் தற்போதும் தொடர்ந்து இருக்கின்றன. அத்துடன், வெளிநாடுகளில் உள்ள புலிகளின் இரகசிய வங்கிக் கணக்குகளை கண்டறிந்து அவற்றை முடக்குதல் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பான தொடர்பாடல்களை அடையாளம் கண்டுகொள்ளுதல். இரகசியமாக புலிகள் எவ்வாறு ஆயுதங்களை கடத்திவருவதில் வெற்றிபெற்றிருந்தனர் என்பதை அடையாளம் கண்டுகொள்ளுதல். மேலும், விமானம் உட்பட இராணுவத் தளபாடங்களை வெவ்வேறு நாடுகளில் உள்ள குறிப்பாக, இந்தியா, இலங்கையிலுள்ள புலனாய்வு நிறுவனங்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு தமிழ்ப் பகுதிகளுக்கு எவ்வாறு அவர்கள் இவற்றை கொண்டுவந்தார்கள் என்பது தொடர்பாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய பணிகள் இலங்கைக்கு மீதமாக உள்ளன.
வெளிநாடுகளில் புலிகள் எவ்வாறு இயங்கினர். எவ்வாறு ஒரு நிலைமையை புலிகள் ஏற்படுத்த முடிந்தது என்பது தொடர்பாக மீள வடிவமைத்துக்கொள்வதற்கான தேவை உள்ளது. கே.பி.யை முழுமையாக விசாரணை செய்யாமல் இந்த மாதிரியான மீள்கட்டுமான பணி சாத்தியமானது அல்ல. ஆதலால் கே.பி.யை பிடிப்பதற்கு இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் முடுக்கிவிட்டிருந்தனர். அந்த நடவடிக்கை தென்கிழக்காசியாவில் கவனம் செலுத்தப்பட்டது. அவருடைய முயற்சி இறுதியில் வெற்றியடைந்தது. மலேசிய அதிகாரிகள் அவரைப் பிடித்து இலங்கையிடம் கையளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை முழுமையாக விசாரணை செய்வதானது கடந்த காலத்தில் நடந்தவற்றை அறிந்துகொள்வதற்கு தேவையானதாக இருப்பது மட்டுமன்றி, எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலுள்ள கடும்போக்கு சக்திகளின் திட்டங்கள் தொடர்பாகவும் அறிந்துகொள்வதற்கு இலங்கைக்கு தேவையானதாகும்.
ராஜீவ்காந்தியின் படுகொலை தொடர்பாக கே.பி.யின் தொடர்பு குறித்து விசாரணை செய்வதற்கு இந்திய அரசாங்கம் ஆர்வம் காட்டவேண்டும். 1993 இல் பாகிஸ்தானிலிருந்து புலிகள் ஆயுதங்கள் கடத்தியமை குறித்தும் அந்தக் கப்பலில் கிட்டு பயணம் செய்வது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்தக் கப்பலை இந்திய கரையோர பாதுகாப்பு படையினரின் கப்பல் இடைமறித்தபோது அக்கப்பலில் இருந்தோர் கப்பலுக்கு தீ வைத்துள்ளனர். அது பின்னர் மூழ்கிவிட்டது. கிட்டுவும் ஏனைய சிலரும் கப்பலுடன் மூழ்கிவிட்டனர். சிலர் தப்பிச்செல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்டிருந்தனர். பாகிஸ்தானிலிருந்து புலிகள் ஆயுதங்களைக் கடத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான கதையும் இதுவரை அறியப்படவில்லை. தென்னிந்தியாவில் இப்போதும் புலிகளின் ஆயுதக் களஞ்சியம் ஏதாவது உள்ளதா என்பது பற்றி கே.பி.க்கு தெரிந்திருக்கக்கூடும். ஆனால், அது தற்போது செயற்படவில்லை.
Thinakural
0 விமர்சனங்கள்:
Post a Comment