ரஜனி காந்த், வைகோ மற்றும் ராம்தாஸ் ஆகியோர் புலிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுள்ளனர் – ரிசாட் பதியூதீன்
தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக போற்றப்படும் ரஜனி காந்த், அரசியல்வாதிகளான வை.கோ மற்றும் ராம்தாஸ் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளில் இயங்கி வரும் தமிழ் வானொலிச் சேவைகள், தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வியாபார முயற்சிகளுக்கு புலிகள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
குறித்த ஊடகங்கள் வெறுமனே இலங்கை அரசாங்கம் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து, தமிழ் புலம்பெயர் மக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதனை விளக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான தமிழ் இணைய தளங்கள் புலம் பெயர் தமிழர்களின் பணத்தைக் கொண்டு இயங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொல் திருமாளவன், வை.கோ, ராம்தாஸ் மற்றும் நெடுமாறன் போன்ற தமிழக அரசியல் தலைவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பம் முதலே நிதியுதவிகளை வழங்கி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில தமிழ்த் திரைப்படங்களை இயக்குவதற்காக புலிகள் பணம் வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லண்டனில் உள்ள தமிழர்கள் பெரும் தொகையான பணத்தை செலவிட்டு தமிழகத்தில் திரைப்படங்களை தயாரித்துள்ளதாகவும், ரஜனி காந்திற்கும் இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ரஜனிகாந்திற்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பது குறித்து அவர் எந்தக் கருத்தக்களையும் வெளியிடவில்லை.
புலம் பெயர் தமிழர்களினால் பயன்படுத்தப்படும் இரத்தம் படிந்த பணத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment