பத்மநாதனை உடனடியாக விடுதலை செய்ய அனைத்துலக சமூகம் வற்புறுத்த வேண்டும்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதனை சிறிலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்ய வற்புறுத்த வேண்டும் என்று அனைத்துலக சமூகத்திடம் சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மலேசியாவில் செல்வராஜா பத்மநாதன் கைதாகி சிறிலங்காவுக்கு கடத்திச் செல்லப்பட்டு அங்கு அவர் சித்திரவதைக்கும் கொல்லப்படுவதற்கும் உள்ளாகி இருக்கும் செய்தியால் சுவிசில் வாழும் புலம்பெயர் தமிழராகிய நாம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம்.
முன்னரும் தமிழர் தாயகத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் அழிப்பின்போது அனைத்துலக சமூகம் காட்டிய மௌனத்தால் சிறிலங்கா அரசு மேலும் ஊக்கம் பெற்று ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களைக் கோரமாகக் கொலை செய்யவும் பாரிய மனித உரிமை மீறல்களைச் செய்யவும் வழி செய்தது.
இலங்கையில் இன்று 300,000-க்கும் அதிகமான மக்கள் முட்கம்பி முகாம்களுக்குள் சிறைக் கைதிகளாக அவதிப்படுகின்றனர்.
அனைத்துலக தொண்டர் மற்றும் ஐ.நா. உதவி தொண்டர் அமைப்புக்ளும் கூட அவற்றுக்குள் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. அந்தப் பிராந்தியத்தின் முக்கியத்துவம் மிக்க நாடுகளின் பிராந்திய அரசியல் விருப்புகளின் காரணமாக உலக நாடுகளால் விடுக்கப்பட்ட அனைத்துலக போர்க் குற்ற விசாரணை ஆணையம் பற்றிய கோரிக்கையே முற்று முழுதாக உதாசீனப்படுத்தப்பட்டு விட்டது.
இலங்கையில் உள்ள தமிழர் இன்று மனித உரிமை மீறல்களுக்கும் உயிர்ப் படுகொலைகளுக்கும் உள்ளாகி கவனிக்கப்படாத நிலையில் உள்ளனர்.
இத்தகைய பின்னணியில் திரு. செல்வராஜா பத்மநாதன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட முறையைக் கைவிட்டு வன்முறையற்ற அமைதி வழியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் தாயகத் தனி அரசு அங்கீகாரத்துக்கும் தமிழ் மக்களின் போராட்டத்தை தலைமை ஏற்க முன்வந்தார்.
தமிமீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டதாகப் பகிரங்கமாக அறிவித்தும் ஜனநாயக வழியில் அரசியலை முன்னெடுக்கும் தமது விருப்பத்தையும் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக அனைத்துலக சமூகத்தை தடைமுகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கவும் அவர்களை அனைத்துலக கண்காணிப்பில் மீள்கட்டமைப்பு மீள்குடியேற்றம் செய்ய உதவும்படி கேட்டும் வந்துள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை அடைவதற்கு ஜனநாயக அரசியல் வழி முறைகளைக் கடைப்பிடிப்பதில் அவர் மிக உறுதியாக இருப்பவர்.
இத்தகைய அமைதி வழி ஜனநாயக நடைமுறைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, பயங்கரவாதம் என்ற சாட்டில் அவரைக் கைது செய்து சிறிலங்காவுக்கு கடத்தியதை ஆதரிப்பது அனைத்துலக மனித உரிமை மீறலை அரசியல் காரணங்களுக்காகக் காட்டும் பாராமுகமாகவே உள்ளது.
கட்டாய ஆட்கடத்தல் சித்திரவதை கொலை போன்ற குற்றங்கள் தடை இன்றி நிலவும் இலங்கையில் அவர் சித்திரவதைக்கும் படுகொலைக்கும் உள்ளாவது நிச்சயம்.
சிறிலங்கா பாதுகாப்புச் சேவை தமிழ் அரசியல் கைதிகளை மிருகத்தனமான மனிதாபிமானம் அற்ற முறையில் நடத்துவதில் பெயர் பெற்றவர்கள். அவர்களின் குற்றங்கள் அப்பப்போ அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைக் கண்காணிப்பு நிறுவனங்கள் உட்பட மனித உரிமை அமைப்புகளால் பட்டியலிடப்பட்டு வந்துள்ளன.
இத்தகைய படுபாதகச் சூழ்நிலையில், அனைத்துலக சமூகம், மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், போன்ற அமைப்புக்கள் உடனடியாக சிறிலங்கா இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து குமரன் பத்மநாதனை சிறிலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்ய வற்புறுத்த வேண்டும் எனப் புலம்பெயர் தமிழராகிய நாம் கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினம்






0 விமர்சனங்கள்:
Post a Comment