தமிழர் படுகொலை காணொளி ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்டது என திரிபுபடுத்தும் கொழும்பு ஊடகம்
சிங்களப் படையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காணொலி ஆபிரிக்க நாடு ஒன்றிலோ அல்லது லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றிலோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடு திரிபுபடுத்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் ‘த நேசன்’ ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ள கட்டுரையின் முக்கிய பகுதிகள் வருமாறு:
வடக்கில் மனிதாபிமான மீட்புப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிறிலங்காவின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் விதத்திலான பரப்புரையில் மேற்குலக ஊடகங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.
சிறிலங்கா அரசு மனித உரிமைகளை மீறுகின்றது என்பதே அவர்களின் பிரதான குற்றச்சாட்டு. போர் முடிவடைந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் மேற்குலக ஊடகங்கள் தமது பரப்புரையைக் கைவிடுவதாக இல்லை.
பிபிசியின் ‘சனல் – 4′ தொலைக்காட்சி அண்மையில் ஒரு காணொலியை வெளியிட்டிருந்தது. அதில், கண்களும் கைகளும் கட்டப்பட்டு ஆடைகள் ஏதும் இன்றி இருந்த ஓர் ஆணை படையினர் ஒருவர் குறிபார்த்து நிற்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது வடக்கில் போர் இடம்பெற்ற சமயம் நடைபெற்றதாகவும் விபரிக்கப்பட்டது.
ஒளிபரப்பப்பட்ட காணொலி படையினர் ஒருவரால் அவரது செல்லிடப்பேசி மூலம் பதிவு செய்யப்பட்டது என்றும் சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பு அந்தக் காணொலியை விநியோகித்தாகவும் ‘சனல் – 4′ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எப்படி இருந்தாலும் அந்த காணொலியில் இருக்கும் படையினர் சிறிலங்கா தரைப்படையைச் சேர்ந்தவர்கள் என்று யாரும் கூறவில்லை. காணொலியில் காணப்படும் படையினர் காட்சியைப் பதிவு செய்தவருக்கு தனது முதுகுப் பகுதியையே காட்டிக்கொண்டு நிற்கிறார். எனவே இந்தக் காட்சி ஆபிரிக்க நாடு ஒன்றிலோ லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றிலோ எடுக்கப்பட்டிருக்கலாம்.
‘லண்டன் ரைம்ஸ்’, ‘கார்டியன்’ போன்ற மேற்குலக ஊடகங்களின் ஒரு பிரிவு இந்த காணொலிக்கு மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.
சிறைக் கைதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா பிரகடனத்துக்கு மாறாக சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட குற்றத்துக்கு ஆதாரமாக இந்தக் காணொலி பயன்படுத்தப்படுகின்றது.
அதேசமயம், நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த காணொலியை ஆதாரமாக வைத்து மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்கா அரசை தாக்குவதற்கான ஆயுதமாக இந்த காணொலியை விடுதலைப் புலிகள் ஆதரவாளரான தமிழ்நாட்டு அரசியல்வாதி வைகோவும் பயன்படுத்தி வருகின்றார்.
எப்படி இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை லண்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் உடனடியாக மறுத்துள்ளார். சிறிலங்காவின் நற்பெயருக்கக் களங்கம் விளைவிப்பதற்காகவே இந்த காணொலி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் பிபிசிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். அந்தக் காட்சிகள் சிறிலங்காவில்தான் எடுக்கப்பட்டன என்பதை யாராவது உறுதிப்படுத்தட்டும் பார்க்கலாம் என அவர் சவால் விடுத்தார்.
சிறிலங்காப் படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ‘சனல் – 4′ நிறுவனம் நடந்துகொண்டமை குறித்து சிறிலங்கா அரசும் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் சிறிலங்காவின் நற்பெயரை வெளிநாடுகளில் சேதப்படுத்தும் இவ்வாறான பிழையான தகவல்கள் மேற்குலக ஊடகங்களால் பரப்புரை செய்யப்படுவதை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
‘சனல் – 4′ நிறுவனம் ஏன் இவ்வாறு சிறிலங்காவுக்கு எதிராக நடந்துகொள்கிறது?
அந்த நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் சிறிலங்காவில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து ‘சனல் – 4′ நிறுவனம் சிறிலங்காப் படையினருக்கும் அரசுக்கும் எதிரான செய்திகளை அடிக்கடி வெளியிட்டு வந்துள்ளது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரிந்த விடயம்.
இந்தக் காணொலியை வழங்கியதாகக் கூறப்படும் சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பானது, பல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு தாமாவே வெளியேறிய ஊடகவியலாளர்களால் அமைக்கப்பட்டது எனத் தெரியவருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றபோது, தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்பது உட்பட விடுதலைப் புலிகளுக்காகப் பேசினார் சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னாள் ஆளுநர் சுனந்த தேசப்பிரிய.
இந்த அமைப்பின் (சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்) தலைவர் தற்போது பிரான்சில் இருக்கிறார் என பாரிசில் உள்ள சிறிலங்கா நிறுவனம் ஒன்றுக்கு தெரியவந்துள்ளது. அந்தக் காணொலிக்கு உலகம் முழுவதும் பரப்புரை வழங்க அவர் தீர்மானித்திருக்கிறார் என்றும் மனித உரிமைகளை மீறியது என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறிலங்கா அரசுக்கு எதிரான பரப்புரையை மேற்கொள்வதற்கு இக் காணொலி அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் அமைப்புக்கு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான மேற்கு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவதாகவும் பரிசில் உள்ள அந்த சிறிலங்கா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment