தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர்
தமிழீழ விடுதலைப்புலிகளினால் அமைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இன்னும் தமிழீழ விடுதலை புலிகளது ஆதரவாளர்களின் அனுதாபம் இருந்ததால் அந்த அனுதாபிகள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்ததாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (11) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துரைத்த சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
பொதுமக்களின் அபிலாசைகளின் படி தமது கட்சியே வவுனியா நகர சபையை கைப்பற்றியிருக்க வேண்டும். எனினும் ஈரோஸ் அமைப்பின் பிரபா குழுவினர் மற்றும் துஷ்யந்தன் குழுவினரும் ஸ்ரீ டெலோ அமைப்பினரும் விடுத்த அச்சுறுத்தல் காரணமாகவே அந்த வாய்ப்பு கைநழுவி போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு சார்பாக நடந்து கொண்ட இந்த குழுவினர் பொலிஸாருடன் இணைந்து தமது அமைப்புக்கெதிராகவும் அமைப்புக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட மக்கள் மத்தியில் சென்று அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தினார்.
இதனால் தமக்கு சுமார் ஆயிரம் வாக்குகள் வரை கிடைக்காமல் போனதாக குறிப்பிட்டார்.
இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளினால் அமைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இன்னும் தமிழீழ விடுதலை புலிகளது ஆதரவாளர்களின் அனுதாபம் இருந்ததால் அந்த அனுதாபிகள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்ததாக குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் பொங்கு தமிழ் போன்ற நிகழ்வுகளுக்கு முன்னின்று உழைத்தவர்களும் வேட்பாளர்களாக நின்றமை இதற்கான காரணம் எனவும் சித்தார்த்தன் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் ஊழலற்ற நிர்வாகம் ஒன்றுக்கு தமது அமைப்பு முழு பங்களிப்பையும் வழங்கும் என அவர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment