கோத்தபாயவின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்பட்ட புலனாய்வுத்துறையின் ஒரு குழுவே பத்மநாதனை கடத்தியது
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்பட்ட புலனாய்வுத்துறையின் சிறப்புக் குழு ஒன்றே மலேசியாவில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதனைக் கடத்தக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளியாகும் வார ஏடான 'லக்பிம' இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருக்கும் செய்தியில், பாதுகாப்புத் தரப்பின் உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்களான தரைப்படைத் தளபதி ஜகத் ஜயசூரிய, காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன ஆகியோர் கூட இது தொடர்பான எந்தத் தகவல்களையும் அறிந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கின்றது.
பத்மநாதன் வானூர்தி மூலமாகக் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அது தொடர்பான செய்திகளை முதன்முறையாக வெளியிட்ட போதுதான் அவர்களும் அதனைத் தெரிந்துகொண்டனர். அந்தளவுக்கு பாதுகாப்புத் தரப்பின் உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்குக் கூட செய்தி கசியாதளவுக்கு இந்தத் திட்டம் மிகவும் இரகசியமாகத் திட்டமிடப்பட்டு கோத்தபாயவின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளையில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள பத்மநாதன், விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் எனவும், பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்களையும், பணத்தையும் பெற்றுக்கொடுத்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் மீது வழக்குத் தொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
Puthinam
0 விமர்சனங்கள்:
Post a Comment