விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்!
டெல்லி: இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என்று இந்தியா திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற மிகப் பெரிய அளவில் இந்தியா மறைமுகமாக உதவியுள்ளது. குறிப்பாக இந்திய கடற்படையின் மிகப் பெரிய உதவியால்தான் விடுதலைப் புலிகளின் பலத்தை நொறுக்கி, இலங்கை ராணுவத்தால் அதை வெற்றி கொள்ள முடிந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
என்டிடிவி டிவியின் பாதுகாப்புப் பிரிவு ஆசிரியர் நிதின் ஆனந்த் கோகலே, Sri Lanka: From War to Peace என்ற நூலை எழுதியுள்ளார். அதில், இலங்கையின் வெற்றிக்கு இந்தியா எந்த வகையில் எல்லாம் உதவியாக இருந்தது என்பதை விவரித்துள்ளார்.
இலங்கைக்கு இந்தியா செய்த மறைமுகமான உதவிகளால்தான் விடுதலைப் புலிகள் வீழ்ந்தார்கள் என்றும் கோகலே தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ராணுவ ரீதியிலான உதவிகளை இந்தியா செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் அரசியல் நெருக்குதல்கள் (தமிழக கட்சிகள்) காரணமாக வெளிப்படையாக உதவிகள் செய்யாத மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்துள்ளதாகவும் கூறுகிறார் கோகலே.
இந்தியா மறைமுகமாக மிகப் பெரிய உதவிகளைச் செய்ததும், சீனா, பாகிஸ்தான் நாடுகள் பகிரங்கமாக ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததுமே புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் கோகலே.
கோகலேவின் நூலிலிருந்து சில பகுதிகள்...
2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ராஜபக்சே இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த மாதமே, அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது விடுதலைப் புலிகளை அழிக்க அவர் உறுதியுடன் இருந்ததும், அதை மிகப் பெரிய லட்சியமாக கொண்டிருந்ததையும் இந்திய அரசு புரிந்து கொண்டது.
இதைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியத் தரப்பு முடிவு செய்தது. தொடக்கத்தில் பேச்சுவார்த்தை மூலம் விடுதலைப் புலிகளுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை கூறப்பட்டது. ஆனால் அதனால் எந்தப் பயனும் விளையாது. விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையை சாக்காக வைத்து மீண்டும் ஆயுதங்களைக் குவிப்பார்கள், ஒன்று கூடுவார்கள், சண்டை முடிவின்றி நீளும் என்று இந்தியத் தரப்பிடம் வாதிட்டார் ராஜபக்சே.
அவரது பேச்சை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதேசமயம், விடுதலைப் புலிகளுடன் மோதுவதாக இருந்தால் ஒரே மூச்சாக சண்டையிட்டு வெற்றி பெற வேண்டும். அவர்களிடம் இலங்கைப் படையினர் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதற்கு இலங்கைப் படையினரை பலப்படுத்திக் கொண்டு களம் இறங்க வேண்டியது அவசியம் என்பதையும் ராஜபக்சே இந்தியத் தரப்பிடம் தெரிவித்தார்.
ராஜபக்சேவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, தங்களுக்கு என்னென்ன ஆயுதங்கள் தேவை, என்ன மாதிரியான உதவிகள் என்ற பட்டியலுடன் அவரது சகோதரர்கள் பசில் மற்றும் கோத்தபயா ஆகியோர் டெல்லி விரைந்தனர். அந்தப் பட்டியலில் - வான் பாதுகாப்பு சாதனங்கள், ஆர்ட்டில்லரி துப்பாக்கிகள், ஆளில்லாத உளவு விமானங்கள் (நிஷாந்த்), லேசர் சாதனங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
ராஜபக்சேவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மன நிலையில் இந்தியா அப்போது இருந்தாலும் கூட அவர் கேட்ட ஆயுதப் பட்டியல் குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தது.
இந்தியத் தரப்பிலிருந்து சரி, இல்லை என்ற பதில் வராததால், சற்று ஏமாற்றத்துடனேயே பசிலும், கோத்தபயாவும் கிளம்பிப் போனார்கள். இருந்தாலும் இந்தியா உதவும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.
ஆனால் இந்திய அரசு இலங்கைக்கு உடனடியாக பதில் தராமல் இருந்ததற்குக் காரணம் உள்ளூரில் அதற்கு இருந்த அரசியல் நெருக்கடிகளே. ஆட்சியில் நீடிக்க திமுகவின் ஆதரவை அப்போது காங்கிரஸ் கட்சி நம்பியிருந்தது. திமுக ஆதரவை விலக்கிக் கொண்டால் உடனே ஆட்சி கவிழும் அபாயம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான பகிரங்க நடவடிக்கைக்கு நிச்சயம் கருணாநிதி ஆதரவு தர மாட்டார், அதை அனுமதிக்கவும் மாட்டார் என்பதால், இந்திய அரசு தயக்கம் காட்டியது.
எனவே இலங்கைக்கு வெளிப்படையான ஆயுத உதவிகளை, ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்வதிலலை என்ற முடிவை காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்தது.
முதலில் போன ஹெலிகாப்டர்கள்...
2006 தொடக்கத்தில், இந்தியா தனது மறைமுக ராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது. முதலில் ஐந்து எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரகசியமாக அனுப்பி வைத்தது. ஆனால் இந்த ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படையின் பெயரில்தான் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் பெயர் இதில் வந்து விடக் கூடாது என்று இலங்கைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதற்கு முன்பாக 2002ம் ஆண்டு இந்திய கடலோரக் காவல் படை, இலங்கைக்கு சுகன்யா என்ற அதி நவீன கடல் ரோந்துப் படகை வழங்கியிருந்தது.
இந்தியா வழங்கி ஹெலிகாப்டர்கள்தான் இலங்கைக்குப் பேருதவியாக இருந்ததாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர். இலங்கை ராணுவம் அமைத்த எட்டு வீரர்களைக் கொண்ட சிறு சிறு குழுக்கள், ராணுவத்தின் ஆழ் ஊடுறுவும் பிரிவினர் உள்ளிட்டோரை புலிகளின் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இந்த ஹெலிகாப்டர்கள் உதவியாக இருந்தனவாம்.
மேலும் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வரவும் இந்த ஹெலிகாப்டர்கள் உதவிகரமாக இருந்தன.
இலங்கை ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினர் திறமையாக செயல்பட இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்கள் பேருதவியாக இருந்ததாக இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
இந்தக் கட்டத்திற்கு மேல் இந்தியா ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்ய தயக்கம் காட்டியது. காரணம், திமுகவின் ஆதரவை அது நாடியிருந்ததால்.
ஆனால் புலிகள் தங்களுக்கு எதிராக பெரும் தாக்குதலைத் தொடக்கலாம் என்ற பதட்டத்தில் இருந்து வந்த இலங்கை அரசுக்கு இந்தியாவின் இந்த நிதானமான போக்கு கவலையை அளித்தது.
2004ம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் தங்களுக்கு பெருமளவில் உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தத் தொடங்கியது இலங்கை.
இந்த ஒப்பந்தத்தை இந்தியா நடைமுறைப்படுத்தாதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. அது யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான தளத்தை தங்களது பொறுப்பில் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரியிருந்தது. ஆனால் இதை இலங்கை ஏற்கவில்லை. இது இந்தியாவின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது, தங்களை அவமதிக்கும் அம்சம் இது என்று இலங்கை கருதியது. இதனால்தான் இலங்கைக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயக்கம் காட்ட இன்னொரு காரணம். இருப்பினும் ஈழத்தில் போர் முடிந்த தற்போதைய நிலையில் பலாலி விமானதளத்தை சீரமைத்துத் தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை வழிக்குக் கொண்டு வந்த ராஜபக்சே சகோதரர்கள்...
இந்திய அரசின் கவலை மற்றும் பிரச்சினைகளை ராஜபக்சேவும் உணர்ந்திருந்தார். தமிழகத்தை மையமாக வைத்துத்தான் இந்திய அரசியல் இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.
அதேசமயம், இலங்கைக்கு உதவுவது இந்தியாவுக்கு அவசியம் என்பதையும் அவர் புரிந்திருந்தார். இல்லாவிட்டால் தெற்காசியப் பகுதியில், இந்தியாவின் பிடி தளர்ந்து போய் விடும் என்பது இந்தியாவுக்குத் தெரியும் என்பதையும் அவர் புரிந்து வைத்திருந்தார்.
இதை ராஜபக்சே சகோதரர்கள் சரியாகப் புரிந்து கொண்டு காய்களை நகர்த்தத் தொடங்கினர். பாகிஸ்தான், சீனாவின் உதவிகளை அவர்கள் நாடத் தொடங்கினர். அதே சமயம், முற்று முழுதாக இந்தியாவை புறக்கணித்து விட முடியாத நிலையும் ராஜபக்சேவுக்கு.
இதனால் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று பேரையும் சரிசமமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர் பசில், கோத்தபயா மற்றும் அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்தார்.
இந்தக் குழுவின் வேலை, தினசரி, இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு போர் குறித்த நிலவரங்களை அப்டேட் செய்வது.
அதேபோல இந்தியத் தரப்பிலும் ஒரு ரகசியக் குழு அமைக்கப்பட்டது. சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன், பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய் சிங் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பிடித்தனர்.
இந்த இரு குழுக்களும் தினசரி போர் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டன. ஒருவருக்கொருவர் தகவல்களையும் பரிமாறிக் கொண்டனர். இரு குழுக்களும் பெரும்பாலும் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டாலும் கூட அவ்வப்போது நேரிலும் சந்தித்துக் கொள்ளத் தவறவில்லை. மேலும் ஒவ்வொரு சந்திப்புக்கும் ஏதாவது ஒரு காரணம் கூறி வைக்கப்பட்டது. ஆனால் இவர்களின் ஒவ்வொரு சந்திப்பின்போதும் புலிகள் அழிப்பு குறித்துத்தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
2007-09 ஆண்டுகளில் இலங்கைக் குழு இந்தியாவுக்கு ஐந்து முறை வந்தது. இந்தியக் குழு 3 முறை இலங்கை போனது.
இந்தியக் குழுவின் பயணங்களிலேயே மிகவும் முக்கியமானது 2008ம் ஆண்டு ஜூன் மாதம் மேனன் தலைமையிலான குழு இலங்கை போனதுதான். அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் விறுவிறுப்படைந்திருந்தது.
2008 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் சார்க் அமைப்பின் 15வது மாநாடு நடக்கவிருந்தது. இந்த நிலையில்தான் ஜூன் மாதம் இந்திய விமானப்படை விமானம் மூலம் ரகசியமாக வந்து சேர்ந்தனர் நாராயணன், மேனன், விஜய் சிங் குழுவினர். அவர்களது வருகை கிட்டத்தட்ட ரகசியப் பயணமாக வைக்கப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகள் , சார்க் மாநாட்டில் பெரும் தாக்குதல் நடத்தக் கூடும் என அப்போது எதிர்பார்ப்பிருந்தது.
அதுபோல நடந்து விடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை முடுக்கி விட வேண்டும் என மேனன் குழுவினர் கேட்டுக் கொண்டனர். மேலும், இந்தியப் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புப் பணிக்காக அனுப்புவதாகவும் இந்தியா தெரிவித்தது. இதை ஏற்குமாறும் இலங்கையை அது வலியுறுத்தியது.
ஒருவேளை இந்தியாவின் பாதுகாப்புப் படையினரை இலங்கை ஏற்காவிட்டால் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்றும் மிரட்டலாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவின் படை வருகையை இலங்கை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டது.
அதன்படி இந்திய கடற்படைக் கப்பல்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் குவிக்கப்பட்டன.
தேர்தலுக்கு முன்பு 'முடிக்க' விரும்பிய இந்தியா...
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழு கொழும்பு வந்து சேர்ந்தபோது பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இதுபோன்ற ஒரு பாதுகாப்பை நான் அதுவரை இலங்கையில் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு முற்றுகையில் இருந்தது இலங்கைத் தலைநகர்.
கிட்டத்தட்ட கொழும்பு நகரம் மூடப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலை காணப்பட்டது.
பண்டாரநாயகே விமான நிலையத்திலிருந்து மாநாடு நடந்த இடத்திற்கு மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அனைத்து சாலைகளும் பல மணி நேரத்திற்கு மூடப்பட்டன. பாதுகாப்பு கெடு பிடி காரணமாக கொழும்பில் வசித்து வந்த பலர் வீடுகளை விட்டே வெளியேறியதும் எனக்கு நினைவில் உள்ளது. பிரச்சினை எதுவும் இல்லாமல் சார்க் மாநாடு முடிந்தது.
இந்த பயணத்தின்போது இந்திய அதிகாரிகள், விடுதலைப் புலிகளுடனான போரின் நிலவரம் குறித்தும் முக்கியமாக ஆலோசித்தார்கள். இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, கடற்படைத் தளபதி கரன்னகோடா ஆகியோருடன் இந்தியக் குழு ரகசியமாக சந்தித்துப் பேசியது.
இந்த சந்திப்பின்போது சீன மற்றும் பாகிஸ்தான் தலையீடுகள் குறித்து இந்தியத் தரப்பினர் கவலை தெரிவித்தனர். ஆனால் இந்தியா ஆயுத உதவிகளைச் செய்ய மறுத்ததால்தான் சீன, பாகிஸ்தான் உதவியை நாட நேரிட்டதாக இலங்கைத் தரப்பு கூறியபோது இந்தியாவால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை என்று இலங்கை அதிகாரி ஒருவர் பின்னர் என்னிடம் தெரிவித்தார்.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத இந்தியா, ராஜபக்சேவிடம் ஒரே ஒரு முக்கிய செய்தியை மட்டும் சற்று உறுதிபட தெரிவித்து விட்டு வந்தது. அது - 2009ல் நடைபெறவுள்ள இந்திய லோக்சபா தேர்தலுக்கு முன்பாக போரை முடித்து விடுங்கள் என்பதுதான்.
தேர்தலின்போது ஈழப் போரின் நிழல் விழுவதையும், அதனால் தங்களது வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதையும் காங்கிரஸ் அரசு விரும்பவில்லை. மேலும், தேர்தல் நேரத்தில் போர் நீடித்துக் கொண்டிருந்தால் அது சரியாக இருக்காது, தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் அரசு பயந்தது.
இந்தியாவின் கவலையைப் புரிந்து கொண்டார் ராஜபக்சே. அதேசமயம், அவர் காலக்கெடு எதையும் நிர்ணயித்துக் கொள்ள விரும்பவில்லை. அதேசமயம், நடவடிக்கைளை விரைவுபடுத்துவதாக அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து மேனன், நாராயணன், விஜய் சிங் கோஷ்டியினர், பாதி கோரிக்கைள் நிறைவேறிய அரை குறை திருப்தியுடன் டெல்லி திரும்பினர்.
கை கொடுத்த இந்திய கடற்படை...
இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த சமயத்தில் பெரும் உதவியாக வந்து சேர்ந்தது இந்தியக் கடற்படை.
இந்தியக் கடற்படையின் பேருதவியால் விடுதலைப் புலிகளின் பத்து ஆயுதக் கப்பல்களை தாக்கி தகர்த்தது இலங்கை கடற்படை. சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய கனரக ஆயுதங்கள் வரை இந்த கப்பல்கள் மூலம் புலிகளுக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றை இலங்கை தாக்கி அழித்ததால் புலிகளுக்கு அது பெரும் இழப்பாக அமைந்தது.
2006ம் ஆண்டு முதல் போர் முடியும் காலம் வரை இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் மிகத் திட்டமிட்ட ஒருங்கிணைப்பை மேற்கொண்டிருந்தன. இந்த கூட்டுச் செயல்பாடுகள் காரணமாக, விடுதலைப் புலிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்தியக் கடற்படை, இலங்கைக்கு பல வழிகளில் உதவி புரிந்தது.
உதாரணத்திற்கு, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மையத்திலிருந்து இந்திய கடற்படை உளவு மற்றும் ரோந்து விமானங்கள் தொடர்ந்து இலங்கைக் கடல் பகுதியை அங்குலம் அங்குலமாக கண்காணித்து வந்தன. தொடர்ந்து அவை இலங்கைக் கடற்பகுதியை சுற்றி வந்தன.
அதிக சக்தி வாய்ந்த ரேடார்கள் பொருத்தப்பட்டவை இந்த விமானங்கள். இலங்கைக் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பல் அல்லது படகின் நடமாட்டம் தெரிந்தால் இவை உடனே இலங்கைக் கடற்படைக்குத் தகவல் அனுப்பி அவர்களை உஷார்படுத்தும்.
உடனடியாக விரையும் இலங்கைக் கடற்படையினர், அந்த மர்மக் கப்பல் அல்லது படகை தாக்கி அழிப்பார்கள். இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடல் மார்க்கமாக கொண்டு வருவது முற்றிலும் தடைபட்டது. இந்தியாவின் இந்த உளவு வேலையால் கடற்புலிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.
இப்படி இந்தியாவின் உதவியால் முதலில் 2006, செப்டம்பர் 17ம் தேதி விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய ஆயுதக் கப்பலை இலங்கை கடற்படை தாக்கி அழித்தது. 2007ம் ஆண்டின் தொடக்கத்தில் மேலும் 3 கப்பல்கள் அழிக்கப்பட்டன.
இதுதவிர இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர், பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதியில் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்தனர். இதனால் கடற்புலிகளின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முற்றிலும் நின்று போயின.
இந்திய கடற்படையின் உதவி குறித்து இலங்கை கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடா 2008ம் ஆண்டு இவ்வாறு கூறினார் - இந்தியாவுடன் ஏற்பட்ட ஒத்துழைப்பு, விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக எதிர்க்க பேருதவியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினருடன் நான்கு முறை இலங்கைக் கடற்படையினர் சந்திப்புகளை மேற்கொள்கின்றனர். இந்திய கடற்படையுடன் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப் பணியையும் இலங்கை கடற்படை மேற்கொள்கிறது என்றார்.
மேலும், விடுதலைப் புலிகளின் அனைத்து ஆயுதக் கப்பல்களையும் தகர்த்து விட்டோம். அவர்களிடம் இப்போது எந்தவகையான கப்பலோ அல்லது படகோ இல்லை. அத்தனையையும் தகர்த்ுத விட்டோம்.
ஒரே ஆண்டில், கிட்டத்தட்ட 10 ஆயிரம் டன் ஆயுதங்களைக் கொண்ட விடுதலைப் புலிகளின் கப்பல்களை தகர்த்து விட்டோம். இந்தக் கப்பல்களில் பிரித்துக் கொண்டு வரப்பட்ட 3 விமானங்களின் உதிரி பாகங்கள், ஆர்ட்டில்லரி, மார்ட்டர்கள், குண்டு துளைக்காத வாகனங்கள், நீர்மூழ்கி சாதனங்கள், ஸ்கூபா டைவிங் செட், ரேடார் உள்ளிட்டவை முக்கியமானது.
இந்தியாவின் உதவியால், 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருமுறை கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய கடல் எல்லை வரை இலங்கை கடற்படை சென்று, புலிகளின் மூன்று கப்பல்களை தகர்த்தனவாம். அக்டோபர் 7ம் தேதி மேலும் ஒரு கப்பலை இலங்கை கடற்படை தகர்த்தது.
இலங்கைக் கடற்படையிடம் போர்க் கப்பல்கள் எதுவும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்கள் தங்களிடம் இருந்த ரோந்துப் படகுகள் உள்ளிட்டவற்றை வைத்துத்தான் விடுதலைப் புலிகளின் கப்பல்கள், படகுகளைத் தகர்த்தனர். இந்த நடவடிக்கைகளை அவர்கள் தெளிவாகவும், துல்லியமாகவும் செய்ய முக்கிய காரணமாக அமைந்தது இந்தியக் கடற்படைக் கொடுத்து வந்த உளவுத் தகவல்களே.
கடல் பகுதியில் எங்கு எந்தக் கப்பல் வருகிறது என்பதை துல்லியமாக இலங்கைக் கடற்படைக்கு இந்தியா சொல்லிக் கொண்டே வந்தது. அதை வைத்து அங்கு சென்று திடீர்த் தாக்குதல்களை நடத்தி புலிகளை நிலை குலைய வைத்தது இலங்கை கடற்படை.
புலிகள் இதை எதிர்பார்க்கவில்லை. காரணம், இலங்கைக் கடற்படையின் திறமை மற்றும் அவர்களின் தாக்குதல் வசதி மகா ஓட்டையானது என்பது அவர்களுக்குத் தெரியும். உண்மையில் இலங்கைக் கடற்படையை விட கடற்புலிகள் பிரிவு பெரும் பலம் படைத்தது. ஆனால் இந்தியா இப்படி உளவு சொல்லி இலங்கைக் கடற்படைக்கு உதவி செய்ததை அவர்கள் அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டதால் பேரிழப்பை சந்திக்க நேரிட்டது.
கடந்த மார்ச் மாதமே, இந்தியாவின் உதவிகள் குறித்து அரசல் புரசலாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. ஆனாலும் இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாமல் இருந்தது இலங்கை. காரணம், அப்போது இந்தியாவில் லோக்சபா ஜூரம் தீவிரமாக இருந்ததால்.
ஆனால் இந்தியக் கடற்படை செய்த உதவிகள், இலங்கைக்கு மிகப் பெரிய உதவியாக அமைந்தன என்பது நிதர்சனம். கடற்படையின் தென் பிராந்திய கமாண்ட் மூலமாக மூன்று அதி விரைவு படகுகள், ஒரு ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல் ஆகியவை இலங்கைக்காக தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தன. 2007ம் ஆண்டின் பின் பகுதியிலிருந்தே இந்தியாவின் இந்த உதவி தொடங்கி விட்டது.
இப்படி இந்தியக் கடற்படையும், இலங்கைக் கடற்படையும் சேர்ந்து கடல் பகுதியை முற்றுகையிட்டு தொடர்ந்து இறுக்கி வந்ததால் கடற்புலிகள் கிட்டத்தட்ட செயலாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் நெடுந்தீவு புலிகளுக்கு பெரும் அடியாக அமைந்து போனது. யாழ்ப்பாணம் குடா பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் தீவுதான் நெடுந்தீவு.
இந்தத் தீவு ராமேஸ்வரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலிருந்து கிட்டத்தட்ட சம தொலைவில் உள்ளது.
இந்த தீவை கடற்புலிகளைக் கண்காணிக்க மையமாக மாற்றிக் கொண்டது இலங்கைக் கடற்படை. யாழ்ப்பாணம் கடல் பகுதியை மட்டுமல்லாமல் மன்னார் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளையும் இந்தத் தீவிலிருந்தே கண்காணித்து வந்தது இலங்கைக் கடற்படை.
ஆனால் 2007ம் ஆண்டு மே மாதம் நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமை விடுதலைப் புலிகள் துணிச்சலுடன் தாக்கினர். அங்கிருந்த 7 வீரர்களைக் கொன்ற கடற்புலிகள், 2 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், 2 மெஷின் கன், ஒரு ஆர்பிஜி லாஞ்சர், எட்டு ரைபிள்களை தூக்கிக் கொண்டு தப்பினர்.
இந்த முகாமிலிருந்து ஒரு ரேடாரையும் புலிகள் எடுத்துக் கொண்டு போய் விட்டதாக கூறப்பட்டது. இது கடற்படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியாவிடம் உதவி கோரியது. இந்த முறை இந்தியா உடனடியாக உதவி செய்தது. ஆனால் என்ன மாதிரியான உதவி என்பதை இரு தரப்பும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
இப்படி இலங்கைக்கு மறைமுகமாக பல வழிகளில் ஒத்துழைப்பு கொடுத்தும் கூட, பாகிஸ்தான், சீனாவுடனான தனது நெருக்கத்தை இலங்கை அதிகரித்துக் கொண்டே போனது இந்தியா கடுப்பாக்கியது.
இந்தியாவின் புழக்கடை வழியாக சீனாவும், பாகிஸ்தானும் மெல்ல மெல்ல ஊடுறு வருவதை இந்தியா மெளனம் மற்றும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில்தான் 2007ம் ஆண்டு மே மாதம் எம்.கே.நாராயணன் இப்படிக் கூறினார் - இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் மிகப் பெரிய சக்தி என்பதை இலங்கை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. பாகிஸ்தான் அல்லது சீனாவிடம் ஆயுதம் வாங்குவதை அது கைவிட வேண்டும். எங்களது வெளியுறவுக் கொள்கைக்குட்பட்டு இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்பதை இலங்கை உணர வேண்டும் என்றார்.
இலங்கைக்கு உதவ வேண்டும். அதேசமயம், வெளிப்படையான ஆயுத உதவிகளால் ஆட்சி பறி போகும் என்ற இரட்டைக் குழப்பத்தில் அப்போது இருந்தது காங்கிரஸ் அரசு. இருப்பினும் இந்தக் குழப்பம் ஏற்பட உண்மையில் இலங்கை காரணம் அல்ல. அது காங்கிரஸ் அரசாக ஏற்படுத்திக் கொண்ட குழப்பம்தான்.
ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அதேசமயம், சீனா, பாகிஸதானையும், இலங்கைக்குள் விட்டு விடக் கூடாது என்ற இரட்டை நப்பாசையால் ஏற்பட்ட குழப்பம் அது.
ஆனால் இலங்கைக்கு அந்தக் குழப்பம் இல்லை. இந்தியா இல்லாவிட்டால் சீனா, பாகிஸ்தான் என அது தெளிவாகவே இருந்தது.
இந்தியாவின் குழப்பம்- சீனா, பாக்.கின் லாபம் ...
இதுகுறித்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் பின்னர் நான் ஒருமுறை பேசியபோது அவர் கூறினார் - முதலில் இந்தியாவிடம்தான் நாங்கள் ஆயுத உதவி கோரினோம். இந்தியா மறுத்த பின்னரே, பிற வாய்ப்புகளை நாங்கள் நாடினோம்.
முதலில் மேற்கத்திய நாடுகளை அணுகினோம். ஆனால் அவர்களின் ஆயுதங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதையும் மீறி அவர்களிடம் ஆயுதங்களை வாங்கினால் தொடர்ந்து தருவார்களா என்ற சந்தேகமும் இருந்தது.
இதையடுத்து சீனாவிடம் திரும்பினோம். எங்களுக்கேற்ற விலையில் பெருமளவில் ஆயுதங்களைத் தர அவர்கள் தயாராக இருந்தனர். மேலும் ஐந்து வருட கடனுக்கு அவர்கள் ஆயுதங்களைக் கொடுக்க முன்வந்தனர். இதையடுத்து அவர்களிடம் கொள்முதல் செய்தோம்.
அதேசமயம், பாகிஸ்தானிடம் அவசரமாக தேவைப்பட்ட ஆயுதங்களை மட்டுமே கொள்முதல் செய்தோம் என்றார்.
இந்தியாவின் குழப்பத்தை சீனாவும், பாகிஸ்தானும் இப்படி சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டன. இதன் விளைவு இன்று இந்தியாவின் பின்புறம், சீனாவும், பாகிஸ்தானும் சத்தம் போடாமல் வந்து நின்று விட்டன என்று தனது நூலில் எழுதியுள்ளார் கோகலே.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment