விசாரணைக்காக கேபியை இந்தியா கொண்டு வர சிபிஐ திட்டம்
டெல்லி: விசாரணைக்காக செல்வராஜா பத்மநாதன் எனப்படும் கேபியை இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ திட்டமிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கேபிக்கு நேரடியான தொடர்பு எதுவும் இல்லை. இருப்பினும், மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட தனு மற்றும் ஒற்றைக் கண் சிவராசனுக்குத் தேவையான ஆயுதங்களை கேபி மூலம்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்றுக் கொடுத்தது.
அதேசமயம், கடந்த 1991ம் ஆண்டு சென்னையில் கேபி மீது ஆயுதக் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்கை வைத்து கேபியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க யோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
கேபி இந்தியா கொண்டு வரப்பட்டால், ராஜீவ் காந்தி கொலைப் பின்னணி என்ன, யார் யாருக்கு இதில் தொடர்பு இருந்தது, சர்வதேச சதி ஏதேனும் உண்டா என்பது உள்ளிட்டவை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணைக் குழு, அவரை விசாரிக்கும் எனத் தெரிகிறது.
கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழக கடல் பகுதியில் டோம்நோவா என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படை பிடித்தது. விடுதலைப்புலிகளுக்காக அந்த கப்பல் ஆயுதங்களை கடத்திச் செல்ல இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதிலிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த 10 பேரும் கைது செய்யப்பட்டார்கள். 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ந் தேதி சென்னை துறைமுகத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சட்ட விரோதமாக ஆயுதங்களை கடத்தியதாக அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இதில் முதல் குற்றவாளியாக கேபி சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிக்கவில்லை என்பதால், 1992ம் ஆண்டு, ஜூன் மாதம் 11ம் தேதி அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.
தற்போது கேபி பிடிபட்டுள்ளால் இந்த வழக்கை கையில் எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment