சாவின் விளிம்பிலுள்ள சரணடைந்த போராளிகள்
நிராயுதபாணிகளாக சிறிலங்கா அரச படைகளிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சிறிலங்கா அரசின் புலனாய்வுப்பிரிவினாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சிங்கள ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் விடுதலைப்புலிகளின் சமராய்வுப்பொறுப்பாளர் யோகி,பொருண்மியப்பொறுப்பாளர்களில் ஒருவரான கரிகாலன் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் அடங்குவர் என்றும் கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த மே மாத காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தனது மிகக்கொடூரமான - மிருகவெறித்தனமான - நடவடிக்கைகளை தமிழ்மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்டிருந்தமை யாவரும் அறிந்தவிடயம். ஈற்றில் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு நிராயுதபாணிகளாக வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறை தலைவர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோரை சிறிலங்கா படையினர் மிகக்கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். மொத்தத்தில் சர்வதேச போர் நியமங்களை அனைத்தையும் மீறிய படுபாதகங்களை அங்கு அரங்கேற்றியது.
அதன்பின்னர்,சரணடைந்த பல்லாயிரக்கணக்கான போராளிகளை தனித்தனியான குழுக்களாக பிரித்து கிளிநொச்சி மற்றும் ஏனைய பிரதேசங்களில் வைத்து விசாரணைசெய்த படையினர் அவர்களிலிருந்த உயர்மட்ட உறுப்பினர்களை கொழும்புக்கு கொண்டு சென்று நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்தனர். இவர்களில் பலர் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் செயற்பட்ட நீண்டகால உறுப்பினர்களும் அடங்குவர்.
இவ்வாறு விசாரணை செய்யப்பட்ட பின்னர் முக்கிய உறுப்பினர்கள் பலரையும் அரசு தொலைக்காட்சிகளுக்கு வந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக செவ்வி தரும்படி அரச புலனாய்வுத்துறையினர் நிர்ப்பந்தம் செய்துள்ளனர். புலனாய்வுத்துறையின் இந்த வேண்டுகோளை நிராகரித்த பல நூற்றுக்கணக்கான விடுதலைப்புலிகளின் உயர்மட்டத்தினர், தலைமையின் பணிப்பின்பேரில் ஆயதங்களை கீழே வைத்துவிட்டு சரணடைந்த நாம், எமது தேசத்துக்கும் தேசியத்துக்கும் இலட்சியத்துக்கும் துரோகமிழைக்கும்வகையில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளமாட்டோம் என்று கூறிவிட்டனர். இதனையடுத்து மீண்டும் வன்னிக்கு கொண்டுசெல்லப்பட்ட இந்த நூற்றுக்கணக்கான போராளிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.
சரணடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பாக எந்த தகவலையும் அரசுத்தரப்பு செஞ்சிலுவை சங்கம் உட்பட எந்த தரப்புக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இன்னமும் 1000 போராளிகளே விடுதலைப்புலிகள் அமைப்பில் உள்ளனர் என்று கூறிவந்த சிறிலங்கா இராணுவம், தற்போது 9000 போராளிகள் சரணடைந்துள்ளதாக தெரிவித்து, மாவீரர் குடும்பத்தினர் உட்பட பெருந்தொகையானோரை விடுதலைப்புலிகள் என்ற பட்டியலில் அடக்கி விசாரணை செய்துவருகிறது. அவர்களில் பலருக்கு புனர்வாழ்வு அளிப்பதாக கூறி, வெளிநாடுகளுக்கு புகைப்படம் எடுத்து காண்பித்தும்வருகிறது. ஆனால், உண்மையில் சரணடைந்த பல நூற்றுக்கணக்கான போராளிகள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் இன்னும் பல்லாயிரக்கணக்கானோரின் நிலைமை வெளியில் எவருக்குமே தெரியாத மர்மமாக இருந்துவருகிறது.
இந்த போராளிகள் மீதான கவனத்தை திசை திருப்புவதற்காக தம்மிடம் சரணடைந்து தாம் சொல்லும் எல்லா காரியங்களையும் மேற்கொண்டுவரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளர் தயா மாஸ்டர், மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர், மூன்று வைத்தியர்கள் ஆகியோர் தொடர்பான செய்திகளுக்கு அரசு ஊடகங்களில் கூடிய அக்கறை செலுத்துப்படுவதுடன் கைது செய்யப்பட்ட இவர்களுடன் காவலில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் மீதும் தாம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அடிக்கடி இவர்களை நீதிமன்றத்தில் ஏற்றி இறக்கி தாம் மிகவும் ஒழுங்காகத்தான் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் நடத்துவதாக சிறிலங்கா அரசு வெளிஉலகுக்கு காண்பித்துவருகிறது.
போரில் சரணடைந்தவர்கள் விடயத்தில் சர்வதேச போர் நியமங்களை எவ்வாறு பின்பற்றவேண்டும் என்ற அந்த அடிப்படையும் இல்லாது அவ்வாறு சரணடைந்தவர்களின் பெயர் விவரங்களை உலக பொதுத்தொண்டு நிறுவனமான சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும் தெரிவிக்காது தொடர்ந்தும் தனது கொலைப்படலத்தை அரங்கேற்றிவருகிறது சிறிலங்கா அரசு.
ஆகவே, உயிருடன் உள்ள போராளிகளையாவது காப்பாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய அவசரநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தேசத்துக்காக களமாடிய தமிழர்சேனையின் தலைமகன் ஒருவன் அங்கு சிங்களத்தின் சிறையில் முகவரியே இன்றி செத்துமடியப்போகிறான்.
வெளிநாடுகளில் இருக்கின்ற செஞ்சிலுவை சங்க கிளைகளில் குறிப்பிட்ட போராளிகளின் உறவினர்கள் முறையிட்டு தமது உறவுகளின் கதி குறித்து அறிந்து கூறும்படி வேண்டுகோள் விடுத்தால், செஞ்சிலுவை சர்வதேச குழு நிச்சயம் அந்த பணியை செய்யும். வவுனியாவிலுள்ள தடுப்புமுகாமிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் பல உறவினர்கள் இவ்வாறு வெளிநாடுகளில் உள்ள செஞ்சிலுவை சங்க கிளைகளிடம் முறையிட்டு தமது உறவுகளுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு இடையில் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் செஞ்சிலுவை சர்வதேச குழு உதவிவருகிறது.
இதேபோன்று, எந்த தகவலுமின்றி மர்மமானமுறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலைகுறித்தும் - அவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்தால் - அந்தந்த நாடுகளில் உள்ள செஞ்சிலுவை சங்கங்களில் அவர்கள் தொடர்பான விவரங்களை கொடுத்து அவர்களின் உயிர்வாழ்வை உறுதி செய்யும்படி கோரி அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினால் அதற்குபின்னர் அவர்களது உயிருக்கு ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும். தற்போதைய நிலையில் அவர்கள் சிறிலங்கா அரசின் கணக்கு வழக்கின்றி கொலைசெய்யப்படும் பட்டியலில் ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்நோக்கியவண்ணமுள்ளார்கள். சிறிலங்காவிலுள்ள செஞ்சிலுவை சங்கத்திலும் இதனை மேற்கொள்ளமுடியும். அங்கு அதனை செய்வதால் உயிருக்கு அச்சுறுத்தல் வரலாம் என அஞ்சுபவர்கள் வெளிநாடுகளிலுள்ள தமது உறவினர்கள் ஊடாக அதனை மேற்கொள்ளலாம்.
ஆகவே, செஞ்சிலுவை சர்வதேச குழுவின் ஊடாக இந்த கோரிக்கையை விடுக்க அந்த அமைப்பின் இணைய முகவரிக்கு சென்றால் அங்கு சகல விவரங்களும் அறியதரப்பட்டுள்ளன. 'உறவுகளுடன் தேடும் பணி' என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள பகுதியினுள் ஒவ்வொரு நாட்டிலும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தொடர்பு விலாசங்கள் தரப்பட்டுள்ளன. அங்கு தொடர்பு கொண்டு கோரிக்கையை முன்வைக்கலாம். அங்கு அவர்கள் தரும் படிவத்தை நிரப்பிக்கொடுத்தால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உறவுகளின் நிலைகுறித்த தகவல் கிடைக்கப்பெறலாம்.
மேலதிக விவரங்களுக்கு :- http://www.icrc.org/eng
சேரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment