பெர்லின் திட்டமும் வீடியோ படமும்
நலன்புரி நிலையங்களில் உள்ள புலிகளின் மாவீரர்கள் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் எதிர்விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் தற்போதைய துணை இராஜாங்கச் செயலாளருமான ரொபர்ட் ஓ ப்ளெக் கூறியிருக்கிறார்.
இவர் இவ்வாறு கூறியிருக்கின்ற தருவாயில் தற்போது நலன்புரி நிலையங்களில் இருந்துவரும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொழும்பில் இருக்கக் கூடிய புலிகளின் ஆதரவாளர்களுடன் இணைந்து இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றொரு செய்தியும் கடந்தவாரம் தென்னிலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தது.
இதே நேரம் கடந்தவாரம் புலிகளின் முக்கிய கேந்திர நிலையமாக செயற்பட்டு வந்துள்ள கொழும்பு, மட்டக்குளிய, முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றை புலனாய்வுத்துறையினர் சுற்றி வளைத்தனர். இவ்வீடு சொகுசு வீடுகள் அமைந்துள்ள தொகுதியில் உள்ளது.
இந்த வீட்டில் இருந்து சீ 4 ரக வெடிபொருட்கள் கொண்ட அங்கி ஒன்றையும், அதிதொழில்நுட்பம் வாய்ந்த துப்பாக்கி ஒன்றையும் 13 சயனைட் குப்பிகளையும் தூர இயக்கக் கருவிகள் இரண்டையும் 15 அடி நீளமுள்ள டெட்டனேடர் கயிறொன்றையும் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றிக் கொண்டதுடன் இங்கிருந்து ஒரு தமிழ்ப் பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
மேற்படி பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருந்த உருக்கு அலுமாரிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இதன் இலக்கு பாதுகாப்புச் செயலாளர் என்றும் செய்திகள் தெரிவித்தன.
முகத்துவாரம் பகுதியில் இருந்து புலனாய்வுத்துறையினரால் புலிகளின் அங்கி மீட்டெடுக்கப்பட்ட முதலாவது சம்பவம் இதுவல்ல. ஹெந்தனை, எலகன்த, வத்தளை பகுதிகளில் இருந்து முகத்துவாரம் வரையிலும் அங்கிருந்து கதிரேசன் வீதி ஊடாக வெள்ளவத்தை வரையிலும் புலிகளின் வலைப்பின்னல்கள் பரவலாக்கப்பட்டிருந்தன.
முகத்துவாரத்தில் சொகுசு வீட்டில் இருந்து மேற்படி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், புலிகள் இயக்கத் தலைமை கொல்லப்பட்ட போதிலும் எஞ்சியுள்ள பொருட்களைக் கொண்டு அழிவு தரக் கூடிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு கொழும்பிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த வார ஊடகங்கள் விமர்சித்திருந்தன.
பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதனால் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா போன்ற பகுதிகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் மிகுந்த விசனத்துடன் இருக்கிறார்கள். இவர்கள் இப்பொது பசுத்தோள் போர்த்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் சபையின் தலைவரான ஜெனரல் சரத் பொன்சேகா, புலிகள் தோற்கடிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கழிந்த நிலையில், யுத்த வெற்றிக்கு அடிப்படையான காரணிகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.
“நாங்கள் இதுவரை காலமும் பின்பற்றி வந்த முறைமைகளையும் தந்திரோபாயங்களையம் மாற்றியமைத்தோம். சிறு, சிறு இராணுவக் குழுக்களைப் பயன்படுத்தி புலிகளின் பகுதிக்குள் அவர்களை அனுப்பி புலிகளுக்கு சவாலாகக் கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்” என அவர் கூறியிருந்தார்.
“முப்பது வருடங்களாக இந்த யுத்தம் நடைபெற்று வந்தது. மக்களிடையே அசாதாரணச் சூழ்நிலை நிலவியது. இதனால் இராணுவத்தின் மீதிருந்த நம்பிக்கையும் போய்விட்டது. 2006ம் வருடம் ஆகஸ்ட் மாதம் இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இராணுவத்தை யுத்தத்திற்காகத் தயார் செய்வதே எனது தலையாயப் பணியாக இருந்தது. முதலின் நான் இராணுவத்தில் இருந்துவந்த பாரம்பரிய முறைமைகளை மறுசீரமைத்தேன். புதிய முகங்களையே யுத்த முனைக்கு அனுப்பினேன். அத்துடன் இராணுவத்தின் ஆளணிப் பலத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தேன்.
அதே நேரம் ஆயுதங்கள், தோட்டாக்கள், யுத்த டாங்கிகள், யுத்த வண்டிகள் போன்றவற்றின் தொகையினையும் அதிகரித்துக் கொண்டேன்.
முதலில் சிறு, சிறு குழுக்களை நாம் காட்டிற்குள் அனுப்பி வைத்தோம். இதன் போது எமது இக்குழுக்களை நேரில் சந்திப்பதை தவிர்த்துக் கொள்வது புலிகளின் செயற்பாடாக இருந்தது என்றும் ஜெனரல் பொன்சேக்கா கூறியிருந்தார்.
மேலும், “புலிகளது முக்கியத் தளங்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது புலிகள் மிகவும் பலஹீனமடைந்திருக்கிறார்கள் என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
2007ம் வருடம் இறுதிக் கட்டமாகும்போது நாம் அனைத்து முன்னரங்குகளுக்குமாக 35 படைக் குழுக்களை அனுப்பி வைத்தோம். தினமும் எமது படையினர் புலிகளுடன் மோதினர். கடும் மழை, வெள்ளம், காலநிலை போன்ற அச்சுறுத்தல்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் மத்தியில் நாங்கள் புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.
அரசு ஒவ்வொரு வருடமும் இராணுவத்திற்கு அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்தது. எனினும் அனைத்துப் பக்கங்களிலுமாக இடம்பெற்று வந்த ஊழல் மற்றும் மோசடிகளால் இராணுவமானது அதிக செலவுகளைக் கொண்டதொரு நிறுவனமாக மாறியிருந்தது.
நான் ஒவ்வொரு டென்டர் சபைக்கும் சென்று, அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க ஆரம்பித்தேன். இதற்கு முன்னர் எவராவது ஓர் இராணவ அதிகாரி சட்ட விரோதமாக பணம் சேகரித்திருந்தால் அவருக்குத் தண்டனை வழங்கப்படமாட்டாது. அவரது பணிக்கோ அல்லது பதவி உயர்விற்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. அதே நேரம் அவர் ஈட்டிக் கொண்ட பணத்தை மீளச் செலுத்துவதாக அவர் ஒப்புக் கொண்டால் அடுத்த கட்ட பதவி உயர்வும் அவருக்குக் கிடைத்து விடும். எனவே நானிந்த பரம்பரை முறைமையை மாற்றியமைத்தேன். குற்றவாளிக்கு உரிய தண்டனைகளை வழங்கினேன்.
ஒவ்வொரு மாதமும் 3000ற்கும் 5000ற்கும் இடைப்பட்ட தொகையினருக்கு இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா கூறினார். நீண்டகாலமாக செயற்பட்டு வந்துள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவையும் இவர் முழுமையாக மாற்றியமைத்துள்ளார்.
“இராணுவ புலனாய்வுத் துறையுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் நான் விலக்கி விட்டேன். இப்பிரிவில் கடமையாற்றிய பலர் 15, 20 வருட காலமாக தொடர்ந்து இப்பிரிவிலேயே கடமையாற்றி வருகின்றனர் என்பதை நான் அறிந்து கொண்டேன். இதனால் இராணுவ புலனாய்வுப் பிரிவில் புதிய முகங்களை இணைத்தேன். இவர்கள் அர்ப்பணிப்புடன் சிறந்த சேவையை மேற்கொண்டார்கள்” என ஜெனரல் மேலும் கூறி இருந்தார்.
ஒருநாள் 130 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்ற தகவல் தனக்குக் கிடைத்ததாகவும் அதன் பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டதாகவும் கூறியிருந்தார்.
அநேகச் சந்தர்ப்பங்களில் கட்டளைத் தளபதிகளை மாற்றி அந்த இடங்களுக்குத் தகுதியானவர்களை நியமித்ததாகவும் கூறியிருந்தார்.
நபர்களை இணைத்துக் கொள்வதில் கடைப்பிடிக்கப்பட்ட முறைமைகளாலும் தகுதி அடிப்படையில் கட்டளை அதிகாரிகளை நியமித்ததாலுமே இந்த யுத்தத்தில் வெற்றி பெற முடிந்தது என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.
புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருந்த இராணுவ நடவடிக்கைகளின் வெற்றி குறித்து ஜெனரல் சரத் பொன்சேக்கா இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போது கொழும்பிலுள்ள புலிகளுக்கு சார்பான அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிலர் மிகவும் இரகசியமான செயற்பாடொன்றில் ஈடுபட்டிருந்தனர் என்ற செய்தியும் கடந்தவாரம் வெளியாகியிருந்தது.
அதாவது ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பெயரில் போலி இணையத்தளமொன்றை ஆரம்பிப்பதாகும். அரச அதிகாரிகளுக்கும் அவருக்குமிடையில் மோதலொன்றை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இது குறித்து ஜெனரல் பதிலளிக்கும் போது, “எனக்கு இப்படியான இணையத்தளமொன்றில்லை. இது முழுப் பொய்யான விடயம்”எனக் கூறியிருந்தார்.
இந்த சதி நடவடிக்கை அம்பலமாகி இருந்த சமயம் ஜெனரல் சரத் பொன்சேக்கா உயர் மட்டத்தினரை சந்தித்து தனது நோக்கம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் தலைவராகப் பணிபுரிவதாகும் என்பதை விளக்கியிருந்தார்.
இதே நேரம் லண்டன் பீ.பீ.சி. சேவை ஒரு செய்தியை வெளியிட்டு, வவுனியா நலன்புரி நிலையங்களுக்குள் வெள்ளை நிற டொல்பின் ரக வேன் ஒன்று வந்து போவதாகவும் நபர்கள் காணாமற் போவதாகவும் பொய்யானதொரு தகவலைத் தெரிவித்திருந்தது என்ற செய்தியும் வெளிவந்திருந்தது.
இவ்வாறான செய்திகளை வவுனியாவில் இருந்து பீ.பீ.ஸீ. சேவைக்கு அனுப்புவது யார் என்பதையும் இராணுவத்தினர் அறிவார்கள்.
மேற்படி செய்தியை வெளியிட்ட பீ.பீ.ஸி. அத்துடன், பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற ஒழுக்கக்கேடுகளுக்கு தென்பகுதியில் உள்ள சிங்கள ஊடகங்கள் பொறுப்பு கூற வேண்டும் என்ற செய்தியையும் வெளியிட்டிருந்தது.
இங்கிருந்து ஜேர்மனுக்குத் தப்பியோடியுள்ள புலிகளின் அனுதாபிகளே இவ்வாறான செய்திகளை வழங்கி வருகின்றனர் என சிங்கள ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில், புலிகள் சார்பான ஐரோப்பிய மற்றும் சுவிஸ் இணையத்தளங்கள் கடந்த செய்வாய்க்கிமை (25) செய்தி ஒன்றை வெளியிட்டு, பிரித்தானிய செனல் 4 தொலைக்காட்சி சேவையின் மூலம் இலங்கை இராணுவத்தினர் தமிழர்களைக் கொலை செய்கின்ற முறையைக் காட்டும் காட்சிகளை ஒளிபரப்பியதாகக் கூறி வீடியோ திரைப்படமொன்றை வெளியிட்டு;ளதுடன் இது யுத்தக் குற்றங்களுக்கோர் உதாரணமாகும் எனவும் கூறியிருந்தது.
இந்த வீடியோ ஜர்னலிஸ்ட் போ டிமோகிறாய் எனும் அமைப்பினூடாகத் தங்களுக்குக் கிடைத்த தொன்றும் இக்காட்சியானது இராணுவ வீரர் ஒருவர் ஜனவரி மாதம் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்த காட்சியாகும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாகவும் செனல் 4 தொலைக்காட்சிச் சேவை கூறியிருந்தது.
பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத் தலைவர்கள் கொல்லப்பட்டதால் பாரிய அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் இந்த ஜர்னலிஸ்ட் போ டிமோகிறாய் எனும் ஜே.டி.எஸ் குழுவை நடத்தி வருபவர்கள் யார் என்பதையும் இராணுவ புலனாய்வுத் துறையினர் கண்டு பிடித்துள்ளதாகவும் கடந்த வாரச் செய்திகள் தெரிவித்திருந்தன. இந்நபர்கள் இந்நாட்டிலிருந்து ஜேர்மன் நாட்டுக்குத் தப்பியோடியவர்களாவர் என்றும் தெரிய வந்திருந்தது.
கடந்த 25ம் திகதி இரவு 10.53 மணிக்கு புலிகளின் சுவிஸ் இணையத்தளமொன்றில் பின்வருமாறு செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது.
“ஜர்னலிஸ்ட் போ டிமோகிறாய் அமைப்பு ஜூலை 18ம் திகதி ஜேர்மனிலுள்ள பர்லின் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆரம்ப வைபவத்தில் 6 ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தந்த சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த அமைப்பிடம் இருந்து பெறப்பட்ட வீடியோ படக் காட்சியில், தமிழர்களை மீட்டெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் மானுட நடவடிக்கையின் போது இலங்கை இராணுவ வீரர்கள் நடந்து கொண்ட விதம் தெளிவாகிறது” என்றிருந்தது.
ஜேர்மனில் பர்லின் நகரில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் மேற்படி அமைப்பின் இரகசிய கூட்டமொன்று பெரிஸ்; அய்பல் கோபுரத்திற்கு அண்மித்துள்ள விடுதியொன்றில் நடைபெற்றுள்ளது. இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளை திரிவுபடுத்திக் காட்டக் கூடிய வீடியோ திரைப்படமொன்றைத் தயாரிக்க வேண்டும் என்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது என்ற செய்தியும் கடந்தவார ஊடகங்களில் வெளியாகி இருந்தது.
இலங்கைக்கு எதிராக துரோகச் செயல்களில் ஈடுபட்டுவரும் இந்தக் குழுவானது மேற்படி இரகசியக் கூட்டத்தின் சிறிது காலத்திற்குப் பின்னர் இராணுவ வீரர் ஒருவர், கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதைப் போன்ற காட்சியைக் கொண்ட போலி வீடியோ திரைப்படமொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத் திரைப்படத்தை தயாரித்துள்ள நால்வரும் தற்போது இராணுவ புலனாய்வுத் துறையினரால் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இலங்கை இராணுவத்தினர் மனிதப் படுகொலைகளில் ஈடுபடுபவர்கள் என்பதைக் காட்டுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இவ் வீடியோ திரைப்படம் நோர்வே ஊடகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவ் வீடியோ திரைப்படம் நோர்வே வி.ஜி. செய்தி சேவையின் ஊடாகவும் காட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன.
லண்டன் பீ.பீ.ஸி, இடம்பெயர்ந்தவர்களது நிலையங்களிலிருக்கும் நபர்கள் வெள்ளை நிற டொல்பின் ரக வேனில் கடத்தப்படுகிறார்கள் என்ற செய்தி வெளியிடப்பட்டு 24 மணி நேரத்திற்குள் செனல் 4 தொலைக்காட்சிச் சேவை மேற்படி வீடியோ படக் காட்சியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் கடந்தவார அரசியல் கண்ணோட்டத்தில் புலிகள் மீதான தடையையும் புலிகளின் சொத்துக்கள் மீதான தடையையும் நீக்குமாறு கோரி அமெரிக்க புலிகளின் ஆதரவாளர்களால் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
2001ம் வருடம் ஜனாதிபதி பு~; புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாகப் பிரகடனப்படுத்தியமை அமெரிக்க அரசியல் யாப்பை மீறும் செயலாகுமொனக் கூறி இந்த வழக்கை புலிகளுக்கு நெருக்கமான இலங்கைத் தமிழ் சங்கமும் வேர்ல்ட் டெமில் கோடினேடிங் கமிட்டி போன்றவற்றுடன் இணைந்து புலிகளின் முகவரான ஜெயசிங்கம் நாகலிங்கம் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தள்ளுபடியான விடயம் அமெரிக்காவில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களை பாரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் 2006ம் வருடம் காலி துறைமுகப் பகுதியில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் ஒருவர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டதால் அத்தாக்குதலின் விபரங்களும் கடந்தவாரம் வெளியாகியிருந்தன.
மேற்படி நபர் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் தாக்குதலுடன் தொடர்புடைய 32 அடி நீளமுள்ள ட்ரோலர் படகொன்று கடந்த 23ம் திகதி அம்பாந்தோட்டைப் பகுதியில் வைத்துக் கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும், இந்த ட்ரோலர் படகில் இருந்து, படகு இருக்கும் இடத்தைக் காட்டக் கூடிய ஜி.பி.எஸ். இயந்திரமொன்றும் ரேடார் இயந்திரமொன்றும் கண்டுபிடிக்கப்பட்டன.
2006ம் வருடம் ஒக்டோம்பர் மாதம் 18ம் திகதி காலை 7.30 மணியளவில் மீனவர்கள் வேடம்பூண்டு தென்பகுதி கடற்படை முகாம் மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக வந்த கரும்புலிகளைக் கொண்ட 5 படகுகளின் திட்டம் வெற்றியளித்திருக்கவில்லை. மேற்படி படகுகள் அனைத்தையும் கடற்படையினர் அழித்தனர். இதன்போது ஒரு கடற்படை வீரர் கொல்லப்பட்டு 24 பேர் காயமடைந்தனர்.
காலி துறைமுகத்தின்மீது புலிகள் தாக்குதலொன்றை நடத்தவுள்ளதாக கடற்படையினருக்குத் தகவல் எட்டி இருந்த போதிலும் கொழும்பிலிருந்து டொவ்ரா தாக்குதல் படகுகள் சில காலி துறைமுகத்திற்கு அனுப்பப்படாமல் புலிகளின் படகுகளைக் கண்டதாகக் கூறப்பட்ட பூனேவ பகுதிக்கே அனுப்பப்பட்டிருந்தன.
இதே நேரம் கொழும்பு கடற்படைத் தலைமையகத்திலிருந்து காலி தென்பகுதிக்கான கடற்படை முகாமிற்கு எச்சரிக்கை செய்யும் சமிக்ஞையை அனுப்புவதற்கும் பலமணி நேரங்கள் எடுக்கப்பட்டன. எனினும் இத்தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற கடற்படையினரின் விசாரணைகளின் போது முகாமிற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரி ஒருவர் மட்டுமே பணி நீக்கஞ் செய்யப்பட்டிருந்தார். காலி துறைமுகத்தின் மீது புலிகள் தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த நிலையில் கொழும்பிலிருந்து டொவ்ரா படகுகளை அங்கு அனுப்பாமல் பூனேவ பகுதிக்கு அனுப்பியிருந்த அதிகாரி தப்பித்துக் கொண்டார்.
பாலஸ்தீன தலைவர் யஸர் அரபாத்தின் சாரதி, இஸ்ரேல் மொஸாட் புலனாய்வுத்துறை பிரதிநிதியாவார் என்ற தகவல் பல வருடங்கள் கழிந்த நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. அதுவும் அரபாத் இருக்கும் இடத்தை மொஸாட் அமைப்பிற்கு அறிவித்திருந்த நிலையிலேயே தெரிய வந்திருந்தது.
இதனை ஒத்த வகையில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவின் சமையல்காரராகப் பணியாற்றியுள்ள சித்தீக் என்பவர் பொட்டு அம்மானின் டொசி புலனாய்வுத் துறையின் பிரதிநிதியாவார் என்ற விடயம் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினரின் மூலம் தெரிய வந்திருந்தது.
2002ம் வருடம் சரத்பொன்சேகா யாழ் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றிய போது சித்தீக் என்பவர் யாழ் இராணுவ முகாமில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார். இராணுவ உதவி அதிகாரியாக இவர் 2004ம் வருடம் இராணுவ உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சித்தீக் என்பவர் புலிகளின் பிரதிநிதியாவார் என்ற விடயத்தை இராணுவப் புலனாய்வுத் துறையினர் கூட அறிந்திருக்கவில்லை. இந்நபர் திடீர் விபத்துக்கு உள்ளாகிய போது இவரைப் பார்ப்பதற்காக தான் மருத்துவமனைக்குக் கூட சென்றிருந்ததாக சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இதன் போது இந்நபர், தனது உறவினர்கள் எனக் கூறி புலிகளின் புலனாய்வுத்துறை செயற்பாட்டாளர் ஒருவரையும் தற்கொலைதாரியான பெண் ஒருவரையும் அடிக்கடி இராணுவ மருத்துவமனைக்கு வரச் செய்துள்ளார்.
2006ம் வருடம் ஏப்ரல் மாதம் 25ம் திகதி சித்தீக் எனும் இந்த நபருக்கு சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. இவர் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் பெண் தற்கொலைதாரியுடன் தொடர்பு கொண்டு இராணுவத்தளபதி பகலுணவு உட்கொள்வதற்காக வருகிறார் என்ற தகவலை உறுதிப்படுத்தியிருந்தார்.
எனினும் அந்தத் தற்கொலைத் தாக்குதல் வெற்றியளித்திருக்கவில்லை. சித்தீக் இவை எதையும் அறியாதவராகத் தொடர்ந்தும் இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்புதான் அவர் கைது செய்யப்பட்டார். எனினும் அவர் பொலிஸ் சிறையில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- டி.எம். பாருக் அசீஸ்
0 விமர்சனங்கள்:
Post a Comment