தமிழ் பார்ப்பனீயம் + புலிப் பாசிசம் = தமிழ் தேசியம்
“ஒரு பாட்டாளி வர்க்கம் தனக்கான ஒரு நாடு, வரையறுக்கப்பட்ட எல்லைகள் கொண்ட இறையாண்மையுள்ள ஓர் ஆட்சிப் பகுதி இருந்தால் தான் அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கெதிரான வர்க்கப் போராட்ட்த்தையும், உலகு தழுவிய உலகமயமாக்கலுக்கு எதிரான சர்வதேசிய போராட்ட்த்திலும் பங்கெடுக்க இயலும். தனக்கு அருகில் உள்ள அண்டை தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து போராடவும் இயலும்”. இதுவே மார்க்சிய அடிப்படை. - தத்துவ மேதை அதிரடியான்.
பாசிசத்தில் மார்க்சியம் தேடும் தத்துவ மேதை அதிரடியான் என்கிற நபர் கீற்று இணைய தளத்தில்‘அவதூறுகளை அள்ளி வீசூம் சீர்குலைவு சக்திகள்‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். புலி ரசிகனுடைய மனப்பான்மையிலிருந்து, தமிழகத்தில் செயல்பட்டு வரும் புரட்சிகர அமைப்புகளை அவதூறு செய்யும் நோக்கத்துடன் மட்டுமே அவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
இந்த நபர் இதே கீற்று இணையத்தில் ஏற்கனவே ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதை பொருட்படுத்தி பதிலளிப்பதற்கு முற்றிலும் தகுதியற்றதொரு அவதூறு கதம்பம் என்பதால் நாம் அதை அப்போது சட்டை செய்யவில்லை. அப்படியானால் இந்த கட்டுரைபொருட்படுத்தத்தக்கது என்று கருதிவிட வேண்டாம். இது அதற்கும் மேலான புலி பற்றிய கற்பனாவாத சவடால் கதம்பம். இதற்கு நாம் பதிலளிப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று
புலிகள் மீது வைக்கப்படும் குறிப்பான சில விமர்சனங்களுக்கு இவர் அரைகுறையாகவும், சப்பைக்கட்டு கட்டும் விதமாகவும் பதிலளித்திருப்பதை அம்பலமாக்க வேண்டும் என்கிற நோக்கம்.
இரண்டு
புலிகளை யார் விமர்சித்து பேசினாலும், எழுதினாலும் அவர்களை தமிழின விரோதியாகவும், சிங்கள கைக்கூலியாகவும் சித்தரித்து அவதூறு செய்யும் தமிழினவாத கும்பலின் நேர்மையற்ற அரசியலை அம்பலமாக்குவது.
இந்த இரண்டு காரணங்களிலிருந்து மட்டுமே இந்த காழ்ப்புணர்ச்சி கதம்பத்திற்கு எமது மறுப்பை முன் வைக்கிறோம்.
சிங்கள இனவெறி அரசையோ அதற்கு முழு உதவிகள் புரிந்த இந்தியாவையோ, உலக நாடுகளையோ கண்டிக்க வக்கற்ற கூட்டம் என்று தமது கட்டுரையை துவங்குகிறார் அதிரடியான்.
யார் வக்கற்ற கூட்டம் ?
இந்தியாவே போரை நிறுத்து!
இந்தியாவே தலையிடு!
இந்தியாவே ஈழத்தை அங்கீகரி!
என்று இந்தியாவிடம் பிச்சை கேட்ட தமிழ்தேசிய அமைப்புகள்(நேரடியாக மற்றும் மறைமுகமாக) சோனியா காந்தியிடம் மடிபிச்சை கேட்டும், ஒபாமாவின் மனிதாபிமான உணர்வுக்கும்,கருணாநிதியின் தமிழின உணர்வுக்கும் கோரிக்கைகள் வைத்தும், மக்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு பார்ப்பன ஜெயலலிதாவை நம்பச்சொன்னதும் யார்? ம.க.இ.க வா? தமிழ் தேசிய கூட்டமா ?
யார் வக்கற்ற கூட்டம் ?
ஓட்டுப்பொறுக்கிகளை, அதுவும் ஜெ போன்ற பாசிஸ்டுகளை கூட தாஜா செய்து ஈழத்தை பெற்றுவிடலாம், அல்லது அங்கே போரையாவது தடுத்து நிறுத்தலாம் என்கிற அளவுக்கு அரசியல் மூடர்களாக இருக்கும் தமிழினவாதிகளுக்கு ம.க.இ.க புலிகளின் இராணுவாதத்தை, சுயஅழிவுப்பாதையை நேர்மையாக விமர்சித்தால் எமது அமைப்புகளையும், பத்திரிக்கைகளையும் பார்ப்பனீயம் என்றும் பார்ப்பன கும்பல், கைக்கூலிகள் என்றும் இந்த கருப்பு பார்ப்பன கும்பல் அவதூறுகளை அள்ளி வீசுகிறது. அவற்றுக்கு பதிலளித்தாலோ, கேள்விகளை எழுப்பினாலோ,நேர்மையாக விவாதிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டு அதே அவதூறுகளை திரும்பத் திரும்ப வாரி இறைக்கிறது.
புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று திரு.அதிரடியானே ஒப்புக்கொள்கிறார். சரி புலிகள் மீதான ம.க.இ.க வின் விமர்சனம் அவதூறு என்றால், அது தவறு என்றால் உங்களுடைய விமர்சனம் தான் என்ன? எந்த தமிழ்தேசிய அமைப்பு இதுவரை புலிகளை விமர்சித்துள்ளது?அவற்றை எங்கே பதிவு செய்திருக்கிறீர்கள்?
கடந்த காலத்தில் களத்தில் நிற்பவர்களை விமர்சிக்க கூடாது என்றார்கள். தற்போதோ மரணித்தவர்களை விமர்சிக்க கூடாது என்கிறார்கள்.
தொடக்கத்தில் லட்சிய உறுதியுடனும், போர்க்குணத்துடனும் செயல்படத் தொடங்கியவர்களில், இறுதி வரை அதே போர்க்குணத்துடனும், லட்சியத்துடனும் நீடித்தவர்கள் சிலரே ஆனால் புலிகள் அவ்வாறின்றி, இறுதி வரை உறுதியுடன் இருந்தனர் என்கிறார்.
அதற்கு வேறு ஒன்றும் காரணமில்லை. மற்ற அனைவரையும் கொன்று ஒழித்தது தான். துரோகிகளை கொன்றதை நாம் ஒன்றும் சொல்லவில்லை. நேர்மையானவர்களையும், தோழர்களையும் கூட கொன்றார்கள். சோசலிசம் பேசுகிற புலி புரட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகளையும் கூட கொன்றொழித்து தமது லட்சிய உறுதியையும், போர்க்குணத்தையும் நிலை நாட்டினார்கள்..
புலிகளுக்கு அரசியல் கண்ணோட்டம் இருந்தது, அவர்கள் அரசியலையும் முக்கியப்படுத்தி தான் இயக்கத்தை கட்டி முன்னெடுத்தார்கள் என்று பிரச்சாரம் செய்யும் பலரும் புலிகள் எந்த முறையில் அரசியலை முன்னெடுத்தார்கள் என்று விளக்குவதில்லை.
மார்க்சிய அமைப்பாக அதிரடியான் முன்னிறுத்தும் புலிகள் எப்போதாவது மார்க்ஸியத்தைகடைபிடித்தார்களா என்றால் இல்லை. ஆனால் அவர்களுடைய வேலைத்திட்டப்படி அவர்களின் லட்சியமாக இருந்தது ’சோசலிச தமிழீழம்’ தான் என்கிறார். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் ’கட்சித் திட்டம்’ என்று ஏட்டில் எழுதி வைத்துக்கொள்ளலாம். அதை கடைபிடிக்கிறார்களா அல்லது நடைமுறைப்படுத்தப்படுத்துகிறார்களா என்பது தானே முக்கியம்.
சோசலிச திட்டமுள்ள ஒரு கட்சி மக்களை அரசியல் படுத்த வேண்டும். புலிகள் அதை செய்தார்களா என்றால் இல்லை. ஆனால் புலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தியதன் காரணமாகத்தான் புலிகள் கை காட்டியதும் புலம் பெயர் நாடுகளில், அந்தந்த நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் மக்கள் திரளாக அவர்களால் வளர முடிந்துள்ளது என்கிறார். புலிகள் மக்களை அரசியல் ரீதியாக வளர்த்திருந்தால் அவர்கள் தமது தேசத்தை விட்டு அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஓடியிருக்க மாட்டார்கள். புரட்சியை தமது சொந்த தோள்களில் தாங்கி நின்றிருப்பார்கள். ரசியாவிலும், சீனாவிலும் புரட்சி நடந்த போது வெளி நாடுகளில் இருந்தவர்கள் கூட சொந்த நாட்டிற்கு ஓடி வந்து செஞ்சேனையில் இணைந்து கொண்டார்கள். ஆனால் ஈழத்திலோ ஒரு பக்கம் சிங்கள இனவெறி அரசுக்கு பயந்தாலும் இன்னொரு பக்கம் எங்கே வலுக்கட்டாயமாக புலிப்படைக்கு இழுத்துக்கொண்டு போய் விடுவார்களோ என்கிற அச்சத்திலும் நாட்டை விட்டே ஓடிப்போனார்கள். இது தான் புலிகள் மக்களை அரசியல்படுத்திய லட்சணம்.
அவர்கள் மக்களை அரசியல் படுத்தியிருந்தால் மாமேதை மார்க்ஸ் சொன்னதை போல”கருத்துக்கள் மக்களை பற்றிக்கொண்டால் அது பவுதீக சக்தியாகிறது.” என்பது நடந்திருக்க வேண்டும். சோசலிச தமிழீழ குடியரசை அமைக்க புறப்பட்ட புலிகள் மக்களை மக்களாக நடத்தவில்லை. மந்தைகளாகவே நடத்தினர். எங்கும் மக்களை முன்னிறுத்துவதில்லை. மாறாக தங்களை முன்னிறுத்தும் இராணுவ வாதத்தையே நம்பி இருந்தனர். அவர்களது முழக்கத்தில் கூட –‘புலிகளின் தாகம் - தமிழீழ தாயகம்‘ என்று தங்களை முன்னிறுத்தும் ஜனநாயகவாதிகள் புலிகள் (பிறகே இது தமிழரின் தாகம் – தமிழீழ தாயகம் என்று மாறியது). அரசியல் எனும் வலிமை மிகு ஆயுதம் தரிக்கப்பட்ட கூட்டமாக அந்த மக்கள் மாற்றப்பட்டிருந்தால் சிங்கள பாசிசம் ஒழித்துக்கட்டப்பட்டிருக்கும். இது தான் உண்மை மாறாக புலி புகழ் பாட வேண்டும் என்பதற்காக கதை புனையக் கூடாது. மக்களை அரசியல் ரீதியாக பயிற்றுவிக்கும் எந்த ஒரு அமைப்பும் அரசியலை தான் தலையாயதாக, முதன்மையானதாக வைக்க வேண்டும். அரசியலின் கட்டுப்பாட்டில் தான் இராணுவம் இருக்க வேண்டும். ஆனால் புலிகளிடமோ அரசியல் தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்ட்து.
”எமது இயக்கம் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது” என்று கூறும் புலித் தலைமை, “ஆயுத போராட்டத்தை ஒரு அதியுயர்ந்த அரசியல் போராட்ட வடிவமாகவே கொள்கிறது” என்றும் கூறுகிறது.
இதன் மூலம் ஆயுதப்போராட்டம் தான் அதியுயர்ந்த அரசியல் போராட்டம் என்கிற புலிகளின் இராணுவவாதமும், மக்களை மந்தைகளாக நடத்தியதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
அதே போல ம.க.இ.க “அரசியல் போராட்ட்த்தின் முதிர்ந்த வடிவம் தான் ஆயுத போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அநுபவத்தினூடாக ஆயூதப்போராட்ட்த்தின் அவசியத்தை மக்களை உணரச் செய்ய வேண்டும் ” என்றும் கூறுகிறது. ஆனால் அதை மாவோயிஸ்டுகளோ புலிகளோ செய்தால் அவர்களை தூற்றுகிறது என்கிறார். இந்த வாக்கியத்திலிருந்து அதிரடியான் என்ன புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. அந்த பத்தினுடைய இந்த வரிக்கு என்ன பொருள்’ஆயூதப்போராட்ட்த்தின் அவசியத்தை மக்களை உணரச் செய்ய வேண்டும் ” ஆயுதங்களை புலிகளோ, மாவோயிஸ்டுகளோ தூக்கிக் கொண்டு போய் வாங்கிகொடுக்க புரட்சி ஒன்றும் குச்சி மிட்டாய் அல்ல, அதை மக்களே தமது சொந்த கரங்களில் செய்ய வேண்டும். மக்களை வழி நடத்துவது மட்டும் தான் நம்முடைய வேலை. மக்களை மந்தைகளாக்கும் சாகசவாதத்தை கேள்விக்குள்ளாக்கி ’புதிய ஜனநாயகம்’ வெளியிட்ட நூலின் வரிகளுக்கு அர்த்தம் என்ன என்பதை கூட புரிந்து கொள்ளாதவர் தமக்கும், புலிக்கும் எதிரான வரிகளை கொண்டு வந்து நமக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்.
புலிகளை சர்வாதிகாரிகள் என்று சொல்லிவிட்டு பின்னர், அவர்களுக்கே ’வீரவணக்கம்’ வைத்தது ம.க.இ.க வின் ஊரை ஏமாற்றும் வேலை என்கிறார் அதிரடியான். புலிகளுக்கு யாரும் ‘வீரவணக்கம்’வைக்கவில்லை என்பதை முதலில் தெளிவு படுத்திக்கொள்கிறோம், மாறாக ’வீரமரணம்’ என்று தான் குறிப்பிட்டுள்ளோம். அதுவும் தப்பித்து உயிர் பிழைக்க நினைத்த தலைமைக்கு அல்ல, கடைசி வரை போராடி மரணித்த அணிகளுக்கு தான் எமது முழக்கம். புலி தலைமை துரோகம் செய்வதும், காட்டிக்கொடுப்பதும் பற்றிய அனுபவம் நமக்கு ஒன்றும் புதியதல்ல. ராஜீவ் கொலைக்கு பிறகு இரண்டு வாரங்களில் இலண்டன் பிபிசி பேட்டியில் அன்றைக்கு உயிருடன் இருந்த கிட்டு ராஜீவ் கொலையை நட்த்தியது ம.க.இ.க தான் என்று கேவலமான ஒரு பொய்யை சொன்னார். ஆனாலும் அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. அடுத்த ’புதிய ஜனநாயகம்’ இதழிலேயே புலிகளின் இந்த இழிவான நடவடிக்கையை கடுமையாக எச்சரித்து எழுதினோம். அவர்கள் அரசியல் நேர்மையை என்றுமே மீட்டெடுக்கவில்லை.
புலிகள் வலதுசாரி சிந்தனையாளர்கள் அல்ல என்றும், புலிகள் 80-களிலேயே சோசலிச பாதையைத் தேர்ந்தெடுத்ததாக புளங்காகிதமடையும் இவர்களின் மார்க்ஸிய பார்வையை கண்டு நமக்கு மாரடைப்பே வந்து விடும் போல் இருக்கின்றது.
தேசிய இன விடுதலை பற்றிய மார்க்சிய புரிதலுடன் தான் புலி இயக்கம் கட்டியமைக்கப்பட்டது என்கிறார் அதிரடியான். அவர்களுடைய மார்க்சிய தத்துவத்தையும் அதை நடைமுறை படுத்திய விதத்தையும் இப்போது பார்ப்போம்.
ஒடுக்கும் இனத்தில் அவ்வாறான பாட்டாளி வர்க்கம் சக்திகள் இல்லாத நிலையில் ஒடுக்கப்படும் இனம் எப்படி அவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியும் என்கிறார் அதிரடியான். இவருடைய கூற்றுப்படி புலி இயக்கம் மார்க்சிய அடிப்படையை கொண்டிருந்தது என்பது உண்மை எனில்(?)அது தமிழ் பாட்டாளி வர்க்கம். ஒடுக்கும் இனத்தில் அவ்வாறான பாட்டாளி வர்க்கம் சக்திகள் இல்லை எனில் (அவ்வாறு சுத்தமாக இல்லாத நிலை ஒன்றும் இல்லை) இனவாதத்தில் மூழ்கிக்கிடக்கும் ஒடுக்கும் இனத்தின் பாட்டாளி வர்க்கத்தை விழிப்படைய செய்து பாட்டாளி வர்க்க உணர்வை, வர்க்க உணர்வுள்ள தமிழ் பாட்டாளி வர்க்கம் தான் ஊட்ட வேண்டும். ஆனால் இங்கு அதிரடியானுடைய வரலாற்றுப்பொருள் முதல்வாத ஆய்வின் படி ஒடுக்கும் சிங்கள இனத்தில் அவ்வாறான புரட்சிகர பாட்டாளி வர்க்கம் உருவாகாமல் போனதற்கும், அதற்கு உணர்வூட்டமுடியாமல் போனதற்குமான காரணம் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த காரணம் என்னவெனில், சிங்கள உழைக்கும் மக்களின் உளவியல் தான். இவ்வாறான (எவ்வாறான என்பதை அவர் விளக்கவில்லை) உளவியலைக் கொண்ட சிங்கள உழைக்கும் மக்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றையும் செய்ததில்லை, இனிமேல் செய்யப் போவதுமில்லை என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இவருடைய மார்க்சிய ஆய்வின்படி இனத்திற்கு ஒரு உளவியல் இருக்கும் போலிருக்கிறது. அப்படியானால் ஒடுக்கப்படும் தமிழ் இனத்தின் உளவியல் என்ன? பாசிசமா?
மேற்கண்டது தான் தத்துவம் என்றால் கீழ் உள்ளது தான் நடைமுறை.
“சிங்கள இன மக்களுடன் இணைந்து போராட வேண்டும்” என்கிற புலிகளின் 1980 வரையறுப்பிற்கு பிறகுதான், புலிகள் 18ஆம் காலனி, அனுராதாபுரம், அரண்தலவா போன்ற இடங்களில் சிங்கள வியாபாரிகளையும், சிங்கள குடும்பத்தினரையும் கொன்றிருக்கின்றனர். சிங்கள குடியிருப்புகளில் புகுந்து பல மணி நேரம் தாக்குதல்கள் நடத்தியிருக்கிறார்கள். அதாவது கிராமங்களில் புகுந்து மக்களை கொல்வதன் மூலம் இலங்கையை பேச்சுவார்த்தைக்கு இழுக்கலாம் என்கிற ’ரா’வினுடைய திட்டத்தை, தூண்டுதலை பின்னாட்களில் சீரழிந்து போன PLOT, EPRLF போன்றவர்கள் கூட செய்ய மறுத்த வேலையை பணத்தையும், ஆயுத்த்தையும் பெற்றுக்கொண்டு புலிகள் செய்தார்கள். கடைசியாக 2000 மாவது ஆண்டு செப்டம்பர் மாத்த்தில் சிலாவ் பூந்த், கோகைலா ஆகிய கிராமங்களில் புகுந்து 60 பேரை கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டார்கள். இதில் 14 பேர் சிறுவர்கள்.
மார்க்சியத்திற்கு ஏற்ற பொருத்தமான நடைமுறை தான்.
சிங்கள இனத்தில் சரியான பாட்டாளி வர்க்கம் இல்லை. அதனால் இனவாதத்தை முன் வைத்து போராடியதாக இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.
சுயநிர்ணய உரிமையை வெறும் பிரிந்து செல்லும் உரிமையாக குறுக்கும் தமிழ்தேசியர்கள் தான் இதையெல்லாம் மறைத்து புலிகளை மார்க்சிய இயக்கம் என்று காட்டமுனைகின்றனர்.
சிங்கள மக்களுடன் புலிகள் இணைந்து போராட முன் வந்தார்கள் என்று கூறும் தமிழினவாதிகள், பாட்டாளி வர்க்க சக்திகளுக்கெதிரான புலிகளின் செயல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது.
புலிகள் தமிழ் மக்களையும் வென்றெடுக்கவில்லை, சிங்கள பாட்டாளி வர்க்கத்தையும் வென்றெடுக்கவில்லை. ஆனால் பணத்தைக்காட்டி தனக்கு ஆதரவாக சிங்கள இராணுவ அதிகாரிகளை வென்றெடுக்கும் கலையை மட்டும் கற்றிருக்கிறது. இது வெட்கக்கேடாக இல்லை. இராணுவத்திலுள்ள உயர் அதிகாரிகளை உன்னால் கொண்டு வர முடிகிறது என்றால் சாதாரண மக்களை ஏன் கொண்டுவர முடியவில்லை ?
புலிகள் மாற்று இயக்கத்தினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று நாம் கூறுவதற்கு அதிரடியான் கீழ்கண்டவாறு திரித்து எழுதியுள்ளார்.
சிங்கள பேரினவாதத்துடனும், இந்திய ஆரியத் தலைமையுடனும் சமரசம் செய்து கொண்ட அது போன்ற ஒட்டுக்குழுக்களுடன் புலிகளும் இணைந்து தமிழ் மக்களுக்கு “சேவகம்” புரிய வேண்டுமாம். இதை தான் இந்தக் கூலிக்கும்பல் விரும்புகிறது.
இந்திய உளவு அமைப்புகளிடம் சமரசம் செய்து கொள்ளச் சொல்லி புலிகளுக்கு ம.க.இ.க வா பாடம் நட்த்தியது? அல்லது ம.க.இ.க வுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று புலிக்கு ’ரா’பாடம் நடத்தியதா? அவர்களுக்கு (RAW) வுடன் இருந்த கள்ள உறவிற்கு யார் காரணம்?
நாங்கள் காரணமா? இல்லை அவர்களுடைய மார்க்சிய தத்துவம் தான் காரணமா?
அதே போல பொய்க்கு மேல் பொய் சொல்கிறது இந்த இனவாத சந்தர்ப்பவாதிகள் கூட்டம். ம.க.இ.கஒன்றுபட்ட இலங்கையை வலியுறுத்துகிறதாம் ம.க.இ.க எங்கும் அப்படி வலிறுத்துவதில்லைதமிழினவாதிகளே, இதை ’சுய நிர்ணய உரிமை’ என்கிற வார்த்தையை காதால் கூட கேட்க விரும்பாத சி.பி.எம் போலிகளிடம் போய் சொல்லுங்கள். ம.க.இ.க தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையையே ஆதரிக்கிறது. இந்த சுயநிர்ணய உரிமையை பிரிந்து செல்லும் உரிமையுடன்ஒன்றுபடுத்தியும், சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைவதை ஒன்றுபட்ட இலங்கையாக திரித்தும் பேசுவதன் மூலம் நம்மை எதிரியாக்குவது தான் இந்த திரிபுவாத, குறுந்தேசிய வெறியை கிளப்பும் கும்பலின் நோக்கமாகும்
நாம் இந்திய மாயையிலிருந்து விடுபடவில்லையாம், எனவே விடுபட வேண்டுமாம். நாங்கள் இந்திய மாயையிலிருந்து விடுபடுவது இருக்கட்டும், நீங்கள் ஆரிய மாயையிலிருந்து எப்போது விடுபடுவீர்கள்? இதே ஆரிய கும்பல் தான் முப்பது வருடங்களுக்கு முன்பு புலிகளுக்கு ஆயுத பயிற்சி வழங்கியது. அதற்கான காரணம் என்ன? எந்த வன்மமும் வர்க்க நலன்களுக்கு,பொருளாதார நலன்களுக்கு அப்பாற்பட்ட்தல்ல. அப்போது இந்தியா புலிகளுக்கு உதவியதும், இப்போது சிங்களவர்களுக்கு உதவியதும் இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்குட்பட்டே நடக்கிறது. ஆரிய சதி, மலையாளிகள் சதி என்பதெல்லாம் வெறும் தமிழின வாத உளரல்களே. புலி தலைமையின் மானசீக தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி என்பதை இவர்கள் புலிமயக்கத்தில் மறந்து போனார்களோ?
ஏகாதிபத்தியம், காலனித்துவம், நவ-காலனித்துவம், இனவாதம் ஆகியவையே உலக மக்களின் பொது எதிரிகள் என்று புலிகள் வரையறுத்திருந்தனர்.
”தமிழ் மக்கள் தமது இனத்துவ அடையாளத்துடன் தமது சொந்த மண்ணில் வரலாற்று ரீதியாக தாம் வாழ்ந்து வந்த தாயக மண்ணில், நிம்மதியாக, சமாதானமாகவும், கெளரவத்துடனும் வாழ விரும்புகிறார்கள். அவர்களது அரசியல் பொருளாதார கொள்கையை அவர்களே நிர்ணயித்து கொள்ள விரும்புகிறார்கள்” என்று புலிதலைவர் பிரபாகரன் குறிப்பிட்டார்.
ஒரு தேசியத்தின் மையமான விடயம் என்ன?
அது எப்போதும் எங்கும் தேசிய பொருளாதாரம். தமிழ் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், ஒரு நிலத்தொடர் அனைத்தும் தேசிய பொருளாதாரம் மீது கட்டமைக்கப்பட வேண்டும். தேசியத்தின் மையமான விடயத்தை விட்டு தேசியத்தை விளக்கினால் அது தேசிய பொருளாதாரமில்லாத ஏகாதிபத்திய பொருளாதாரத்துக்கு அடிமையாக வாழ்வதையே குறிக்கும்.
தமிழ் மக்களின் ”அரசியல் பொருளாதார வாழ்வு” என்பது எதனை குறிக்கிறது எனில் ஏகாதிபத்திய பொருளாதாரம். ஏகாதிபத்தியத்தின் அடிப்படையிலான பண்பாடு, ஈழ மண்ணில் ஊடுருவதை எதிர்த்து, அதற்கெதிரான அரசியல் பொருளாதாரத்தை புலி கட்டியமைத்ததா எனில் இல்லை. ஆயுதங்களை ஏகாதிபத்திய உலகத்தில் இருந்து கடத்தியது போல, ஏகாதிபத்தியத்திய பொருளாதார கொள்கையை தான் தங்களுடைய பொருளாதாரமாக கட்டமைக்க முயன்றனர்.
சாதியை புலிகள் பேசவில்லையா என்று அதிர்ந்து போய் ஆச்சர்யமாக கேட்கும் தமிழின வாதிகள், சாதியை ஒழிக்க புலிகள் “ஒரே சாதியில் யாரும் திருமணம் செய்தல் கூடாது“ என்று சட்டம் விதித்திருந்தனர் என்று கூறுகின்றனர்.
சரி, மதிவதனி எந்த சாதி தாழ்த்தப்பட்ட சாதியா??
சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் உடனடியாக அதனை ஒழிக்க முடியாது என்பதையும் அதற்கு தொடர்ச்சியான நீண்டகாலத் திட்டங்கள் தேவை என்பதனையும் புலிகள் உணர்ந்திருந்தனர் என்பதனை இவை காட்டுகின்றன.
ஏட்டளவில் சோசலிஸத்தை வைத்து கொண்டு வெளி உலகத்தில் ஈழ சோசலிஸ மாயையை உருவாக்கியது போலவே தான், சாதியை ஒழிப்போம் என்கிற புலி கோசமும். சாதியை ஒழிக்க நீண்டகாலத் திட்டம் தேவை என்பதனையும் புலிகள் உணர்ந்திருந்தனர் என்று அத்தோடு முடிப்பது ஏன்? அதற்கான திட்ட்த்தை உண்மையில் புலிகள் வகுத்தார்களா? இல்லையா ?
தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் மீது தொடர்ந்து ஆதிக்க சாதிவெறி முத்திரை குத்தப்படுகின்றது என்றும் இதற்கான வேலையை தமிழகத்தின் ஏஜெண்டாக ’தோழர் மதிமாறனை’ திட்டகுழுவில் வைத்திருப்பது போலவும் இவர்கள் கூறுகிறார்கள். இதுவரை அவர் தனது வலைதளத்தில் புலிகளை பற்றி விமர்சித்தது கூட கிடையாது. இருந்தும் ஏன் அவர்களுக்கு மதிமாறனை பிடிக்கவில்லை என்றால் தமிழ் இனவாதிகளின் சாதிய முகத்தை டார் டாராய் கிழித்து தமிழ் என்பதற்கு உண்மையான பொருளான சாதியை சுட்டிக் காட்டுகிறார். அதுவும் அம்பேத்கர், பெரியாரின் துணை கொண்டு தமிழினவாதிகளின் கருப்பு பார்ப்பனிய முகத்தை அம்பலப்படுத்துகிறார். இதற்காக சாதிவெறியர்கள் கோபப்படுவது இயற்கையே. ஆனால் தன்னை போராளிகள் என்றும், புரட்சியாளர்கள் என்றும் அடையாளப்படுத்தி கொள்பவர்கள் கோபப்படுவது உண்மையிலேயே நல்ல நகைச்சுவை.
அம்பேத்கர் சட்டக்கல்லூரி சாதி மோதல்களுக்கும் மற்றும் தமிழகம் முழுமைக்குமுள்ள சாதிபிரச்சனைகளுக்கும் உளவுத்துறைதான் காரணமா? பார்ப்பனியம் காரணமில்லையா?
தியாகி முத்துகுமரனின் அனுமானத்தை பிடித்து கொண்டு சாதிய பிரச்சனைகளை உளவு துறையின் மேல் போட்டு விட்டு லாவகமாக தன்னை விடுவித்து கொள்ள பார்க்கிறார்கள் இந்த தமிழ் பார்ப்பனியவாதிகள். தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வரும் சாதிய ஒடுக்குமுறைகள் அனைத்தும் உளவு துறையினரின் சதிதான் எனில் உங்கள் பார்வையில் தென் மாவட்டங்களில் 60களில் சாதிய கலவரத்தை தூண்டிய ’முத்துராமலிங்கம்’ உளவு துறையின் கைக்கூலியா?
சாதியை வைத்து தமிழரின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக கூறும் தமிழினவாதிகள், தியாகி முத்துகுமரனின் இரங்கலுக்கு அவரின் சாதியை முன்னிறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டனவே, இதை எதிர்த்து ’சாதியின் முத்திரையை இந்த தியாகிக்கு குத்த வேண்டாம்’ என்று சிறு முணகலாவது முணகினார்களா உண்மையான தமிழினவாதிகள்?
இவர்கள் சொல்வது போல உண்மையிலேயே தமிழ் மக்கள் சாதி மத வேறுபாடின்றி ’நாம் தமிழர்’என அணி திரள்கிறார்களா? இவர்கள் கனவிலிருந்து விழிப்பதுமில்லை, மக்களை வர்க்க உணர்வுடன் விழிப்படையச் செய்வதும் இல்லை.
முஸ்லீம்களுடன் நல்லிணக்கம் பேணியதாக புலிகளை பாதுகாக்கும் இவர்களை பார்த்துஏட்டளவில் இருந்த சோசலிச குடியரசு திட்டத்திலும், தனி இனமாக அங்கீகரிகத்த(!) முஸ்லீம் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையையோ, பிரதேச தன்னாட்சியையோ உறுதிசெய்ய வில்லையே ஏன்என்று கேட்டால் பதிலில்லை.
எங்களைப்போன்ற இளைஞர்களின் எதிர்காலம் பற்றி கவலைப்படும் அதிரடியான் அவர்களே! இளைஞராகிய நாங்கள் சிந்திப்பதால் தான், சந்தி சிரிக்கும் உங்கள் அமைப்பில் இல்லாமல் உண்மையான மார்க்சிய அமைப்பில் இருக்கிறோம்
http://vrinternationalists.wordpress.com/2009/08/26/தமிழ்-பார்ப்பனீயம்-புலி/
0 விமர்சனங்கள்:
Post a Comment