இந்திய முன்னாள் பிரதமர் திரு ராஜிவ் காந்தி அவர்களின் கொலையில் பணம் கொடுத்தது யார்? பிடிபட்ட ‘கேபி’யை விசாரித்து அறிய முடிவு
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதனிடம், முன்னாள் இந்தியப் பிரதமர் திரு ராஜிவ் காந்தி அவர்களின் கொலை தொடர்பாக நடந்த பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி., என்ற செல்வராசா பத்மநாதன், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இலங்கை பாதுகாப்புப் படையினர், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பத்மநாதனின் பெயரும் உள்ளது. எனவே, ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக அவரிடம் இந்தியா சார்பில் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.ராஜிவ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் தனு, ஒற்றைக்கண் சிவராசன், பொட்டு அம்மான், பிரபாகரன் ஆகியோர் இன்று இல்லை.ஆனால், புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்கள் பெறுவதுடன், சர்வதேச அளவில் மூளையாக இருந்து செயல்பட்ட, கே.பி., என்ற பத்மநாதன் பிடிபட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.ராஜிவ் கொலைச் சதியில் பல்வேறு தகவல்கள், பணப்பரிமாற்றம், அது எப்படி நிறைவேற்றப்பட்டது போன்ற தகவல்கள் வெளிவரும் என்பதால், இவ்வழக்கு புத்துயிர் பெற்றுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:ராஜிவ் கொலை வழக்கில் பத்மநாதனுக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் இன்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக பத்மநாதன் அறிவிக்கப்பட்டார்.கடந்த 2002ம் ஆண்டு பத்மநாதனை பிடிப்பதற்காக சி.பி.ஐ., அதிகாரிகள், நியூசிலாந்து சென்றனர். இது தொடர்பாக அங்குள்ள மூன்று தமிழர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருந்தாலும், பத்மநாதனை பிடிக்க முடியவில்லை.ராஜிவ் கொலை வழக்கின் சதி குறித்து விசாரிப்பதற்காக, பல்வேறு உளவு அமைப்புகளின் நிபுணர்களை உள்ளடக்கிய பல்நோக்கு கண்காணிப்பு ஏஜன்சி (எம்.டி.எம்.ஏ.,) அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, ராஜிவ் கொலைக்கான சதித் திட்டம் குறித்து விரிவாக விசாரணை நடத்தியது.இதற்கிடையே, இந்த அமைப்பின் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்தது. தற்போது இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, அதன் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பத்மநாதன் இலங்கை பாதுகாப்புப் படையினர் வசம் சிக்கியுள்ளதால், அவரிடம் ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.அவரிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பது குறித்த பட்டியலை சி.பி.ஐ., தயாரிக்கிறது.
புலிகள் அமைப்புக்காக பல்வேறு நாடுகளில் நிதி திரட்டும் பணியையும், ஆயுதங்கள் கடத்தி வரும் பணியிலும் பத்மநாதன் ஈடுபட்டு வந்ததால், அது தொடர்பான கேள்விகளும் விசாரணையில் இடம் பெறும் என தெரிகிறது.பத்மநாதன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய இந்தியர்கள் சிலர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை விசாரிக்கவும் இந்த அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. பத்மநாதனுக்கு ஜெர்மனியில் வங்கிக் கணக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்து, ஜெர்மனி அதிகாரிகளின் உதவியுடன் அதை அறிவதற்கும் ஏஜன்சி அதிகாரிகள் ஆர்வமுடன் உள்ளனர்.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதை அடுத்து, ராஜிவ் கொலை வழக்கு விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
Mahaveli
0 விமர்சனங்கள்:
Post a Comment