விஜய்யை தொடர்ந்து பிரபுவையும் இழுக்கும் காங்.
சென்னை: விஜய்யைத் தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவையும் காங்கிரஸில் இணைக்க அக்கட்சியிலிருந்து முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
நடிகர்களே இல்லாத ஒரே கட்சியாக இருக்கிறது காங்கிரஸ். இந்த நிலையில் தனிக்கட்சி தொடங்கும் மன நிலையில் இருந்த விஜய்யை வலியக்க போய் தங்களது கட்சியில் இணைக்க முயன்று வருகிறது காங்கிரஸ். விஜய்யும் அதற்கு சம்மதித்து விட்டதாக தெரிகிறது.
விரைவில் சென்னையில் நடைபெறவுள்ள பிரமாண்ட விழாவில் சோனியா காந்தி - ராகுல் காந்தி முன்னிலையி்ல விஜய் காங்கிரஸில் கை கோர்ப்பார் என்று தெரிகிறது.
பிரபுவுக்கும் அழைப்பு...
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு நடிகர் பிரபுவுக்கும் அக்கட்சியிலிருந்து அழைப்பு போயுள்ளதாம்.
பிரபுவின் தந்தை சிவாஜி கணேசன் காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். நீண்ட காலமாக காங்கிரஸில் இருந்து வந்த அவர் பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சி சிவாஜியை எப்படி நடத்தியது என்பது அரசியலை நீண்ட காலமாக பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
சிவாஜி ரசிகர்களை போஸ்டர் ஒட்டவும், பிரசாரம் செய்யவும், கொடி பிடிக்கவும் மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வந்ததாக ஒரு குற்றச்சாட்டு அப்போது பலமாகவே இருந்தது.
சிவாஜி கணேசனை கிட்டத்தட்ட ஒரு கறிவேப்பிலை போலவே காங்கிரஸ் பயன்படுத்தியதாகவும் அப்போது சிவாஜி தரப்பில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டது.
காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட சிவாஜி கணேசன், தமிழக முன்னேற்றக் கழகம் என்ற புதுக் கட்சி தொடங்கினார். இந்தக் கட்சியை அவரால் நடத்த முடியவில்லை. காரணம் அரசியல்வாதியாக மட்டுமே இருந்த சிவாஜிக்கு அரசியல் நடத்தத் தேவையான நுணுக்கங்கள் தெரியவில்லை.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்து ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக ஒரு அணியாக செயல்பட்டபோது, சிவாஜியின் கட்சி, ஜானகி அணியுடன் இணைந்து சட்டசபைத் தேர்தலை சந்தித்து, அனைத்துத் தொகுதிகளிலும் படு தோல்வியைத் தழுவியது.
அப்போது சேவல் சின்னத்தில் தனி அணியாகப் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 20க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றது நினைவிருக்கலாம்.
அத்தோடு அரசியலுக்கு முழுக்குப் போட்டு விட்டார் சிவாஜி கணேசன். அதன் பின்னர் அவரது குடும்பத்தினர் யாரும் எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்து வருகின்றனர்.
ஆனால் சமீப காலமாக நடிகர் பிரபு, அரசியலில் குதிப்பார் என அவரது அண்ணன் ராம்குமார் அவ்வப்போது கூறி வருகிறார்.
விஜய் விழாவில் பிரபுவும் சேரக் கூடும்...
இந் நிலையில், காங்கிரஸ் கட்சியில் வந்து இணையுமாறு பிரபுவுக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து அழைப்புகள் வந்துள்ளனவாம். விஜய், காங்கிரஸில் இணையும் விழாவை சென்னையில் சோனியா காந்தி தலைமையில் பிரமாண்ட விழாவாக ஏற்பாடு செய்யத் திட்டமிட்டப்பட்டு வருகிறதாம்.
அதே விழாவில் பிரபுவும் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று பேச்சு அடிபடுகிறது.
பிரபுவையும் காங்கிரஸில் சேர்த்து விட்டால் விஜய் ரசிகர்கள் மற்றும் பிரபு, சிவாஜி ரசிகர்களை வைத்து தொண்டர் பலத்தைக் கூட்டிக் கொள்ளலாம் என்பது காங்கிரஸின் திட்டம்.
மாணிக் தாக்கூர் மும்முரம்...
விஜய்யை காங்கிரஸ் கட்சிக்கு இழுத்து வரும் பணியை விருதுநகர் தொகுதியில் வைகோவைத் தோற்கடித்து எம்.பியான மாணிக் தாக்கூர்தான் முன்னின்று செய்து வருகிறாராம்.
இவர்தான் ராகுல், விஜய் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார் என்று கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் கர்னல்களில் தாக்கூரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment