அரசபடைகளின் Extra Judicial Killings - சட்டத்திற்குப் பிறம்பான கொலைகள்
நண்பர்களே
ஓகஸ்ட் 25ல் இலங்கை அரசுக்கு எதிரான மற்றுமொரு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சர்வதேசதளத்தில் விவாதத்திற்கு வந்தள்ளது. ஓகஸ்ட் 25ல் பிரித்தானியாவைச் சேர்ந்த செனல் - 4 தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய வீடியோப் பதிவு ( http://link.brightcove.com/services/player/bcpid1529573111 ) இலங்கை அரசுக்கு புதிய அழுத்தங்களைக் கொடுத்தள்ளது. சிஙகளம் பேசுகின்ற சீருடையில் உள்ளவர்கள் பத்துப் பேர் வரை அவர்களின் கண்களைக் கட்டி நிர்வாணமாக்கி சுட்டுக் கொள்வது இந்த வீடியோகிளிப்பில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் ஜனவரியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வீடியோப் பதிவு Journalists for Democracy in Sri Lanka என்ற ஊடக அமைப்பினரால் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டு இருந்தது. அப்பதிவு நம்பகமானது என்றும் அதில் சீருடையில் வந்தவர்கள் இலங்கை அரச படையினர் என்றும் இலங்கையைச் சேர்ந்த சிங்கள மனித உரிமைவாதி ஒருவர் உறுதிப்படுத்தியும் உள்ளதாக சனல் 4 தெரிவித்த உள்ளது.
ஆனால் இலங்கைப் படைவீரர்கள் தொடர்பான இந்த வீடியோக் காட்சி உண்மைக்குப் புறம்பானதென்றும் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதிச் செயலகம் அறிவித்துள்ளது. ‘சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கின்றது’ என்றும் ஜனாதிபதிச் செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”வன்னியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றபோது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல உண்மைக்குப் புறம்பான ஒளிநாடாக்களை தயார்செய்து ஒளிபரப்பிய பிரித்தானியாவை தலைமையாகக்கொண்ட செனல் - 4 என்னும் தொலைக்காட்சியாளர்கள் இலங்கையைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டபோதும் இலங்கை அரசுக்கு எதிரான பொய்யான பல தகவல்களையும், செய்திகளையும் அவர்கள் தொடர்ந்தும் வெளியிடுவதனை நிறுத்தவில்லை. இதன் ஒரு அங்கமாகவே உண்மைக்குப் புறம்பான வீடியோவொன்றை செனல்-4 வெளியிட்டுள்ளது.” என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கை அரச படைகள் சட்டத்திற்குப் பிறம்பான திட்டமிட்ட படுகொலைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது இது முதற்தடவையல்ல. திருகோணமலையில் இடம்பெற்ற மாணவர்களின் படுகொலை, மூதூரில் இடம்பெற்ற பிரான்ஸ் உதவி நிறுவனப் பணியாளர்களின் படுகொலை என்பவை அண்மைய சில வருடங்களுக்குள் இடம்பெற்ற படுகொலைகள். இப்படுகொலைகள் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டது என்பது பெரும்பாலும் மனித உரிமை நிறுவனங்களால் நம்பப்பட்ட சம்பவங்கள்.
1970ற்குப் பின் இரு தடவை சிங்கள இளைஞர்களின் (ஜேவிபி) கிளர்ச்சிகள், மூன்று தசாப்தங்கள் தொடர்ந்த தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் என்பன இடம்பெற்றது. இவற்றில் 200 000ற்கும் அதிகமான தமிழ் சிங்கள இளைஞர்கள் யுவதிகள் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவ்வளவு பெரும் உயிரிழப்பிற்கு இலங்கை அரச படைகளும் முக்கிய காரணமாக இருந்தனர் என்பது சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் 200 000 பேர்வரை கொல்லப்பட்டிருந்த போதும் அக்கொலைகளில் தொடர்புபட்டிருந்த அரச படையைச் சேர்ந்த எவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் உயர்நிலையைப் பெற்றனர்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலப்பகுதியில் 1991ல் சரணடைந்த 600க்கும் மேற்பட்ட சிங்கள பொலிஸாரை படுகொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தற்போது இலங்கை அரசில் அமைச்சராக உள்ளார். பத்திரிகையாளர் லசந்த விக்கிரமசிங்கவை படுகொலை செய்யப்படதை நியாயப்படுத்தும் இன்னுமொருவர் மேர்வின் சில்வா துப்பாக்கியுடன் ஊடகங்களுக்குள் புகுந்து ரவுடித்தனம் செய்பவர் இன்னமும் அமைச்சராக உள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஈபிடிபி சட்டத்தை தங்கள் கையில் எடுத்து படுகொலைகளில் ஈடுபட்டதை சர்வதேச உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன. ரீஆர்ஓ படுகொலைகளுடன் தொர்புபட்டவர் கிழக்கின் முதலமைச்சராக உள்ளார். இவர்களையே சட்டத்தை உருவாக்க அந்த நாட்டின் அரசியல் தலைமை தேர்தெடுக்கிறது. ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்குபவர்களின் தகமை இப்படி இருக்கும் போது இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி அமையும்?
சர்வதேச நாடுகள் என்று வர்ணிக்கின்ற அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளும் இரட்டைத் தன்மையான சட்ட நடைமுறையையே கைக்கொள்கின்றன. பிரித்தானியாவில் ஜேன் சார்ள்ஸ் டி மென்ஸிஸ் யூலை 22 2005ல் தவறுதலாகச் சுட்டுக்கொல்லப்பட்ட போது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க பிரித்தானிய அரசு நிர்ப்பந்திக்கப்பட்டது. மெனஸிஸின் கொலையை மூடிமறைக்க முயற்சித்த மெற்றோபொலிடன் பொலிஸ் தலைமை அதிகாரி சேர் இயன் பிளேயர் பின்னாளில் தனது பதவியை ராஜினாமாச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் ஆப்கானிலும் ஈராக்கிலும் பல ஆயிரம் கொலைகளுக்கும் பல நூறு சித்திரவதைகளுக்கும் பொறுப்பாக இருந்த எத்தனை இராணுவ வீரர்கள் அதிகாரிகள் தண்டனை பெற்றனர் என்பது கேள்விக்குறியே. அரச படைகள் அல்லாத தனியார் படைகள் கூட கொலைகளிலும் சித்திரவதைகளிலும் ஈடுபட்டு இருந்தனர்.
மூன்றாம் உலக நாட்டு மக்களின் உயிர்கள் உணர்வுகள் உரிமைகள் அந்த நாடுகளின் ஆளும் அரசுகளால் மட்டுமல்ல சர்வதேசம் என்று சொல்லப்படும் அரசுகளின் ஆளும் அரசுகளாலும் இரண்டாம் தரமாகவே பார்க்கப்படுகின்றது.
இவை எல்லாவற்றையும் கடந்து இந்த அரசுகளை அம்பலப்படுத்துகின்ற சாட்சியங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவருவது மக்களுக்கு யதார்தத்தை உணர்த்த வழிகோலும். இன்று முடியாவிட்டாலும் குற்றவாளிகள் என்றாவது ஒருநாள் தண்டனைக்கு உள்ளாக வேண்டும். அது காலம் கடந்தது என்றாலும் அது பலருக்கும் படிப்பினையாக அமையும். சிலி நாட்டின் முன்னாள் அதிபர் பீனசே தனது குற்றங்களுக்கான தண்டனையை கால்நூற்றாண்டுக்குப் பின்னர் பெற்றார். இலங்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் இது பொருந்தும் என யூலை 28 2009ல் கொன்வே ஹோலில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தெற்காசியப் பொறுப்பாளார் பிரட் அடம்ஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேற்படி வீடியோப் பதிவின் நம்பகத் தன்மை பற்றிய கேள்விகள் எழுப்பப்படலாம். ஆனால் நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் மனித உரிமைகள் இரு தரப்பினராலும் மிக மோசமாக மீறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் சர்வதேச நாடுகளிடம் உண்டு. அதற்கான சற்லைட் புகைப்பட ஆதாரப் பதிவுகள் இரகசியமாக்கப்பட்டு உள்ளது. அவற்றை வெளியிட்டு குற்றவாளிகளைத் தண்டனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையிலையென சர்வதேசம் எனக் கருதும் நாடுகள் நினைக்கின்றன என்பதே யதார்த்தம்.
பொய்களை உண்மையாக்குவதம் உண்மைகளைப் பொய்யாக்குவதும் அவர்களுடைய அரசியல் தேவைகளைப் பொறுத்தது. இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இலங்கை அரசுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றப்பட்டது அதனாலேயே.
ஆகவே அப்பாவி மக்களின் பக்கம் நின்று ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று உண்மைகளை அணுகுவதே பொருத்தமானதாக இருக்கும்.
த ஜெயபாலன்
0 விமர்சனங்கள்:
Post a Comment