'சனல் - 4' ஒளிநாடா பற்றிய விசாரணைக்காக சிறிலங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் விரைவில் பிரித்தானியா செல்கின்றார்
'சனல் - 4' வெளியிட்ட காணொலி தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்காக சிறிலங்கா அரசின் மூத்த பிரதிநிதி ஒருவர் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை படைத்துறை ரீதியாகத் தோற்கடித்துவிட்ட பின்னர், இப்போது அந்த அமைப்பின் பிரச்சார இயந்திரத்தினால் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய நிலைமையில் தாம் இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் இந்தப் பிரச்சார உத்திகளால் அனைத்துலக சமூகம் தவறான முறையில் வழிநடத்தப்படக்கூடாது எனவும் கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்குத் தகவல் தெரிவித்த அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
தமிழ் இளைஞர்கள் நீதி விசாரணை இன்றி மரண தண்டனை விதிக்கப்படும் பாணியில் சிறிலங்காப் படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதை சித்தரிக்கும் வகையில் பிரித்தானிய 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி போலியானது என சிறிலங்கா அரசு நிராகரித்திருக்கின்றது.
இருந்தபோதிலும், இதனை போலியானது என சிறிலங்கா அரசு மறுத்தால் அதனை நிரூபிக்க வேண்டும் என ஐ.நா. உட்பட மேற்கு நாடுகள் பலவும் வலியுறுத்தி வருவதையடுத்தே இது தொடர்பான விசாரணைகளுக்காக தமது மூத்த அதிகாரி ஒருவரை பிரித்தானியாவுக்கு அனுப்பிவைப்பதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்திருக்கின்றது.
இதேவேளையில் சிறிலங்காவின் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களில் ஒருவரான சிறி ஹேவ விதாரன, 'சனல் - 4' வெளியிட்ட ஒளிநாடா போலியான ஒன்று எனத் தெரிவித்திருப்பதுடன் அதற்கான சில காரணங்களையும் முன்வைத்திருக்கின்றார்.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் பின்னர் இந்த ஒளிநாடாவுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது எனத் தெரிவிக்கும் அவர், இது செல்லிடப்பேசி ஒன்றில் உள்ள கமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது என்பதையும் நிராகரித்திருக்கின்றார்.
உயர்ந்த தரத்தைக்கொண்ட வீடியோ கமரா ஒன்றைப் பயன்படுத்தியே இந்த ஒளிநாடா முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடும் அவர், அது பின்னர் கைத் தொலைபேசியில் உள்ள கமரா ஒன்றுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றார்.
இந்த ஒளிநாடாவி்ல் தரம் குறைந்ததாகவே பின்னர் ஒலி இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர், இதனை நிபுணத்துவம் வாய்ந்த எவரும் கையாளவில்லை என்பதைத்தான் அது புலப்படுத்துவதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment