இங்கிலாந்தில் இலங்கைத் துணைத் தூதர் ஹம்சாவின் முதல் குறி : கேசவன்
இலங்கை இந்திய அரசுகள் இணைந்து வன்னி மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகக் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் மனிதக் கொலைகளை எதிர்ப்பின்றி நடத்தி முடிக்க தமிழகத்தில் இலங்கை அரசின் கைக்கூலியாகப் பணிபுரிந்தவர் தான் ஹம்சா என்ற இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதர்.
வரலாறு முழுவதும் சீர்திருத்தப் போராட்டங்களை முன்நிறுத்திய திராவிடக் கட்சிப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என்று பல்வேறு மட்டங்களிலும் தனது தொடர்பை வளர்த்துக்கொண்ட ஹம்சா, இவர்களின் பலவீனங்களைப் புரிந்துகொண்டு பணத்தை வாரியிறைத்தவர்.
ஜூனியர் விகடனிலிருந்து அதன் நிர்வாக ஆசிரியர் ஹம்சாவிடம் பணம் பெற்ற குற்றச்சாடையும் முன்வைத்து நீக்கப்பட்டிருக்கிறார். தமிழ் நாட்டிலிருந்து வரும் ஆங்கில ஊடகங்கள் தமிழ் பேசும் மக்களின் உணர்விகளின் மீது ஒரு போரையே தொடுக்குமளவிற்கு அம்சாவின் நிகழ்ச்சித் திட்டங்கள் அமைந்திருந்தன. நிதி வழங்கல், களியாட்டங்கள், ஐந்து நடசத்திர விடுதிகள் விருந்து, வியாபார உறவுகள் என்று போர்க்காலத்தில் தமிழகத்தின் கட்சி தலைவர்களைக் கையகப் படுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும், அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தூண்டிவிடவும் ஹம்சாவின் முன்னெடுத்த நடவடிக்கைகள் அபாரமானவை.
தனது வரலாறு முழுவதும் தமிழ் உணர்வை மையப்படுத்தியே அரசியல் செய்த கலைஞர் கருணாநிதி குடும்பத்தினருக்கும் இலங்கை அரச அதிகாரிகளுக்கும் இடையேயான தொடர்பை வளர்த்தெடுப்பதிலும் கூட ஹம்சாவின் பங்கு முதன்மைப் படுத்தப்படாலாம் என்று கூறப்படுகிறது.
இலங்கை அரசு இனப்படுகொலையை எதிர்ப்பின்றி, எழுச்சிகள் பற்றிய பய உணர்வின்றி நடாத்தி முடிப்பதற்கு இவர் வகித்த பங்கிற்குப் பரிசாகவும் புலம்பெயர் தமிழ் மக்களைக் கையாளவும் ராஜபக்ஷ அரசால் இங்கிலாந்திற்கான துணைத்தூதுவராக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார் ஹம்சா.
தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்ல, புலம் பெயர் தமிழ் அரசியற் சூழலிலும், அரசியல் முரண்பாடுகள் தெளிவாகத்தெரிய ஆரம்பித்துள்ள காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீதிக்கும் அநீதிக்கும், உண்மைக்கும் பொய்க்கும், சரிக்கும் பிழைக்கும் இடையேயான போராட்டங்கள் தான் மக்களியக்கங்களின் வரலாறு. இங்கு நீதியின் பக்கத்திலும், உண்மையின் பக்கத்திலும் தம்மை நிறுத்திக்கொள்கின்றவர்களுக்கான அரசியல் தான் அதிகாரத்திற்கெதிரான அரசியல்.
இன்று கொடிய அதிகாரத்தை, அதிலும் மனிதப்படுகொலை நிகழ்த்திவிட்டு எந்தச் சலனமுமின்றி உலக அரங்கில் இறுமாப்புடன் உலா வருகின்ற ரஜபக்ஷ குடும்ப அரசை நியாயம் சொல்லும் ஒரு புதிய வியாபாரக் கூட்டம் இந்திய அரசியல் வாதிகளின் மத்தியில் முளைவிட்டிருப்பது போல புலம் பெயர் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் உருவெடுத்திருக்கிறது.
புலிகள் புலம் பெயர் தேச தமிழர்கள் மத்தியில் கோலோச்சிய போது, அவர்களின் கருத்துச் சுதந்திரம் மீதான அடக்குமுறை புலியெதிர்ப்பாக உருவெடுத்திருந்தது. இந்த அடக்கு முறையைச் அடிப்படையாகக் கொண்டு இணைந்து கொண்டவர்கள் பல சந்தர்பங்களில் பேரினவாத அடக்குமுறை குறித்துக் கூடக் கவலை கொண்டதில்லை.
இந்தப் புலியெதிர்ப்பு வட்டத்திற்குள் சந்தர்ப்ப வாதிகளும், அரசியல் வியாபாரிகளும், தன்னார்வ அமைப்புக்களின் பண முதலைகளும் கூட இணைந்து கொண்டனர்.
நீதியின் பக்கத்தில் நின்ற புலியெதிர்ப்பாளர்களோ புலிகளிடம் இலங்கை அரசிற்கெதிராகப் போராடும் உரிமையைக் கோரியே போராடினர். புலிகளின் போராட்டம் பாசிசத் தன்மை கொண்டது, இது அழிவிற்குத் தான் வழிகோலும் என்ற இவர்கள், இலங்கை அரசின் பேரின வாத அடக்குமுறைக்கு எதிராகப் போராட புலிகளிடம் உரிமை கோரியே புலியெதிர்ப்பாளார்களானார்கள்.
இவர்கள் எப்போதுமே அரச சார்பு நிலையோ அதிகாரம் சார்ந்த சந்தர்ப்ப வாதத்தையோ தமது அரசியல் நிலைப்பாடாகக் கொண்டதில்லை.
புலிகளின் அழிவின் பின்னர் சந்தர்ப்பவாத புலியெதிர்ப்பாளர்களும், சமூகவிரோதிகளும், இலங்கை அரசையும் ரஜபக்ஷ குடும்பத்தையும் நியாயப்படுத்தும் அரசியல் வியாபாரத்தில் இறங்கியுள்ளனர்.
இதில் ஒரு சாரார் இலங்கை அரசின் தொடரும் இனப்படுகொலைகள் குறித்து பேசக் கூடாது என்றும் அப்படிப் பேசினால் அவர்கள் தம்மை தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி புரிய அரசு அனுமதிக்காது என்றும் எந்தக் கூச்சமுமில்லாமல் பிரச்சாரம் மேற்கொள்ளுகின்றனர்.
இவர்கள் தான் இன்று ஹம்சாவின் முதற் குறி. இம்மாதம் 3ம் திகதி லண்டனில் நிகழ்வுற்ற, தமிழ் அமைப்புக்களோடு தொடர்புகளைப் பேணிவந்த உபாலி குரே யின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட ஹம்சா, தனது அரசியல் பிரசன்னத்தை வெளிப்படுத்திக் கொண்டார். இதற்கு மறு நாளே வைற் சப்பல் என்ற இடத்தில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் மத நிகழ்விற்கு பல புலம் பெயர் தமிழ்ப் புலியெதிர்ப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இங்கு ஹம்சாவைச் சந்திப்பதற்கு முண்டியடித்துக்கொண்டு சென்ற பல தமிழ் ஜனநாயத் தூதுவர்கள் முன்வைத்த காரணம் இந்து இஸ்லாமிய மத ஒற்றுமை. இவ்வாறான நிகழ்வுகளை எட்டிக்கூடப் பார்த்திராத பல அரசியல் வியாபரிகளுக்கு மத ஒற்றுமை பளிச்சிட்டதோ ஹம்சாவின் வருகையோடு தான். தெருவோரங்கள் நாய்கள் நிணம் புசிக்கக் கொன்று போட்டுவிட்டு நியாயாயம் கூறும் ஒரு பௌத்த மேலாதிக்கவாத கொலைகாரக் கூட்டத்தின் இஸ்லாமியப் பிரதிநிதியோடு, இந்து அரசியல் வியாபாரிகள் ஏற்படுத்தும் மத ஒருங்கிணைப்பு கிரிமினல்களின் ஒன்று கூடலே தவிர வேறில்லை.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மறுபடி ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். புலம் பெயர் நாடுகளிலிருருந்து புலி எழுந்து விடுமாம். ஹம்சாவின் இங்கிலாந்துப் பிரசன்னமும் இந்த எச்சரிக்கையும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவை.
புலம் பெயர் நாடுகளிலிருந்து புலி வருகிறதோ இல்லையோ, நிச்சயமாகப் புதிய கருத்துக்கள் வரும். நாளைய சமூகத்தின் மாபெரும் சக்தியாக இலங்கையில் நடாத்தப்படும் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிபிற்கும் நியாயம் கோரும் ஒரு சில மனிதர்களாவது வெளிவருவார்கள். அவர்களின் ஆரம்பம் ஹம்சாவிற்கு முளைத்திருக்கும் புதிய புலம்பெயர் வியாபார வால்களை அறுப்பதிலிருந்தே உருவாகும்.
இனி ஒரு இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment