'சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை' - பிரித்தானியாவில் வாழும் அரசியல்வாதியான தயா இடைக்காடர்
பிரித்தானியாவில் வாழும் அரசியல்வாதியான தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் ஜி.ரிவி. நேரடி நிகழ்ச்சி ஒன்றைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
வியாழன் நள்ளிரவு தொலைக்காட்சியின் 'வெளிச்சம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயா இடைக்காடர் 'சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை' என்று கூற முயன்ற அவரது கருத்தை, அதை நெறிப்படுத்திய செய்தியாளர் தினேஷ் அவர்கள் வெகு புத்திசாதுரியமாக தடுத்து நிறுத்தியுள்ளார். திரு. தினேஷ் அவர்களின் இந்த முடிவு பாராட்டத்தக்கது என்றாலும், திரு தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தெளிவு படுத்தியே ஆகவேண்டும்.
தயா இடைக்காடர் சொல்ல வந்தது போல், 'சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை' என்ற கருத்து, சிறிலங்காவில் ஒரு ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவந்தால் தமிழ் மக்களின் அத்தனை பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்ற மிக மட்டமான கருத்தாகவே தோன்றுகிறது.
புலம்பெயர் தேசங்களின் விடுதலைப் போர்க்களங்களில் அடிக்கடி முகம் காட்டுவதன் மூலமும், தொலைக்காட்சிகளில் தோன்றுவதன் மூலமும், ஈழத் தமிழர்களுக்கான சில போராட்டங்களை முன்நின்று நடாத்துவதாலும் மட்டும் ஈழத் தமிழர்களின் கொள்கை வகுப்பாளர்களாக அனைவரும் மாற முற்படுவது மிகவும் அபாயகரமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்வது அவசியம்.
சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே இன முரண்பாடு உருவாக்கப்பட்டு, அது கூர்மையடைந்ததன் காரணமாகவே இன்றுவரை சிங்கள தேசத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்பு யுத்தம்.
தமிழ் மக்களின் வாழ்வுரிமையை மறுதலிக்கும் இந்த இன அழிப்பு யுத்தத்தில் எல்லா சிங்கள மக்களும் பங்கு கொள்ளவில்லையானாலும், பெரும்பான்மையான சிங்கள மக்கள் சிங்கள அரசின் இந்த யுத்த முன்னெடுப்புக்களுக்கும், இன அழிப்பிற்கும் ஆதரவு வழங்கி வருகின்றார்கள் என்பதே உண்மை.
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் கூர்மையடைந்து பாரிய மனிதப் பேரவலங்களை ஏற்படுத்திய சிங்கள தேசியத்தின் இனவாத சிந்தனைக்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்த சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் நிராகரிக்கப்பட்டு, அவர்கள் மீது கலாச்சார, பொருளாதார தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களது உயிரும் உடமைகளும் அழிக்கப்பட்டு, அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட வேளைகளில், சிங்கள மக்கள் மனிதாபிமான சிந்தனை கொண்டவர்களாக இருந்திருப்பின் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் வேதனைகளுக்குப் பரிகாரம் தேடியிருப்பார்கள்.
மாறாக, தமிழர்கள் மீது எவர் மிக மோசமான இனவாதக் கருத்துக்களை முன் வைக்கிறார்களோஈ அவர்களே சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையே இப்போதும் சிங்கள மக்கள் மத்தியில் உள்ளது. இதற்கு அதிக காலம் பின் நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. தற்போதைய நாடாளுமன்றமே அதற்கு ஆதாரமாக உள்ளது. இனவாதக் கொள்கையுடன் போட்டியிட்ட ஜே.வி.பி., ஹெல உறுமய கட்சிகளின் பெரு வெற்றி சிங்கள மக்களின் எண்ணப் பிரதிபலிப்பே.
சிங்கள தேசத்தின் அரசியல் மட்டுமல்ல, தமிழீழ மக்கள் மீது போர் தொடுபடபதற்காகவே பெருத்து ஊதப்பட்ட 300,000 படையினரைக் கொண்ட சிங்களப் படைக் கட்டமைப்பில் உள்ள அனைவரும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து வந்தவர்களே. சிறுபான்மையான சிங்கள மக்களைத் தவிர, எஞ்சியுள்ள அனைத்து சிங்கள மக்களும் தங்கள் மனிதாபிமானங்களை இனவாத வெறியூட்டலுக்குள் தொலைத்து விட்டு, திரும்பி மீள முடியாத நிலையிலேயே உள்ளார்கள்.
யுத்த முனையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 300,000 இலட்சம் மக்களை விடுவிக்க வேண்டும், விசாரணையற்ற தடுப்புக்காவலில் தமிழர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டும், காரணமற்ற கைதுகள், தடுத்து வைத்தல்கள், கடத்தல்கள், காணாமல் ஆக்குதல், படு கொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள் என்று தொடரும் சிங்கள அரசின் அத்தனை கொடுமைகளையும் நிறுத்த வேண்டும் என்று எத்தனை மனிதாபிமான காரணங்கள் இருக்கின்ற போதும், எத்தனை சிங்கள மக்கள் அதனை எதிர்த்துப் போராட்டம் நடாத்த முன்வந்திருக்கிறார்கள்?
மனக் கொடூரங்களால் நிரப்பப்பட்ட சிங்கள இனவாத சமூகத்துடன் ஈழத் தமிழர்கள் இணைந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து பல தசாப்தங்களாகிவிட்டது. தமிழீழம் ஒன்றே தீர்வு என்று தந்தை செல்வா அவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன் வைத்து, தமிழீழ மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த தமிழீழத் தாகத்தோடு எத்தனை மறவர்கள், எத்தனை தமிழர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்துள்ளார்கள். அந்த முடிவிலிருந்து மாறுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது.
தற்போது மாறிவரும் உலக சிந்தனைகளினூடாக எமது நியாயமான போராட்டங்களைத் தீவிரப்படுத்தி, தமிழீழ தேசத்தை மீட்டெடுக்கும் பணி மட்டுமே புலம்பெயர் தேசத்துத் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, சுய விருப்பக் கருத்துக்களைத் தெரிவிக்க முற்படுவது தமிழ்த் தேசியத் துரோகமாகவே கணிக்கப்பட வேண்டும்.
Pathivu
0 விமர்சனங்கள்:
Post a Comment