உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல்!
புலம்பல்-1
புலிகள் முற்போக்கான கொள்கைகளை தனக்குள் கடைப்பிடித்த ஒரு இயக்கமாம்!
யமுனா ராஜேந்திரன் என்ன கூறுகின்றார். புலி தனக்குள் சாதி பார்க்கவில்லை என்றால், அது சாதிய சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார். புலி தனக்குள் பிரதேச வேறுபாட்டை கடைப்பிடிக்கவில்லை என்றால், அது பிரதேசவாதத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார். புலிகள் தனக்குள் ஆணாதிக்கத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், ஆணாதிக்க சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார்.
புலிகள் தமக்குள் முதலாளித்துவமல்லாத உறவை பேணினார்கள் என்றால், அவர்கள் முதலாளித்துவ சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார். இப்படி யமுனா வலதுசாரிய பாசிசப் புலியை "மார்க்சியம்" மூலம் ஆய்வு செய்கின்றார். இப்படி யமுனா கூட்டிக்கழித்து, புலிகள் முற்போக்கு இயக்கமாக தற்போதைக்கு காட்டுகின்றார். விரைவில் புலியை மார்க்சிய இயக்கமாக கூறினாலும், ஆச்சரியம் கிடையாது.
புலி தன் "தேசியத்தின்" பெயரில் பாதுகாத்த சாதியத்தை, யமுனா ராஜேந்திரன் தன் பிழைப்புவாத எழுத்துக்காக அதை மறுக்கின்றார். இதற்கு அவர் மக்களின் விடுதலைக்கு எந்த அரசியல் வழியையும் வைக்காது புகழுக்கு எழுதிப் பிழைக்கும் அ.மார்க்ஸ் - சோபாசக்தி போன்றோர் முன்வைத்த தலித்தியத்தை, கையில் எடுக்கின்றார். அத்துடன் இவர்களை மட்டுமல்ல, தலித்தியம் பேசியும் ஈழத்தவர்களை முன்னிறுத்தியும் முரண்படும் பிரிவுக்குள், தன்னையும் தன் நிலையையும் உள் நுழைக்கின்றார். அவர்கள் பேசிய குறுகிய மக்கள் விரோத அரசியல் பின்னணி இசையில், வரலாற்றை புலிக்காக புனைகின்றார். இதன் மூலம் புலியின் சாதியம் பற்றிய பார்வையை, முற்போக்கானதாக காட்ட முனைகின்றார்.
ஈழத்து சாதியத்தை தேசியப் போராட்டம் எப்படி களையப் போராடி இருக்க வேண்டும் என்ற, அரசியல் ரீதியான சுயவிமர்சன மற்றும் விமர்சன முறையை, அவர் தனக்குத்தானே முதலில் மறுத்துவிடுகின்றார். இப்படி எதார்த்தம் சார்ந்த புலித்தேசிய சாதிய சமூக வாழ்வியல் மீதான, நடைமுறை சார்ந்த விமர்சனத்தை மறுத்து விடுகின்றார். மற்றவர்கள் மேல் பேய் பிடித்துள்ளதாக காட்டி, பேய் ஓட்ட முனைகின்றார். இதைத்தான், பிழைப்புக்கு எழுதும் இவர்கள் சாதிய ஆய்வென்கின்றனர். ஏன், இதை மறுத்தால் உடனே "வரட்டுத்தனமற்ற மார்க்சியம்" என்று கூட முழங்குகின்றனர். இதற்கு அங்குமிங்கும் வரலாற்றை கடித்துக் குதறி, புலிகளை முற்போக்கான சாதிய நடைமுறையை முன்னெடுத்ததாக படம் காட்ட முனைகின்றார்.
பொதுவில் ஈழத்து தலித்தியத்தை "புலியெதிர்ப்பு" என்று முத்திரை குத்தி புலம்பத் தொடங்கும் ஜமுனா, தான் யார் எது என்பதை இங்கு முன்வைக்கவில்லை. அதுவோ புலி அரசியல் தான். முன்பு புலி பத்திரிகையில் பணத்துக்காக எழுதியவர் தான் இவர். பணம் கொடுத்தால் எதற்கும், எப்படியும் எழுதுபவர்தான், இந்த ஆய்வு ஜம்பவான். புலிகள் இன்று தம்மை திரித்து மீள் கட்டமைப்பு செய்ய முனையும் நிலையில், தம்மைப் பற்றிய ஒரு போலியான அரசியல் விம்பத்தை மீள உருவாக்க முனைகின்றனர். இதற்காக மீண்டும் பணத்தை இறைக்கத் தொடங்கியுள்ளனர். பணத்துக்கு எப்படியும் எழுதத் தயாரான யமுனா தான், இன்று புலியின் சாதியத்தை முற்போக்கான ஒன்று என்று எழுதுகின்றார். இதை மறுப்பது "புலியெதிர்ப்பு" என்று வேறு எழுதுகின்றார். இந்த போக்கிலித்தனத்தை அம்பலப்படுத்தினால், அதை வரட்டு மார்க்சியம் என்று முத்திரை குத்தி பிழைப்பது இவரின் தொழில்.
இவர் தன் புலியாதரவு "மார்க்சிய" ஆய்வை எப்படி எதனூடாக வாந்தியெடுக்கின்றார் என்பதைப் பாருங்கள். "புலிகள் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்கிறீர்கள். இந்துத்துவவாதிகள் என்கிறீர்கள். முதலாளித்துவவாதிகள் என்கிறீர்கள். சாதி வெறியர்கள் என்கிறீர்கள். கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற முரண்பாடுகளும் சிக்கலும் கொண்ட ஒரு உலக நிகழ்வுப்போக்கில், அரசியலில் திசை மாறிவிட்டது என்பதற்காக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்கத்தின் மீது இவ்வாறான முத்திரைகள் குத்துவது கொடுமையிலும் கொடுமை." சரி இதுவல்ல என்றால், புலி எது? ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமா!? மத எதிர்ப்பு இயக்கமா!? சுரண்டலுக்கு எதிரான இயக்கமா!? சாதி ஒழிப்பு இயக்கமா!? "ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்கம் என்றால், இவர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள், உங்கள் பார்வையில் ஒடுக்கப்பட வேண்டியவர்களா!?
இப்படி புலிகளின் "கொடுமையிலும் கொடுமை"யை பாதுகாத்து, மற்றவர்களை எதிர்க்கும் யமுனா, புலியை முற்போக்கானதாக காட்ட முனைகின்றார். இது தான், எம்முன் கொடுமையிலும் கொடுமை. கண் முன்னால் ஒரு இனத்தையே புலிகள் அழித்துள்ளனர். ஆனால் இது கொடுமையிலும் கொடுமையல்ல என்கின்றார். இதற்கு பலவிதமாக புரட்டல்கள்.
இவர் தன் "மார்க்சியம்" மூலம் கண்டு பிடித்து கூறுகின்றார் "விடுதலைப் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவப் பார்வையே அவர்களது எல்லாத் தவறுகளுக்கும் காரணமாக அமைந்தது." என்கின்றார். ஒரு புலிப் பன்னாடை தன் "மார்க்சியம்" மூலம் ஆய்வு செய்து, புலியின் வர்க்க அரசியலை இப்படி புரட்டி மறுக்கின்றார். கார்ல் மார்க்ஸ் என்ன கூறுகின்றார் "வரலாறு என்பது வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டம்" என்றார். இதை "வரட்டு மார்க்சியமாக" கூவும் யமுனா, புலியின் வலது பாசிச வர்க்க அரசியலை "புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவப் பார்வை" யாக திரிக்கின்றார். வர்க்க அரசியல் வரலாற்றையே திரித்து புரட்டுகின்றார். புலியின் சுரண்டும் வர்க்க அரசியல்தான், பாசிசமாகி மாபியாத்தனம் பெற்றது. அது "ஏகப்பிரதிநிதித்துவப் பார்வை" யல்ல. மாறாக அதன் வர்க்க அரசியல் பாசிசமாகியது.
பணத்துக்கு எழுதும் போது எப்படியும் எழுதலாம் என்று நினைக்கும் யமுனா, உடனே கவர் எடுத்து அதை நியாயப்படுத்துகின்றார். "கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற முரண்பாடுகளும் சிக்கலும் கொண்ட ஒரு உலக நிகழ்வுப்போக்கில், அரசியலில் திசை மாறிவிட்டது" என்கின்றார். எல்லாம் சரியாகத்தான் இருந்தது. உலக நிகழ்ச்சி போக்குத்தான், இதை இப்படி ஆக்கியது என்கின்றார். "அரசியலில் திசை மாறிவிட்டது" என்றால், அது என்ன? உங்கள் "மார்க்சிய" அரசியலில் எதிர்மறைப் போக்குகள் இல்லையா? புலிகள் எப்போதுதான், மக்கள் அரசியலை நடைமுறைப்படுத்தினர். இதை உலக நிகழ்ச்சிப் போக்கு தடுத்ததா அல்லது புலியின் வர்க்க அரசியல் மறுத்ததா? சரி "ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்கம்" என்கின்றீர்கள். எந்த ஒடுக்குமுறைக்கு எதிராக? எப்படி? தாமல்லாத சில பத்தாயிரம் பேரைக் கொன்று, தங்கள் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவது தானா "ஒடுக்குமுறைக்கு எதிரான" போராட்டம். மக்களை ஒடுக்கி அடிமைப்படுத்திய அடிமைத்தனத்தையா, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது!
புலம்பல்-2
புலிகள் முற்போக்கான சட்டங்களையும், திட்டங்களையும் கொண்ட இயக்கமாம்!
புலிகள் தமக்குள் சாதி பார்க்கவில்லை, ஆணாதிக்கத்தை கையாள்வதில்லை, முதலாளித்துவ உறவைப் பேணுவதில்லை, பிரதேச வேறுபாட்டை கடைப்பிடிப்பதில்லை, எனவே அதை அவர்கள் மேல் குற்றம்சாட்ட முடியாது. "யாழ் மேட்டுக்குடி வெள்ளாளரின் செயல்களுக்கு விடுதலைப் புலிகளைக் குற்றம் சுமத்த முடியாது." இதுதான் யமுனாவின் "மார்க்சிய" ஆய்வு.
இதை நியாயப்படுத்த, இவரைப்போல் அரசியல் ஒழுக்கக்கேட்டையே அரசியலாகக் கொண்ட பச்சோந்தியான "ஈழ மார்க்சியரான கா.சிவத்தம்பி' யை துணைக்கு அழைக்கின்றார். சமூக எதார்த்தம் மீதான விமர்சன நடைமுறையில், மார்க்சியமல்லாத புலிப் பாசிச தேசியத்தை தொழுத ஒரு மார்க்சிய விரோதியான சிவத்தம்பியின் துணையுடன், தன் முற்போக்கு கட்டுரையைத் தொடங்குகின்றார். இப்படி அண்ணன் தம்பியாக சேர்ந்து புலியை முற்போக்காகக் காட்டி பாதுகாக்க, கா.சிவத்தம்பியை கூட்டுக்கு அழைக்கின்றார். பாவம் கா.சிவத்தம்பி, "மாமனிதன்" பட்டத்தை எதிர்பார்த்து, கடைசிகாலத்தை புலி உச்சாடணம் செய்துகொண்டு கிடந்தவர். இதற்கு மேல் அவரின் "மார்க்சிய", எதார்த்தம், இயங்கிய சமூகம் மீது எந்த சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியது கிடையாது. இவர்களுடன் காலச்சுவடும், சேரனும் கூட்டுச் சேர்ந்தால், புலியின் மனிதவிரோத வரலாற்றை முற்போக்காக காட்டிவிடலாம். இந்தியாவின் முதுகு சொறிந்து கிடக்கும் இலக்கிய பிழைப்புவாதிகள் மூலம், விரும்பியவாறு எதையும் எப்படியும் திரித்துவிடலாம் என்று பலர் நினைக்கின்றனர். இதைத்தான் இன்று இக்கூட்டம் அரங்கேற்ற முனைகின்றனர். இதற்கு புலியெதிர்ப்பு பேசும் எதிர்தரப்பின் முதுகு சொறிவாளர்களை, தமக்கு ஏற்ப தொட்டுக்கொண்டு பயன்படுத்துகின்றனர்.
யமுனா ராஜேந்திரன் முன்னிறுத்திய சாதிய ஆய்வு, விடுதலைப் புலிகள் யார்? என்று கேள்விக்கு பதிலளிப்பதில்லை. புலிகள் மேல், மக்களைச் சார்ந்து நிற்கின்ற நடைமுறை ரீதியான ஒரு விமர்சன முறையே இவர்களிடம் கிடையாது. புலிகள் யார்? இந்தக் கேள்விதான், புலியின் சாதிய யாழ் மேலாதிக்க கட்டுமானத்தை துலாபரமாக அம்பலமாக்குகின்றது. விடுதலைப் புலிகள் ஒரு தேசிய விடுதலை இயக்கமாக இருந்தால், அதன் தேசியக் கடமை என்ன? இதற்கு இவர்கள் யாரும் விமர்சன நடைமுறை ஊடாக பதிலளிப்பதில்லை. புலிக்கு வாலாட்டி நக்கியவர்கள். எதார்த்த நடைமுறை மீது விமர்சனம் செய்ய தங்கள் பச்சோந்தித்தனமான நடைமுறையில், தங்களை ஒளித்துக் கொள்கின்றனர். புலிக்குப் பின், தாவிப் பதுங்கிக் கொள்கின்றனர். கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரை, இந்த "அறிவு" ஜென்மங்கள் செய்தது இதைத்தான்.
தேசிய விடுதலை என்பது என்ன? தேசத்தில் வாழும் மக்கள் மேலான சகல ஒடுக்குமுறைகளையும், குறிப்பாக நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளை களையப் போராடுவது தான் தேசியம். அதாவது குறைந்தபட்சம் தேசிய முதலாளித்துவத்தை நிறுவுவதற்காக போராடுவது தான் தேசியம். இதற்கு வெளியில் தேசியத்துக்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது.
இதையா புலிகள் செய்தார்கள்! இல்லையே. சிங்கள இன மேலாதிக்க ஒடுக்குமுறையையும், இதற்கு துணை நின்று இனத்தின் தேசியக் கூறுகளை அழிக்கும் ஏகாதிபத்தியத்தையும், எதிர்கொண்டு தேசியத்துக்காக போராடும் போதுதான், அது தேசியமாகும். நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளான சாதியம், ஆணாதிக்கம், குறுகிய பிரதேசவாதப் பிளவுகள், உற்பத்தி உறவுகள்.. என்று அனைத்தையும் சமூகத்தில் இருந்து களையமுனையாத தேசியம், என்றும் தேசியமேயல்ல.
புலிகள் இதையா செய்தார்கள்? இல்லை. இதை செய்யாத புலிகள், அதை இறுகிய ஒரு வடிவில் பாசிசம் மூலம் பாதுகாத்த புலிகள், ஒரு தேசிய விடுதலை இயக்கமல்ல. யமுனா ராஜேந்திரன் சாதியத்தைப் பாதுகாக்க, புலிகளை தேசிய இயக்கமாக காட்டி கட்டமைத்த விமர்சன அடிப்படையே, இப்படித் தலைகீழாகத் தகர்ந்து போகின்றது.
புலிகளின் வர்க்க அரசியல் என்பது, தேசியமல்ல. மாறாக தரகு முதலாளிகளுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்யும் வண்ணம் நிலப்பிரபுத்துவ சமூகக் கூறுகளுடன் சமரசம் செய்து கொண்டு, தேசியத்தையே மறுத்தவர்கள் தான் புலிகள். தேசியத்தை கோரியவர்களையும், அந்த அரசியலையும் புலிகள் படுகொலை செய்தே அழித்தனர். இதன் மூலம் இயல்பாகவே பாசிசத்தையும் மாபியாத்தனத்தையும் தம் நடைமுறை சார்ந்த ஒரு அரசியல் கொள்கையாக்கினர். இந்த அடிப்படையில் இருந்துதான், அனைத்து நடைமுறைகளும், சட்டங்களும் உருவாக்கபட்டது.
புலிகளின் சட்டங்களோ சடங்குத்தனமாவை. புலிகளின் திட்டத்தைப் போன்றது. புலியின் திட்டமோ "சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" என்கின்றது. நாளை யமுனா இதைக்காட்டி புலியை "மார்க்சிய" இயக்கம் என்றால், நாம் வாயைப் பிளந்து கேட்க வேண்டும் என்று நினைக்கின்றார்.
புலியை முற்போக்காக நியாயப்படுத்த புலியின் சட்டங்களைக் காட்டுகின்றார். "எண்பதுகளிலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரையிலும் சாதி-நிலம்-பெண்ணொடுக்குமுறை தொடர்பாக உள்ளுர் மத்தியஸ்த குழுக்களின் உதவியுடன் வழக்குகளைக் கவனித்து வந்த விடுதலைப் புலிகள், 1994 ஆம் ஆண்டு தமிழீழ தண்டனை வழிகாட்டு நெறிகளையும், குடிமைச் சமூக நெறிகளையும் உருவாக்குகிறார்கள். சட்டரீதியாக விடுதலைப் புலிகள் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை குற்றச்சட்டத்தின் கீழ் கொண்டு வருகிறார்கள்" இதன் மூலம், புலிகள் சாதி பார்ப்பதில்லை என்று, எமக்கு நிறுவிக் காட்ட முனைகின்றார் யமுனா.
இதையொத்த புலிகளின் திட்டம் "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும் ஆட்சியாக அமையும்" என்றவர்கள் தான் புலிகள். மேலும் அதில் "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல்முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் விட்டார்களா இல்லை, "தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்சசொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" என்றார்கள். ஆனால் உண்மையில் இதை கோரியவர்களை துரோகி என்றவர்கள் புலிகள். ஏன் படுகொலை செய்தனர். இப்படி புலிகளின் சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் மக்களை ஏமாற்றி பிழைக்க போடப்பட்டவைதான். அதைத்தான் யமுனா, இன்று தூக்கிக்காட்டி முற்போக்கு என்கின்றார்.
இவரைப்போல் புலியின் வலது பாசிசத்தை நியாயப்படுத்த பாலசிங்கம் 'தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மாக்சிய-லெனினிச சிந்தனையின் அடிப்படையில் பாலசிங்கம் நியாயப்படுத்தினார்." என்று, அவரின் மனைவி அடல் பாலசிங்கம் தெளிவாகவே குறிப்பிடுகின்றார். புலித் திட்டங்கள், சட்டங்கள் உண்மையானவையல்ல என்று, பாலசிங்கம் சுயவாக்கு மூலம் அளிப்பதைப் பாருங்கள். எம்.ஜி.ஆர் பற்றி எழுதிய போது "நீங்கள் ஏழைகளின் துயர்துடைக்கத் தொண்டாற்றவில்லையா? நீங்கள் சினிமா உலகில் சாதித்ததை விடுதலைப் புலிகள் நிஜவுலகில் சாதிக்கிறார்கள். உங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான்?.. உங்களையும் பிரபாகரனையும் சமூகப் புரட்சிவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும்" என்றார்.
இப்படி எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்துக் காட்டி, மக்களை வாழ்வில் ஏமாற்றினார். நாங்கள் போராட்டத்தில் நடித்து, நடைமுறையில் ஏமாற்றுகின்றோம் என்கின்றார். இப்படித்தான் புலிகள் காலகாலமாக மக்களை ஏமாற்றினர். அதை தூக்கிவைத்து, யமுனா அதோ பார் நட்சத்திரம் என்று கூறி, குழந்தைக்கு உணவூட்ட முனைகின்றார். இப்படி எழுதினால் அவருக்கு பணம் கிடைக்கும். எழுத்துக்கு பணம் வாங்கி எழுதுபவராச்சே. ஒரு கொள்கைக்காக எழுதுபவரல்ல அவர். புலிகளின் சட்டங்கள், திட்டங்கள் இது எப்படியிருந்தாலும், அது எழுதி ஏமாற்றுபவர்களுக்கு மட்டும் உதவும். நடைமுறையில் உள்ளவர்களுக்கு அல்ல.
புலம்பல்-3
புலிகள் சாதி மறுப்பு இயக்கமாம்!
புலி தனக்குள் சாதியைக் கடைபிடிக்கவில்லை என்றால், அது "முற்போக்கு" இயக்கமாம். பொது விடுதிகளில் அல்லது பொது இடங்களில் சாதி பார்க்காமல் பழகினால், அவர்கள் முற்போக்கானவர்கள். பிரதமராக இருந்த வாஜ்பேயும், ஜனாதிபதியாக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணனும்; ஒன்றாக கூடி இந்துத்துவ சாதிய ஆட்சியை தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் ஏவிய போது கூட, அவர்கள் தமக்குள் என்றும் சாதி பார்க்கவில்லை.
ஊர் சொத்தை கொள்ளையடித்து ஒன்றாக விருந்துண்டு கூட மகிழ்ந்தனர். தமக்குள் அவர்கள் சாதி பார்க்காமல் ஆட்சியை கடைப்பிடித்தால், அவர்கள் முற்போக்கானவர்கள். இதைத்தான் யமுனாவின் புலி "மார்க்சியம்" புதிதாக இன்று கண்டுபிடித்துள்ளது.
இப்படித்தான் யமுனா, வரலாற்றுக் கதை சொல்ல முனைகின்றார். புலிகள் தேசியத்துக்காக போராடியதாக யமுனா ராஜேந்திரன் திரிப்பதன் மூலம், தேசியமல்லாத புலி பாசிச மாபியாவின் வரலாற்றை தனக்கேற்ப திரிக்கின்றார். இதற்கமைய புலிகள் கட்டமைப்பு மற்றும் அதன் சட்டங்கள் திட்டங்களை துணைக்கு அழைக்கின்றார்.
புலிகள் தேசியத்தை முன்னெடுத்து நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராகப் போராடி இருந்தால், இயல்பாகவே சாதியத்தை ஒழித்துக் கட்டப் போராடியிருப்பார்கள். சாதிய இந்து மதத்தை கருவறுக்க போராடியிருப்பார்கள். புலிகளின் திட்டம்; கூறியது போல் "சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி" இருப்பார்கள். மாறாக புலிகள் தேசியத்தை முன்னனெடுக்காமல், அதை கருவறுத்தனர். அதேநேரம் சிங்கள பேரினவாத தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சியை, தம் தலைமையில் பிரித்துத் தரக் கோரினர். அதாவது தமிழ் குறுந்தேசிய தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சியை தம்மிடம் தரக்கோரினர். இதற்கு ஏற்ப உருவாக்கிய சட்டத்தை யமுனா முற்போக்கானதாக எமக்கு காட்ட முனைகின்றார்.
இலங்கையில் இருந்த சட்டதிட்டங்கள் எப்படி சாதியத்தை ஒட்டிய ஒரு சட்டநெறிகளை கொண்டு இருந்ததோ, அதை ஓத்த ஒரு சட்டநெறியை தான் புலிகள் மறுபிரகடனம் செய்தனர். எந்த சமூக மாற்றத்தையும், தங்கள் நடைமுறையில் இருந்து முன்வைத்து, இதற்கமைய புதிய சட்டநெறியை உருவாக்கவில்லை. இலங்கை சட்ட திட்டத்தில், சாதியம் பற்றிய சட்ட நெறிகள் சாதிக்கு எதிராக உண்டு. அதையே புலிகள் தங்கள் சாதிய சட்ட நெறிகளாக, மறுபடியும் பயன்படுத்தினர்.
யாழ்குடாவில் 1960 முதல் 1970 வரை நடைபெற்ற சாதியப் போராட்டத்தில், புரட்சிகர மார்க்சியவாதிகள் ஏற்படுத்திய தாக்கம் சமூக ரீதியானது. இதை முறியடிக்க போலி இடதுசாரிகளின் இலங்கை பாராளுமன்றம் மூலம், பல புதிய சாதிய சட்டநெறிகளை உருவாக்கினர். இந்த வகையில் 1970 களில் ஏற்படுத்திய சாதிய சட்ட மாற்றங்கள், புலிகளின் சட்ட நெறிகளை விட முன்னேறியதாகவும் முற்போக்கானதாகவும் இருந்தது.
புலிகளின் சாதிய சட்டதிட்டம் என்ன? தேசியம் மூலமான சாதி ஒழிப்பை அது முற்றாக மறுத்தது. சாதிய ஒழிப்பைக் கோருவதை குற்றமாக்கியது. சாதி ஒழிப்பிற்கான இடதுசாரிய போராட்டத்தை, தங்கள் சாதிய பாசிச சட்டங்கள் மூலம் மறுத்தனர். இவர்கள் தங்கள் சட்டத்துக்கு வெளியில், சாதிய போராட்டங்களை முன்னெடுத்தவர்களை சட்டத்துக்கு புறம்பாகவே படுகொலை செய்தனர்.
சாதியத்துக்கு எதிரான இடதுசாரிய போராட்டத்தின் தொடர்ச்சியை மறுத்துடன், தேசியத்தின் உட்கூறான சாதிய ஒழிப்பையும் மறுத்தனர். அவர்கள் செய்தது, இலங்கை மற்றும் இந்தியா அரசு செய்ததைத்தான். அதாவது சாதியத்தையும், அதன் பொது சமூக சாதிய ஒடுக்குமுறையையும் இயல்பான ஒரு சமூக ஒழுங்காக பேணக்கோரினர். அதை குழப்புவதை மறுத்தனர். புலிகள் தங்கள் பாசிசத்துக்கு ஏற்ப, இதை மீளக்கட்டமைத்தனர்.
1960 களில் எழுந்த சாதிப் போராட்டம் சில வெற்றிகள் மூலம் 1970 களில் ஒய்வுக்கு வந்த போது, அதை 30 வருடத்துக்கு மீள எழுந்துவிடாத வண்ணம் தடுத்தனர். 1980 களில் தேசியத்துடன் மீள எழுந்த சாதியப் போராட்டங்களை, தங்கள் துப்பாக்கிகள் மூலம் ஒடுக்கினர். நூற்றுக்கணக்கில் சாதிய போராட்டத்தை முன்னெடுத்த முன்னணியாளர்களை குறிவைத்துக் கொன்றனர்.
இதன் மூலம் சாதிய சமூக ஒழுங்கில் சாதியத்தை தொடர்ந்து பேணுவதை மறுப்பது, புலி பாசிசச் சட்டத்தின்முன் குற்றமாகியது. தன் சாதிய ஒடுக்குமுறையை மூடிமறைக்க, சாதிய போராட்டம் தேசியத்தை குழப்புவதாக காட்டி திரித்தது. உதாரணமாக சாதியத்தின் வாழ்வை மறுப்பதை, இந்தியாவில் பொது அமைதிக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும், கேடுவிளைவிப்பதாக கூறி இந்திய அரசு அதை ஒடுக்குகின்றது. இப்படி சாதியத்தை பொது சமூக ஒழுங்கில் பேண மறுப்பதை, நாசுக்காகவே தண்டிக்கின்றது.
இந்தியாவில் இயல்பான சாதிய ஒழுங்கை நிலைநாட்ட மாமா வேலை பார்க்கும் அரசு இயந்திரமும் பொலிசும், எதை எப்படிச் செய்கின்றதோ அதைத்தான் இலங்கையில் அரசும் புலிகளும் செய்தனர். இங்கு புலிக்கு யமுனா மாமாவாகி, அதற்கு முற்போக்கு தேசியத்தை ஒட்டி விடுகின்றார். இப்படி ஒடுக்கி போராடுவதுதான் தேசியம் என்று, இதன் மூலம் கூறிவிடுகின்றார். தேசியத்தில் சாதி ஒழிப்பு கிடையாது என்று , புலிக்கேற்ற அவரின் "மார்க்சிய" அளவுகோல் மூலம் அறைந்து சொல்லிவிடுகின்றார்.
புலம்பல்-4
யமுனாவின் புலித் "தேசியமோ" சாதியை சமூகத்தில் ஒழிக்கத் தேவையில்லை என்கின்றது, புலிகள் தாம் கடைப்பிடித்தால் சரி என்கின்றது
இப்படி தனக்கேற்ற ஒரு "மார்க்சிய" கோட்பாட்டை யமுனா உருவாக்கி, அதைக்கொண்டு புலியைச் சாதி பார்க்காத ஒரு இயக்கமாக காட்டிவிட முனைகின்றார். சமூகத்தின் நலனை முதன்மைப்படுத்தி எழுதாது, பணத்துக்கு எழுதுபவர்கள் இவர்கள். சமூகத்தில் இருந்து அன்னியமான தனிமனிதனையோ குழுவையோ, சமூகத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க முடிவதில்லை.
இப்படி சமூகத்துக்கு வெளியில் தனிமனிதனையும், குழுவையும் முதன்மைப்படுத்தி, தம் வசதிக்கு ஏற்ப அதை சமூகத்துக்கு பொருத்தி விடுகின்றனர். இதற்கு யமுனா புலிகள் ஊடாக அவர் தனக்கேற்ப எடுத்துக்கொண்ட கருதுகோள் 1. கரையார் அதிகாரம். 2. புலிகள் தங்கள் திருமணங்களில் சாதியம் பார்ப்பதில்லை.
இப்படி இதைக் கொண்டு 30 வருட புலிப்பாசிச சாதிய வரலாற்றையே திரித்துக் காட்டிவிட முனைகின்றார். இப்படி வேடிக்கையானதும் லூசுத்தனமானதுமான வாதங்கள் மூலம், புலியை நியாயப்படுத்தும் தர்க்கங்களோ அபத்தமானவை.
புலிகள் தங்கள் திருமணங்களில் சாதி பார்ப்பதில்லை என்ற இந்த உண்மை என்பது, சாதிய சமூகத்துக்கு சார்பானது. அதாவது சமூகத்தில் இருந்து அன்னியமான குழுவின், நடத்தை நெறிகள் இவை. சமூகத்தின் பொது நடத்தை நெறிகள் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சமூகத்தில் இருந்து அன்னியமான ஒரு அராஜகவாத குழுவின் நடத்தைகளை முன்னிறுத்தி, சமூகத்தின் பொது சாதிய நடத்தையை மறுப்பதன் மூலம், இதை தேசிய விடுதலைப் போராட்டம் என்பது சுத்தமான சுத்துமாத்தாகும்.
இப்படி சாதி கடந்து திருமணம் செய்பவன் தன்சொந்த சமூகத்தில் (உற்றார், உறவினர் மத்தியில்) வாழ்ந்து அதை முகம் கொடுப்பதில்லை. அதாவது நடைமுறையில் சாதி அமைப்பில் இதை எதிர் கொள்ளவதில்லை. இதுபோல் தான் தங்களை "மார்க்சியவாதிகள்" என்று கூறிக்கொள்ளும் சிலர், எதார்த்த சமூகம் மீது நடைமுறையில் எதிர்வினையாற்றுவதில்லை. இப்படிப்பட்டவர்கள தான்;, சமூகத்தை காயடித்து காட்ட முனைகின்றனர்.
புலிகள் மக்கள் இயக்கமல்ல. மக்கள் இயக்கமில்லை என்றால் சாராம்சத்தில் சாதிய இயக்கம். இப்படி சமூகத்தில் இருந்து அன்னியமான, அராஜகவாத லும்பன்களை அடிப்படையாக கொண்டது. இதன் சித்தாந்தம் வலது பாசிசமாகி, சமூக அரசியலற்ற மாபியாக் கும்பல். இப்படி சமூகத்தில் இருந்து அன்னியமான, இந்த உதிரிகள் மத்தியில் தான், சாதியம் கடந்த திருமணங்கள், விதவைத் திருமணங்கள் இயல்பானவையாக இருக்கின்றது. புலிகள் மத்தியில் மட்டுமல்ல, எல்லா லும்பன் தனமான வாழ்விலும் இதை நாம் காணமுடியும். அராஜகவாதம் எங்கும், இது நிறைந்தது. இது புலிக்குள் மட்டும் இருப்பதில்லை. அராஜகவாதத்தின் அடிப்படையான கோட்பாடுமாகும். இவர்கள் சமூகத்தில் இருந்தும் விலகி வாழ்பவர்கள் என்பதால், சமூகத்தின் வாழ்வியல் முறைகள் இங்கு இருப்பதில்லை. இப்படிப்பட்டது தான் புலிகள் இயக்கம். இந்த லும்பன்தனமான அராஜக வாழ்வுமுறையை எடுத்து, அதை மொத்த சமூகத்தினதும் தேசியமாக காட்டி, சமூகத்தை புணர நினைக்கும் யமுனாவின் அரசியல் கேடுகெட்ட பிழைப்புவாதிகளின் ஈனச்செயலாகும்.
இப்படிப்பட்ட அராஜகவாத லும்பன்கள், சமூகத்துடன் சேர்ந்து சமூகத்துடன் போராடி சாதி மறுப்பு கொள்கையுடன் சமூகத்தில் வாழ்வதில்லை. மாறாக தமக்குள் தாம் வாழ்கின்றனர். எப்படி இவர்களுக்கு உழைப்பு அன்னியமானதோ, அப்படித்தான் சாதியமும். சமூகத்துக்கு வெளியில் அராஜகத்தை வாழ்வியல் அடிப்படையாக கொண்ட ஆண் மற்றும் பெண், தங்கள் பாலியல் தேவையின் அடிப்படையில் சேர்ந்து வாழ்வதற்கு இவர்களுக்கு சாதியம் தடையாக இருப்பதில்லை. சமூகம் ஒடுக்கப்பட்டு இருக்கும் போது, இதை இவர்களே முன்னின்று செய்யும் போது, இங்கு எந்த சமூக தடையும் இவர்களுக்கு கிடையாது.
ஆனால் இவர்கள் தங்கள் அதிகாரத்தின் கீழான சமூகத்தில், சமூக ரீதியாக மீறப்படுவதை மறுப்பதுடன் அதை முன்னின்று ஒடுக்கினர். உதிரித்தனமான மீறல்கள் மேல், தமது சார்பு தன்மையில் நின்றே அதைக் கையாண்டனர். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சமூக மீறலை ஒடுக்கியும், உதிரித்தனமான மீறலையும் தமது குறுகிய சொந்த நலனுக்கு ஏற்பவும் குறுகிய தளத்தில் கையாண்டனர். உதாரணமான புலிக்கு பணத்தை கொடுத்தவன் உயர் சாதியாக இருந்து, அவரின் மகள் அல்லது மகன் தாழ்ந்த சாதியில் காதலித்தால் அதை புலியைக் கொண்டு தடுத்து நிறுத்தினர். தாழ்ந்த சாதியாக இருந்து, உயர் சாதியில் காதலித்தால், அதைப் புலியைக்கொண்டு திருமணத்தையும் நடத்தினர்.
உதிரித்தனமானதை தங்கள் தேவைக்கு ஏற்ப கையாண்டனர். சாதிய சமூக மீறலை முற்றாக மறுத்தனர். இப்படி உயர் சாதிய சமூகத்தின் சமூக ஒழுங்கை தக்கவைப்பதன் மூலமே, புலிகள் சமூகத்தின் மேலான தங்கள் அதிகாரத்தை நிறுவினர். இப்படி சமூகம் சாதி சமூகமாக இருந்தது. இதை மீறுவதை மறுத்தவர்கள் தான், தமது அராஜகத்துக்கு அமைவாக இதை தமக்கு அவசியமற்றதாக்கினர்.
புலிகள் தமக்குள், சாதிக்கு எதிரான ஒரு அரசியல் பிரச்சாரத்தைக் கூட முன்னெடுக்கவில்லை. சமூகத்தில் இருந்து அன்னியமானவர்களின் பாலியல் தேவை இதை இணைத்தது. இங்கு சாதி மற்றும் விதவைத்தனத்தைக் கூட பிரித்து பார்க்கும் நிலையில், அவர்களின் தேவை சமூகத்துடன் உறவாடி இருக்கவில்லை. அடுத்து புலிகள் இயக்கம் உயிர் வாழ்வை விட, மரணத்தையே தன் உறுப்பினருக்கு வாழ்வாக வழிகாட்டியது. இதனால் எதிர்கால வாழ்வு மீதான நம்பிக்கையற்றவர்கள், தங்கள் தேவைகள் மீது சமூகத்தின் கட்டுக்கோப்பை ஒட்டிய வாழ்வை இயல்பாக அவசியமற்றதாக்கியது. அவர்களின் மரணமும், தேவையும், சமூகத்தில் இருந்து அன்னியமான அராஜகத்தின் எல்லையில் நின்று வழிகாட்டியது.
இதில் இருந்து மரணம் தமக்கல்ல என்ற நிலை, புலித்தலைமைக்கு உருவாகியது. இவர்கள் தாங்கள் குடும்பமாகி, குடும்ப உறவுகளை பேணத்தொடங்கிய போது, சாதியம் மீளவும் இவர்கள் முன் மையமான விடையமாகியது. சாதியத்தை தம் குடும்ப உறவில் பாதுகாப்பதில், குறிப்பாக முனைப்பாக இருந்தனர்.
இதற்கு வெளியில் புலிகளைச் சுற்றி புலிகளின் தூணாக நின்று பிழைத்த கூட்டமோ, சாதியக் கட்டமைபின் பின் நின்று அதை மிக வக்கிரமாக கடைப்பிடித்த கும்பலாகும். அவர்களின் சாதிய சமூக தேவைகளை, புலிகள் நிபந்தனையின்றி பூர்த்திசெய்தனர். அவர்கள் கொண்டிருந்த சாதி சமூக கட்டமைப்பை ஒட்டிய, அவர்களின் சாதிய வாழ்வை பாதுகாத்தனர்.
யமுனா கூறுகின்றார் "அது சர்வாதிகார அமைப்பே ஆயினும் - அது சாதிய அமைப்பு என்று சொல்வதற்கான எந்தவிதமான சான்றுகளும் இல்லை" என்கின்றார் யமுனா. ஒரு மூடன் தன் பிழைப்புக்கு ஏற்பத்தான், இப்படிக் கூறமுடியும்.
சரி எதன் மீது சர்வாதிகாரத்தை நிறுவினர்? எதன் மீது வன்முறையைக் கையாண்டனர்? சமூகத்தில் நிலவும் வர்க்க ரீதியான சமூக ஒழுங்கையும், அதனடிப்படையிலான சமூக ஒடுக்குமுறையையும், மாற்றமின்றி தக்கவைப்பதற்கே அதன் மேல் சர்வாதிகாரத்தை நிறுவினர். தமிழ் தேசியம் கோரிய மாற்றத்தை மறுத்து, அதை மாற்றமற்றதாக தக்கவைக்கவே சர்வாதிகாரம் புலிக்கு அவசியமாகியது. அதையும் பாசிச சர்வாதிகாரமாகத்தான் அவர்களால் நிறுவமுடிந்தது. சமூகத்தின் மாற்றத்தை மறுத்துதான், புலியின் சர்வாதிகாரம் உருவானது.
இங்கு வர்க்க மற்றும் சமூக ஒடுக்குமுறை ஒழுங்கை மீறி, சர்வாதிகாரம் செயல்படவில்லை. நிலவிய சமூக அமைப்போ சாதி அமைப்புதான். இதைப் பாதுகாக்கவே, புலிகளின் சர்வாதிகாரம் உருவானது.
புலிகளின் "மதியுரைஞர்" பாலசிங்கம் கூறுவதை இங்கு பார்ப்போம். "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காகத் தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்று போற்றப்படுபவர் பிரபாகரன். பிரபாகரனுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தவன், இணைந்து தொழிற்பட்டவன் என்ற வகையில் அவரின் எண்ணத்திலோ, செயலிலோ பிரதேசவாதத்திற்கான சாயலைக்கூட நான் கண்டதில்லை. புலிகளின் தலைமைத்துவத்தின் மீது கருணா சுமத்தும் பிரதேசவாதக் குற்றச்சாட்டு இல்லாததொன்று, அபாண்டமானது" என்றார். இதையேதான் இங்கு ஜமுனாவும் வைக்கின்றார். இங்கு யமுனாவா, பாலசிங்கமா புலியின் "மதியுரைஞர்" என்ற கேள்வி எம்முன் எழும்.
புலிகள் தங்கள் பாசிச சர்வாதிகாரம் மூலம், சமூக முரண்பாடுகளை அடக்கியொடுக்கி, அதை பேணி வாழும்படி மக்களைக் கோரினர். தம் சர்வாதிகாரம் மூலம், சமூக முரண்பாடுகளை உறையவைத்தனர். இதற்காகத்தான் சர்வாதிகாரம் அவர்களுக்கு தேவைப்பட்டது.
இதில் உள்ள முரண் என்னவென்றால் பிரதேசவாதம், சாதியம், வர்க்கப் பிளவுகள் சமூகத்தில் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதாகும். சமூகத்தில் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகள் உள்ளது என்றால், அந்த சமூகத்தால் பிரபாகரன் முதல் புலிகள் வரை போற்றப்படுகின்றார் என்றால், அந்த இயக்கம் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை பாதுகாப்பதை தன் கொள்கையாக கொண்டதேயாகும். இதுதான் எதார்த்த உண்மை. தனிப்பட்ட பிரபாகரன் அல்லது புலிகள் என்ன நினைக்கின்றார் என்பதல்ல. பாலசிங்கம் கூறுவது போல் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட" போராட்டம் என்பது, இவற்றைக் களையாது இதன் மேல் புலித் "தேசியம்" கட்டமைக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றது. அதாவது இவற்றை அடிப்படையாகக் கொண்ட தேசிய இயக்கம் என்பது, பிரதேச, சாதிய, ஆணாதிக்க, வர்க்க அடிப்படையைக் கொண்டது. இது மக்களுக்கு எதிரானது. அதாவது இது தேசியமேயல்ல. இதுதான் காலம்காலமாக யாழ் மையவாதத்தால் கட்டிப் பாதுகாக்கப்படுகின்றது. இது வெறும் பிரபாகரன் என்ற தனிநபர் சார்ந்த பிரச்சனையல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. இதன் பிரதிநிதியாக புலிகள் இருந்து உள்ளனர்.
புலம்பல்-5
புலிக்கு "கரையார்" தலைமை தாங்கியதால்,
அது சாதியற்ற தேசியமாம்
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மறுப்பவர்கள், சமூகத்தின் சமூகக் கூறுகளை பிரித்து அதை மோதவிட்டே கையாள்வார்கள். இங்கு யமுனா புலி அரசியலை தேசிய விடுதலைக்குரிய வழிகாட்டும் தத்துவமாக காட்ட, "கரையார்" தலைமை பற்றி கூறி, வெள்ளாளர் தலைமையை வேர் அறுத்தது பற்றியும் கதை விடுகின்றார். வேறு எப்படித்தான் வரலாற்றை இவரால் திரிக்க முடியும்.
எப்போதும் சம்பந்தமில்லாது புலம்பி புளுத்தெழுதும் யமுனா, இங்கும் அதையே செய்கின்றார். புலியை நியாயப்படுத்த ஸ்ராலின் வரை சென்று, புலியை போற்ற ஸ்ராலின் மீது காறி உமிழும் இந்தப் பன்னாடை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தன் சொந்த அரசியல் காழ்ப்பை அள்ளித்தெளித்துள்ளது.
இதற்கு 'கரையார்' தலைமை பற்றி கூறி, புலிப் பாசிசத்தை வெள்ளையாக வெளுத்து அதை தமிழ்மக்களுக்கு கட்டவைக்க முனைகின்றார். அப்படி யமுனா புலம்பலைப் பாருங்கள். "ஏற்கனவே தலைமை யாழ் வெள்ளாளர்களிடமிருந்து இடைநிலைச் சாதியினரான கரையார்களிடம் வந்துவிட்டது." என்கின்றார். சரி இன்று புலிகள் அழிந்து விட்டதால், தலைமை வெள்ளாளரிடம் சென்றுவிட்டது என்று இனி சொல்வாரோ! பிரபாகரனின் அழிவுக்கு வெள்ளாளர்களின் சதிதான் காரணம் என்று, இந்தப் பன்னாடை நாளை ஆய்வு செய்தாலும் ஆச்சரியமில்லை. பணம் கொடுத்தால் அதையும் எழுதுவார்.
சரி தலைமை பிறப்பு ரீதியான பிறந்த "கரையாரிடம்" வந்தால், சாதிய சமூக அடிப்படை மாறிவிடுமா? சாதி ரீதியாக பின்தங்கிய ஒருவர், நாட்டை ஆண்டால் நாடு மாறிவிடுமா? இப்படி கூறியும், காட்டியும் பேசும் "மார்க்சியம்" தான் யமுனாவுடையது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் எழுதியதால், அது சாதிச் சட்டமல்ல என்பதா? சாதிச் சட்டமல்ல என்பதுதான், புலி தலைமையில் "கரையார்" என்ற யமுனாவின் வாதம் எடுத்துக்காட்டுகின்றது.
ஈ.பி.ஆர்..எவ் இயக்கம் பிறப்பால் வெள்ளாளரின் தலைமையில் இருந்த போதும், தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் வேலைசெய்தது. இந்த இயக்கத்தை சுருக்கி ஈ.பி என்று அழைத்து, ஈழத்துப் பள்ளர் என்று 1980 களில் புலி அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ததை நாம் இங்கு மறக்கமுடியாது.
"கரையார்" தலைமை என்பது, பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஒன்று. இது எந்தவிதத்திலும் சாதிய சமூக அமைப்பை மாற்றவில்லை. புலி பாசிசமாகி, அதன் தனித் தலைவராக பிரபாகரன் மாறிய பின், தன் குடும்பத்தையும் உறவுகளையும் மட்டும் நம்பும் நிலை உருவானது. தன் சொந்த பந்தங்களையும், ஊராரையும் தலைமையில் அமர்த்தியது என்பது, வெள்ளாளர் தலைமைக்கு எதிராக அல்ல. தனது தனித் தலைமையையும், சர்வாதிகாரத்தையும் பாதுகாக்க, வேறு வழியிருக்கவில்லை. இப்படி தான் கணிசமான "கரையார்" தலைமைக்கு வந்தனர், பிறப்பால் மட்டும் தான் அவர்கள் கரையார், ஆனால் யாழ் மேலாதிக்க சாதிய சமூகத்துக்கு அவர்கள் தலைமை தாங்கினர்.
யமுனா கூறும் "1980 ஆம் ஆண்டு துவக்கம் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை தடைசெய்திருந்த காரணத்தினால் சாதி தொடர்பான எந்த விவாதங்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை." என்பதும், வெள்ளாளருக்கு பதில் "கரையார்" தலைமை என்பது முரணானது. புலிகள் தலைமையை கரையாரிடம் கொடுக்கவேண்டும் என்று, எந்த அரசியல் முனைப்பு கொண்டது. கிடையாது. வெள்ளாளர் சாதியிடமிருந்து கரையாரிடம் அதிகாரத்தை கைமாற்றியதாக கூறுவது, வடிகட்டிய அரசியல் அபத்தம். யமுனா தான் நியாயப்படுத்தும் சாதியற்ற புலிக்கு, தன் பிழைப்புக்கு ஏற்ப இதை புனைவதாகும். அதிகாரம் என்பது யார், எந்த நபர், எந்த சாதி என்று பிறப்பின் அடிப்படையில் காட்டி அணுகுவது, சமூக ஆய்வுக்குரிய முறையேயல்ல. இது பிழைப்புவாத மற்றும் பணத்துக்கு நக்கி எழுதும் வகையறாக்களின் குறுகிய வக்கிரமான அணுகுமுறை. பொதுவாக மக்களுக்கு இலக்கியம் பேசாத இலக்கியவாதிகளின், குறுகிய இருப்பு சார்ந்த தர்க்கங்களும், வாதங்களும் தான்.
பிரபாகரன் சரி, கணிசமாக தலைமையில் இருந்த கரையார் சரி, பிறப்பால் மட்டும் கரையார். ஆனால் இவர்கள் நிலவிய யாழ் மேலாதிக்க சாதிய சமூகத்தின் மேல்தான், தங்கள் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவினர். இங்கு சாதிய மேலாண்மையிலான சாதிய சமூக ஒழுங்கை, இவர்கள் பாதுகாத்தனர். இங்கு கரையார் என்ற சாதி மேலாண்மையை அவர்கள் நிலை நாட்டவில்லை.
இங்கு கரையார் என்பவர்கள் கூட, பல பிரிவு கொண்ட பல படிநிலை சாதியாகவே பிரிந்திருந்தனர். இங்கு பிரபாகரன் சாதி கூட, உயர் சாதியாகவே இருந்தது. இங்கு அடிநிலை சாதிகள் பல இருந்தது. யாழில் வெள்ளாளர் – கரையார் இரண்டுமே, உயர் சாதியாகவே இருந்தது. இவ் இரண்டும் தமக்குள், அதாவது தமது சாதிய சமூகம் என்ற முரண்பாட்டுடன் இயங்கவில்லை. ஏனெனின் உற்பத்தி உறவில் ஒன்றுடன் ஒன்று இவை தொடர்புபடாமையால், அவர்களுக்கு இடையில் சாதிய முரண்பாடு இருக்கவில்லை. அவர்கள் தாம் கொண்டிருந்த உற்பத்திக்குள், அவர்கள் அடிநிலைச் சாதிகளை கொண்டு இருந்ததால், தம்மளவில் அவை உயர் சாதியாகவே இருந்தது. இங்கு இது பரஸ்பரம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. பொருளாதார ரீதியில் கூட, இது பரஸ்பரம் அங்கீகரிக்கப்பட்டு காணப்பட்டது.
இப்படியிருக்க யமுனா சமூகத்தை திரித்து புரட்டிக் காட்டுகின்றார். "ஏற்கனவே தலைமை யாழ் வெள்ளாளர்களிடமிருந்து இடைநிலைச் சாதியினரான கரையார்களிடம் வந்துவிட்டது." என்கின்றார். இப்படி அங்கு சமூக மாற்றம் எதுவும் நடக்கவில்லை. அங்கு நிலவிய சாதிய சமூக அமைப்பு முறை பாதுகாக்கப்பட்டதால், சாதி ரீதியான நபரின் தலைமை எதையும் மாற்றிவிடுவதில்லை. தனிப்பட்ட தலைமை சாதிய சமூக அமைப்பில் மாற்றத்தை கொண்டு வராதவரை, அது யாராக இருந்தாலும் அவரின் சாதி ஊடாக தனிநபர்களை சமூகம் அணுகுவது கிடையாது. சமூகம் தன் சாதி சமூக ஒழுங்கின் ஊடாகத்தான் அணுகுகின்றது. பாலசிங்கம் கூறியது போல் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காகத் தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்று போற்றப்படுபவர் பிரபாகரன்" என்றார். இங்கு யாழ் சாதிய சமூகத்துக்குத்தான், பிரபாகரன் தலைமை தாங்கினார். இதற்கு யமுனா கூறியது போல் "தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை தடைசெய்திருந்த காரணத்தினால் சாதி தொடர்பான எந்த விவாதங்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை." இப்படி யாழ் சாதி சமூக மேலாதிக்கத்தை பிரபாகரன் தன் சர்வாதிகாரம் மூலம் திணித்தான். இந்த உண்மையை யமுனா போன்று பணத்துக்கு எழுதுபவர்கள் தான், சாதிய சமூகத்தின் இயங்கியலை திரித்துக் காட்டுகின்றனர்.
யமுனா கூறுகின்றார் "பிரக்ஞைபூர்வமாக விடுதலைப் புலிகள் சாதி காப்பாளர்கள், சாதி வெறியர்கள், இந்துத்துவவாதிகள் என்பதில் எந்தவிதமான உண்மையும் இல்லை" என்பது, நிலவும் யாழ் சாதிய சமூகத்தை தம் பாசிச சர்வாதிகாரம் மூலம் பாதுகாத்த உண்மையை, திரிப்பதாகும். இவர்கள் யாழ் மேலாதிக்க சாதிய சமூகத்தை பாதுகாத்து, அதன் சமூக விரோத கூறுகளையே கட்டிக்காத்தவர்கள் தான். இதனால் தான் இவர்கள், யாழ் மேலாதிக்க சமூகத்தினரது தலைவராக இருக்கவும் நீடிக்கவும் முடிந்தது.
சமூகத்தில் இருந்து அன்னியமான உதிரிகளை கொண்ட ஒரு அராஜகவாத அமைப்பு, தனக்குள் சமூதாய முறைமைகளை பின்பற்றவில்லை என்பதாலும்;, அதன் தலைவர்கள் பிறப்பால் மாறுபட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அது சமூகத்தை மாற்றிவிடுவதில்லை. அது சமூகத்திற்கு வெளியில், லும்பன் தனத்துடன் இயங்குகின்றது. சமூகத்தின் உற்பத்தி உறவுகள் முதல் அதன் பண்பாடுகளுடன் கூட, தொடர்பற்ற லும்பன் கூட்டமாகவே புலிகள் இயங்கினர். சமூகம் ஒருவிதமாக இயங்க, புலிகள் வேறு விதமாக இயங்கினர். இப்படி மக்களில் இருந்து அன்னியமாகினர். ஆனால் சமூகத்தின் சாதிய ஓழுங்கை மறுக்கவில்லை, மாற்றவில்லை. புலிகளின் அழிவும், இதற்கு உட்பட்டதுதான். சமூகத்தின் நேர் மற்றும் எதிர்மறை அம்சங்களில், புலிகள் முரண்பாடாகவே மக்களுடன் அணுகினர்.
புலிகள் எந்த சமூக முரண்பாடுகளையும் ஒழித்துக்கட்ட முனையவில்லை. அதை தங்கள் பாசிச சர்வாதிகாரம் மூலம் பாதுகாத்தனர். ஆனால் சமூகம், சமூக முரண்பாடுகளை களையக் கோரியது. புலிகள் அதை முறியடித்தனர். அதன் மேல் தான், தங்கள் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவினர்.
"சாதிய ஒதுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்கள் சாதிச்சார்பற்ற மதச்சார்பற்ற தன்மையினையே கொண்டிருந்தன. வரதட்சணை தடைசெய்யப்பட்டது. கருக்கலைப்பு பெண்ணின் உரிமை ஆகியது. பெண்ணுக்கு சொத்துரிமை நிலைநாட்டப்பட்டது. சாதி ஒதுக்குதல் குற்றமாக்கப்பட்டது." இது இலங்கை சட்டமைப்பில் கூட உள்ளதுதான். இந்தியாவில் கூட உள்ளதுதான். இ;ந்தியாவின் சாதிய சட்ட அமைப்பு, புலியின் சட்டத்தை விட முற்போக்கானது. சமூக புரட்சியற்ற சட்டங்கள், சமூகத்தில் சடங்குத்தனமானவை. ஏன், சமூகத்துடன் தொடர்பற்றது கூட. ஏன், ஆதிக்க சமூகப் பிரிவுக்கு சார்பானது கூட. சட்டம் என்பது சமூகப் புரட்சியின்றி, அவை வெறும் சடங்குத்தனமாகவே இயல்பில் உள்ளது. ஊழலுக்கு எதிரான சட்டங்கள் போல் தான் சாதி சட்டங்களும்.
"விடுதலைப் புலிகள் திரும்பத் திரும்பத் தமது தவற்றை, யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர் வெளியேற்றப்பட்ட தவற்றை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்." இந்த பாசிசப் புரட்டைதான், சிவத்தம்பி முதல் யமுனா வரை புலிக்காக காவித் திரிகின்றனர். தவறை ஏற்றுக்கொண்டது உண்மை என்றால், வடக்கு முஸ்லீம்கள் மீளவும் யாழ் சென்று வாழ எது தடையாக இருந்தது. இங்கும் மீண்டும் புலிகள் தான். அவர்கள் தங்கள் தவறை ஏற்றவர்கள் என்றால், அவர்கள் சொத்துகளை திருப்பிக் கொடுப்பது உட்பட, யாழ் மக்களிடம் அவர்கள் வாழ்விடத்தை விட்டு கொடுக்க வேண்டியிருப்பார்கள். அப்போது அங்கு பிடித்து வைத்திருந்த சிலருக்கு, என்ன நடந்தது என்பதையாவது சொல்லியிருப்பார்கள்.
அந்த மக்களிடம் திருடிய பணத்தில் இருந்து ஒரு பகுதியைப் பெற்றுதான், புலிக்காக யமுனா எழுதிக்கொண்டிருந்தவர். இவர்கள் தான், புலிகள் தவறை ஏற்றுக் கொண்டது பற்றி புலுடா விடுகின்றனர்.
புலிகள் தங்கள் தேனிலவுக்காக அமைதி சமாதானத்தை உருவாக்கிய காலத்தில், யாழ்குடாவில் நின்று போட்ட பாசிச ஆட்டத்துக்கு பதில், முஸ்லீம் மக்களை மீள் குடியேற்றியிருக்கலாம். இதைவிட்டுவிட்டு தவறு என்று ஒப்புக்கொள்வது, ஊர் உலகத்தை ஏமாற்றத்தான். புலிகள் எதைத் தான் வரலாற்றில் தவறாக ஏற்று, அதை திருத்தியிருக்கிறார்கள். நடைமுறையில் எதையுமல்ல. இதுதான் புலிகளின் பாசிச வரலாறு. இதற்கு ஏற்ப முக்குவது தான் யமுனாவின் வரலாறு.
பி.இரயாகரன்
நன்றி: தமிழரங்கம் http://www.tamilcircle.net/
0 விமர்சனங்கள்:
Post a Comment