புலிகள் பொது மக்களை இலக்கு வைத்தனர்! ஜனநாயக - மனித உரிமை விதிகளை திருப்திப்படுத்தவில்லை!! அதுவே அவர்களது முடிவுக்குக் காரணம்!!! - ஆர் சம்பந்தன்
”தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகங்களை மதிக்கின்றேன் ஆனால் அவர்கள் பொது மக்களை இலக்கு வைத்ததும் இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் ஜனநாயக - மனித உரிமை விதிகளை திருப்திப்படுத்தாததுமே அவர்களது இந்த முடிவுக்குக் காரணம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் லண்டனில் தெரிவித்தார். லண்டனுக்கு சற்று வெளியே கிங்ஸ்ரணில் அமைந்துள்ள தமிழர் தகவல் நடுவத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களும் அவர்கள் மீது கடுமையான விமர்சனம் உடையவர்களும் கலந்து கொண்ட சந்திப்பு ஓகஸ்ட் 21ல் இடம்பெற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுப் பற்றி சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அவற்றுக்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் ”எங்களுக்கு தனித்தவம் எதுவும் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு காலத்தில் வன்முறை வெடிக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் நாங்கள் வன்முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு பிரபாகரனை 30 வருடமாகத் தெரியும். நாங்கள் இந்தியாவில் இருக்கிற போது நான் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் எல்லோரும் இயக்கத் தலைவர்களைச் சந்தித்தோம். அவர்களுடைய கருத்தை அறிவதற்கு. நாங்கள் புலிகளுடன் சேர்ந்து இருந்தது குறிப்பிட்ட சூழலில். புலிகள் தடை நீக்கப்பட்டபின் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் சேர்ந்தோம். இன்றைக்கு நான் இங்கு சொன்ன விசயங்களை நான் கிளிநொச்சியில் புலிகளிடமும் சொல்லி இருக்கிறன். கிழக்கு மாகாணம் பறி போன உடன் என்னுடைய கருத்தை புலிகளுக்கு அறிவித்தனான். அவர்களும் பிழைகள் விட்டிருக்கிறார்கள். அதற்கு அரசும் காரணம்.” என்றும் அவர் தெரிவித்தார்.
1976ல் தமிழீழப் பிரகடனத்தை மேற்கொண்டு புலிகளின் தலைவர் வே பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்படும் வரை அந்த அரசியலுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டறக் கலந்து இருந்தது என்று தெரிவித்த லண்டன் குரல் ஆசிரியர், தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மோசமான இழப்புகளுக்கு இலங்கை அரசு மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்புடையது எனக் குற்றம்சாட்டினார்.
அதற்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் ”நான் வாக்குவாதத்திற்கு இங்கு வரவில்லை. இந்த யுத்தத்தை நிறுத்த இலங்கை அரசு எள்ளளவுகூடத் தயாராக இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளை முடிக்கும் வரை யுத்தத்தை நிப்பாட்டுவதில்லை என்பதே அவர்களுடைய நிலைப்பாடு. நாங்கள் மௌனமாக ஊமைகளாக இருக்கவில்லை. எங்களால் முடிந்தவரை செய்திருக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் சரிவராமல் போகவே தமிழீழத்தைக் கோரினோம். இன்று புதிய நிலைமைகள் தோன்றி உள்ளது. சர்வதேச ஆதரவுடன் அரசியல் தீர்வுக்கு முயற்சிக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி கவுன்சிலர் போல் சத்தியநேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆர் சம்பந்தன் ”தத்துவார்த்த ரீதியாக கதைத்துக் கொண்டிருக்க முடியாது, நடைமுறைச் சாத்தியமானது பற்றி கதைப்பதாக இருந்தால் இலங்கையில் அரசியல் தீர்வுக்கு இந்தியாவின் பாத்திரம் மிக முக்கியமானது” எனத் தெரிவித்தார். ”இந்தியா மட்டுமே எமக்கு உதவிக்கு வரமுடியும் வேறு எந்த நாடும் எமக்கு உதவிக்கு வர முடியாது’ எனவும் தெரிவித்தார்.
பிரித்தானிய தமிழ் போறம், உலகத் தமிழ் போறம், தமிழர் தகவல் நடுவத்துடன் வந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்படி கருத்து வெளியிட்ட ஆர் சம்பந்தன் ஆனால் தங்களுடைய கடமைப்பாடு முதன்மையானது வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களுக்கானது எனத் தெரிவித்தார்.
இரு மணிநேரம் நீடித்த கலந்தரையாடலில் ஆர் சம்பந்தனது அரசியல் தலைமைத்துவம் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அதனை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தும் நிலையில் அவரது பேச்சுக்கள் இருக்கவில்லை. தமிழ் அரசியலுக்கு தலைமையேற்ற அவருடைய அரசியல் வாழ்வில் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்னமும் மேடையில் அறைந்து தனது அதே 30 வருட அரசியலைத் தொடர்கிறார் ஆர் சம்பந்தன்.
0 விமர்சனங்கள்:
Post a Comment