தடைக்கல்லாக மாறுகின்றதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? !
கடந்த செப்ரம்பர் 7-ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த விடயமானது புலம் பெயர் தேசத்துத் தமிழர்கள் இதுவரை நடாத்திவந்த தொடர் போராட்டத் தியாகம் வீணாகிப் போய்விடுமோ என்று அச்சங்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது:-
தமிழீழ மக்களின் பிரதிநிதிகளாக இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்று அறிய முடியாமலேயே உள்ளது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிக் கணம்வரை நேர் வழியில் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தப்புத்தாளங்கள் போடுவதற்குத் தயாராகி விட்டனர் போலவே தோன்றுகின்றது.
ஏற்கனவே கட்டிலிருந்து விடுபட்ட காளை போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிஷோர் துள்ளிக் குதித்து மகிந்தவின் மடியில் விழுவதற்கு முயற்சித்தாலும் யாழ். மாநகரசபை வவுனியா நகரசபை முடிவுகள் அவருக்குக் கடிவாளமிட்டு நிறுத்தியுள்ளன.
அது மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகள் முற்றாகச் செயலிழந்து விடவில்லை என்ற இலங்கை அரசின் அறிவித்தலும் அவரை அடக்கி வைத்துள்ளது. அவர் மட்டுமல்ல இன்னும் சில கூட்டமைப்பு உறுப்பினர்கள் மகிந்த சகோதரர்களின் ஆசைக் கடலில் குளிக்க விரும்பினாலும் அச்சம் நீங்காத நிலையில் அட்கிப் போய் உள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரனும் ஜெயானந்தமூர்த்தியும் கிட்டத்தட்ட வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் நிலைக்கு வந்துவிட்டார்கள். சிவாஜிலிங்கம் மீண்டும் கொழும்பு செல்லவது சாத்தியமாகும் என்று நினைக்கவில்லை.
இறுதி யுத்தம்வரை தன்னைத் தேர்ந்தெடுத்த தமிழ் மக்களுடன் இருந்த காரணத்தால் யுத்தம் நடந்த காலப்பகுதியின் உண்மைகள் வெளியே வராதபடி நாடாளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினம் சிங்கள அரசால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இத்தனை குழப்பங்களுக்கும் மத்தியில் கடந்த செப்ரம்பர் 7-ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ஈழத் தமிழர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்துள்ளார்கள். இந்திய அழுத்தம் காரணமாக இந்தச் சந்திப்பு நடந்தாலும் இதன் விழைவுகள் தமிழீழ மக்களின் அரசியல் நகர்வினை முன் நகர்த்த ஒரு போதும் சாத்தியமாக்கப் போவதில்லை.
புலம்பெயர் தேசத்துத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட மேற்குலகினதும் சர்வதேச அமைப்புக்களினதும் அழுத்தங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் இந்தச் சந்திப்பினால் செயலிழக்கும் நிலையை ஏற்படுத்தி வருகின்றது. புலம் பெயர் தேசத்துத் தமிழர்கள் இதுவரை நடாத்திவந்த தொடர் போராட்டத் தியாகம் வீணாகிப் போய்விடுமோ என்று அச்சங்கொள்ள வேண்டியுள்ளது.
திங்கட்கிழமை ஐ.நா. செயலர் பான் கி மூன் அவர்கள் தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இலங்கையின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்காவுடன் கலந்துரையாடியபோது இது குறித்துத் தாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் பேசி வருவதாகக் காலம் கடத்தும் பதிலை விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த இரு வாரங்களின் முன்னர் பிரஞ்சுத் தமிழர் பேரவையினர் ஐரோப்பிய நாடாளுமன்ற வெளிவிவகாரத்துறை அரசியலாளர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின்போதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரது இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் விபரங்களை முதலில் அறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆக மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் பெறாமல் தான்தோன்றித்தனமாக இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பு புலம்பெயர் தமிழர்களது போராட்டங்களால் உருவான மேற்குலகின் காத்திரமான முன் நகர்வுக்குத் தடைக்கல்லாகவே உள்ளது.
இலங்கைத் தீவில் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாகத் தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழீழ மக்கள்மீது திணித்து அதன்மூலம் இலங்கைத் தீவில் தொடர்ந்து நிலைகொள்ளும் திட்டத்தை இந்தியா அரங்கேற்றத் துடிக்கின்றது.
இந்தியா தனது பிராந்திய வல்லாதிக்கக் கனவுக்காக ஈழத் தமிழர்களை மட்டுமல்ல தமிழகத்து மீனவர்களையும் சிங்களத்துக்கு விலையாகச் செலுத்தி வரும் நிலையில் எந்தக் கனவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த நிகழ்ச்சி நிரலுக்குள் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது என்பது புரியாததாகவே உள்ளது.
தமிழீழ மக்களின் இலட்சியக் கனவுக்கும் இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கக் கனவுக்கும் இடையே பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தானது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தச் சனி மாற்றம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வடக்கிலிருந்து செல்வமும் தெற்கிலிருந்து பாதுகாப்பும் கைகூடும் என்று கேரளத்து சோதிடர் கூறியதை வைத்து தமிழீழ மக்களின் இலட்சியத்தை வர்த்தகப் பொருளாகக் கையாள எண்ணுவது அபாயகரமானது என்பது சொல்லித்தான் கூட்டமைப்பினருக்குப் புரிய வேண்டும் என்பதல்ல.
நடைபெற்று முடிந்த யுத்த காலத்தில் சிங்கள தேசம் இந்தியாவையும் அதன் எதிரி நாடுகளான சீனா பாக்கிஸ்தானையும் ஒரே Nவைளையில் தனது தேவைகளுக்குப் பயன்படுத்தியதை நாம் மறந்துவிடக்கூடாது.
ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட இந்த மோசமான அழிவுகளுக்கு எமது கண்மூடித்தனமான இந்திய சார்பு நிலைப்பாடே காரணமாக இருந்தது. இந்திய சார்பு நிலை காரணமாக இந்திய - சீன யுத்தத்தின்போது சீனாவை எதிர்த்துக் குரல்கொடுத்தோம்.
இந்திய - பாக்கிஸ்த்தான் யுத்த காலங்களில் நாம் இந்தியாவை ஆதரித்தோம். இந்த கண்மூடித்தனமான இந்திய ஆதரவு நிலைப்பாட்டால் சீனாவும் பாக்கிஸ்தானும் ஈழத் தமிழர்களின் அவலங்களைக் கண்டு கொள்ளவில்லை.
இந்தியாவை நம்பிக் கெட்டோம். சீனாவையும் பாக்கிஸ்தானையும் நம்பாமல் கெட்டோம் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்கால உலக கூழ்நிலைகளுக்கு ஏதுவாக இந்தியாவின் எதிர்த் துருவங்களுடனும் நட்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவின் தீராத பிராந்திய வல்லாதிக்கக் கனவுக்கு மீண்டும் ஈழத் தமிழர்கள் பலியாகாத பிராந்திய அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னர் பெரும் போராட்ட சக்தியாக உருவெடுத்துள்ள புலம்பெயர் தமிழர்களது பலத்தை சரியாகப் புரிந்துகொண்டு அவர்களுடன் இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழீழ மக்கள் தமக்கு வழங்கிய ஆணையின் பாதையில் செல்லவேண்டும்.
'தமிழீழ மக்களது அரசியல் தீர்வு குறித்துப் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசவேண்டும்' என்று இலங்கை அரசுக்கு வழங்கிய அமெரிக்காவின் ஆலோசனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் ஏற்புடையது.
நன்றி
ஈழநாடு பாரிஸ்
0 விமர்சனங்கள்:
Post a Comment