உருத்திரகுமாரன் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிறிலங்கா
நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளரும் சட்டவாளருமான விஸ்வநாதன் உருத்திரகுமாரனுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா வலியுறுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட செல்வராசா பத்மநாதன் கடத்தப்பட்டு சிறிலங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர் வெளித்தெரியக்கூடிய, தமக்கு ஆபத்தான தலைவராக உருத்திரகுமாரன் உருவெடுப்பார் என சிறிலங்கா அஞ்சுகின்றது.
இதனாலேயே அண்மையில், தமிழர்கள் சிங்களப் படையினரால் படுகொலை செய்யப்படும் காணொலி வெளியிடப்பட்டதன் பின்னணியில் உருத்திரகுமாரன் இருந்தார் எனவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சிங்கள ஊடகவியலாளர்களுக்கு பணம் கொடுத்து அந்தக் காணொலியை அவர் வெளியிட வைத்தார் எனவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உருத்திரகுமாரன் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் அண்மையில் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளை அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை என்ற குடையின் கீழ் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். அப்போது தமிழர் பிரதிநிதிகளுக்கு உருத்திரகுமாரனே தலைமை தாங்கி இருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய நிலையிலேயே உருத்திரகுமாரன் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற அழுத்தத்தை சிறிலங்கா தொடங்கியுள்ளது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும், பயங்கரவாத அமைப்பு என வரையறுக்கப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர் முழுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்க அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சிறிலங்கா வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்தார்.
"அனைத்துலகச் சட்டங்களின் கீழ் இது பற்றுறுதியுடன் கூடிய நிலையான கொள்கையாக இருக்க வேண்டும்" என்றார் கோகன்ன. உருத்திரகுமாரனுக்கு எதிராக அமெரிக்க அரசு நடவடிக்கை எதனையும் எடுப்பதில்லை என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்தபோதே அவர் இப்படி கூறினார்.
Puthina
0 விமர்சனங்கள்:
Post a Comment