தடுப்பு முகாம் தமிழர்கள் இலங்கை பிரஜைகளா? : வாசு
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழீழ தனித்தேசம் அமைக்க நடைபெற்ற ஆயுதப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக இலங்கை அரசின் தடுப்பு முகாம்களுக்குள் இருக்கும் மக்களின் அவல வாழ்விற்கு முற்றுப்புள்ளி வந்தபாடில்லை. இந்த மக்கள் இன்னுமொரு நாட்டின் போர்க் கைதிகள் போலவே தற்போதும் நடாத்தப்பட்டு வருகிறார்கள். விடுதலைப் புலிகளை களையெடுப்பதாகவும் அதனால் தான் மக்களை தடுத்து வைத்திருப்பதாகவும் அரசு கூறுகிறது.
ஆனால் விடுதலைப் புலிகளின் மிக முக்கியமான புள்ளிகளான தயா மாஸ்டரையும் ஜோர்ஜ் மாஸ்ரையும் பிணையில் விடுவித்துள்ளது. புலிகளின் இந்த இரு மாஸ்டர்களும் புலிகள் இயக்கத்தில் மிக முக்கிய பதவி வகித்தவர்கள். புலிகளின் தலைவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள். ஆனால் இவர்களை சுதந்திரமாக வெளியில் செல்ல அனுமதித்த அரசு புலிகள் இயக்கத்தால் வலிந்து கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களையும் யுவதிகளையும் மக்களையும் இன்னமும் தடுப்பு முகாம்களில் வைத்திருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. புலிகளை பிரித்தெடுக்கிறோம் வடித்தெடுக்கிறோம் என்று புனைகதை பேசும் அரசு நூற்றுக்கணக்கான விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்த முகாம்களில் இருந்து படையினருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து வெளியேறியதை அறியவில்லையா? புலிகள் அமைப்பின் நிதர்சனம் தொலைக்காட்சியில் அடிக்கடி வந்து போன திருநாவுக்கரசு கொழும்பு விமான நிலையத்தின் ஊடாக தப்பி சென்றபோது இலங்கை அரசு கண்களை இறுக மூடிக்கொண்டிருந்ததா?
இன்று வன்னி பிராந்தியத்தில் முழு அமைதி நிலவுகிறது. புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பின் அதிகாரங்களை முழுவதுமாக தம்வசம் வைத்திருந்த புலிகளின் மேல்கட்டுமானம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் கொல்லப்பட்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அது மட்டுமல்லாது மே 17ம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்து சென்ற புலிகளின் ஒரே ஒரு தளபதியான கெங்காவும் (கருணாவின் அந்தஸ்தை ஒட்டிய ஒரு கிழக்கு மாகண தளபதி) கடந்த ஜுலை 26ம் திகதி வெள்ளை கொடியுடன் விசுவமடுவில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். உண்ண உணவும் இன்றி வெளியுலகில் எந்த தொடர்புமற்ற நிலையில் ஜெயந்தன் படையணியின் முக்கிய தளபதி இவ்வாறு சரணடைந்தது வன்னியில் புலிகளின் இருப்பை நன்கே வெளிப்படுத்துகிறது. உதிரிகளாக காடுகளுக்குள் அனாதரவாக திரியும் ஏனைய புலிகள் தலைமையின் தொடர்புகள் அற்று பட்டினியையும் தனிமையையும் எதிர்கொள்ள முடியாது காடுகளில் இருந்து கிராமங்களை நோக்கி வருகின்றனர். இவர்களில் பலர் தற்போது கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்த நிலையில் இன்னமும் புலிகள் போரட இருக்கிறார்கள் என்ற பயப்பிராந்தியை அரசு தோற்றுவிப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.
இரண்டரை லட்சம் மக்களை தொடர்ந்து முகாம்களில் வைத்திருப்பதுடன் வன்னியில் மக்களின் சுதந்திர நடமாட்டங்களை தடுப்பதே அரசின் தற்போதைய நோக்கமாக தெரிகிறது. கடந்த வாரங்களில் ஒரு தொகை மக்கள் மீளக் குடியமர்த்த கிழக்கிற்கும் யாழ் நாகரிற்கும் எடுத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் பலர் இன்னமும் இடைத்தாங்கல் முகாம்களில் தடுத்து வைத்திருப்பது அரசு மேலான சந்தேககங்களை மேலும் வலுப்படுத்துகிறது. இருப்பினும் கிட்டதட்ட 5000 பேர் கிழக்கில் மீள குடியமர்த்தப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது. இந்த மக்கள் அண்மையில் தாம் முகாம்களில் பட்ட அவலங்களை வெளிப்படையாக கூறியதுடன் அரசின் அசமந்தை போக்கை வெளிப்படையாகவே விமர்சித்தார்கள்.
இன்று அரசு இவ்வளவு தாமதமாக பாதிக்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்த முயல்வது தமிழ் பேசம் மக்களின் பாரம்பரிய வாழ் நிலங்களின் வரைபடத்தை மாற்றவே. கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு நிலையை வன்னி பிராந்தியத்தில் கொண்டுவரவே இலங்கை அரசு முயல்கிறது. கிழக்கில் ஏற்கனவே சிங்கள மக்களின் குடியேற்றங்கள் அவர்களின் நிரந்தர வாழ்விடமாகவும் மாறியுள்ளது. இன்று கிழக்கில் ஏறக்குறைய தமிழ் மக்களின் பெரும்பான்மைக்கு சமமான சனத்தொகையில் சிங்களவர்கள் குடியிருக்கிறார்கள். அதே போல் வன்னியிலும் சிங்கள மக்களை குடியேற்றுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையக இல்லாதொழிக்க முனைவதாக பலத்த சந்தேகம் எழுகிறது.
அண்மையில் கிளிநொச்சியூடாக பயணம் செய்த ஒரு பயணியின் தகவல் அடிப்படையில் கிளிநொச்சியில் முன்பு இருந்த அனைத்து கட்டிடங்களும் புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது. கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட போது முதல் தடவையாக சென்ற போது அரைகுறையாக இருந்த கட்டிடங்கள் கூட தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள கட்டிடங்கள் மட்டும் சிறப்பாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மக்களை இந்த பகுதியில் குடியமர்த்த வேண்டுமாயின் வீடுகள் மீளக்கட்டப்பட வேண்டும். இந்த நிலையில் வன்னி மக்கள் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் நீண்ட காலம் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் தொடரப் போகிறது. மக்கள் மீள குடியமர்வில் கண்ணி வெடிகளின் அபாயம் என்ற அடுத்த காரணத்தை கூறும் அரசு மக்களை தம் வாழிடங்களுக்கு செல்ல தடுப்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயம். அண்மையில் அரியாலையில் வெடித்த கண்ணி வெடியில் மக்கள் பாதிக்கப்பட்டது தெரிந்த விடயமே. அரியாலை பகுதி 1995இல் விடுவிக்கப்பட்ட ஒரு பிரசேதம். இருப்பினும் கண்ணிவெடிகளை 100 வீதம் அகற்ற முடியாது என்பதற்கு இது ஒரு சான்று.
ஆனால் இந்த காரணங்களை காட்டி மக்களை தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருப்பது அவசியமான ஒன்றாக இருப்பதை நாம் ஒப்புக்கொண்டாலும் மக்களின் சுதந்திர நடமாட்டத்தை ஏன் அரசு தடுக்கிறது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. கண்ணி வெடியுள்ள பிரதேசங்களை குறீயீடு செய்து அந்த பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தடுப்பது நியாயாமே. ஆனால் தடுப்பு முகாமில் உள்ள மக்களை தொடர்ந்தும் துப்பாக்கி முனையில் காவலில் வைத்திருப்பது என்ன நியாயம்? காவல்கள் அகற்றப்பட்டு மக்களின் சுதந்திர நடமாட்டம் அனுமதிக்கப்பட்டால் மக்கள் தாம் விரும்பியதை செய்வார்கள். புலிகளால் வலிந்து அழைத்து செல்லப்பட்ட இந்த மக்களிற்கு இன்று முக்கிய தேவையாக இருப்பது சுதந்திர நடமாட்டமே. புலிகளின் மிகமோசமான அடக்குமுறைக்குள் சிக்கி தவித்த இந்த மக்களின் இன்றைய தேவை சுதந்திரமான வாழ்வு. தொடர்ந்தும் துப்பாக்கி முனையில் திறந்தவெளிச் சிறைக்கைதிகளாக இருக்க இவர்கள் செய்த பாவம்தான் என்ன? தமிழர்களாக பிறந்த ஒரு குற்றமும் புலிகளின் அடக்கு முறைக்குள் சிக்கி தவித்ததுமே இந்த மக்கள் செய்த குற்றங்களா?
அண்மையில் மெனிக்பார்ம் முகாமில் கடமை புரியும் ஒரு உதவியாளர் தெரிவிக்கையில் முகாம் மக்கள் மிக விரைவில் மீள குடியேற்ற தவறும் பட்சத்தில் பல்வேறு சிக்கல்களை அரசு எதிர்நோக்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார். பருவகால மழை இந்த மாத இறுதியில் ஆரம்பித்தால் முகாம்கள் வெள்ளத்தில் மூழ்குவதுடன் தொற்று நோய்கள் மூலம் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் தெரிவித்துள்ளார். மூன்று நான்கு நாட்கள் மட்டுமே பெய்த மழையில் இடம்பெற்ற அவலங்களை நாம் முன்னர் கண்டோம். ஆனால் பருவகால மழை தினமும் பெய்யும் பட்சத்தில் நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கும் என அச்சம் தெரிவித்ததார். அவர் மேலும் தெரிவிக்கையில் இளைஞர்கள் மிகவும் விரக்தியான நிலையில் இருப்பதாகவும் தமக்கு பேசுவதற்கோ சுதந்திரமாக நடமாடுவதற்கோ எந்த அனுமதியும் இல்லை என்று அங்கலாய்ப்பதாகவும் பாதுகாப்பின்மை, கல்வியின்மை, எந்தவித தொழில்சார் பயிற்சிகளும் அற்ற நிலையில் தாம் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாகவும் இவர் தெரிவிக்கின்றார். பல இளைஞர்கள் தாமாகவே படித்து க.பொ.தா உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்கான சித்தியும் பெற்றுள்ளார்கள். ஆனால் இவர்கள் இந்த முகாம்களை விட்டு வெளியேறி பல்கலைக்கழகம் போக முடியாத நிலையில் உள்ளனர். தாம் ஏன் வாழ வேண்டும் என்ற கேள்வியுடன் வாழும் இந்த இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதைதான் அரசு விரும்புகிறதா?
கடந்த மே மாதம் புலிகளை வெற்றி கொண்ட விழாவில் பேசிய ஜனாதிபதி இலங்கையின் அனைத்து பகுதிகளும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறியவர் அனைத்து மக்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் சுதந்திரமாக செல்ல முடியும் என்று கூறினார். ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து மாதங்கள் 4 கடந்தும் யாழ் குடாவில் உயர்பாதுகாப்பு வலயங்கள் இன்னும் அசையாது அப்படியே இருக்கிறது. இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்னமும் அகதிகளாகவே வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட 14 வருடங்களிற்கு மேலாக யாழ் குடாநாடு அசர கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் இந்த உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்ற ஜனாதிபதி மறுப்பது மிகவும் அபத்தமானது. இது தமிழர்களின் பிரதேசம் என்பதால்தான் இந்தநிலை என்ற குற்றச்சாட்டிற்கு அரசின் பதில் என்ன? வன்னியிலும் தற்போது இவ்வாறான உயர்பாதுகாப்பு வலயங்கள் தோன்றி வருகிறது. இனி வன்னி மக்களும் தாங்கள் தமது வாழ் நிலங்களுக்கு மீளவே செல்ல முடியாத ஒரு நிலை வரலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்தியாவும் அமெரிக்காவும் இந்த மக்களை முகாம்களை விட்டு வெளியேறி சுயாதீனமாக வாழ விடுமாறு இலங்கைக்கு பல்வேறு விதமான அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது. மக்களை மீள குடியமர்த்தும் பணிக்கு உதவியாக அமெரிக்கா கடந்த ஜுலை மாதம் மேலும் 8 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது. இது போல் ஏனைய நாடுகளும் பெருந்தொகை பணத்தை மீள் கூடியேற்றத்திற்காக கொடுத்துள்ளனர். அண்மையில் அமெரிக்க மற்றும் ஐநாவின் முக்கிய பிரமுகர்களின் வன்னி விஜயம் அத்துடன் இலங்கைக்கான இந்திய தூதுவரின் மெனிக் பார்ம் விஜயமும் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு செயற்பாடக இருந்தபோதும் இலங்கை அரசு அகதிகளை விடுவிப்பதில் எந்தவித அவசரத்தையும் காட்டுவதாக தென்படவில்லை. மந்தகதியல் மீளக்குடியேற்றம் செய்யும் அரசு, மீள் குடியேற்றம் தாமதமாகும் பட்சத்தில் குறைந்த பட்சம் இந்த முகாம்களின் பாதுகாப்பை தளர்த்தி மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். மரணத்தின் பிடியில் சிக்கி தப்பிவந்து விரக்தியுடன் வாழும் மக்களின் பொறுமை ஒரு எல்லைவரை தான் போகும். அண்மையில் இந்த முகாம்களில் மக்கள் கொந்தளித்து காவல் புரிவோருக்கு எதிரான வன்முறையில் இறங்கியதை வெறும் சம்பவமாக பாராது அதை ஒரு எச்சரிக்கையாக அரசு எடுக்க வேண்டும். இந்த முகாம்களில் இருப்பவர்களும் இலங்கை நாட்டின் பிரசைகள் என்பதை அரசு உணர மறுக்கும் பட்சத்தில் அரசின் இராணுவ வெற்றி தமிழ் பேசும் மக்களை ஓடுக்க பெற்ற வெற்றியாகவே கருதப்படும்.
Thesam Net
0 விமர்சனங்கள்:
Post a Comment