வவுனியா அகதிகள் முகாமிலிருந்து……
இக்கடிதம் பத்திரிகையிலோ அகப்பக்கத்திலோ பிரசுரிப்பதற்கான முன் நோக்குடன் எழுதப்பட்டதல்ல.தன் உறவினருக்கு அவலங்களைச் சொல்வதற்காக எழுதப்பட்ட கடிதமிது.இதிலே இலக்கியத்தரமான வார்த்தைகளையோ அலங்காரங்களையோ தேட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கின்றோம்.
அன்பின் ——– நலமா?
மேலும் நீங்கள், அங்கு அதாவது விசுவமடுவிலிருந்து இங்கு வந்தது வரை எழுதச் சொன்னீர்கள்.முதல் நடந்ததிலிருந்து எல்லாத்தையும் வாசித்துப் பாருங்கோ. எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி ஒரே செல்லடி. வெளியில் வெளிக்கிட முடியாது.அது ஒரு பிரச்சனை.அதை விட தங்கைச்சிமார் இரண்டு பேரையும் வெளியில் கொண்டு திரியமுடியாது.பிடிப்பாங்கள் என்ற பயம்.
இரவு இரவாய்த் தான் இடம் மாறுவதும் . விசுவமடுவிலிருந்து வெளிக்கிட்டு 5கிலோமீற்றர் வித்தியாசத்தில் சுதந்திரபுரம் என்ற இடத்தில் வந்து இருந்தால் அங்கும் ஒரே செல்லடி.ஆமி வந்திட்டான் என்று அடுத்தகட்டமாக 7 கிலோமீற்றர் தள்ளி புதுக்குடியிருப்பில் வந்து இருந்து சாப்பாடுகளும் இல்லாமல் இரவு பகலாய் நடந்தும் ஓடியும் எதுவித பொருட்களும் இல்லாமத்தான் ஒவ்வொரு இடமாய் வந்து சேருவது.புதுக்குடியிருப்பில் வந்து ஒரு கிழமை இருந்து அங்கும் ஒரே செல்லடி.அதைவிடப் பிடிப்பார்கள் என்ற பயம். சும்மா படங்கு கட்டித்தானே இருந்தது, அந்தப்படங்குக்குள்ள பெரிய பங்கர் வெட்டி பங்கருக்குள் தங்கைச்சிமாரை அவர்கள் பிடிக்க வரும் போது அதற்குள் இறங்க அதற்கு மேலே அம்மா ஒரு தகரத்தைப் போட்டுட்டு அதற்கு மேலே மண் போட்டு விட்டால் தெரியாது.அவர்கள் வந்து தேடிப்பார்த்து விட்டு போய்விடுவார்கள்.
இப்படித்தான் ———-அக்காவின் பிள்ளைகளும் ஒழிந்திருந்தவர்கள்.பின்பும் அங்கு ஆமி வரத்தான் எல்லோருமாக ஓடி வரும் போது தங்கைச்சி———யை பிடித்து விட்டாங்கள்.பின் முள்ளிவாய்க்காலில் இருந்தார்கள்.தங்கைச்சி——— தலைமயிர் வெட்டியபடி களவாய் ஓடிவந்திட்டா.நானும் அங்கு தான் கடைசியாக ஓடிவந்து எல்லோரும் ஒன்றாய் வட்டுவாகலால் இங்கு வந்து சேர்ந்து விட்டோம்.நாங்கள் கொஞ்சம் கூட நினைக்கவில்லை இப்படி வந்து சேருவோமென்று.தாய் செத்து பிள்ளைகள் வந்ததும் பிள்ளைகள் எல்லாம் செத்து தாய் தகப்பன் மிஞ்சியதும் தான் கூட.
நாங்கள் முன்னுக்கு வர வர பின்னால் செல் விழுந்தபடி. ஒரே பிஸ் அடியும் றவுண்ஸ் அடியுமாய் குனிந்தும் படுத்தும் தவழ்ந்தும் தான் வந்து சேர்ந்தனாங்கள்.முள்ளிவாய்க்காலில் நாங்கள் இருந்த பங்கருக்குப் பக்கத்தில் சுற்றிச் சுற்றி செல் விழுந்து எத்தனையோ குடும்பம் குடும்பமாய் செத்துப் போயும் அரைவாசி உயிருமாய் துடித்துக் கொண்டு இருக்க அதுகளையெல்லாம் கடந்து கொண்டு ஓடியோடி வந்தபடியால் தான் இவ்வளவில் உயிர் தப்பி வந்து சேர்ந்தோம்.இங்கு வந்தும் இங்கும் ஏங்கிக் கொண்டு இருக்க வேண்டியுள்ளது.
இப்போது இங்கு 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கொண்ட குடும்பங்களைத்தான் வெளியில் விடுகிறார்கள்.———–அண்ணா குடும்பமும் போய்விடும்.அவர்களிடமிருந்த போனில் தான் உங்களுடன் கதைக்கிறனாங்கள்.ஏன் நீங்கள்2 நாளைக்கு ஒருக்கால் போன் எடுக்கலாம் தானே.இரவு 6 மணியிலிருந்து 8 மணிவரை கதைக்கலாம்.அந்த நேரங்களில் எடுங்கோ.இனி அவர்களும் போனால் நாங்கள் ஒன்று வாங்கலாம்.இங்கு கொண்டு வந்து விற்கிறார்கள் 5000 ரூபாவிற்கு.காசு முடிந்து விட்டது.இங்கு பொருட்கள் சரியான விலைதானே.அரைவாசி உடுப்புகள் எடுத்தே சரி. நாங்கள் இங்கு வரும் போது, நாங்கள் போட்டிருந்த உடுப்பை விட வேறு ஒன்றும் கொண்டு வரவில்லை.
அப்பா தான் ஒரு பாக் கொண்டு வந்து சேர்த்தார்.நாங்கள் ஏதாவது கொண்டு வந்திருந்தால் உயிர் இங்கு வந்திருக்காது.அப்படிச்சரியான கஸ்ரம்.இங்கு வந்தும் இவங்கள் தந்த சாப்பாட்டையே சாப்பிட்டால் ஒரே வருத்தமும் வயிற்றோட்டமும் தான்.இப்ப எங்களுக்குக் கொஞ்சம் குறைவு.கனக்கப் பிள்ளைகள் வயிற்றோட்டத்தால் இறந்து போனார்கள்.வேறு என்ன? கடிதம் போடவும்.
இப்படிக்கு
————–
தூமையின் பின் குறிப்பு:
1. கடிதம் எழுதியவர் 2 வருடங்களுக்கு முன் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டு பின் முள்ளிவாய்க்காலில் இயக்கத்திலிருந்து ஓடிவந்து பெற்றோருடன் இணைந்தார்.
2. எந்தத் தமிழ்ப் பெயரை மாற்றிக் கடிதத்தைப் பிரசுரித்தாலும் அது யாராவது ஒருவரைக் குறிப்பிட வாய்ப்புண்டு.ஆகவே பெயர்கள் கோடிடப்பட்டுள்ளன.
தூமை Wordpress
ஆகஸ்ட் 15, 2009






0 விமர்சனங்கள்:
Post a Comment