உண்ணாவிரதி பரமேஸ்வரனின் 7.1 மில்லியன் பவுண் மக்டோனால் பேகர் : த ஜெயபாலன்
வன்னியில் மிகப்பெரும் அவலம் நடந்து கொண்டிருக்கையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். அவர்கள் தங்கள் சக உறவுகளுக்காகத் துடித்தனர். ஆனால் ஒட்டுமொத்த போராட்டத்தையும் புலம்பெயர் புலி ஆதரவு சக்திகள் புலிக்கொடி, பிரபாவின் படம் என புலிமயப்படுத்தி போராட்டத்தை பலவீனப்படுத்தினர். தற்போது ஸ்கொட்லன்ட் யாட் மற்றுமொரு விடயத்தை அம்பலப்படுத்தி உள்ளது. லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நுணுக்கமான கமராக்கள் மூலம் பதிவாக்கி உள்ளனர்.
பரமேஸ்வரன் சுப்பிரமணியம் உண்ட மக்டோனால்ட்டின் விலை 7.1 மில்லியன் பவுண் என பொலிஸ் உள்வட்டாரங்களில் பேசப்பட்டு உள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற 72 நாட்களில் 30 000 பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டு இருந்தனர். அதற்கு அவர்கள் செலுத்திய மேலதிக சம்பளம் 7.1 மில்லியன். பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை ஸ்கொட்லண்ட் யாட் உத்தியோகத்தர்கள் நம்ப முடியாது லைவ்வாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போராட்டம் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் ஸ்கொட்லண்ட் யாட் அப்போது இச்சம்பவம் பற்றி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து இருந்தது. மேலும் அச்சமயத்தில் கருத்து வெளியிடும் பட்சத்தில் அது வன்முறைக்கு வித்திடலாம் என்ற அச்சமும் காரணமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். (தகவல்: டெய்லி மெயில் லண்டன்)
ஒக்ரோபர் 8 (நேற்று) இத்தகவல் ஸ்கொட்லண்யாட்டினால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மக்களால் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மிக மோசமான இழுக்கு ஏற்பட்டு உள்ளது. வன்னியில் நிகழ்ந்த பேரவலத்தில் புலிகளுக்கும் மிகுந்த பங்கு இருந்தது. புலிகள் யுத்தப் பகுதியில் மக்களை பணயம் வைத்தே தாக்குதலை நடத்தினர். அப்படி இருந்தும் வெளிநாடுகளில் புலி ஆதரவுத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுவிக்க வேண்டுமென எவ்விதமான கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே புலி ஆதரவாளர்களால் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. வன்னியில் உள்ள மக்களை யுத்த முனைக்குள் தள்ளி மிகப்பெரும் அவலத்தை ஏற்படுத்தியதில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் சமபொறுப்பு உண்டு. புலம்பெயர்ந்த புலி ஆதரவு சக்திகளின் பொறுப்பற்ற போராட்டங்கள் வன்னி மக்களை மிகப்பெரும் அவலத்திற்குள் தள்ளியுள்ளது.
வடமராட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமானவர். லண்டனில் போராட்டங்களில் புலிகொகொடி பிரபாவின் படம் போன்ற விடயங்களில் இவரே தீவிரமாக இருந்ததாகத் தெரியவருகிறது. பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதிமொழியை அடுத்தே தனது போராட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்து இருந்தார். செப்ரம்பர் 29ல் அவரை கொன்வே ஹோலில் சந்தித்து அந்த உறுதிமொழி என்ன வென்று கேட்ட போது அது இன்னமும் இரகசியமாகவே இருப்பதாகத் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.
ஆனால் பிரித்தானிய இளையோர் அமைப்பினர் சில உள்வீட்டு விடயங்களை வெளியிடுகையில் அவ்வாறான உறுதிமொழி எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் உண்ணாவிரத்தை முடிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட காரணமே அதுவென்றும் தெரிவிக்கின்றார்.
பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் போராட்டங்கள் நியாயத்தன்மையைக் கொண்டிருக்காதபடியால் அவை பயனற்ற முயற்சிகள் என்பதனை தேசம்நெற்றில் பல தடவை சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரத விருந்து தமிழ் மக்களது எதிர்காலப் போராட்டங்களுக்கும் ஒரு கறையாக அமையவுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பரமேஸ்வரன் சுப்பிரமணியத்துடன் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
தேசம் நெற்
0 விமர்சனங்கள்:
Post a Comment