அன்பார்ந்த நோர்வே வாழ் தமிழ் மக்களே சிந்தித்து செயற்படுங்கள்!!
எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகபிரதிநித்துவ, மந்தைத் தத்துவத்தினால் இன்று எமது தாயக மண்ணில் ஏற்படுத்தியுள்ள அவலநிலை என்ன என்பதை சற்று சிந்திப்போம். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின், குழந்தைகளின், அப்பாவி மக்களின், சொந்தங்கள் சுற்றத்தினரின் உயிர்களை காவுகொண்ட இந்த திசைதவறிய ஆயுதப்போராட்டம் பல கோடி சொத்தழிவையும்,
என்றும் எம்தினத்தின் பெருமைக்குரிய அழியாச் செல்வமாகவும் அடையாளமுமாக இருந்த கல்வி வளத்தையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி முட்கம்பி வேலிகளுக்குள் உணவுக்காக கையேந்தும் ஒரு இழிநிலையில் எமது இனத்தை கொண்டுபோய் விட்டிருக்கிறது என்பதை இப்போதாவது விளங்கிக் கொள்வோம். புலிகளின் போராட்டமானது ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டு முள்ளிவாய்க்காலில் முடிந்து எஞ்சியோரை செட்டிகுளத்தில் அகதிகளாக கொண்டுவந்து நிறுத்தி விட்டிருக்கிறது. எனவே, இந்த மக்கள் இனியாவது சுதந்திரமாகவும், ஜனநாயகத்துடனும் வாழ வேண்டும். இவர்களை இன்னுமொரு மாயைக்குள்ளும், கனவுகளுக்குள்ளும் தள்ளிவிடுவதற்கு எத்தனிக்கும் எந்த அரசியல் தலைமைத்துவத்திற்கும் நாம் இடமளிக்கக் கூடாது.
புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிப் பினாமிகள் சிலர் முகமூடி தரித்து நாடுகடந்த தமிழீழம் என்ற ஏமாற்று நாடகத்துடன் உங்களை மீண்டும் ஏமாற்ற தயாராகி விட்டார்கள். தாயக மக்களை மென்மேலும் அவலத்திற்குள்ளாக்கி அந்த அவலத்தை காட்டி மீண்டும் உங்களிடம் காசு, பணம் சேர்த்து தாங்கள் சொத்து சுகம் அனுபவிக்க புது வடிவம் எடுத்துள்ளார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தாயகத்தில் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளின் விடுதலை, நல்வாழ்வு மற்றும் அவர்களுக்கான ஆறுதல்பற்றி கூட சிந்திக்காமல் மீண்டும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை தூசுதட்டி புதிய வடிவம் என ப+ச்சுற்றி நாடுகடந்த தமிழீழம் அமைக்கப் போகிறார்களாம். நீங்கள் கஸ்டப்பட்டு, வேர்வை சிந்தி, பல பிரச்சனைகளுடன் சம்பாதிக்கும் உங்களின் பணத்தை பிடுங்கவும் அதில் தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கவும் மட்டுமே இந்த சுத்துமாத்துக்கள் என்பதை நீங்கள் உணராதவரை தாயக தமிழரின் இறந்த உடல்களை விற்று பிழைப்பு நடாத்தும் இவ்வாறான அயோக்கியர்கள் முளைத்துக்கொண்டே இருப்பார்கள்.
ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்தள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டமானது எமது மக்களின் விடுதலையைப் பெற்றுத் தரும் என்பதை மக்கள் நம்பத் தயாரில்லை. அவ்வாறாக முன்னெடுக்கப்படுகின்ற ஆயுதப் போராட்டங்களானது மென்மேலும் எமது இனத்தை அழிவுக்கே இட்டுச் செல்லும். வெறும் தமிழீழம் என்ற கோசத்தினால் எமது மக்களின் அவலநிலை இனிமேலும் தொடரக் கூடாது. இந்நிலையைத் தொடரவிடாது தடுக்க வேண்டிய தேவை எம்மனைவருக்கும் இருக்கின்றது.
எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஜனநாயக வழிமுறைகளில் போராட வேண்டிய அவசியமும் எமக்குள்ளது. எமது உரிமைகளுக்கான ஒரு ஆரம்பப் படியாக 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்தலாம். இது பற்றிய ஆராயலாம். இதன் ஊடாக 13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை எவ்வாறு மேம்படுத்தலாம், இன்னும் தேவையான அதிகாரங்கள் என்னென்ன என்பது பற்றி ஆராய்ந்து அவற்றை உள்வாங்கச் செய்து நடைமுறைப்படுத்த அரசின் மீது அழுத்தங்களை பல்வேறு மட்டக்களிலிருந்தும் தரப்புகளிலிருந்தும் பிரயோகிக்கலாம். தமிழீழம், நாடுகடந்த தமிழீழம் என்ற கனவுலகில் சஞ்சரிக்காமல் தாயகத்து தமிழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த வழிசெய்ய வேண்டும்.
இதுவரை காலம் நாங்கள் ஒவ்வொருவரும் போராட்டத்திற்காக புலிகளிடம் கொடுத்த பணம் அந்த மக்களின் அழிவிற்கே வழிவகுத்தது என்பதை இப்போதாவது சிந்தித்து புரிந்துகொள்வோம். புலிகளின் இந்த திடீர் அழிவுடன் புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் பல பில்லியன் பெறுமதியான முதலீடுகளும் ஒருசில நபர்களின் கைகளில் அகப்பட்டுவிட்டுள்ளது. போராட்டத்திற்காக என சேர்த்த இந்தப் பணம் போராட்டத்தால் அழிவுகளைச் சந்தித்த அந்த மக்களின் துயரினை ஓரளவிற்காவது போக்ககூடிய வகையில் பயன்படுத்தப்படல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மக்களிடம் சேர்க்கப்பட்ட பணத்தினையும், சொத்துக்களையும் புலிகளின் புலம்பெயர் பொறுப்பாளர்களும், பினாமிகளும் தாம் பதுக்கிக் கொள்ளாமல் அவற்றை வெளிக்கொணர்ந்து தாயகத்தில் அவயங்களை இழந்து, வீடுவாசல்களை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மக்களின் நல்வாழ்வுக்கு செலவிடல் வேண்டம். ஆயுதப் போராட்டம் என்ற பெயரில் சேர்க்கப்பட்டிருக்கும் சொத்துக்கள் யாவும் ஒண்று திரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் புனர்வாழ்வுக்கும், பாதிக்கப்பட்ட உயிரிழந்த போராளிகளின் குடும்பத்திற்கும், அங்கவீனமாக்கப்பட்ட போராளிகள் மற்றும் மக்களின் மறுவாழ்வுக்கும் பயன்படுத்த வேண்டுமென ஒவ்வோர் புலம்பெயர் தமிழரும் புலம்பெயர் புலிகளிடம் வலியுறுத்த வேண்டும்.
மீண்டும் மீண்டும் தமிழீழம் என்றும் போராட்டம் என்ற மாயைக்குள் மக்களைத் தள்ளாமல் அல்லல்படும் மக்களின் மறுவாழ்வினை ஏற்படுத்தி முட்கம்பி வேலிகளுக்குள்ளும், வைத்தியசாலைகளிலும் அல்லும்பகலும் அவதியுறும் மக்களின் அவலத்தை நீக்கி, அவர்களுக்கு ஒர் சுயகௌரவத்துடன் கூடிய சுதந்திரமான வாழ்வை ஏற்படுத்தி கொடுத்து அவர்களது இயல்பு வாழ்வினை மேம்படுத்தவும் முன்நின்று செயற்படுவோம்.
“அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்”
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) -நோர்வே
0 விமர்சனங்கள்:
Post a Comment