முடிவுக்கு வந்தது 'வணங்காமண்' விவகாரம்
இலங்கை தமிழர்களுக்காக, "வணங்காமண்' கப்பலில் அனுப்பப் பட்ட நிவாரணப் பொருட்கள், ஐந்து மாத அலைக்கழிப்புக்கு பின், நாளை (21ம் தேதி) இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அடுத்த இரு நாட்களுக்குள், முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக, ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் புலிகள் சார்பு தமிழர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, "கருணைத் தூதுவன்' என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பில், திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிய, "கேப்டன் அலி' என்ற கப்பல் மே 7ம் தேதி இலங்கைக்கு புறப்பட்டது. "வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் என இந்த கப்பலுக்கு பெயரிடப்பட்டது. சர்வதேச விதி மீறப்பட்டுள்ளதாக கூறி, நிவாரணப் பொருள் அடங்கிய கப்பலை ஏற்க, இலங்கை மறுத்தது. மூன்று நாட்கள் நடுக்கடலில் "வணங்காமண்' கப்பல் தத்தளித்தது. இதன் பின், சென்னையைச் சேர்ந்த "மனிதம்' என்ற அமைப்பு, நிவாரணப் பொருட்களை சென் னை துறைமுகத்தில் இறக்க அனுமதி கோரியது; அதுவும் மறுக்கப் பட்டது.
இந்தியா வந்த இலங்கை உயர்மட்டக் குழுவினர், நிவாரணப் பொருட்களை ஏற்பதாக, உறுதியளித்ததன் அடிப்படையில், "வணங்காமண்' கப்பல் சென்னை துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில், 27 கன்டெய்னர்களில் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்டு, "கேப் கலோராடா' என்ற கப்பலில் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இந்த பொருட்கள் இறக்கி வைக்கப் பட்டன. நிவாரணப் பொருள்களுக்கு வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, இவற்றை வினியோகிப்பதற்கு இலங்கை அரசு தாமதம் செய்தது. நிவாரணப் பொருட்களை எடுக்க, செஞ்சிலுவைச் சங்கம் எடுத்த பல்வேறு முயற்சிகளுக் கும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், இலங்கைத் தமிழர்களுக்காக வழங்கிய மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 884 டன் நிவாரணப் பொருள்கள், எடுப்பதற்கு ஆள் இல்லாமல் கொழும்பு துறைமுகத்தில் அனாதையாக கிடந்து வந்தது.
இந்நிலையில், இலங்கை சென்ற தமிழக எம்.பி.,க்கள் குழு, "வணங்காமண்' குறித்து எவ்வித வேண்டுகோளையும் விடுக்கவில்லை. எம்.பி.,க்கள் குழு தமிழகம் திரும்பியபின், நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், "வணங்காமண் கப்பலில் வந்த நிவாரணப் பொருட்கள்' குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, "அந்தப் பொருட்கள் போய் சேர்ந்து விட்டதாக' தெரிவித்தார். ஆனால், வணங்காமண் கப்பலில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று வரை கொழும்பு துறைமுகத்திலேயே உள்ளன. செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர் முயற்சி காரணமாக, இந்த நிவாரணப் பொருட்களை எடுத் துக் கொள்ள, இலங்கை அரசு மனமிரங்கி ஒப்புக் கொண் டுள்ளது. இதன்படி, நிவாரணப் பொருட்களுக்கு செலுத்த வேண்டிய வாட் வரி, கட்டுமான வரி என மொத்தம் கட்ட வேண் டிய 20 லட்சம் ரூபாயை இலங்கை அரசே செலுத்துவதாக அறிவித் துள்ளது. துறைமுகத்தில் இவ்வளவு நாட்கள் இருந்ததற்கான வாடகையையும், இலங்கை அரசு தள்ளுபடி செய்துள்ளது. இது தவிர, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், ஐந்து லட்சம் ரூபாய் செலுத்தப்படவுள்ளது. இப்பணிகள் முடிந்துள்ள நிலையில், நாளை நிவாரணப் பொருட்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவ, மே 7ம் தேதி புறப்பட்ட, "வணங்காமண்' நிவாரணப் பொருட்கள், ஐந்து மாத அலைகழிப்புக்குப் பின் ஒரு வழியாக தற்போது தமிழர்களை சென்றடையவுள்ளது.
இது குறித்து "மனிதம்' அமைப்பின் நிர்வாகி அக்னி சுப்பிரமணி கூறியதாவது: நிவாரணப் பொருட்களுக்கு எந்த நாடும் வரி விதித்ததில்லை. இலங்கை அரசு மட்டும் வரி விதித்ததோடு, பல்வேறு காரணங்களைக் காட்டி ஐந்து மாதம் காலம் கடத்தியுள்ளது. இப்போது கூட வரியை தள்ளுபடி செய்யாமல், தான் செலுத்துவதாக கூறி கணக்கு காட்டியுள்ளது. நிவாரணப் பொருட்களுக்கு இலங்கை அரசு பணம் கட்டி எடுத்தது என்ற பேரைப் பெறுவதற்காக, இலங்கை அரசு நாடகம் நடத்தியுள்ளது. ஐந்து மாதங்கள் அலைகழிக்கப்பட்ட நிலையில், அந்த நிவாரணப் பொருட்கள் எந்த நிலையில் இருக்கும் என்று தெரியவில்லை. அவை பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என்பதை சோதனை செய்த பின், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வினியோகிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதன் மூலமாக கூடுதல் நோய்களுக்கு முகாம்களில் வாடும் தமிழர்கள் ஆளாக நேரிடும். இவ்வாறு அக்னி சுப்பிரமணி தெரிவித்தார்.
தினமலர்
0 விமர்சனங்கள்:
Post a Comment