இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Friday, October 9, 2009

குடிமக்கள் ஆவார்களா அகதிகள் ?

''கண்ணீர்த் துளிகள் சிறைக்கூடங்களாகமாறியது எப்படி என்பதை அகதிகளிடம்... கேள்!'' என்று ஈழத்துக் கவிஞர் சேரன் கவிதை ஒன்றில் குறிப்பிட் டிருப்பார். ஈழத் தமிழர்கள் மனம் விரும்பி அகதிகளானவர்கள் இல்லை. சொந்தங்கள் அகாலத்தில் கொலையுண்டபோது, தஞ்சம் அடைந்த நாட்டிலும் அவர்களுக்கு நிம்மதியில்லை. இந்திய அரசின் பாராமுகத்தாலும், பாரபட்சத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இப்போது சற்றே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இருளடர்ந்து போயிருக்கும் அவர்களின் வாழ்வில் சிறு தீபத்தை ஏற்றியிருக்கிறது. தி.மு.க. நடத்திய அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் ஈழத் தமிழ் அகதிகளைப் பற்றிப் பேசியிருந்தது.

''1984-ம் ஆண்டு முதலே தமிழகத்துக்கு அகதிகளாக வந்த தமிழர்கள் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, தமிழகத்தில் 115 முகாம் களில் மொத்தம் 73,572 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியிருக்கின்றனர். இஃதன்னியில் அகதிகளாக வந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்காமல் வெளியே பல்வேறு இடங்களில் அவரவர்களது சொந்தப் பொறுப்பில் தங்கியிருக்கின்றனர். ஆக, மொத்தமாக ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமிழகத் திலேயே தற்சமயம் அகதிகளாக உள்ளனர்...'' என்று குறிப் பிட்டுள்ள அந்தத் தீர்மானம், ''தமிழ் அகதிகளை இந்திய குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின் கீழ் மறு குடியமர்த்தும் முயற்சியாக மத்திய அரசோடு கலந்து பேசி அவர்கள் தமிழகத்திலேயே நிரந்தரமாகக் குடியிருக்க வழிவகை செய்து தரவேண்டுமென்றும், அவர்கள் தங்குவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்துக்குமான ஏற்பாடுகளை யும் செய்து தரவேண்டும்...'' என்றும் வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதில் ஆனந்த விகடனில் (18.06.2006) ஈழ அகதிகள் குறித்துக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டுத் தமிழக முதல்வர் அவர்கள் விடிகாலையிலேயே என்னைத் தொலைபேசியில் அழைத்து, தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம் களுக்குச் சென்று பார்வையிட்டு, அறிக்கையன்றைத் தரும்படி எனக்கு ஆணையிட்டார்கள். நானும் பல்வேறு முகாம்களைப் பார்வையிட்டு 04.07.2006 அன்று முதல்வரிடம் ஈழத் தமிழ் அகதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தேன். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முதல்வர், உடனடியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். தமிழ் அகதிகளுக்கு அது வரை மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த பணக்கொடை மிகமிகக் குறைவாக உள்ளது என்பதை அறிக்கையில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். ஒரு குடும்பத்தின் தலைவருக்கு மாதம் ஒன்றுக்கு 200 ரூபாய், குடும்பத் திலுள்ள வயது வந்த பிற உறுப்பினர்களுக்கு 144 ரூபாய், முதல் குழந்தைக்கு 90 ரூபாய், அடுத்தடுத்த குழந்தைகளுக்கு 45 ரூபாய் என்றுதான் பணக்கொடை மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் குறைவு என்பதை உணர்ந்த முதல்வர் உடனடியாக மாநில அரசின் சார்பில் அதே அளவு தொகையைச் சேர்த்து அந்த பணக்கொடையை இரு மடங்காக உயர்த்தி ஆணையிட்டார்கள். அது மட்டுமின்றி, அகதி முகாம்களின் நிலைமைகளைச் சீர்படுத்திட பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதல்வர் ஆணையிட்டார்.

முதல்வர் கலைஞரிடம் நான் சமர்ப்பித்த அறிக்கையில், மாநில அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளாக 28 கோரிக்கைகளையும், மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டியவையென்று ஐந்து கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தேன். 33 பரிந்துரைகள் அடங்கிய எனது அறிக்கையில் 32-வது பரிந்துரையாக ஒன்றைக் குறிப்பிட்டிருந்தேன். ''இந்தியாவில் பிறந்த அகதிக் குழந்தைகள், இந்தியர்களைத் திருமணம் புரிந்துகொண்ட அகதிகள், இந்தியாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கும் அகதிகள் ஆகியோரிடம் அவர்களது குடியுரிமை தொடர்பாக விருப்பத்தேர்வினைக் கேட்கும் விதமாக இந்தியக் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்!'' என்று நான் வேண்டியிருந்தேன். இதற்காக மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டிருந்தேன்.

''இந்திய குடியுரிமை சட்டம் 1955-ன் பிரிவு 3-ன்படி இந்தியாவில் பிறக்கும் எந்தவொரு குழந்தையும் இந்திய பிரஜையாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால், 1986-ம் ஆண்டில் அந்தப் பிரிவு திருத்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் 1986-ன்படி அது நடைமுறைக்கு வந்த 1987 ஜூலை முதல் தேதிக்குப் பிறகு இந்தியாவில் பிறக்கும் எந்தவொரு குழந்தையும் அதன் பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்தால் தான் அந்த குழந்தைக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். ஆனால், இந்த விதியும்கூட இங்கு பின்பற்றப்படவில்லை. அகதி ஒருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவரைத் திருமணம் புரிந்து அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் இந்திய பிரஜை களுமாகவும் இல்லாமல், அகதி என்ற பதிவும் இல்லாமல் இரண்டும்கெட்டான் நிலையில் தவிக் கின்றன. இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும்கூட இந்தியக் குடியுரிமை - இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ள இன்றைய சூழலுக்கேற்ப குடியுரிமை சட்டத்தைத் திருத்தி 10 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் தொடர்ச்சியாக வாழும் அகதிகளிடத்தே விருப்பத் தேர்வினைக் கேட்டு அவர்கள் விரும்பினால், இந்திய குடியுரிமையைத் தேர்ந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். அது போலவே, இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு முன்பிருந்தது போல குடியுரிமை அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும்...'' என்றும் நான் அந்த அறிக்கையில் வேண்டியிருந்தேன்.

முதல்வரிடம் வழங்கிய அறிக்கையில் நான் முன்வைத்திருந்த கோரிக்கைகள் பலவும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. குடியுரிமை தொடர்பான எனது கோரிக்கையும் இன்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அது தொடர்பாக வலியுறுத்துவதற்கு தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கையில் வதை முகாம்கள் என்று சொல்லப்படத் தக்க நிலையில் மூன்று லட்சம் தமிழர்களைத் திறந்தவெளி சிறைச் சாலைகளில் அடைத்து வைத்து சிங்கள அரசு கொடுமை செய்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், அது குறித்து உலக நாடுகள் பலவும் ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளும் கவலையும், கண்டனமும் தெரிவித்து வருகின்றன. இந்தத் தருணத்தில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்காக முதல்வர் மேற் கொண்டுள்ள இந்த முயற்சி வரலாற்றில் என்றும் நிலைபெற்றிருக்கும்.

இந்தியாவுக்கு அகதிகள் வருவது இன்று, நேற்று நடப்பதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஈரானைச் சேர்ந்த ஸோராஷ்ட்டியர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அங்கிருந்து அகதிகளாக வெளியேறி இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் குஜராத்தில் வந்து தஞ்சமடைந்தார்கள். அவர்கள்தான் தற்போது பார்ஸிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இப்போதோ சீனா, நேபாளம், இலங்கை, மியான்மர், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு கடந்த ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 4 லட்சத்து 20 ஆயிரத்து 400 அகதிகள் உள்ளனர். அதில் திபெத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர். ஈழத் தமிழர்கள் ஒரு லட்சத்து 2 இரண்டாயிரத்து 300 பேர், மியான்மரிலிருந்து அகதிகளாக வந்து மிசோராம் மாநிலத்தில் தங்கியிருப்பவர்கள் 75 ஆயிரம் பேர். நேபாளத்திலிருந்து வந்திருக்கும் அகதிகள் 50 ஆயிரம் பேர். பங்களாதேஷிலிருந்து அகதிகளாக வெளியேறி இங்கு வந்திருப்பவர்கள் 35 ஆயிரத்து 900 பேர். ஆப்கானிஸ்தானிலிருந்து 31 ஆயிரத்து 200 பேர், பூட்டானிலிருந்து வந்திருப்பவர்கள் 15 ஆயிரம் பேர்.

இப்படி பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள அகதிகளை அணுகுவதில் இந்திய அரசு ஒரே விதமாக நடந்துகொள்ளவில்லை என்பது வேதனையளிக்கும் உண்மை. திபெத்திலிருந்து அகதிகளாக வந்திருப்பவர்களுக்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் கொடுத்து வருகிறது. ஏறத்தாழ அவர்கள் இந்தியக் குடிமக்களாகவே நடத்தப் படுகிறார்கள். நேபாளத்திலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கும் இங்கே எந்த விதத் தடையும் கிடையாது. ஆப்கானிஸ்தானிலிருந்து அகதி களாக வந்திருப்பவர்களுக்கு மத்திய அரசு விசேஷ சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. அவர்கள் இங்கு 12 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாகத் தங்கியிருந்தால் இந்திய குடியுரிமைக்காக அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்பீட்டளவில் பார்த்தால் ஈழத் தமிழ் அகதிகள்தான் இந்திய அரசால் மிகவும் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். தமிழக அரசின் இப்போதைய முயற்சியால் அந்த நிலை மாற்றப்படவேண்டும்.

காஞ்சிபுரம் மாநாட்டுத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது போல் ஈழத் தமிழ் அகதிகள் எல்லோரும் தமிழகத்திலேயே நிரந்தரமாகக் குடியிருக்க வழிவகை செய்யப்பட வேண்டு மென்றால், இந்திய குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். ஏற்கெனவே பங்களாதேஷ் அகதிகள் குறித்த ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நமது உச்ச நீதிமன்றம், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அகதிகளின் குடியுரிமை குறித்து ஒட்டுமொத்தமாக அரசு முடிவெடுப்பது சரியல்ல என்ற பொருள்படப் பேசியிருப்பது கவனிக்கத் தக்கதாகும். இங்குள்ள ஈழத் தமிழ் அகதிகள் இங்கேயே நிரந்தரமாகத் தங்க வைக்கப்பட வேண்டுமென்றால் ஒவ்வொருவரையும் தனித்தனியே விண்ணப் பிக்கச் செய்து அவர்களுக்குக் குடியுரிமை கொடுக்க வகை செய்யவேண்டும். அதற்கேற்ப இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தான் அகதிகள் விஷயத்தில் மத்திய அரசு மேற் கொண்டுள்ள நடவடிக்கையை நாம் இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்துவதோடு மட்டுமின்றி, மேலும் சில அழுத்தங்களை மத்திய அரசுக்குத் தமிழக அரசு கொடுக்கவேண்டும். அகதிகள் தொடர்பாக ஐ.நா. சபை 1951 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தங்களில் இந்தியா இது வரை கையெழுத்திடவில்லை. அவற்றில் கையெழுத்திடுமாறு இந்திய அரசைத் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு. பி.என்.பகவதி அவர்களால் 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'அகதிகள் குறித்த தேசிய சட்டத்தை' உடனே நிறைவேற்ற வேண்டுமெனவும்; அகதிகளுக்கான ஐ.நா. சபையின் அமைப்பான யு.என்.ஹெச்.சி.ஆர். இந்தியாவில் சட்டபூர்வமாக செயல்பட அனுமதிக்க வேண்டுமெனவும் மத்திய அரசை முதல்வர் வலியுறுத்த வேண்டும்.

மத்திய அரசிடம் குடியுரிமை உள்ளிட்ட விஷயங்களுக்காக தமிழக அரசு வலியுறுத்துவது சரியானதுதான். ஏனென்றால், அது மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விஷயமாகும். ஆனால், இங்குள்ள அகதிகளுக்கு கௌரவமான வீடுகளைக் கட்டித் தருவது தமிழக அரசின் அதிகார வரம்புக்கும், சக்திக்கும் உட்பட்ட விஷயமாகும். அது போலவே, இங்குள்ள அகதிகள் சுதந்திரமாக நடமாடவும், சொந்தமாகத் தொழில் செய்ய வும், இங்கே அவர்கள் சொத்துகளை வாங்க அனுமதிப்பதும்கூட மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதுதான். ஏற்கெனவே, ஈழத் தமிழ் அகதிகளுக்கு எண்ணற்ற நன்மைகளைப் புரிந்து வருகின்ற தமிழக முதல்வர், அவர்களுக்கு இத்தகைய வசதி களையும் ஏற்படுத்தித் தந்து தாய்த் தமிழகத்தின் இதயத்தில் ஈரம் வற்றிவிடவில்லை என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். இதை அவர் மட்டுமே செய்ய முடியும்!

எம்.எல்.ஏ.ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)

நன்றி விகடன்

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top