ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்.
நேர்கண்டவர்: பி.வீரசிங்கம்
சிவநாதன் கிஷோர் வன்னி மாவட்ட மக்களைப் பொறுத்தவரையில் நன்கு அறிமுகமானவர். வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் சமாதான நீதவானாகவும் மக்களால் அறியப்பட்டவர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளைத் தலைவராகவும், வடக்கு கிழக்கு இணைப்பாளராகவும், கொழும்பு ஆளுநர் சபையில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஓரேயொரு தமிழ் உறுப்பினராகவும், வவுனியா ரோட்டரி கழகத் தலைவராகவும் இருந்தவர். போர்ச் சூழல்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்.
கேள்வி: பொதுச் சேவையில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிaர்கள். அரசியலில் பிரவேசிப்பதற்கான காரணம் என்ன?
பதில்: கடந்த 14 வருடங்களுக்கு மேலாக மக்களுக்காக சேவையாற்றி வருகிறேன். யுத்த காலத்தில் போக்குவரத்து செய்ய முடியாதிருந்த போது செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பல்வேறு உதவிகளைச் செய்தேன். இந்நிலையில் 2004ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு மக்களுக்கான எனது சேவையை தொடர்ந்து செய்து வருகிறேன்.
மே மாதம் 19ம் திகதிக்கு முன்னர் ஒரு கஷ்டமான நிலையில் எதையும் செய்ய முடியாதிருந்தது. கஷ்டங்களுக்கு மத்தியில் சேவையாற்றினேன். இப்போது நிலைமைகள் மாறியுள்ளன.
கேள்வி: நிவாரணக் கிராமங்களுக்கும் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் நீங்களும்இடம்பெற்றிருந்தீர்கள். தற்போது அங்கு நிலைமைகள் எப்படியிருக்கின்றன.
பதில்: வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மக்கள் இடம்பெயர்ந்த அவ்வேளையில் ஜனாதிபதியையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவையும் சந்தித்து அவர்களைச் சென்று பார்ப்பதற்கு அனுமதி கோரினேன். அவர்களும் அனுமதியளித்தார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இப்போதுதான் முதல் தடவையாக முகாம்களைப் பார்வையிட்டுள்ளது.
இந்தளவு தொகையில் மக்கள் இடம்பெயர்ந்து வருவார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவில்லை. மக்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருந்ததால் அங்கு இடநெருக்கடி, உட்பட பல பிரச்சினைகள் அப்போது காணப்பட்டன.
இந்தத் தடவை சென்று பார்த்த போது நிலைமை முற்று முழுதாக மாறியிருக்கிறது. மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கையை அரசாங்கம் செய்து வருகிறது. இதனால் இடப்பிரச்சினை இல்லை. குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறார்கள். எது எப்படியிருப்பினும் இருக்கும் அந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டுமென்ற ஆவலுடன் இருக்கிறார்கள்.
கேள்வி: மீளக்குடியமர்த்துவதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன.
பதில்: அரசாங்கம் இவ்வளவு விரைவில் மக்களை மீளக்குடியமர்த்தும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கொடுத்த அழுத்தங்கள், அவர்களுடன் அடிக்கடி நடத்திய பேச்சுவார்த்தைகள் காரணமாக துரிதமாக மக்கள் மீளக்குடியமர்த்தப் படுகிறார்கள் என அறிகிறேன். தை மாதம் 30ம் திகதிகளிடையில் எஞ்சிய மக்களை மீளக்குடியமர்த்தப் போவதாக கூறியிருக்கிறார்கள். அது நல்ல விடயம்.
அந்த மக்களுக்குப் பல தேவைகள் இருக்கின்றன. உயிர், உடைமைகளை இழந்து வந்திருக்கிறார்கள். மீண்டும் அவர்கள் புது வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். தங்களது புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான ஆரம்பக் கட்டம் இது. இப்போது முகாமிலிருந்ததை விட மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். மீள்குடியேறுவோருக்கு இருபத்தையாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
உடனடியாக ஐயாயிரம் ரூபா, வங்கிக் கணக்கில் இருபதாயிரம் ரூபா இடப்பட்டுள்ளது. அது போதாது, என்றாலும் இது தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவிடம் பேசிய போது மூன்று இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பெறுமதி யான வீடுகளை வெகுவிரைவில் நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். முதலில் அவர்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர் படிப்படியாக அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உதவி செய்வதாக அவர் கூறினார்.
கேள்வி: மீள்குடியேறிய மக்களை சந்தித்தீர்களா?
பதில்: மக்கள் தங்களுடைய வீட்டிற்குச் சென்று கஞ்சியை குடித்தாலும் சந்தோஷமாக இருப்பார்கள். முகாம்களில் என்னதான் பிரியாணியை கொடுத்தாலும் அது குறைவாகவே இருக்கும். மீளக்குடியேறிய மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
கேள்வி: அந்த மக்களின் மனநிலைகள் எப்படியிருக்கிறது.
பதில்: கடந்த 33 வருடங்களாக அந்த மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பல இழப்புகளை சந்தித்தவர்கள். பல கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்தவர்கள். உறவுகளை உடைமைகளை இழந்து அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்வதென்பது சாதாரண விடயமல்ல. என்றாலும் தாம் உயிர் தப்பியிருக்கிறோம் என்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.
கேள்வி: அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?
பதில்: அரசாங்கம் அகதிகள் விடயத்தில் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் வரவேற்கக் கூடியது என்றே கூற வேண்டும். என்றாலும் இன்னும் சில திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. அனைத்தும் நன்றாக இருப்பதாக நான் சொல்ல வரவில்லை.
ஐந்து, பத்து வருடங்கள் முகாமில் இருக்கப் போகிறோம் என்றிருந்த மக்களை மீளக்குடியமர்த்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
தொண்ணூறில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் வவுனியா, பூந்தோட்டம் பகுதி முகாம்களில் இருக்கின்றனர். அவற்றுடன் ஒப்பிடுகையில் இவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவது என்பது பெரிய விடயமே! நான் எதைப் பார்த்தேனோ அதையே பீறினேன். சரி என்றால் சரியென்றுதானே கூற வேண்டும். அகதிகள் விடயத்தில் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானவையே.
கேள்வி: யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் பல விதத்திலும் நொந்து போயி ருக்கிறார்கள். இவ்வாறான சூழ்நிலை யில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேசுவதென்பது சாத்தியமா?
பதில்: இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேசுவதற்கு இது நேரமல்ல. மக்கள் முற்று முழுதாக அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். சொந்த இடங்களில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தில் மேம்பாடடைச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீண்டகாலமாக நீடீத்த இந்த யுத்தம் ஒரு முடிவு மில்லாமல் போய்விட்டது. இனப்பிரச்சி னையின் தீர்வுக்கான தீர்வுத் திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
எம்மைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வென்ற பின்னர் ஒரு முடிவை எடுப்பார். நிரந்தரமான தீர்வுத் திட்டமொன்றை கொடுக்க வேண்டுமென பல தடவைகள் கூறி வந்திருக்கிறார். பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனம் என்றில்லை என பகிரங்கமாக கூறியிருக்கிறார். எங்கு சென்றாலும் தமிழ் மொழியிலும் உரையாற்றுவது நல்லதொரு விடயம். இதனை செயலிலும் அவர் காட்டுவார் என நம்புகிறோம். யுத்தம் முடிந்து நாடு சுமுகமானதொரு நிலைக்கு வந்திருக்கிறது. ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் இந்த இனப்பிரச் சினைக்கு ஒரு தீர்வைக்காண முடியுமென நம்புகிறேன்.
கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் கூட்டமைப்பின் பலம் எவ்வாறு இருக்குமென கருதுகிaர்கள்?
பதில்: மக்கள் எம்மோடுதான் இருக்கிறார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் நாம் எல்லாவற்றையும் இழந்திருந்த போது உள்ளூராட்சி தேர்தல் வந்தது. இதனை ஒரு பரீட்சார்த்தமாகவே அரசாங்கம் நடத்தியது. வவுனியா நகர சபைக்கு யாழ். மாநகர சபைக்கும் என நடத்தப்பட்ட தேர்தலில் நாங்கள் வவுனியா நகர சபையை வென்றோம். யாழ். மாநகர சபையையும் வெல்லக்கூடிய நிலை இருந்தது. மக்கள் வாக்களித்திருந்தால் அது பெரிய வெற்றியாக இருந்திருக்கும். அப்படியிருந்தும் எட்டு ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தோம். இது எங்களுக்குப் பெரிய வெற்றி என்றே கருதுகின்றோம்.
கேள்வி: கடந்த காலங்களைப் போலவே யுத்தம் முடிவடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தற்போதும் தமிழ் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படுவதாகத் தெரியவில்லையே?
பதில்: கடந்த காலங்களில் பல குழுக்களாகப் பிரிந்து நின்றாலும் ஒரு குறிக்கோளுடன் போராடினர். பின்னர் அவர்களுக்குள் இன்னும் பல குழுக்களாகப் பிரிந்து சண்டைகள், கொலைகள் எல்லாம் நடந்துமுடிந்து விட்டன. மே 19ம் திகதிக்குப் பின்னர் நாங்கள் பல தடவைகள் பேச்சுக்களை நடத்தினோம். ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினோம். எமது மக்கள் ஒன்றாக இருந்த வரலாறு இல்லை. எமது முயற்சி களைக் கைவிட வில்லை. அனைவரும் ஒன்றிணைந்தால் பலமாக இருக்கும். அதற்கான காலம் வெகு விரைவில் வரும் என்றே நினைக்கின்றேன்.
கேள்வி: தேசிய அரசியலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாததன் காரணமாக தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் இணைந்து தமிழ்ப் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக் கைகளை முன்னெடுக்க முடியாதிரு ப்பதாக கருத்து நிலவுகிறது. தேசிய அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளா திருப்பதற்கான காரணமென்ன?
பதில்: எமது அரசியல்வாதிகள் மத்தியில் இவ்வாறான நிலை இருப்பது உண்மைதான். அரசின் பக்கம் போனால் மக்கள் நிராகரித்து விடுவார்கள் எனக் கருதுகின்றனர். ஆனால் நான் பாராளுமன்றத் தேர்தலில் வந்ததன் பின்னர் அரசுடன் சேர்ந்து பல விடயங்களைச் செய்திருக்கிறேன். வவுனியா மாவட்டத்தில் ஒரு தாதியர் பயிற்சிக் கல்லூரியை கொண்டு வந்திருக்கிறேன். மன்னார் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, 150 ஏக்கர் நிலப்பரப்பில் வவுனியாவுக்கான வளாகத்தை நிறுவவும் அதனை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்குமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். கடந்த காலங்களில் எமது மக்கள் கைது செய்யப்பட்டு கொழும்புக்கும் அநுராதபுரத்திற்கும் கொண்டு செல்லப்பட்டனர். இப்போது வவுனியாவிலேயே நீதியமைச்சினால் கட்டப்பட்டுள்ள சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான வேலைகளை நாம் அவர்களுடன் இணைந்து தான் செய்ய முடிகிறது.
அவர்களுடன் பேசி நல்ல விடயங்களைச் செய்யலாம். அதற்கு அவர்கள் முழு ஆதரவையும் செய்திருக்கிறார்கள். தெற்கிலுள்ள அரசியல் தலைமைகளுடன் இணைந்து ஒரு உறவுப் பாலம் அமைக்க வேண்டியது அவசியமாகும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment