பம்பலபிட்டி கடலில் பொலிசாரினால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகுமாரனிற்கு அஞ்சலியும் கண்டன கூட்டத்திற்கும் மனோ கணேசன் அழைப்பு
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்நாட்டிலே இன்று இத்தகைய காட்டுமிராண்டி கலாசாரம் வேகமாக வளர்த்து வருகின்றது. இந்த கொலை சம்பவத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி ஒருவரே முன்னின்று இத்தகைய பாவ காரியத்தை செய்து முடித்திருப்பதை கண்டு முழு நாடுமே தலைகுனிய வேண்டியுள்ளது.
கையெடுத்து வணங்கி உயிர் பிச்சை கேட்ட 26 வயது இளைஞரை அடித்து கடலில் தள்ளிய காட்சியை தொலைக்காட்சிகளில் செய்திப்படமாக பார்த்து அகில இலங்கையும் அதிர்ச்சியடைந்துள்ளது.இந்த சம்பவத்தின் காரணமாக கைது இடம்பெற்று இருந்தாலும், இத்தகைய அராஜகப் போக்கை நாம் கண்டிக்காமல் அமைதியாக இருப்போமானால், இது தொடர்கதையாக மாறிவிடும். ஏற்கனவே அங்குலான பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸ் அராஜகத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கமுடியாது.
எனவே அனைத்து தரப்பினரும் எதிர்வரும் புதன்கிழமை 4ம் திகதி பகல் 12.00 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுக்கூடி எமது சாத்வீக எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்.என திரு மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment