சனீஸ்வரன் கொஞ்சம் சிந்தியுங்கள்
தமிழ் அரசியற் சூழலிலும் தமிழ் ஊடகச் சூழலிலும் தொடர்ந்து நிலவும் அராஜகத்தனம் அல்லது குருட்டுத்தனம் என்பது எப்போதும் தமிழ் மக்களையே பலவீனப்படுத்துகிறது!
ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றில்லை. ஆயுதங்களின் மூலம்தான் ஜனநாயகத்தை மறுக்கமுடியும் என்றுமில்லை. எமது மக்களின் மூலம்தான் ஜனநாயகத்தை மறுக்கமுடியும் என்றுமில்லை எமது சமூகத்தில் பலரிடம் அராஜக மனோபாவமும் ஜனநாயக மறுப்புக் குணமும் உண்டு. இந்தக் குணங்களின் அடிப்படையில் இப்போது இணையங்களில் தாறுமாறாக ஏராளம் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அவரவரின் மனம் போனபோக்கில் விருப்பு வெறுப்புக்களின்படி எந்தவிதமான முன்யோசனைகளுமின்றி இவர்கள் எழுதித்தள்ளுகிறார்கள். இவற்றால் சனங்களுக்கு உருப்படியாக எதுவும் கிட்டுவதில்லை ஆனால், இவ்வாறு எழுதப்படுகின்ற கட்டுரைகளிலும் விமர்சனங்களிலும் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலாக மாற்று யோசனைகள், தீர்வுகளை இந்த ஜாம்பவான்கள் ஒருபோதும் வைப்பதில்லை.
நெருப்பு.கொம், தமிழ்வின் போன்ற இணையத்தளங்களில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு சனீஸ்வரன் என்பவர் எழுதியிருக்கும் பகிரங்க மடலும் ஏறக்குறைய இந்த வகையினதுதான். இதே மனோபாவம், இதே குணவியல்பின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதே.
பொதுவாக தமிழர்களுக்கு அரசியல் சரியாகக் கையாளத்தெரியாது என்று சொல்லப்படுவதுண்டு. இல்லையென்றால் அறுபது ஆண்டுகாலம் போராட்டத்தின் பின்னர் அவர்கள் இப்படியொரு தத்தளிப்பு நிலையில் திசைதடுமாறித் தவித்துக் கொண்டிருப்பார்களா? தமிழர்களால் ஜனநாயகத்தை முறையாகப் பேணமுடியாது. அவர்களுக்கு ஊடகங்களில் அதற்குரிய பண்பாட்டுடன் அவற்றை வளர்த்தெடுக்கவும் தெரியாது. அந்தப் பண்பாட்டில் வளரவும் தெரியாது. அதிகம் ஏன்? விடுதலைப் போராட்டத்துக்கெனத் தூக்கிய ஆயுதத்தைத்தான் ஒழுங்காக இலக்கை நோக்கிக் கையாளத் தெரிஞ்சுதா? இந்த மாதிரி நியாயபூர்வமான கேள்விகளை எழுப்பினால் உடனடியாக ஏதாவது வசைபாடி முத்திரை குத்தி எதிரி, துரோகி, ஒட்டிப்பிழைப்போர், இன்னும் அது இது என்று சொல்லி தீர்பளித்து விடுவார்கள். நம்முடைய ஜனநாயகத்தின் “விறுத்தம்’ அப்படி என்ன செய்வது உங்கள் முதுகிலேயே நாங்களே அடித்துக்கொள்ளும் வீரத்தை கொண்டாடாமல்? சரி, இந்தப் பகிரங்கக் கடிதத்துக்கே வருவோம். எல்லவகையான குறைபாடுகளின் மத்தியிலும் இந்தக் கடிதம் சில விசயங்களைச் சொல்கிறது.
1. புலிகளின் வீழ்ச்சி பற்றிய துக்கம்
2. பிரபாகரன் மீதான அபிமானம்
3. எல்லாத் தமிழ்கட்சிகளும் ஒன்றுபடவேண்டும் என்ற கோரிக்கை
4. உருவாகியிருக்கும் புதிய சூழலில் டக்ளஸ் தேவானந்தாவே அரசியல் தலைமைத்துவத்துக்குரியவர் என்ற தெரிவு. ஆனால், அவர் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உண்டென்று சுட்டிக்காட்டுதல்.
5. டக்ளஸ் தேவானந்தாவுக்கு உருவாகிவரும் செல்வாக்குப் பற்றிய அச்சம்.
6. வேலைதேடும் பட்டதாரிகளும் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களும் கேணயர்கள் என்று நினைத்துக் கொண்டே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இப்படி இன்னும் சில விசயங்கள் உண்டு. இவை எல்லாவற்றினதும் பின்னணியில் இயங்கும் மனோபாவத்தை முதலில் விளங்கவேண்டும். புலிகளின் வீழச்சியையும் பிரபாகரனின் அழிவையும் இவ்வாறான பலர் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அது வரலாற்று விதிப்படி நடந்துவிட்டது. 1980 களின் முற்பகுதியிலேயே புலிகளை ‘பாசிசப் புலிகள்’ என்று பல தரப்பினரும் தெரிவித்தனர். இதன் காரணமாக அவர்கள் “துரோகி” முத்திரை குத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். மிஞ்சித்தப்பியவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். ஆனால் புலிகளின் போக்குப் பற்றியும் அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றியும் தமது விமர்சனங்களையும் கண்டனங்களையும் முன்வைத்தே வந்தனர். பாசிசம் இறுதியில் அழிவையே சந்திக்கும் என்பதற்கமைய புலிகளின் இறுதிமுடிவு அமைந்தது. பிரபாகரனின் நடவடிக்கைகளின் இறுதிவிளைவு என்ன என்பதை வன்னி மக்கள் உட்பட சிந்திக்கும் அனைவரும் நன்றாக அறிவர். வரலாற்றில் யாருடைய தியாகங்களை யார் மதிக்கவில்லை என்பதை சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. இந்த மக்களும் விடுதலைக்காகப் போராட வந்த சகல அமைப்புகளின் போராளிகளும் செய்த தியாகங்களை பிரபாகரன் எந்த வகையான பொறுப்புமில்லாமல் நாசமாக்கிவிட்டார். அதுமட்டுமல்ல, தன்னைத்தவிர வேறு சக்திகள் எதுவும் இருக்கக்கூடாது என்ற ஏகோபித்த மனப்பாங்கில் செயற்பட்டு ஏனைய தரப்புக்களையும் அழித்து இன்று எல்லாவற்றையும் சூனியமாக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.
உண்மையில், தெளிவாகச் சிந்திக்கும் எவரும் பிரபாகரனின் தவறுகளையே இனங்காணுவர். அவர் மட்டுமல்ல கற்பனையில் தமிழ்த்தேசியம். தனிநாடு, உரிமைப்போர் என வாதிடுவோhரும் கனாக்காணுவோருமே மாபெரும் குற்றவாளிகள். இந்தச் சனங்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்தார்களோ அவ்வளவையும் நாசமாக்கி அழிந்து நிர்க்கதியாக்கி விட்டிருக்கிறார்க்ள இவர்கள். பிரபாகரனுக்காக உலகம் முழுவதிலும் உள்ள தமிழன் கண்ணீர் வடிப்பதொன்றும் புதினமல்ல.ஏனெனில், தமிழ் அரசியல் தமிழ் ஊடகவெளியும் அத்தகைய சீரழிவிலும் குருட்டுத்தனத்திலும் மாஜாவிக் கற்பனையிலுமே ஊறிக்கிடக்கின்றன. எனவே. ‘பொத்தம் பொதுவாக’ உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் பிரபாகரனுக்காக கண்ணீர் வடிக்கிறார்கள் என்று சொல்லி இன்னொரு மாயவிம்பத்தை – ஏகோபிதத்தை கட்டமைக்கலாம். உண்மையில் பிரபாகரனைப் பற்றியும் புலிகளைப் பற்றியும் இதுவரையில் எத்தனையோ எதிர்க்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக்களும் விமர்சனங்களும் மிக செறிவானவையும் கூட. அதேவேளை புலிகளை எதிர்ப்போர் எப்போதும் பன்மடங்கில் உண்டு. தமக்கு எதிர்ப்பு வளையங்கள் இல்லையென்றால் புலிகள் எதற்காக கட்டுப்பாடுகளையும் பிரயோகிக்க வேண்டும். என்வே, சனீஸ்வரன் தனக்கிருக்கும் புலிவியாதியை நல்ல மருத்துவமனையில் காட்டிச் சுகப்படுத்திக் கொள்ளவேணும்.
அடுத்தது. எல்லாத்தமிழ்கட்சிகளும் ஒன்றுபடவேணும் என்ற அவருடைய ஆசையில் ஒரளவு நியாமுண்டு. இதற்கு எல்லாக்கட்சிகளும் தயாரா? கூட்டமைப்புக்குள்ளேயே பல கூடாரங்கள். அதற்குள்ளேயே பல இழுபறிகள் தவிரவும் முஸ்லிம் கட்சிகளிடையே ஏராளப் பிணக்குகள் இந்தச் சிக்களுக்குள் நின்று மேலும் மேலும் சிக்குப்படுவதா? அல்லது காயப்பட்ட மக்களையும் பசியாலும் சனங்களையும் பாதுகாத்துப் பராமரிப்பதா இப்போது அவசியம்? சாத்தியமற்ற விசயங்களில் வாழ்வைப் பணயம் வைக்கும் அரசியல் பாரம்பரியத்தில் இருந்து நோக்கும் போது இந்த மாதிரியான மக்கள் நேய நடவடிக்கைகள் ஒரு பொருட்டாகத் தெரியாது. வெறும்வாய்ப்பேச்சு அரசியலுக்கு கொடுக்கும் மரியாதையை சனீஸ்வரன் மக்களின் தேவைகளுக்கான அரசியலுக்கு கொடுக்கவேண்டும் என்று சிந்திக்கவில்லை. வேண்டுமானால் நாலு வீராவோசவார்த்தைகளை அள்ளிவீசி, இனமானம், தனிநாடு, அடைந்தால் மகாதேவி இல்லையென்றால் மரணதேவி என்று சொல்விடலாம். அதனால் யாருக்கு என்ன லாபம்?
மேலும், இன்று யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு தெருவிலிருந்தும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்புகள் விடுக்கப்படுவது ஒரு இயல்பு. இதுவரையிலும் தமது உள்ளக்கிடக்கையை அடக்கி வைத்திருந்த மக்கள் இப்போது அதை வெளிப்படுத்துகின்றனர். அன்பு பாராட்டுகின்றனர். தமது அரசியல் மாதிரியை உருவாக்க எத்தனிக்கிறார்கள். இதற்கெல்லாம் இதுவரையிலும் யார் தடையாக இருந்தார்கள் என்பதை சனீஸ்வரன் நன்றாகவே அறிவார். இந்த மக்களின் இயல்பான ஜனநாயக விருப்பத்தை மீண்டும் அடக்கி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவே அவர் விரும்புகிறார். ஆனால் அதற்கான சூழல் இல்லை எனவே பக்கரிக்கிறார் வசைபாடுகிறார். பொருமித் தள்ளுகிறார். எதையும் எதிர்த்து விடலாம் யாரையும் கிண்டலும் கேலியும் கூட எளிதிற் செய்துவிடலாம் ஆனால், ஒரு சிறிய காரியத்தைச் செய்வதற்குரிய உழைப்பையும் சிந்தனையும் செலவிடுவதே இங்கே முக்கியமானது. அது ஒரு நெருக்கடிச் சூழலில் இந்தப் பணி இன்னும் சிரமமானது.
சனீஸ்வரன் சொல்வதைப் போல பார்த்தால் தேவானந்தாவை அழைத்துக் கொண்டாடும் மக்கள் கேணயர்கள், பட்டதாரிகள் கேணயர்கள் அவருடன் ஆதரவைப் பெருக்கிக் கொண்டிருக்கும் அத்தனைபேரும் கேணயர்கள் இதை இந்த மக்கள் ஏற்றுக்கொள்ளுவார்களா? அல்லது அப்படித்தான் அவர் சொல்கிறாரா? அப்படியெண்டால் தமிழ்மக்களின் பெரும்பான்மையானோரும் கேணயர்களா?
இன்றைய சூழலில்எத்தகைய அரசியல் வழிமுறை பொருத்தமானது சாத்தியமானது என்று சனீஸ்வரன் விளக்கமளிக்கட்டும். அதாவது நடைமுறைரீதியில் பயனளிக்கக்கூடியது எது என்று அத்துடன் அவரே சொல்வதைப் போல மிகக்குறுகிய கால எல்லையில் பயனளிக்கக் கூடியதாக இன்று இந்த கையறு நிலையை ஏற்படுத்தியது எவருமல்ல வீணே பிறர்மீது பழியைப்போட்டு தாம் தப்பித்துக் கொள்ளும் ஒரு அரசியல் பாரம்பரியம் தமிழ்ச் சூழலில் உண்டு. அதையே சனீஸ்வரன் செய்கிறார். துரோகி – தியாகி என்ற பிரிகோடுகளை வைத்து எல்லாவற்றையும் அளக்கும் பழைய முறை. இதில் எப்போதும் தாம் தியாகிகள் பக்கமே என்பதே இவர்களது நிலைப்பாடு.
பேராசிரியர்கள் சிவசேகரம் சொல்வதைப்போல இவர்கள் ஆட்சியாளர்களுடன் கைகுலுக்குவதும் உடன்படிக்கை செய்வதும் பேரம் பேசுவதும் கொடுக்கல் வாங்கல் செய்வதும் அரசியல் நடத்துவதும் சரி. அது தியாகத்தின் பாற்பட்டது. ஆனால், அதை வேறு எவரும் மக்களின் நலன் கருதிச் செய்தால் அது தவறு அது துரோகம். அதை மன்னிக்க முடியாது. இதில் என்ன நியாயமுண்டு. தமிழரசுக் கட்சி தொடக்கம் கூட்டணி புலிகள் என்று ஏராளம் உதாரணங்களும் சம்பவங்களும் வரலாற்றில் உண்டே.
உரிமை வாங்கித்தாறோம், தனிநாடு அமைத்துத் தருவோம், ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பதில் தவறென்ன? மீண்டும் தமிழனின் பொற்காலமாம் சங்ககாலத்தை கைகளில் தருவோம் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி சனங்களை “உசுப்பேத்தி” அவர்களின் இரத்தச் சூட்டில் குளிர்காயும் தவறான (கேவலம் கெட்ட துரோகத்தனமான) அரசியலை விடவும் சனங்களுக்கு உதவும் அரசியல் நல்லது. இப்பொழுது உடனடியாக தமிழ்மக்களின் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வினை டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமல்ல வேறு எவராலுமே பெறமுடியாது. சனீஸ்வரன் கொண்டாடும் புலிகளால் கூட அதைப் பெறமுடியவில்லையே அதிகம் ஏன் தங்களைப் பாதுகாக்கும் குறைந்த அரசியல் தெளிவும் அணுகுமுறையும் கூட சனீஸ்வரனின் புலிகளுக்கு இல்லாமற் போய்விட்டதே. அடுத்து புலிகளின் பிரதிநிதிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் கூட ஏதாவது உருப்படியான காரியங்களைச் செய்யமுடிகிறதா? அப்படிச் செய்வதற்குரிய சூழ்நிலை இப்போது இல்லை என்று கூட்டமைப்பின் பல எம்.பி மாரும் வெளிப்படையாகவே சொல்கிறார்கள். ஆனால் அவர்களால் தங்களுடைய எம்.பி பதவிகளைத் துறக்க முடியவில்லை. அரசியல் ஆதாயங்களையும் இருப்பையும் கைவிடத் தயாரில்லை இதெல்லாம் சனீஸ்வரன் என்ற குழந்தைக்கு விளங்குவதும் இல்லை, கண்ணில் உறுத்துவதுமில்லை. அவருடைய இனமானத்தில் பங்கத்தையோ பாதகத்தையோ ஏற்படுத்துவதுமில்லை.
இன்று இலங்கை அரசியல் என்பது மிகவும் நெருக்கடி நிலையிலேயே இருக்கின்றது, அதிலும் தமிழ்மக்களின் அரசியல் என்பது இன்னும் நெருக்கடிமிக்கது. ஆனால், மக்கள் முன்பிருந்த போர் அச்சச் சூழலில் இருந்து மீண்டுவிட்டனர். வன்னியிலிருந்த மக்களின் நிலைதான் இன்னமும் துயரத்திற்குரியதாக உள்ளது. அவர்களும் கூடிய விரைவில் ஏதோ வகையில் விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வாரங்களில் இநத விடுகை துரிதமாக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டிருந்த வீதிகள் திறக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கும் வெளியிடங்களுக்குமான பயண நெருக்கடி பாதிக்குமேல் குறைந்துள்ளது. இதெல்லாம் என்ன பெரிய சங்கதிகள் என்று யாரும் கேட்கலாம். எதெல்லாம் இல்லாமல் இருந்தன? எவையெல்லாம் தடைப்பட்டிருந்தனவோ அவையெல்லாம் மீண்டும் கிடைப்பது மகிழ்ச்சிக்குரியது. இது முதற்கட்டம் முதலில் செய்யவேண்டியது எது? அடுத்துச் செய்யவேண்டியது என்ன? என்ற தெளிவு வேண்டும். மக்களின் உடனடித்தேவைகள் என்ன என்ற தெளிவு முதலில் வேண்டும். அது எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு எப்போதுமிருப்பதில்லை. இதைச் செய்யும் தரப்பினரை கொச்சைப்படுத்தும் காரியத்தைத் தவிர அவர்கள் வேறு எதுவும் செய்வதில்லை. இதேவேளை, சனங்களின் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் தாங்கள் மிகச் சுகபோகமாக வாழ்வார்கள். ஜீ.ஜீ பொன்னம்பலம், எஸ்.கே.வி செல்வநாயகம் தொடக்கம் பிரபாகரன் வரை இதில் அடங்கும். ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பிமார் என்ன குறைந்தவர்களா? இவர்களின் அரசியல் செயல்பாட்டினால் இதுவரையில் மக்களுக்கு ஏதாவது நன்மைகள், பயன்கள் கிடைத்திருந்தால் தயவு செய்து சனீஸ்வரனோ அல்லது அவரைப் போல சிந்திப்பவர்களே சொல்லுங்கள்.
வெறுங்கற்பனைகளை விடுத்து, நடைமுறையில் எதையெல்லாம் சாதிக்க முடியுமோ, எவ்வளவைச் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்ய விளைவதே மேல். வெறும் வார்த்தைகளை விடவும் சிறு செயல் பெறுமதியுடையது. அரசாங்கத்துடன் இணைந்து செய்ய வேண்டியதைச் செய்து கொண்டு அரசுக்கு அழுத்தமும் பொறிமுறைக்கு தம்மைத் தயார்ப்படுத்தும் அரசியலே இன்று அவசியம். இதுவே இன்றுள்ள பொருத்தமான தெரிவும் கூட, இதையே ஏறக்குறைய தேவானந்தாவும் செய்கிறார் போலும்.
இதை தமிழ்மக்களிற் பலரும் இன்று புரிந்துள்ளனர். என்பதையே அண்மைக்கால நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. மக்கள் இன்று தேவானந்தாவை நோக்கிச் செல்கின்றனர். தேவானந்தாவும் மக்களிடம் செல்கிறார். மக்கள் மயப்பட்ட அரசியல் வளர்ச்சியொன்று இப்போது உருவாகி வருகிறது. இதில் குறைபாடுகள் இருக்கலாம். அதைச் சுட்டிக்காட்டவும் விமர்ச்சிக்கவும் வேண்டிய பொறுப்பும் கடமையும் எல்லோருக்கும் உண்டுஇ ஆனால் வசைபாடுவது, வக்களிப்பது, துரோகி- தியாகி என பிரபாகரன் பாணியில் வசைபாடி மக்களை மேலும் நிர்க்கதியாக்கும் காரியத்தை யாரும் செய்யக்கூடாது. அதை எவரும் அனுமதிக்கவும் கூடாது அந்தப் பாணியிலான அரசியல் முடிந்துவிட்டது. அது தோற்றுவிட்டது. அதிலிருந்து நாம் பாடம் படிக்கவில்லையென்றால் வரலாறு எம்மை மன்னிக்காது.
மக்கள் மயப்பட்ட அரசிலுக்கு மக்களின் குறைநிறைகள் நிவர்த்திக்கப்படவேண்டும். அதன் மூலம் அவர்கள் இயல்பு வாழ்க்கையை முதலில் வாழ வேண்டும். அந்த வாழ்வை அமைத்துக் கொடுத்துக் கொண்டே அரசியல் உரிமைக்கான அரசியலுக்கு அந்த மக்களைத் தயார்படுத்த முடியும். தமிழர்கள் தோற்றுப்போனதாக யாரும் கருதத்தேவையில்லை. இரண்டாம் உலக மகாயுத்தத்தில் யப்பான் மேற்குலகினால் பாதித்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே அது மேற்குலகத்துக்குச் சமனாக எதிர்ததுடன் அந்த உலகத்துடன் அது அரசியல் பொருளாதார உறவுகளையும் கொண்டிருக்கிறது. இதைவிடுத்து வெறுமனே அமெரிக்காவுக்கும் ஜரோப்பாவுக்கும் எதிராக வசைபாடிக் கொண்டிருந்தால் இன்று யப்பான்; சனீஸ்வரனிடம்தான் சரணடைந்திருக்க முடியும்.
எந்த ஒரு அரசியல் விமர்சனத்தையும் முன்வைப்பதற்கு ஒரு பண்புநிலையும் நாகரிகமும் தேவை. அதை நாம் வளர்த்தெடுக்கவேண்டும். அதுவே சிறந்த ஜனநாயகத்திற்கான உள்ளடக்கம். சிறந்த ஜனநாயகச் சூழல் என்பது அறிவுமயப்பட்டதொரு சமுதாயத்தை உருவாக்கும். அத்தகையதொரு ஜனநாயகச் சூழல் மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. இல்லையென்றால் தேவானந்தாவைப் பற்றி இவ்வாறு எழுதக்கூடிய ஒரு ஜனநாயகம் சனீஸ்வரனுக்குக் கிடைத்திருக்குமா?
மக்களுடன் கலந்து ஒன்றிணைந்திருக்கும் அரசியலே இன்றைய தேவை. அதில் மதவைத் திறந்தலென்ன? தெரிவைக் கூட்டினால் என்ன? எல்லாமே தொண்டு தான்.
தமிழ்ப்பிரியன்
வெளிச்சம்
0 விமர்சனங்கள்:
Post a Comment