ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் போட்டி? ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் வேட்பாளர்களின் வரலாறும்
குமார் பொன்னம்பலத்தின் அரசியல் நடவடிக்கைகளில் முக்கியமாக குறிப்பிடப்படவேண்டிய சம்பவங்கள்பற்றி முதலில் ஆராய்வோம்.
1 வடமாகாண அரசியல் தலைமைகளுக்கு 1970ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து வடமாகாணம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதிக்கத்தின்கீழ் நிர்வகிக்கப்பட்டது எனக்கூறுவது பொருத்தமாகும்.
1970ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வடமாகாணத்தின் அன்றைய பிரதான அரசியல்வாதிகளான ஜி.ஜி பொன்னம்பலம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், முருகேசு சிவசிதம்பரம், ஈ.எம்.வி நாகநாதன் மற்றும் வவுனியாவில் ரீ சிவசிதம்பரம் ஆகியோர் தோல்வியடைந்தனர். மேற்படி அரசியல்வாதிகளின் தொகுதிகளில் தெரிவான உறுப்பினர்களில் சி.எக்ஸ் மாட்டின், ஏ.தியாகராஜா, மற்றும் சி அருளம்பலம் ஆகியோர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் தலைமையிலான அரசுடன் இணைந்தனர். இந்நிலையில் வடமாகாண வெள்ளாள மேலாதிக்க சக்திகளால் தாழ்த்தப்பட்ட சமூகமென ஒதுக்கிவைக்கப்பட்ட சமூகத்தினருக்கென ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் நியமன உறுப்பினராக திரு எம்.சி சுப்பிரமணியம் அவர்களும், கிளிநொச்சி தொகுதிக்கென நியமன உறுப்பினராக சி குமாரசூரியர் அவர்களும் நியமனம் செய்யப்பட்டு திரு குமாரசூரியர் அவர்கள் தபால், தந்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
மேற்படி இரு நியமனங்களும் கட்சிமாறிய மூன்று உறுப்பினர்களும் அடங்கலாக வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் (5) பிரதிநிதிகளும் தமிழரசுக்கட்சியின் சார்பில் (9) பிரதிநிதிகளும் தமிழ் காங்கிரஸின் சார்பில் (1) பிரதிநிதியும் அன்றைய பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர். இது விடயம் வடமாகாண அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாக அமைந்திருந்தது. மேற்படி சம்பவமே 1976 மே மாதம் 14 ந் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கத்திற்கும்(1977)ம் ஆண்டுத் தேர்தலின்போது தமிழீழக் கோரிக்கையினை முன்வைப்பதற்குமான காரணிகளாக அமைந்ததென எமது (24.11.09) செய்தியில் தெரிவித்திருந்தோம்.
அடுத்து 1977ம் ஆண்டு யூலை மாதம் 22 ந் திகதி தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து வடமாகாண அரசியல்வாதிகளால் நடாத்தப்பட்ட தேர்தல்பற்றி ஆராய்வோம்.. அன்றைய நிலையில் வடமாகாணத்தில் அமைந்திருந்த அனைத்து தொகுதிகளிலும் சுமுகமான முறையில் வேட்பாளர்களை நியமனஞ்செய்த கூட்டணியினருக்கு சவாலாக திரு குமார் பொன்னம்பலம் அவர்கள் யாழ் தொகுதியில் களமிறங்கினார். தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் அமைப்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியவை முழுமையாக சங்கமமாகியபோதும் குமார் பொன்னம்பலம் அவர்கள் மட்டும் அதனை ஏற்பதற்கு முன்வரவில்லை.
குறிப்பு –இன்றுவரை புலி ஆதரவாளர்களாலும், புலிக்கூட்டமைப்பினராலும் தாரக மந்திரமாக தமிழ் மக்கள்முன் வைக்கப்படும் (தந்தை செல்வாவின் தமிழீழக் கோரிக்கை) என்னும் மண்ணுக்கான (மக்களுக்கன்றி) போராட்டத்தின் எதிரியாக களமிறங்கிய குமார் பொன்னம்பலம் புலிகளின் தலைவரால் முதன்முதலாக மா மனிதர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
யார் இந்த குமார் பொன்னம்பலம்?
1982 ம் ஆண்டு அக்டோபர் 20 ந் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை வெளிப்படுத்துவதற்காக களமிறங்குவதாககூறி தேர்தலில் தம்மை ஈடுபடுத்தியவர் மொத்த வாக்குகளில் 3%மான (173.934) வாக்குகளை அகில இலங்கைரீதியாகப் பெற்று நான்காவது இடத்திற்கு இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து 1988 டிசம்பர் 19 ந் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய இலங்கையை ஆதரித்து அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் தேர்தல் மேடைகளில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தமைக்காக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் (களுபுத்தா) கறுப்பு மகன் என்னும் கெளரவ பட்டத்தினையும் பெற்றார்.
திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் புலிகளின் ஆதரவினை பெறுவதற்காக வன்னிக் காட்டிற்குள் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் புதல்வரான அநுரா பண்டாரநாயக்கா அவர்களையும் அழைத்துச்சென்று குமார் பொன்னம்பலம் அவர்கள் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியபோதும் அதுவிடயம் பலனளிக்கவில்லை. அதன்விளைவு தேர்தல் மேடைகளில் புலிகள் அமைப்பினருக்கு பாஸிஸ்டுகள் என்னும் பட்டமளிப்பும் குமார் பொன்னம்பலம் அவர்களால் வழங்கப்பட்டது. மேற்படி சம்பவங்களின் பின்னரேயே பிரபாகரனால் மா மனிதர் பட்டம் வழங்கப்பட்டமை இங்கு முக்கியமானதாகும் அதன் பின்னணி என்ன என அறிய விரும்புபவர்கள் எம்முடன் தொடர்புகொள்ளலாம். kumarathurai@kumarathurai.com
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் (26.01.2010)களமிறங்க தயாராகும் சம்பந்தனின் அரசியல் பின்னணி என்ன?
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலர் அமரர் திரு அமிர்தலிங்கம் அவர்களால் அரசியலில் அறிமுகஞ்செய்யப்பட்டு 1977 ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் முன்வைக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கையின் திருகோணமலைத் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றதன்மூலம் பாராளுமன்ற ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்பினைப் பெற்றவரே சம்பந்தன். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 1989, 1994 ஆகிய தேர்தல்களில் தோல்வியுற்ற சம்பந்தன் அக்டோபர் 10 ந் திகதி 2000 ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட முடியாதநிலையில் அவருடைய மருமகன் முறையான சிவபாலன் என்பவரை திருமலையில் களமிறக்கி அத்தேர்தலிலும் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையிலேயே தம்மை பாராளுமன்றப் பலகணியில் அமரவைத்த அமரர் திரு அமிர்தலிங்கம் அவர்களின் கொலையாளியான பிரபாகரனின் தயவினைத் தேடிய சம்பந்தன் பிரபாகரனால் விடுக்கப்பட்ட கட்டளைகளை சிரம்தாழ்த்தி, கரம்கூப்பி எற்றுக்கொண்டதற்கமைய புலிகளுடன் சங்கமமானார். பிரபாகரனால் தமக்கு வழங்கப்பட்ட சலுகையினை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் அதற்கான பிரதி உபகாரமாக சர்வதேசப் பயங்கரவாதியாக சர்வதேச முன்னணி நாடுகளால் முத்திரை குத்தப்பட்ட பிரபாகரனே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகஞ்செய்தார்.
இந்நிலையிலேயே சம்பந்தனின் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பதிவு செய்யப்படாத அரசியல்கட்சி ஒன்று அறிமுகஞ்செய்யப்பட்டது. மேற்படி கூட்டமைப்பில் முன்னாள் ஆயுதக் குழுக்களின் தலைவர்களும், தம்மை நம்பிவந்து ஆயுதமேந்திய பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை பிரபாகரன் என்னும் பயங்கரவாதியின் கொலைவெறி ஆயுதங்களுக்கு பலி கொடுத்த அன்றைய கொலைகாரர்களுமான அடைக்கலநாதன், ஸ்ரீகாந்தா, மாவை சேனாதிராசா, மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற சமூகவிரோதிகளும் இணைந்தனர்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 2001, 2004 ஆகிய தேர்தல்களில் பிரபாகரனின் ஆயுததாரிகளால் வழங்கப்பட்ட வாக்குகளுக்கமைய சம்பந்தன் திருமலை மாவட்டத்தின் அதிகூடிய வாக்குகளைப்பெற்ற உறுப்பினராக பாராளுமன்றம் சென்றார். இந்நிலையில் சம்பந்தனின் தேசியத் தலைவர் புதுமாத்தளனில் (18.05.09)ந் திகதியன்று சங்கமமாக்கப்பட்டமையைத் தொடாந்து யாழ் மேலாதிக்க அரசியல் தலைமைகளுக்கு தலைமை தாங்குபவராக இன்று சம்பந்தன் வலம்வருகின்றார்.
இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தன்னிகரில்லாத் தலைவனாக அன்றைய யாழ் மேலாதிக்க சக்திகளால் சம்பந்தன் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரிய விடயமே! இந்நிலையிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சம்பந்தன் களமிறங்கவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளது. எது எவ்வாறாயினும் சம்பந்தனை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கும் விடயத்தில் மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளே முன்னின்று வழிநடாத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மேற்படி வெளியாகியுள்ள தகவல்கள் நடைமுறைப்படுத்தப்படுமானால் சம்பந்தனின் வெளிநாட்டு வங்கிக்கணக்கில் பல மில்லியன் டொலர்கள் வலம்வரலாமென நம்பப்படுகின்றது.
வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும், ஒடமும் ஒரு நாள் வண்டியிலேறும் என்னும் முதுமொழிக்கமைய அன்று இலங்கைவாழ் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே என முழக்கமிட்ட வடமாகாண மேலாதிக்க அரசியல் தலைமைகளான திரு கணபதி காங்கேசர் பொன்னம்பலம், சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றோரின் சகாப்தம் முடிவுற்று இன்று கிழக்கிலிருந்து புதிய தலைமை உருவாகியுள்ளமை காலத்தின் கட்டாயமா அன்றி சந்தர்ப்பவாதத்தின் சங்கமமா? விடைகாண பொறுத்திருப்போம்.
ஆசிரியர் மஹாவலி.கொம்
0 விமர்சனங்கள்:
Post a Comment