பொன்சேகாவுக்கு யாழில் கிடைத்த வரவேற்பு வடக்கு மக்களின் ஆதரவை வெளிக்காட்டுகிறது-எம்.பி. ரவி கருணாநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க யாழ்ப்பாணத்தில் எமது எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்த உற்சாக வரவேற்பானது வடக்கு மக்களின் ஆதரவை வெளிக்காட்டுகின்றது. வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வடக்கு விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ரவி கருணாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு யாழ்ப்பாண மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த மக்கள் மாற்றம் ஒன்றை கோருகின்றனர். அதிகளவான மக்கள் எமக்கு வரவேற்பளித்தனர்.
யாழ்ப்பாண மக்கள் எதிர்கொள்கின்ற பல பிரச்சினைகள் குறித்து அம்மக்களுடன் கலந்துரையாடினோம். அவற்றுக்கு தீர்வுகாண்பதற்கு ஜெனரல் சரத் பொன்சேகா உறுதியளித்தார். முக்கியமாக வடக்கு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் பாரிய நம்பிக்கையை வைத்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்களின் ஆதரவு எதிரணியின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு கிடைக்கும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment