கஸ்ரோவின் இளவரசர்களை நம்பி மோசம் போன மலேசிய பொறுப்பாளர் ராஜன்
விடுதலைப்புலிகளின் மலேசிய பொறுப்பாளரான “மலேசியா ராஜன்” கடந்த டிசம்பர் இறுதி நாட்களில் மலேசிய விமான நிலையத்தில் வைத்து முதலில் கைதுசெய்யப்பட்டார். தனது குடும்பம் சகிதமாக பிலிப்பைன்ஸ்சில் தலைமறைவாக இருந்துவிட்டு மலேசிய திரும்புகையில் மலேசிய புலனாய்வுப்பிரிவினரிடம் கைதானார்.கேபியின் கைதை தொடர்ந்து மலேசியாவை விட்டு தப்பியோடிய ராஜன் நீண்ட காலமாக மலேசிய புலனாய்வுப்பிரிவின் வலைவிரிப்பில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளின் உறுப்பினரான மலேசியா ராஜன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 42)அவரது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவியையும் பிள்ளைகளையும் விடுதலை செய்து விமானநிலையத்துக்கு வெளியே செல்ல அனுமதித்த மலேசிய நாட்டு குடிவரவு மற்றும் புலனாய்வு பிரிவினர் ராஜனை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
கடந்த ஒருமாதகாலமாக மலேசியாவில் விசாரணைக்குட்படுத்திய மலேசிய புலனாய்வுப்பிரிவினர் ராஜனுடன் இணைந்து செயற்படும் மலேசிய குடியுரிமை கொண்ட சிலரையும் கைதுசெய்துள்ளதாக மறுஆய்வுக்கு தெரியவருகிறது. மலேசியாவை மையங்கொண்டு செயற்படும் புலிகளை கட்டுப்படுத்தும் மலேசிய புலனாய்வுப்பிரிவினருக்கு சிறிலங்காவின் நாடுகடந்த புலனாய்வுத்துறையும் கூட்டாக சேர்ந்து இந்த நடவடிக்கையில் கடந்த பல மாதங்களாக ஈடுப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையின் நிமித்தம் அனைத்துலக செயற்பாட்டில் இருந்த வன்னியில் இராணுவத்திடம் சரணடைந்த புலிகளும் மலேசியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக நம்பகமான கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மலேசியாவில் தனது விசாரணையை முடித்துக்கொண்ட மலேசிய புலனாய்வுப்பிரிவு நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ராஜனை ஒப்படைத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஆனால், நேற்று காலை கொழும்பில் வைத்து அவரை கைது செய்ததாக அறிவித்துள்ள சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர், மலேசியா ராஜனை தாம் பல ஆண்டுகளாக தேடிவந்ததாகவும் -
அவர் கண்ணன் என்ற பெயரிலும் செல்லத்துரை சாந்தகுமார் என்ற பெயரிலும் பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார் என்றும் 1996 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை சாம விகாரைக்கு அருகாமையில் வெடிமருந்துகள் அடங்கிய லேடன் வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் முதல் உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டுவந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்..
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான இவர் அந்த அமைப்பினருக்கு ஆயுத வழங்கல்களை மேற்கொள்ளுதல், விடுதலைப்புலிகளின் புலனாய்வுபிரிவினரை கொழும்புக்கு கூட்டிவருதல் போன்ற செயற்பாடுகளை மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டுவந்தார் என்றும் அவர் கூறினார்.
சிறிலங்கா அரசின் தடுப்புக்காவலிலுள்ள கே.பி. மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி இவர் கைது செய்யப்பட்டாரா என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி, தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகளுக்க பங்கம் விளைவிக்கக்கூடி பதில்களை தாம் வெளியிடவிரும்பவில்லை என்றார்.
மே18 க்கு பின்னர் அனைத்துலக கஸ்ரோவின் இளவரசர்களின் தொடர்பில் இருந்து வந்த ராஜனின் கைது கடந்த டிசம்பர் இறுதி நாட்களில் நிகழ்ந்தது.எனினும் அது பற்றிய எந்த கரிசனையின்றி மௌனம் காத்து வந்த கஸ்ரோவின் இளவரசர்கள் இந்த கைதின் பின்னணியில் இருப்பதாகவும் பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.
மறு ஆய்வு
0 விமர்சனங்கள்:
Post a Comment