தமிழ்பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகி வரும் தருணம்
ஏ9 வீதியூடாக இரவு நேரப் போக்குவரத்துக்கு நேற்று முன்தினம் முதல் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை வடபகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாகவுள்ளது. யாழ்ப்பாணத்துக்கும் அதன் துயரங்களுக்கும் எவ்வாறு நீண்டதோர் வரலாறு உள்ளதோ?
அதேபோன்று ஏ9 வீதிக்கும் நீண்ட வரலாறு உள்ளது.
யாழ்ப்பாணத்துக்கான பிரதான நுழைவாயிலாகவும் தரைவழி மார்க்கமாகவும் விளங்கும் ஏ9 வீதி இழுத்து மூடப்பட்ட நாள் தொடக்கம் வடபகுதி தமிழ் மக்கள் எதிர்நோக்கிய துயரங்கள் சொல்லும் தரமன்று. பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி மனோ ரீதியாகவும் அவர்கள் வெகுவாகப் பாதிக்கப் பட்டிருந்தனர்.
போக்குவரத்து ஸ்தம்பித்ததன் வாயிலாக அவசர மருத்துவ சிகிச்சைக்கேனும் கொழும்புக்கோ நாட்டின் இதர பகுதிகளுக்கோ செல்ல முடியாது பலர் உயிரிழக்கவும் நேர்ந்தது. அதுமாத்திரமன்றி உணவுப் பொருட்களை தரை வழியாக கொண்டு வரமுடியாது போனதையடுத்து அவற்றின் தட்டுப்பாடும் விலையேற்றமும் அதிகரித்ததன் காரணமாக மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்க நேர்ந்தது.
இதேவேளை, விமான சேவை ஆரம்பிக்கப்பட்டபோது பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை வழங்கி மக்கள் பெரும் சீரழிவுகளுக்கு மத்தியிலேயே யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்ய முடிந்தது. இவ்வாறான பின்னணியில் ஏ9 வீதி டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இதுவரை காலமும் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த வருடம் மார்ச் மாதம் ஏ9 வீதி சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்துக்குப் பின்னர் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த நிலையில், இராணுவ தேவைக்கு மாத்திரமே திறந்துவிடப்பட்டிருந்தது. அதனையடுத்து, மக்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கிணங்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏ9 வீதி காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை திறந்துவிடப்பட்டது.
இருந்த போதிலும் அது மக்களுக்கு பூரண பயனைத் தோற்றுவிக்கவில்லை. அதன் காரணமாக ஏ9 வீதி 24 மணிநேரம் திறக்க வேண்டிய அவசியம் குறித்து பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பஷில் ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஏ9 வீதி இரவு நேர போக்குவரத்துக்கு
புதன்கிழமை நள்ளிரவு தொடக்கம் திறந்து விடப்படும் என்று கூறியுள்ளார்.
அதேபோன்று, உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக கடந்த பல வருடங்களுக்கும் முன்னர் வெளியேற்றப்பட்ட குடும்பங்களில் 506 குடும்பங்களைச் சேர்ந்த 1862 பேரை மீள அப்பகுதியில் குடியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். மீள்குடியேற்றமும்,
சுதந்திரமான போக்குவரத்தும் வடபகுதி மக்களைப் பொறுத்தமட்டில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகவுள்ளன.
எனவே, மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்துவதுடன், மக்கள் தங்கள் சகஜ வாழ்க்கையை ஆரம்பிக்க ஏற்ற சூழலை விரைவில் மேற்கொள்ள வேண்டும். யுத்தத்தின் கொடூரம் காரணமாக அனைத்தையும் இழந்த வடபகுதி மக்கள் உப்புச் சிரட்டை தொடக்கம் அனைத்தையும் தேடிப்பெற்றே தங்கள் வாழ்க்கையை மீள ஆரம்பிக்க வேண்டியவர்களாகவுள்ளனர் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் நினைவில் கொள்வது அவசியமாகும்.
உண்மையிலேயே வடக்கில் வசந்தம் வீச வேண்டுமானால் முதலில் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை இனங்கண்டு அவற்றை அப்பிரதேச மக்களைக் கொண்டே மேற்கொள்வது இன்றியமையாதது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எந்தவொரு அபிவிருத்திக்கும் உட்படாத பிரதேசத்துக்கு சாட்சியமாக வடபகுதி இருந்து வருகிறது.
எனவே, அவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பதன் வாயிலாகவே மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக் காணக் கூடியதாக இருக்கும். இதுவரை இருந்துவந்த கட்டுப்பாடுகள் தற்பொழுது மெல்ல தளர ஆரம்பித்துள்ள நிலையில், அதன் மூலம் மக்களின் வாழ்க்கை முன்னேற உரிய சந்தர்ப்பங்களை வழங்குவது அவசியமாகும்.
வடபகுதி இளைஞர்கள் யுவதிகள் வேலைவாய்ப்பின்றியும், வருமானமின்றியும் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, அது குறித்து உரிய கவனம் செலுத்துவது மிகவும் இன்றியமையாததாகும். உள்ளூரிலேயே தொழில்வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகளை அமைக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் அரசாங்கம் காலம் தாழ்த்தாது முன்வரவேண்டும்.
கடந்த காலங்களில் வடபகுதியில் இருந்து வந்த ஓரிரு தொழிற்சாலைகளும் இடம்தெரியாது முற்றாக தூர்ந்து போன நிலையில், பாடசாலைகள், அரசாங்க அலுவலகங்கள், மருத்துவமனைகள் என்பனவும் யுத்த நடவடிக்கைகளின் போது பாதிக்கப்பட்டு சேதமடைந்து காணப்படுகின்றன.
இவற்றைப் புதுப்பித்தேனும் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியையும், எழுச்சியையும் உருவாக்க சாத்தியமான நடவடிக்கை எடுப்பது இன்றியமையாதது.வடபகுதி அபிவிருத்தியோ அன்றேல் மக்களின் அடிப்படை தேவைகளோ இன்று கேட்டு மன்றாடிப் பெறும் நிலைக்கும் கிடைப்பதை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலைக்கும் வந்துள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். நாட்டின் இதர பகுதிகளுக்கு சமனாக வடபகுதியையும் அபிவிருத்தி செய்வதன் வாயிலாகவே அப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன் நாட்டின் தேசிய வருமானத்தையும் அதிக>க்கக் கூடியதாக இருக்கும்.
எவ்வாறிருந்தபோதிலும், தமிழ்பேசும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கள் பல பூர்த்தியாகும் தருணமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க தமிழ் மக்கள் மீதான அக்கறையும் கவனமும் கௌரவமும் சகல மட்டங்களிலும் அதிகரித்து வருவது ஒரு வகையில் தமிழ் மக்கள் மத்தியிலும் ஒருவித ஆறுதலை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளது. அதேபோன்று
தேர்தலுக்குப் பின்னரும்அது தொடர வேண்டும் என்றே தமிழ்பேசும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அவ்வாறானதோர் சூழல் உருவாகுமானால் நிச்சயம் அது நாட்டின் சுபிட்சத்துக்கும் வழிகோலுவதாக அமையும்.எது எவ்வாறிருப்பினும், கடந்த மூன்று தசாப்தகாலமாக போராடியும் இரத்தம் சிந்தியும் ஆக முடியாதுபோன காரியங்கள் கூட இன்று சர்வசாதாரணமாக நிறைவேறி வருவதுடன் தேர்தல்
வாக்குறுதிகளாகவும் அள்ளி வீசப்படுகின்றன.
அந்த வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் வாக்குகளும் எந்தளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன என்பது தெளிவானதாகும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment