யாழ்ப்பாணம் அல்ல... 'யாப்பா பட்டுவ'!
இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. அந்நாட்டின் தலைவிதியை இனவாதம்தான் தீர்மானிக்கிறது என்பது மீண்டும் தேர்தல் முடிவு களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ஷே மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் ஃபொன்சேகாவைவிட பதினேழு சதவிகிதம் கூடுதலான வாக்குகளை அவர் வாங்கியிருக்கிறார். இது சிங்கள மக்கள் பெருமளவில் ராஜபக்ஷேவைத்தான் ஆதரிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.
ராஜபக்ஷே முறைகேடான வழிகளைக் கையாண்டு தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறப் பட்டாலும், அதை முழுமையாக நாம் ஏற்க முடியவில்லை. ஏனென்றால், அங்கு சிங்களப் பேரினவாதம் கொடிகட்டிப் பறக்கிறது. அதன் வெளிப்பாடாகவே சிங்கள மக்களின் ஆதரவு ராஜபக்ஷேவுக்கு கிடைத்துள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவுக்கு தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மையின மக்களின் ஆதரவு இருந்தபோதிலும் சிங்கள மக்களுடைய ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை. ஈழத்தில் நடந்து முடிந்த
இனப்படுகொலையை தலைமையேற்று நடத்தியவர்தான் ஃபொன்சேகா என்றபோதிலும், அவர் தம்மை நடுநிலை யாளனாக காட்டிக்கொள்ள முயற்சித்ததன் காரணமாக சிங்கள மக்களின் ஆதரவை இழந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். சிங்களவர்கள் மிதவாதத் தலை மையை விரும்பவில்லை. தீவிரமான சிங்கள இனவெறித் தலைமையையே அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றியை ராஜபக்ஷேவுக்கு அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
சிங்கள இனவாதம் இந்த அளவுக்கு தலைவிரித்தாட தமிழ்ப் போராளிகளும் ஒரு விதத்தில் காரணமாக அமைந்து விட்டார்கள் என்பதை மறுக்க முடியாது. கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவும், ரணில் விக்ரம சிங்கேவும் போட்டியிட்டனர். அப்போது மிதவாதியான ரணிலுக்குத்தான் தமிழ் மக்கள் வாக்களிப்பதாக இருந்த னர். ஆனால், அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களுக்குக் கூறிய தன் காரணமாக ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக விழ வேண்டிய தமிழர்களின் வாக்குகள் விழாமல் போய்விட்டன. அதனால்தான், ஒற்றை ஆட்சி என்ற முழக்கத்தை வெளிப்படையாகவே முன்வைத்து இனவாத அரசியலை தூக்கிப் பிடித்திருந்த ராஜபக்ஷே வெற்றி பெறும் நிலை உருவானது. தமிழ்ப் போராளிகள் தமக்கு பாதகமான சூழலைத் தாங்களே ஏற்படுத்திக் கொண் டார்கள் என்பது மறுக்க முடியாத துயர நிகழ்வாகும். அப்போது எழுச்சி பெற்ற சிங்கள இனவெறி தொடர்ந்து ஆதிக்க நிலையிலேயே இருந்து வருகிறது.
ராஜபக்ஷேவும், ஃபொன்சேகாவும் களத்தில் நின்றபோது இந்தியா யாரை ஆதரிக்கப் போகிறது, அமெரிக்கா யாரை ஆதரிக்கப் போகிறது? என்றெல்லாம் அரசியல் களத்தில் கேல்விகள் எழுந்தன. ராஜபக்ஷே எப்போதும் இந்தியாவின் அன்புக்குரியவராகவே இருந்து வருகிறார். அவ்வப்போது அவர் சீனாவோடு நெருக்க மாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதெல்லாம் இந்தியாவிடமிருந்து கூடுதலாக அனுகூலங்களைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான். ராஜபக்ஷே வெற்றி பெற்றதும் உடனடியாக இந்தியா அவருக்கு வாழ்த்து தெரிவித்ததில் இருந்தே ராஜபக்ஷேவை இந்திய ஆட்சியாளர்கள் எப்படி நெருக்கமாக உணர்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ராஜபக்ஷே மீது அமெரிக்க அரசு கோபமாக இருக்கிறது என்று ஒரு செய்தி முன்பு பரப்பப்பட்டது. அது ஓரளவு உண்மைதான். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த ஆலோசனைகள் எதையும் ராஜபக்ஷே அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, இலங்கையில் நடைபெற்ற இன அழித்தொழிப்புக்கு தமது அரசு உடந்தையாக இருந்தது என்ற அவப்பெயரை வாங்கிக்கொள்ள அமெரிக்க ஆட்சியாளர்கள் விரும்பவுமில்லை. இத்தகைய காரணங்கள் இருந்தபோதிலும், தொடர்ந்து ராஜபக்ஷேவை ஆதரிக்க வேண்டிய நிலை அமெரிக் காவுக்கு உள்ளது. இலங்கையில் ராஜபக்ஷே பெற்றுள்ள செல்வாக்கு நிரூபணமாகி இருப்பது முதல் காரணம். இலங்கை தொடர்பான எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்பும் இந்தியா என்ன நினைக்கிறது என்பதை அமெரிக்கா கவனத்தில் கொண்டிருக்கிறது. இது இரண்டாவது காரணம். இந்த காரணங்களால் இப்போது ராஜபக்ஷேவை அமெரிக்கா ஆதரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வாக்குகள் பதிவாகி இருக்கும் விதத்தை ஆய்வு செய்து பார்க்கும் போது, இலங்கையின் அரசியல் சூழல் எப்படி இருக்கிறது என்பதை நாம் யூகிக்க முடிகிறது. சரத் ஃபொன்சேகாவுக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்த ஆறு மாவட்டங்களில் ஐந்து மாவட்டங்கள் தமிழர்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களாகும். யாழ்ப்பாணம், வன்னி, திரிகோணமலை, மட்டக் களப்பு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியப் பகுதிகளாகக் கருதப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில்தான் ஃபொன்சேகா அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றார். பாரம்பரியத் தமிழர் கள் வாழும் பகுதிகளில் மட்டுமின்றி மலையகத் தமிழர்கள் பெருமளவில் வாழும் பகுதிகளிலும்கூட ஃபொன் சேகாவுக்குத்தான் அதிக வாக்கு கிடைத்திருக்கிறது. இது தமிழர்களின் ஆதரவு ஃபொன்சேகாவுக்கு இருந்தது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. சரத் ஃபொன்சேகா தலைமையில்தான் இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றியது. என்றபோதிலும், தமிழ் மக்கள் ஏன் அவரை ஏற்றுக்கொண்டார்கள் என்பது முக்கியமான கேள்வியாகும். ஃபொன்சேகாவுக்கும், ராஜபக்ஷேவுக்கும் இடையில் கருத்து ரீதியான வேறுபாடுகள் எதுவும் கிடையாது. தான் தலைமை தாங்கி நடத்திய யுத்தத்தின் அரசியல் பலனை தானே அனுபவிக்க வேண்டும் என்று ஃபொன்சேகா விரும்பினார். ஆனால், அதற்கு ராஜபக்ஷே உடன்படவில்லை. அதுவே அவர்களுக்கிடையிலான முரண்பாடாக வெளிப்பட்டது.
இனப்படுகொலையின் ரத்தக்கறை படிந்த இரண்டு நபர்களுக்கு இடையிலான போட்டியாகத்தான் இலங்கை அதிபர் தேர்தல் இருந்தது. இந்தத் தேர்தலில் தமிழர்கள் என்ன முடிவெடுப்பது என்ற இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டார்கள். இந்த இரண்டு பேருக்கும் வாக்களிக்காதீர்கள் என்று சில நபர்கள் அங்கே பிரசாரம் செய்தது உண்மை. அவர்களும் அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாக நின்றார்கள். தமிழர் தரப்பிலிருந்து தமிழ் தேசிய முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இந்த முழக்கத்தை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டார். அதுபோலவே இடதுசாரி கட்சி ஒன்றைச் சேர்ந்த சிங்களவரான விக்ரமபாகு கருணரத்னே என்பவரும் தேர்தலில் போட்டியிட்டார். அவர்கள் இருவருமே ராஜபக்ஷே மற்றும் சரத்ஃபொன்சேகாவுக்கு எதிராகத்தான் பிரசாரம் செய்தார்கள். ஆனால், அவர்களால் தேர்தலில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. தமிழர் பகுதிகளில் சிவாஜிலிங்கத்தை முற்றாக நிராகரித்து விட்டார்கள். அதுபோலவே சிங்கள மக்கள் கருணரத்னேவை கண்டுகொள்ளவே இல்லை. சரத் ஃபொன்சேகாவுக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் தேசிய முன்னணி பிரசாரத்தில் ஈடுபட்டது. அதைத்தான் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறவேண்டும்.
தமிழ் தேசிய முன்னணியின் சார்பில் இரா.சம்பந்தர், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட் டோர் செய்த பிரசாரம் தமிழர்களின் வாக்குகளை ஃபொன்சேகாவின் பக்கம் திருப்பி விடுவதற்கு காரணமாக இருந்தது. சரத் ஃபொன்சேகாவை ராணுவத் தளபதியாகப் பார்த்ததை விடவும் தமிழர்களுக்கு சற்றே ஏற்புடைய ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகவே தமிழ் மக்கள் பார்த்தார்கள். அவர் வெற்றி பெற்றால், ராஜபக்ஷே சகோதரர்கள் மீது போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தமிழர்கள் நம்பினார்கள். அதுமட்டுமின்றி இரண்டு எதிரிகளில் ஒருவரைக்கொண்டு மற்றவரை வீழ்த்தி விட்டு பிறகு அவரைப் பார்த்துக் கொள்ளலாம் என்பது போன்ற ஒரு திட்டமும் தமிழர்களிடையே இருந்தது. ஆனால், இவை எல்லாமே சரத் ஃபொன்சேகாவுக்கு எதிராக சிங்கள இனவெறி எழுச்சி கொள்ளவும் காரணமாகி விட்டது.
சரத் ஃபொன்சேகாவுக்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவு இருந்தது. தீவிர சிங்கள இனவாத அமைப்பாகக் கருதப்படும் ஜே.வி.பி. முதல், தமிழ் தேசிய முன்னணி வரை பல கட்சிகள் அவரை ஆதரித்தன. ராஜபக்ஷேவின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் சந்திரிகாகூட சரத் ஃபொன்சேகாவை ஆதரித்தார். எனினும் ஃபொன்சேகாவை ஆதரித்த கட்சிகளிடையே பொதுப்படையான அரசியல் திட்டம் எதுவும் இல்லை. ராஜபக்ஷேவை எதிர்ப்பது என்பதில் மட்டுமே அவர்களுக்கு இடையே ஒற்றுமை காணப்பட்டது. தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எத்தகைய தீர்வை முன்வைப்பேன் என்பதை ஃபொன்சேகாவும் தெளிவுபடக் கூறமுடியவில்லை. இது அவரது மிகப்பெரிய பலவீனமாக அமைந்து விட்டது.
இந்தத் தேர்தல் முடிவுகள் வேறு ஒரு செய்தியையும் தெளிவுபடுத்தியிருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் சரத் ஃபொன்சேகாவுக்கு கிடைத்துள்ள அதிகப்படியான வாக்கு அப்பகுதியில் கருணாவின் செல்வாக்கு குறைந்து விட்டது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சரத் ஃபொன்சேகா 69 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அப்பகுதி யில் ஆட்சி நடத்தி வரும் கருணாவின் ஆதரவு ராஜபக்ஷேவுக்குத்தான் இருந்தது என்றபோதிலும், மக்கள் கருணா சொன்னதைக் கேட்கவில்லை. தமிழ் தேசிய கூட்டணியின் யோசனையைத்தான் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இதனால் இனி ராஜபக்ஷேவிடம் கருணா முன்பு போல செல்வாக்கோடு இருக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
போரில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ள ராஜபக்ஷே தமிழர்களுக்கு சம உரிமை அளித்து இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பார் என்று நாம் நம்ப முடியாது. சிங்களப் பேரினவாதத்தை மேலும் எண்ணெய் ஊற்றி உக்கிரமாக எரிய வைப்பதன் மூலமே தன்னை பலமாக வைத்துக்கொள்ள முடியும் என்பது ராஜபக்ஷேவுக்குத் தெரியும். எனவே, அத்தகைய அணுகுமுறையைத்தான் அவர் மேற்கொள்வார். அதன் அடையாளங்கள் இன்று அங்கே வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து விட்டன. புதினப்பலகை என்ற இணையதளத்தில் புகைப்படங்களோடு வெளியாகியுள்ள கட்டுரை இதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. 'ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரைக்கும் வீதியின் இரண்டு புறமும் இருந்த மரங்கள் எல்லாம் இன்று முற்றாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் இருநூறு மீட்டர் தூரத்துக்கு ஒன்றாக காவல் அரண்கள் அமைக்கப் பட்டுள்ளன. அந்த காவல் அரண்களுக்கு அருகில்தான் மீளக்குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்களின் குடியிருப்புகள் உள்ளன. சிறுசிறு இந்துக் கோயில்களுக்கு உள்ளேகூட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு தமிழ் மக்களின் தனித்துவமான சமய அடையாளம் சிதைக்கப்படுகிறது. வழிகாட்டுப் பலகைகள் எல்லாவற்றிலும் இப்போது ஊர்ப் பெயர்கள் சிங்களத்தில் இரண்டு முறை எழுதப் பட்டுள்ளன. யாழ்ப்பாணம் என்ற ஊரின் பெயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு, அதற்கு மேல் யாழ்ப்பாணம் என்று உச்சரிக்கும்படியாக சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது. அதற்குக் கீழே அந்த ஊருக்கு சிங்களவர்கள் தற்போது சூட்டியுள்ள சிங்களப் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு 'யாப்பா பட்டுவ' என்று சிங்களவர்கள் பெயர் சூட்டியுள்ளனர். வணிகத் தலங்கள் யாவும் சிங்களவர்களின் ஆதிக்க மையங்களாக மாறியுள்ளன. சிறுசிறு நடைபாதைக் கடை களைக்கூட அவர்களே நடத்துகிறார்கள். தமிழர்களின் கோட்டையாகக் கருதப்பட்ட கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இப்போது சிங்கள வியாபாரிகளே நிறைந்திருக்கிறார்கள். கிளிநொச்சி நகரில் மிகப்பெரிய புத்த வழிபாட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் போர் வெற்றியை அறிவிக்கும் விதமான பல நினைவுச் சின்னங்கள் தமிழர் பகுதிகள் எங்கும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகள் யாவும் சிங்களமயப்படுத்தப்பட்டு வருகின்றன...' என அக்கட்டுரை கூறுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது அங்கு தமிழர்கள் சமத்துவத்தோடு நடத்தப்படுவதற்கான எந்தவித உத்தரவாதமும் இனி இல்லை என்பதே வெளிப்படையாகத் தெரிகிறது.
பேரினவாதத் திமிரில் திளைத்துக்கொண்டிருக்கும் ராஜபக்ஷேவிடம் இந்திய அரசு வெளிப்படையாகச் சில விஷயங்களை இப்போதாவது எடுத்துச்சொல்லவேண்டும். அங்கு வாழும் தமிழர்களுக்கு நியாயமான தீர்வை முன்வைக்குமாறு வலியுறுத்தவேண்டும். இந்திய அரசின் இலங்கைக் கொள்கையை தீர்மானித்துவந்த எம்.கே.நாராயணன் போன்றவர்கள் செல்வாக்கிழந்துள்ள நிலையில் தமிழக கட்சிகள் பொறுப்போடு செயல் பட்டால் ஈழத் தமிழர்களுக்கு இப்போதாவது ஒரு நல்ல வழி பிறக்கும்.
vikatan
0 விமர்சனங்கள்:
Post a Comment