தீக்குளித்தல் மகிமைப்படுத்தப்படலாமா?
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டுமெனக் கோரி தீக்குளித்த முத்துக்குமாரின் சிலையைத் திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.
விடுதலை புலிகளிடமிருந்து வன்னிப் பகுதியை மீட்கும் இறுதிக் கட்டப் போரில் இலங்கைப் படையினர் ஈடுபட்டிருந்த போது, கடந்த வருடம் 2009 ஜனவரி மாதம் 29 ஆம் திகதி தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகத்துக்கு முன்பாக முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தான் தீக்குளிப்பதற்கு சற்று முன்பதாக, இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்றும், இலங்கையில் அவதியுறும் தமிழர்களை காப்பாற்ற இந்தியா உதவ வேண்டும் என்றும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.
பத்திரிகை நிருபராகவும் பல தெலைக்காட்சித் தொடர்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 வயதான முத்துக்குமார் ஈழப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவரல்ல. ஆனால் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்திருந்தார் என்பதற்கு தான் இறப்பதற்கு முன்னர் அவர் எழுதிய இந்த துண்டுப் பிரசுரங்கள் சான்றாக அமைகின்றன.
இலங்கைத் தமிழர்களின் துன்ப துயரங்களை தமது அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்திய தமிழக அரசியல்வாதிகளின் உணர்ச்சிபூர்வமான வீராவேசமான பேச்சுக்கு முதற் பலி முத்துக்குமார். அவர்களது பேச்சுக்களும், எனினும் எதுவும் செய்ய முடியாத நிலையும் தீக்குளித்துத் தன்னை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு முத்துக்குமாரை உந்தித் தள்ளியிருக்கிறது.
தீக்குளிக்காதீர்கள் என்று மேடைகளில் முழங்கியபடியே முத்துக்குமாருக்கு ‘வீரமகன்’ பட்டம் கொடுத்தார்கள். மேடைகளில் முத்துக்குமாருக்காக வீர வாசனங்கள் கவிதைகள் என்று முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தை மெச்சினார்கள்.
போக்களத்தில் புறமுதுகிட்டோடுவது வீரர்களுக்கு இழுக்கு என்றும், எதிரியிடம் தோற்பதைவிட யுத்த களத்தில் உயிரை மாய்க்கலாம் என்றும், மகனுக்கும் கணவனுக்கும் இரத்தத்தால் திலகமிட்டு போர்க்களத்துக்கு அனுப்பும் தாய்மார்களைப் பற்றிய கதைகளையே கேட்டும் வளர்ந்த தமிழர்கள், தமிழக அரசியல் தலைவர்களின் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் வார்த்தைகளால் எளிதாகத் தூண்டப்படுகின்றனர்.
விளைவு, தமிழகம், மலேஷியா, ஜெனீவா என்று மிகக் குறுகிய காலத்தில் சுமார் 12 பேர் வரை தீக்குளித்து தமது உயிரை மாய்த்துக் கொண்டனர்.
இவர்களில் அனேகருக்கு இலங்கையில் உண்மையில் என்ன நடக்கின்றது என்று தெரிந்திருக்கக் கூட வாய்ப்பில்லை.
ஆனால் இறந்தபின் அவர்களுக்குக் கிடைக்கும் பட்டமும், பணமும் அவர்களைத் தூண்டியிருக்கலாம் அல்லது பாரம்பரிய வீரத்தால் தூண்டப்பட்டிருக்கலாம். அதாவது ஒரு விஷயத்தின் ஆழ அகலம் மற்றும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாது கண்மண் தெரியாமல் உணர்ச்சிவசப்படுவது.
தமிழகத்தில், நடிகர்களுக்காக, அபிமான அரசியல் தலைவர்களுக்கு உயிராபத்து ஏற்படும் போது, சொந்தப் பிரச்சினைகளின் பேரில் தற்கொலைகள் குறிப்பாக தீக்குளிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
இலங்கையில் இலங்கைப் படையினர் மீதான ஒரு தாக்குதல் உத்தியாகத்தான் தற்கொலையை விடுதலைப் புலிகள் உபயோகித்தார்கள்.
ஆனால் தமிழகத்திலும், மலேசியா, ஜெனிவாவிலும் நடைபெற்ற தீக்குளிப்புகளால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிட்டது?
இந்நிலையில் மீண்டும் அந்தத் தற்கொலை உணர்வைத் தூண்டி வரும் முகமாகவும் தற்கொலையை மகிமைப்படுத்தும் முகமாகவும் முத்துக்குமாருக்கு சிலை எழுப்பப்பட்டது. அச்சிலையை திறக்கவிடாததை எதிர்த்து ஆர்ப்பாட்டமும் தமிழகத்தில் இடம்பெற்றிருக்கின்றது.
தீக்குளிக்கும் கலாசாரம் என்பது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்தது. அக்கினி வழிபாட்டை மனிதன் தொடங்கிய காலத்தில் இருந்தே அதில் தன்னை மாய்த்துக் கொள்ளத் தொடங்கிவிட்டான். அறியக்கிடக்கும் வரலாறுகளின் படி அரசியல், மதம், சமூகம் போன்ற நிலைகளில் ஒடுக்கப்படும் மக்களின் எதிர்ப்புப் போராட்டமாக தீக்குளிப்புகள் நிகழ்ந்துள்ளதைக் காணமுடிகின்றது-
இந்து, பெளத்த, கிறிஸ்தவ மத வரலாறுகளில், இதிகாசங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சமூக நிலையில் ஒழுக்க விசாரணைக்குட்படுத்தப்பட்ட சீதை தீக்குளிக்கின்றாள். குறுநில மன்னனான பாரிக்கு எதிராக மூவேந்தர்களும் ஒன்று சேர்ந்து போர் தொடுத்து அவனைக் கொன்றதை எதிர்த்து சங்கப் புலவர் கபிலர் தீக்குளித்தது, தமிழர் வரலாற்றில் காணக்கிடைக்கும் மிகத் தொன்மையான தீக்குளிப்புச் சம்பவம். இந்திய ராஜபுத்திரர்கள் வரலாற்றில் தோற்றுப்போன மன்னனின் அந்தப்புரப் பெண்கள் தீக்குளித்திருப்பதாக வரலாறு கூறுகின்றது. சித்தூர் ராணி பத்மினி இப்படித்தான் தீக்குளித்தாள். பழைய ரஷ்ய கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு கிராமமே தீக்குளித்து ‘ஹிhலீ கிaptisசீ’ செய்து கொண்டதையும் 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டின் யேசு சபைப் பாதிரியார்கள் தங்களை எரியூட்டிக் கொண்ட நிகழ்வுகளையும் வரலாற்றில் பார்க்க முடிகின்றது.
வியட்னாமின் ஹோசிமின் நகரில் 1963 ஆண்டில், 73 வயதான பெளத்த பிக்கு ஒருவர் தீக்குளித்தார். தொடர்ந்து பல பல பிக்குகள் தீக்குளித்தனர். ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் இறங்கினர். வியட்னாம் போரை எதிர்த்து அமெரிக்கர்களும் தீக்குளித்தனர்.
சீனா அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து சீனாவின் தியனமன் சதுக்கத்தில் பலர் தீக்குளித்தனர்.
தீக்குளிப்பு என்பது அவேசமாக வளர்முக நாடுகளிலேயே அதிகளவில் இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் தீக்குளிப்பு, தற்கொலை என்பன 0.1% சதவீத்துக்கும் குறைந்த அளவில் இருக்க அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இது மிகவும் கூடுதலாக இருக்கின்றது.
தற்கொலை, தீக்குளிப்பு என்பனவற்றில் ஈடுபடுபவர்கள் ஏதோவொரு விதத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
உலகெங்கிலும் உள்ள தீக்காய சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களில் 41 சதவீதமானவை தீக்குளிப்பு சம்பவங்கள்.
2001 ஆம் ஆண்டில் ஈரானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, நாளொன்றுக்கு 11 ஈரானியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 4 பேர் தீக்குளித்து இறந்தவர்கள் என்ற ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியாவில் மாமியார், கணவன் வீட்டில் நிகழும் கொடுமை களால் பெண்கள் தீக்குளிக்க வைக்கப்படுகின்றார்கள்.
இந்தியா, ஆப்கான் போன்ற நாடுகளில் பெண்கள் அதிகளவில் தீக்குளிப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
சாதி, இன, மத ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் தம்மீது பிரயோகிக்கப்படும் அதிகாரத்துக்கு எதிராக, தம்மைத் தீ வைத்து மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு உந்தித்தள்ளப்படுகின்றார்கள். அவர்கள் மீதான ஒடுக்குமுறை அதற்கெதிரான ஆயுதமாக தீக்குளிப்பைத் நாட வைக்கின்றது.
தொடர்ச்சியான தீக்குளிப்புகள் அதிகாரத்தை சலசலப்புக்கு உள்ளாக்குகின்றது. ஆனால் அதிகாரவர்க்கத்தை ஆட்டம் காணச் செய்வதற்கு இவ்வாறான தீக்குளிப்புகள் போதுமானவையல்ல என்பதை இவர்கள் உணர்வதில்லை.
தமது உயிரை மாய்த்தாவது அடக்குமுறைக்கு எதிரான தமது குரலைப் பதிவுசெய்து கொள்ள அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் முனைகின்றனர். ஆனால், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் தீக்குளிப்புகளால் அதிகார வர்க்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப்பட முடியாது. எனில் இவ்வாறான தீக்குளிப்புகள் இறந்தவர்களை மகிமைப்படுத்த இவ்வதிகார வர்க்கத்தினர் முயல்வதேன்?
உயிரை மாய்ப்பதை மகிமைப்படுத்துவதன் இன்னொரு பரிமாணம் தான் தற்கொலைப் பேராளிகளும்.
உயிரை மாய்ப்பதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியாதென்பதை நாம் உணர்வது எப்போது?
உலகெங்கும் தீக்குளித்தல் நிகழ்ந்து வந்தாலும் தமிழகத்தில் போல் வேறெங்கும் தீக்குளித்தல் நடப்பதாகத் தெரியவில்லை. இங்கே இது ஒரு கலாசாரம். ஏழைகளை அல்லது மோசமான நோயாளிகளை தீக்குளிக்கச் செய்து அவர்களின் குடும்பத்துக்கு பணம் வழங்குவது, தீக்குளித்தல் என்பது ஒரு உயர்ந்த விஷயம் போல உருவகம் செய்வது, தமிழரின் பெருமையாக அதை வெளிப்படுத்துவது என்பது தமிழகத்தில் திராவிட நாகரிகமாகிப் போனது. ஒரு தமிழ் அரசியல் தலைவருக்கு ஏதேனும் நடந்து, அதன் விளைவாக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும், ஒரு தீக்குளிப்பாவது நடைபெறாவிட்டால் அக்கட்சிக்கோ தொண்டர்களுக்கோ திருப்தி ஏற்படப் போவதில்லை எனும் அளவுக்கு தமிழக அரசியலில் தீக்குளிப்பு ஒரு நட்சத்திர அந்தஸ்து வகிக்கிறது.
தமிழர்கள் மத்தியில், தீக்குளித்தல் என்பது ஒரு மனநோயே தவிர அதில் வேறெந்த மகிமையும் இல்லை என்பதை புரிய வைக்கு மட்டும் தீக்குளித்தல் மகிமைப்படுத்தப்படும் ஒரு விஷயமாகவே இருக்கும். மூட நம்பிக்கைகளை உடைக்கப் புறப்பட்ட திராவிட இயக்கமே தீக்குளிப்பை மகிமை படுத்த முற்பட்டது தான் விந்தை.
அட்சரா
thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment