சுமுக எதிர்காலம் பற்றிய நம்பிக்கை
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் வெற்றியீட்டியவுடன் பொறுப்பு முடிந்துவிட்டது என்று அரசாங்கம் கருதவில்லை. இராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ அதேயளவு முக்கியத்துவம் வெற்றிக்குப் பின் சுமுக வாழ்வை ஏற்படுத்துவதற்கும் அளிக்கப்பட வேண்டும். இவ்விட யத்தில் அரசாங்கம் அதன் பொறுப்பை உணர்ந்து செயற் படுவதை அவதானிக்க முடிகின்றது.
புலிகள் இயக்கத்தின் போராளிகளாகக் கடைசிக் கட்டத்தில் செயற்பட்டவர்களில் பெரும்பாலானோர் தவறாக வழி நடத்தப்பட்டவர்களும் பலவந்தமாகச் சேர்த்துக் கொள் ளப்பட்டவர்களுமே. இவர்கள் தண்டனைக்கு உரியவர்களல்ல. மீண்டும் சமுதாயத்துடன் ஒன்றிக் கலந்து நற்பிரசைகளாக வாழ வேண்டியவர்கள்.
சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயனுறு வகையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டியவர்கள். இவர்களுக்குப் புனர்வாழ்வு அளித்துச் சமுதாயத்துடன் ஒன்றிணைக்கும் பொறுப்பை அரசாங்கம் சிறப்பாக நிறைவேற்றி வருவது சுமுகமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைத் தோற்று விக்கின்றது.
கடந்த வாரம் கிட்டத்தட்ட ஐந்நூறு இளைஞர்களும் யுவதி களும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுப் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்ட பத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. இவர்களுள் கலைத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அத்துறைகள் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதேபோல, கைப்பணி மற்றும் தையல் போன்ற பயிற்சிகளும் அவரவரின் திறமைக்கு ஏற்றவாறு அளிக்கப்பட்டன. இவர்கள் பெற்றுக் கொண்ட புனர்வாழ்வுப் பயிற்சிகள் இவர்களின் சீவனோபாயத்துக்குப் பெரிதும் உதவக் கூடியன.
முன்னாள் புலி இயக்கப் போராளிகளான நூறு பெண்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின் ஆடைக் கைத்தொழிற் துறையில் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ள னர். எதிர்வரும் முதலாந் திகதி புலி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் நூற்றி இருபது பேர் தொழில் நுட்பக் கல்லூரியில் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறுகின்றனர். புலிகளால் போராளிகளாகச் சேர்க்கப்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் ஏற்கனவே இரத்மலானை இந்துக் கல்லூரியில் அனுமதி பெற்றுக் கற்று வருகின்றனர். இவர்களுக்கான சகல செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
புலிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டும் தவறாக வழிநடத்தப்பட்டும் பலாத்காரமாகவும் போராளிகளாகச் சேர்க்கப்பட்டவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் மனிதாபிமான செயற்பாடு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதாகும். அதே நேரம், யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளாகி மக்களை அழிவுகளிலும் சிதைவுகளிலுமிருந்து கைதூக்கி விடவேண்டிய பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது. இடம் பெயர்ந்த மக்களை உரிய முறையில் மீள் குடியேற்றுவதன் மூலமும் சேதமடைந்த பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதன் மூலமும் இதைச் சாதிக்க முடியும்.
முன்னாள் புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதில் முன்னேற்றமடைந்த அளவுக்கு மீள் குடியேற்றச் செயற்பாட்டில் முன்னேற்றம் காணப்படவில்லை. கண்ணிவெடிகள் அகற்றப்படாமை போன்ற காரணிகள் துரித முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளன. இத் தடைகளை இயன்றளவு விரைவாக நீக்கி மீள்குடியேற்றத்தைப் பூரணப்படுத்துவதன் மூலமும் அபிவிருத்தி நடவடிக்கைளைத் துரிதப்படுத்துவதன் மூலமும் அரசாங்கம் அதன் மனிதாபிமான செயற்பாட்டை விரைவில் முழுமைப்படுத்துமென நம்புகின்றோம்.
- தினகரன் தலையங்கம் -
0 விமர்சனங்கள்:
Post a Comment