வன்னி தோல்வியுறு காவியத்திற்கான மிக முக்கியமான முன்னுரை
மூன்று நகரங்களின் வெற்றிகளாலும், ஒரு நகரின் தோல்வியாலும் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான கோட்டையே வன்னி. வன்னியென்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. தமிழர்களின் இத்தனை வரலாற்றுக் காலங்களில் மிக முக்கியமான படையெடுப்புக்களைக் கண்டும், மண்டியிடாப் பூமி என அழைக்கப்பட்டிருந்தது. அதுவும் வரலாற்றில் இரண்டுமுறை வீழ்ச்சியுற்றது. ஒன்று, பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டாவது, பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டு வீழ்ச்சிகளுமே தமிழ் மக்களின் வீழ்ச்சியாகக் கொள்ளப்பட வேண்டியதாகிப் போயிற்று.
யாழ்ப்பாணம் அரசப் படைகளிடம் வீழ்ச்சியுற்றதும்,1 விடுதலைப்புலிகள் தமது நிர்வாக நாடாக வன்னியையே பேணிவந்தனர். ஏறத்தாழ பதின்மூன்று வருடங்கள் தமிழீழப் போராட்ட வரலாற்றில் வன்னியே விடுதலைப்புலிகளின் தனி நாடாகியிருந்தது. வன்னியில் மிக முக்கியமான இராணுவ முகாம்கள் மாங்குளம், ஆனையிறவு, முல்லைத்தீவு, ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றினை விடுதலைப்புலிகள் முற்றாகத் தகர்த்ததானது விடுதலைப்புலிகளின் வீரதீரங்களை உலக நாடுகள் பிரமிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றுவிட்டது. இந்நகரங்களின் வெற்றியின் பின்னர்தான் வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் முற்றாக வந்திருந்ததாகக் கொள்ளப்பட்டது.
வன்னியிலிருந்துதான் அரசுக்குரிய மிகமுக்கியமான கட்டமைப்புக்களையெல்லாம் உருவாக்கி ஒரு குட்டியரசாங்கத்தை நடத்தினார்கள், அங்கிருந்துதான் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போனார்கள்.அங்கிருந்துதான் ஏனைய மாவட்டங்களுக்கான நிழல் நிர்வாகங்களை நடத்தினார்கள். அங்கிருந்துதான் யுத்தங்களுக்குத் தயாராகினார்கள். அங்கிருந்துதான் யுத்த உபகரணங்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டார்கள். இது அவர்களின் தனி முயற்சியால் மட்டும் உருவானதல்ல. இறுதிவரை யுத்தங்களுடன் வாழ்ந்து வந்த வன்னிமக்களின் உயர்பங்களிப்புக்கள் எப்போதுமே இருந்து வந்திருந்தது..
மிக இறுக்கமான போர்நடந்த காலங்களில் விடுதலைப்புலி உறுப்பினர்களையும், அதன் தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றி வைத்திருந்தது வன்னிக்காடும் வன்னி மக்களும்தான். இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளுடன் உக்கிரமான போர் நடத்திக் கொண்டிருந்தபோது மணலாற்றுக்காட்டில் பிரபாகரனுக்கு சைக்கிள் ரியூப்பிற்குள் உணவு கொண்டு சென்று கொடுத்த நபர் ஒருவருடன் நான் உரையாடியிருக்கின்றேன். அவர் அப்போதிருந்த இறுக்கமான சூழலையும் உயிராபத்துக்களையும் எனக்கு வர்ணித்தபோது. நான் அதிர்ந்து போய்விட்டேன். நிச்சயமாக அது இலகுவான காரியம் எனப்படவில்லை. இதுவொரு உதாரணம். அங்கு வாழ்ந்த ஒவ்வொரு குடிமகனும் ஏதோவொரு வகையான பங்களிப்புகளைச் செய்து வந்திருக்கின்றார்கள். பலர் அப்படி யொரு காரணத்திற்காக இராணுவத்தாலும், ஏனைய ஆயுதக்குழுக்களாலும் கொல்லப்பட்டுமிருக்கின்றார்கள். இவற்றினையெல்லாம் தாண்டி அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்து, அவர்களுக்குப் பல வழிகளிலும் உதவி வந்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் விடுதலைப்புலிகள் மீதும், தமிழீழத்தின் மீதும் மிக விருப்புக்கொண்டவர்களாகவே இருந்து வந்திருக்கின்றர்கள் என்பது புலனாகும்.
இப்படியிருந்த மக்கள் திட்டித் தீர்க்கும் காலம் பின்னாட்களில் வருமென்று விடுதலைப்புலிகளோ அல்லது வேறுயாருமோ நினைத்தேயிருந்திருக்கமாட்டார்கள். ஆனால் அது நிகழ்ந்தது.
விடுதலைப் புலிகளின் உச்சமான எழுச்சியால் அவர்களுக்கு யுத்த நிறுத்தமென்ற நல்வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அதனைச் சரியான வகையில் பயன்படுத்தத் தவறியதால் அதுவே அவர்கள் பலவீனமடையவும், வீழ்ச்சியடையவும் காரணமாகியிருந்தது. வன்னி இறுதியுத்த நிலவரப்படி யுத்த நிறுத்தக் காலத்தில் அரசப் படைத்தரப்பு போர் உத்திமுறைகளையும்,ஆயுதத் தளவாடங்களையும் வளர்த்துக்கொண்டதாகவும், விடுதலைப்புலிகள் தம்மைத் தயார்ப்படுத்தத் தவறியிருந்ததாகவும் அறிந்துகொள்ள முடிந்திருக்கின்றது. அப்படியென்றால் அவர்கள், ஏறத்தாழ நான்கு வருடங்கள் என்ன செய்தார்கள் என்பது விடை காண முடியாத புதிர்தான். ஆனாலும் சில விடயங்கள் வெளிப்படையானவையாகவும் இருந்தன இந்தக் காலத்தில்தான் வன்னிக்குள்ளும், வெளியிலும் பணம் உழைக்கும் முதலீடுகள் இடப்பட்டன, வரிகள் வசூலிக்கப்பட்டன, பொறுப்பாளர்கள் பலர் ஆடம்பரமான வீடுகள் கட்டினார்கள், அதிகமான போராளிகளுக்குத் திருமணங்கள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் படை திரட்டுவதற்கான முயற்சிகளோ, பிரச்சாரங்களோ, மக்களுடனான கலந்துரையாடல்களோ அங்கு நடைபெறவில்லை. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சி இங்கிருந்துதான் தொடங்கியதாகக் கருதமுடிகின்றது.
வலுக்கட்டாயமாக விடுதலைப் புலிகளால் யுத்தநிறுத்தமானது உடைக்கப்பட்டதனைத்2 தொடர்ந்து வந்த காலங்களும், தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் இன்னுமின்னும் அவர்களைப் படுபாதாளத்தில் தள்ளிக்கொண்டிருந்தது. இதனை மக்கள் முன்கூட்டியே உணர்ந்து கொண்டளவிற்கு விடுதலைப்புலிகள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அப்படி அவர்கள் உணர்ந்திருந்தால் மிகவும் புத்திசாலித்தனமான முடிவுகளை அவர்களால் எடுத்திருக்க முடியும். ஆனால் இறுதிவரை அவர்கள் எந்தப் புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் இத்தனை பாரிய அழிவுகளையும், தோல்விகளையும் மக்களும், அவர்களும் சந்தித்திருக்க வேண்டிவந்திருக்காது.
விடுதலைப்புலிகளின் மிக முக்கியமான தோல்வி. செஞ்சோலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல். இதுவே முதலாவது தோல்வியெனவும் கொள்ளலாம். ஆனால் அவர்கள் அதனைத்தமக்கான அரசியல் வெற்றியாக மாற்றியிருந்தார்கள். அதன் எதிரொலியே புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களுமாகும். பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து அவர்களை இளைஞர் சேனையாக மாற்றிப் போர்க்களத்திற்கு அனுப்புவது அவர்களின் திட்டம். இது மாணவர்களின் விருப்பத்தோடு நிகழ்ந்ததல்ல. கட்டாயத்தின் பேரில் நிகழ்த்தப்பட்ட ஒரு இரகசிய நடவடிக்கை. இந்தப் பயிற்சிக்குச் செல்லாத மாணவர்கள் பாடசாலை சென்று கல்வி கற்கமுடியாது என்ற கண்டிப்பான உத்தரவு போடப்பட்து. துரதிஷ்டம் என்னவென்றால் படிப்பில் ஆர்வம்மிக்க மாணவர்களே அங்கு சென்றிருந்தார்கள். மறுநாள் முகமாலையில் போர் தொடங்கப்பட்டிருந்தது. நான்காவது நாள் வன்னியின் ஒட்டு மொத்த மக்களையே துயருள் ஆழ்த்திச் சென்ற செஞ்சோலை வளாகத்தின் மீதான விமானத்தாக்குதல் நிகழ்ந்தது. ஐம்பத்திரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்நிகழ்வானது மக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே சிறு இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. போர் தொடங்கப்பட்டாயிற்று, படைபலமில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை “வீட்டுக்கொருவர் கட்டாயமாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவேண்டும்” என்பதாக இருந்தது. சந்திகளிலும் தெருக்களிலும் இளைஞர்கள், யுவதிகள் வலுக்கட்டாயமாகப் பிடித்து வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள். இது வன்னிமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஆயுதத்தின் முன் அவர்கள் ஏதும் செய்ய முடியாதவர்களாகவே இருந்தார்கள்.
கட்டாய ஆட்சேர்ப்பானது வன்னியெங்கும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. தெரு ஒவ்வொன்றும் இளம்பிராயத்தினரற்று வெறிச்சோடிப் போயிருந்தது. எஞ்சிய பலர் பெரும் காடுகளுக்குள் ஒளித்திருக்கப் பழகிக்கொண்டார்கள். ஒருகட்டத்தில் விடுதலைப்புலிகளால் அவர்களைப் பிடிக்கமுடியாது போக, பிணைக்கைதிகளாகத் தந்தையோ அல்லது தாயோ கொண்டுசெல்லப்பட்டு கடினமான வேலைகள் வாங்கப்பட்டதோடு களமுனைக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தார்கள். இதனால் காடுகளுக்குள் ஒளித்திருந்தவர்கள் தமது பெற்றோரைப்பிணையெடுப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டார்கள். இப்படி விருப்பற்றவர்களை யுத்தத்தில் பயன்படுத்தத் துணிந்தது விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இரண்டாவது காரணமாகியது. அனுபவமற்றவர்கள், இயல்பிலேயே பயம்மிக்கவர்கள் எவ்வாறு களத்தில் நின்று போராடுவார்கள்? அவர்கள் களத்தினை விட்டு ஓடி வருவதும், பின் அவர்களைப் பிடித்துக் கொண்டு போவதுமாக கயிறிழுப்பது போன்ற விளையாட்டே அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இது அரச படைத்தரப்பு வன்னிக்குள் நுழைவதற்கு சாத்தியமானதாகிப் போனது. இங்கு வேடிக்கையென்னவென்றால் களத்தில் நின்று போராடியவர்களைவிட கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதற்கு விடப்பட்ட போராளிகள் அதிகம்.
கட்டாய ஆட்சேர்ப்பில் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் வரிசை, வரிசையாக உயிரற்ற பிணமாகக் கொண்டுவரப்பட்டார்கள். இது வன்னி மக்களின் மனதில் பெரும் துயராகக் கவிந்ததோடு விடுதலைப்புலிகளை வெளிப்படையாகத் திட்டவும் தூற்றவும் செய்திருந்தது. அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாது ஒரு திறந்த சிறைச்சாலைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.3
வன்னியில் வாழ்ந்து வந்த மக்கள் விரும்பியோ விரும்பாமலோ வீட்டுக்கொருவரைப் போராட்டத்தில் இணைத்திருந்தார்கள். இந்நிலையிலும் சிலர் தமது பிள்ளைகளைக் கடல் வழியாகப் படகின் மூலம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்திருந்தார்கள். இது உண்மையில் துணிகரச் செயல்தான். கடற்பிராந்தியமெங்கும் கடற்புலிகளின் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டிருக்கும், கடலில் அவர்களின் படகுகள் றோந்து வந்துகொண்டிருக்கும், இதனையெல்லாம் தாண்டி அவர்களை ஏமாற்றிச் செல்வதென்பது கடினமானதுதான் பலர் பிடிபட சிலர் தப்பிச் சென்றிருக்கின்றார்கள். வன்னியை விட்டுத் தப்பிச்செல்ல நினைப்பவர்கள் புலிகளின் பார்வையில் தேசத்துரோகிகள். அகப்பட்டுக் கொண்டால் தண்டனை கடுமையாக இருக்கும். மொட்டையடித்து தெருத்தெருவாகப் பார்வைக்கு விடப்பட்டவர்களும் உண்டு.
மக்களின் வயிறு பற்றியெரியத் தொடங்கியது. சபிக்கத் தொடங்கினார்கள். நாசமாகிப் போகப்போகிறீர்கள் என்று திட்டினார்கள். அவர்கள் எதனையும் பொருட்படுத்தவில்லை அடுத்தடுத்து தோல்விகளைச் சந்திக்கத் தொடங்கினார்கள். முக்கியமான போராளிகள் இருந்த இடங்களில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில் பல முக்கியஸ்தர்கள் உயிரிழந்தார்கள். வன்னியின் பகுதிகள் அடுத்தடுத்து வீழத்தொடங்கியது. பின்வாங்கத் தொடங்கினார்கள், எதிர்த்தும், சில இடங்களில் எதிர்க்காமலும் பின்வாங்கினார்கள். அதனையும் எப்போதும் சொல்வது போலவே தற்காலிகப் பின்னடைவென்றே சொன்னார்கள். அதனை அவர்கள் “கிட்டவரட்டும், திட்டமிருக்கு” என்ற ரிதம் கலந்த வார்த்தைகளால் சொல்லத்தொடங்கியிருந்தார்கள். இந்த வார்த்தையானது பின்னாளில் மக்களிடம் ஒரு நையாண்டி வார்த்தையாக மாறியிருந்தது.
கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு இராணுவமும், தடுப்பதற்கு விடுதலைப்புலிகளும் கடுமையான யுத்தம் செய்திருந்தார்கள். விடு தலைப்புலிகள் தமது உச்சக்கட்ட சண்டையை அப்போதுதான் செய்தது. அது மீண்டும் வன்னிமக்கள் சிலருக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தது. “சிலர் எங்கடை பொடியல் விடமாட்டார்கள், இனித்தான் பொடியல் சண்டை செய்யப்போறாங்கள்” என்று சொன்னார்கள். ஆனால் கிளிநொச்சியும் இறுதியில் வீழ்ச்சியுற்றது. மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கிளிநொச்சியில் வாழ்ந்தவர்கள் ஏறத்தாழ பத்தாவது தடவையாகவேணும் இடம் பெயர்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு இடமாகத் தமது உடமைகளையும் பிள்ளைகளையும் காவிக்கொண்டு செல்லும் பரிதாபம் மிகக் கொடுமையானது. ஒவ்வொரு தடவையும் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு வாகனச் செலவு கொடுக்க வேண்டியிருந்தது. இப்படி மன்னாரிலிருந்து பதினைந்தாவது தடவையாக இடம்பெயர்ந்து வலைஞர்மடத்துக்கு வந்திருந்த ஒருவர் ‘தான் மன்னாரிலிருந்து வலைஞர் மடத்திற்கு வரும்வரைக்கும் கொடுத்த வாகன ஏற்றுக்கூலி இரண்டு பெண்பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்கக் காணும்’ எனச் சொன்னார். இப்படி எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் செலவழித்து விட்டு இறுதிக்காலங்களில் சாப்பிடுவதற்கு வழியில்லாமல் பட்டினி கிடந்திருக்கின்றார்கள்.
இப்படி இப்படியே எல்லா நகரங்களும் வீழ்ச்சியுற, அரசப் படைகள் உடையார்கட்டு, தேவிபுரப் பகுதிகளைப் பாதுகாப்பு வலயம் என அறிவித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட மக்கள் பல இடங்களிலுமிருந்து அப்பகுதிகளுக்குச் செல்லத்தொடங்கினார்கள். சனம் நிறைந்த சனக் காடாகியிருந்தது அப்பகுதி. ஆனால் அங்குதான் வன்னி யுத்தத்தில் முதல்முதல் அதிகூடிய மக்கள் அரச படைகளின் ஏவுகணைத் தாக்குதல்களில் பலியாகியிருந்தார்கள். அந்த ஏவுகணைகள் அப்பகுதியில் விழுவதற்கு ஒரு காரணமும் இருந்தது. விடுதலைப் புலிகள் தமது ஆட்லறி ஏவுகணைகளை அப்பகுதியிலிந்தே ஏவிக் கொண்டிருந்தார்கள். எது எப்படியோ, மக்கள் தொடர்ந்து அப்பகுதியில் கொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். இருந்தும் மக்கள் முடிந்தளவுக்கு பதுங்குக் குழிக்குள் பாதுகாப்பாக இருந்தார்கள். ஆனால் எவ்வளவு நேரம்தான் இருக்க முடியும்? பிள்ளைகளுக்குப் பசிக்குமே,
பொருட்கள் தட்டு பாடாகியிருந்தது. எப்போதாவது நிவாரணக் கடைகளில் சாமான்கள் கொடுப்பார்கள் அதற்கு வரிசையில் சென்று நிற்கவேண்டும். இல்லையென்றால் குடும்பமே பட்டினிகிடக்க வேண்டி வரும். பிள்ளைகளுக்கு பால் மாவு கொடுக்கப்படும் போது நீண்ட வரிசையில் நிற்கவேண்டிவரும். இப்படியான நேரங்களில் மக்கள் சாவதனை எப்படி யாரால் தடுக்கமுடியும். தெருக்களே ஓலங்களாலும், ஒப்பாரிகளாலும் நிறைந்திருந்தது. யார் விழுந்தாலும், யார் காயப்பட்டாலும் யாரும் யாரையும் பார்ப்பதில்லை. ஒவ்வொருவரும் தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்வதற்காக முண்டியடித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். தெருக்களில் பிணங்கள் தேடுவாரற்றுக் கிடந்தன. சில உடல்கள் அந்த இடத்திலேயே கிடங்கு கிண்டித் புதைக்கப்பட்டுமிருந்தது.
இதனைவிட மோசமாகவே அடுத்துவந்த யுத்தமுமிமியிருந்தது. மக்கள் ஏவுகணைகள் ஏவப்படாத நேரங்களாகப் பார்த்து உடையார் கட்டு, தேவிபுரப் பகுதிகளிலிருந்து இரணப்பாளை, பொக்கனை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தார்கள். பின் தேவிபுரப் பகுதியையும் அரசப்படைகள் கைப்பற்றிக்கொண்டன.
மணலாற்றுக் காட்டுப்பகுதியிலிருந்து யுத்தம் செய்த படைகள் முல்லைத்தீவு வரையான பகுதிகளைக் கைப்பற்றிக்கொள்ள மக்கள் பொக்கனை தொடக்கம் முள்ளி வாய்க்கால் வரையான பகுதிக்குள் வந்து அடைபட்டுப் போனார்கள். ஏறத்தாழ ஏழு சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்குள் மக்களும், விடு தலைப்புலிகளும் அடைபட்டுக் கிடந்தனர். அப்போது இரணைப்பாளையும் கைவிடப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகள் போர் தொடங்கும் போது ஏறத்தாழ ஐயாயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவினைத் தம்வசம் வைத்திருந்தார்கள்.
மிகமுக்கியமான உயிரிழப்புக்களும், புலிகளின் கொள்கை மாற்றங்களும் இங்குதான் நிகழ்ந்தன. விடு தலைப்பபுலிகள் இறுதியாக இந்தப் பிரதேசத்தையேனும் தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு போர்செய்தார்கள். ஆனாலும் உக்கிரமான போரல்ல. அப்போதும் அவர்களுக்குப் படைபலம் போதுமானதாக இல்லை. அதனால் ‘வீட்டுக்கொருவர், நாட்டுக்காக மற்றவர்கள்’ என்று சொல்லியபடி. எஞ்சியவர்களையும் வீடுவீடாகச் சென்று பிடிக்கத் தொடங்கினார்கள். இப்போது பதினான்கு வயதுக்கு மேற்பட்டவர்களும், பதின்மூன்றுவயதாகினும் தோற்றமுள்ளவர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள். அப்போது எனக்கொரு நண்பர் சொன்னார் “இப்போது அவர்களுக்குத் தேவை நிறைகூடிய சதைக்கட்டிகள்தான்.”
மக்கள் பேதலித்துப் போனார்கள், நிம்மதியில்லாதவர்களானார்கள், பைத்தியம் பிடித்தவர்கள் போலானார்கள். பல இடங்களில் எதிர்ப்புகள் எழத்தொடங்கின. பல போராளிகளை மக்கள் செமையாக அடித்துமிருந்தார்கள். ஆனால் அந்த எழுச்சியை விடுதலைப்புலிகள் மிக இலகுவாக அடக்கினார்கள். இரண்டு இடங்களில் எதிர்த்துக் கதைத்தவர்கள் சிலரை ஈவுஇரக்க மற்றுச் சுட்டார்கள் ஆயுதத்தின் மீதான அச்சம் மக்களை மண்டியிடச்செய்தது. பிள்ளைகளை இழுத்துச்செல்லப் பார்த்துக் கொண்டே இருந்தவர்கள் பிணமாக வரவும் பார்த்துக்கொண்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். இருந்தாலும் சில இடங்களில் சிலர் எதிர்க்கவும் செய்தார்கள்.
இப்படியொரு இறுக்கமான சூழ்நிலையில் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்வது என்ற முடிவோடு இருந்தார்கள். ஆனால் போவதற்கு மிக அசாத்தியமான துணிச்சல் தேவைப்பட்டது. மிகவும் துணிந்தவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள்.4 அப்போது விடுதலைப்புலிகளுக்கு இராணுவத்தை தடுத்து நிறுத்துவதோடு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்லவிருக்கும் மக்களையும் தடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு அவர்கள் இராணுவத்தைத் தடுப்பதற்கு எப்படித் தாக்குதல் நடத்தினார்களோ அதுபோலவே மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். ஆயுதங்கள் மக்களை நோக்கியும் திருப்பப்பட்டிருந்தன. மக்கள் உள்நுழையக்கூடிய பாதைகளில் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. அதில் நிறையப்பேர் காலற்றும், இறந்தும் போயிருக்கின்றார்கள்.
போர் முனை மக்களுக்கு மிக அண்மையிலேயே இருந்தது. நான் நினைக்கிறேன், உலக வரலாற்றிலேயே போர் முனைக்கு மிக அண்மையாக வாழ்ந்த மக்கள் வன்னியில் வாழ்ந்த மக்களாகத்தான் இருக்குமென்று. துப்பாக்கிச் சன்னங்கள் மிகச் சாதாரணமாக வரும். அதற்கு விலக்குவதற்கு பழகிக்கொண்டார்கள். இருந்தும் பலர் எதிர்பாராத விதமாக காயப்பட்டோ, இறந்தோவிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பதுங்குக்குழிகளே வீடாகிப்போயிருந்தது. சமையலைக் கூட சிலர் பதுங்குக்குழிக்குள் அல்லது பதுங்குக் குழிவாசலில் செய்து வந்திருந்தார்கள். சிலர் எப்போதாவது சமைப்பவர்களாக இருந்தார்கள்.
வைத்தியசாலை காயக்காரர்களால் நிறைந்து வழிந்தது. மருத்துவ வசதியற்ற நிலையிலும் விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவும் அரச மருத்துவர்களும் தம்மால் முடிந்தளவு சிகிச்சை செய்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் பாரிய காயக்காரர்களைத் தப்பவைக்க முடியவில்லை. திருகோணமலையிலிருந்து கப்பல் வரும்போது பாரிய காயக்காரர்கள் கப்பல் மூலமாக சிகிச்சைக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். அதுவும் நிரந்தரமாக நடைபெற்றது என்று சொல்லமுடியாது. இறப்புக்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தன. போரும் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளால் இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற சூழலில் அவர்கள் இரண்டு மிக முக்கியமான தாக்குதல்களைச் செய்வதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஒன்று, புதுக்குடியிருப்பு ஆனந்த புரத்துக்குள் மிக முக்கியமான தளபதிகள், முக்கியமான ஆயுதத்தளவாடங்களுடன் சென்று மேற்கொள்ளவிருந்த தாக்குதல். இராணுவத்தால் முறியடிக்கப்பட்டது மட்டுமல்ல. நான்கு பக்கங்களாலும் சூழ்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதும் விடு தலைப்புலிகளின் மிகமுக்கியமான போர் உபாயங்களை நன்கறிந்த தளபதிகள் கொல்லப்பட்டார்கள். இது விடுதலைப்புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இழப்பாகும். இதுபற்றி அப்போது நண்பர் ஒருவர் ‘விடுதலைப்புலிகளின் சக்திவாய்ந்த இராணுவ இயந்திரங்கள் அழிக்கப்பட்டு விட்டÕதென குறிப்பிட்டிருந்தார். இரண்டாவது கடல்வழியாக தேவிபுரப் பகுதிக்குள் நுழைந்தார்கள். அதுவும் பாரிய தோல்வியுடனும், பாரிய இழப்புக்களுடனும் முடிவுற்றது.
இனி வெறும் தக்கவைக்கும் முயற்சிகளே செய்யமுடியுமென்ற சூழலிலும் இந்தியா அல்லது வேறு நாடுகளின் மூலம் ஏதாவது வழி பிறக்கும் என்ற நம்பிக்கையிலும் இருந்தார்கள். அதுவரையில் தக்க வைக்க வேண்டுமென்ற நிலை, இறுதியாக ஒரு துண்டுப்பிரசுரம் விடுதலைப்புலிகளால் விடப்பட்டிருந்தது. அதில் நாற்பத்தைந்து வயதிற்குட்பட்ட அனைவரும் போராடுவதற்கு வரவேண்டும் என்றும் அழைத்துச் செல்வதற்கு போராளிகள் வருவார்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும், எதிர்ப்பவர்கள் ஆண்,பெண் பேதமின்றி அந்த இடத்திலேயே தண்டிக்கப்படுவார்கள் என்றுமிருந்தது. இது மக்களுக்குப் பெரும் இடியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அது அவ்வளவு சாத்தியப்படவில்லையென்றாலும், பலர் களமுனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்கள். தேசியப் பணியென்று காவலரண்கள் அமைப்பதற்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்றவர்களில் பலர் வீடு திரும்பவில்லை.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலிருந்து இராணுவத்தினர் மாத்தளனை ஊடருத்து தாக்குதல் மேற் கொண்டு மாத்தளனைக் கைப்பற்றினார்கள். அன்று மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருந்தார்கள். இது இராணுவமே எதிர்பார்த்திருக்காத தொகை. மாத்தளனும் வீழ்ச்சியுற்றது
இறுதியாக வலைஞர்மடமும் முள்ளிவாய்க்கால் பகுதியுமே எஞ்சியிருந்தது. மக்கள் எப்படியாவது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுவதென்ற குறிக்கோளோடு இருந்தார்கள். விடு தலைப்புலிகள் விடுவதில்லை என்ற குறிக்கோளோடு இருந்தார்கள். மக்கள் இரவுகளில் இரகசியமாகப் போவதும் பின் சூடுவாங்கித் திரும்புவதுமாக இருந்தார்கள். சிலர் அப்படியிருந்தும் உள் நுழைந்தும் விடுவார்கள், இன்னும் சிலர் சில பொறுப்பாளர்களின் துணையுடன் சென்று விடுவார்கள். ஒன்றுமியலாத மக்கள் மட்டும் ஏதும் செய்வதறியாது யுத்தத்தின் வலியையும், இழப்புக்களையும் சுமந்துகொண்டு வாழ்ந்தார்கள், புலிகள் போகச்சொன்ன இடத்திற்கெல்லாம் போனார்கள்.
இறுதியாக வலைஞர்மடமும் இழக்கப்படப்போகும் நிலையில் விடுதலைப்புலிகள் மக்களை முள்ளி வாய்க்கால் பகுதிக்குப் போகச் சொன்னார்கள். போக மறுத்தவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள், துரத்தப்பட்டார்கள். சிலர் இரகசியமாக எங்கேனும் இருந்து விட்டு இராணுவத்தினர் வந்ததும் சரணடைந்து விடுவார்கள். அதுவும் முடியாதவர்கள் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றார்கள். இறுதிவரை விடுதலைப்புலிகள் மக்களை இராணுவப்பகுதிக்குசெல்வதனை தடுத்துக்கொண்டேயிருந்தார்கள். அதற்கென விசேடமான படையணியும் செயல்பட்டுவந்திருந்தது. வலைஞர்மடமும் வீழ்ச்சியுற்றது.
முள்ளிவாய்க்கால் வரலாற்றின் மிகமுக்கியமான பகுதி. இறுதி யுத்தம் நடந்த பகுதி மட்டுமல்ல, இரண்டரை சதுரகிலோமீற்றர் பரப்பளவிற்குள் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் மக்கள் வாழ்ந்திருந்த பகுதி. உலக வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலப்பரப்பில் மிகக்கூடிய மக்கள் வாழ்ந்த பகுதியும் இதுவாகத்தானிருக்கும். மிகநெருக்கமாக இருந்ததால் மக்கள் சொல்லமுடியாத பல துயர்களுக்குள்ளாகினார்கள். மலம் கழிப்பதற்கு இடமற்றிருந்தது. தண்ணீர் தட்டுப்பாடாகியிருந்தது. வறண்ட பூமியாக இருந்ததனால் பதுங்குக் குழிகள் அமைக்கமுடியாத நிலை எந்த நேரமும் எறிகணை விழலாம். யாரேனும் சாகக்கூடும். பக்கத்தில் அழுகுரல் கேட்டால் கூட யாரும் சென்று பார்க்கமுடியாத நிலை. பிணங்கள் தெருக்களில் அடக்கம் செய்வதற்கு யாருமற்றுக் கிடந்தன. அடக்கம் செய்வதற்குரிய அவகாசமும் அற்றிருந்தது. பிணங்களிலிருந்து புழுக்கள் வெளிவரத் தொடங்கியும் மக்கள் அருகிலேயே இருந்தார்கள், அதிலிருந்தே சாப்பிட்டார்கள். அப்படியான சூழ்நிலையிலும் கூட மக்களை அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இறுதிவரை தடுத்துக் கொண்டேயிருந்தார்கள், இறுதிவரை சுட்டுக்கொண்டேயிருந்தார்கள். இதில் வேடிக்கையென்னவென்றால் தடுத்தவர்களும், சுட்டவர்களும் இறுதியில் இராணுவப் பகுதிக்குள் தமது குடும்பத்தோடு வந்து சேர்ந்தார்கள். அவர்கள்தான் மக்களின் முன் வீராவேசமாகக் கதைத்தவர்கள். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியைப் போட்டுடைத்த கதையாக இராணுவத்திடம் செல்கிறீர்கள் என கேட்டவர்கள். நாட்டுக்காகத் தமது உயிரை எந்த நேரத்திலும் கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் சென்று பிள்ளைகளை வலுக்கட்டாயமாக சண்டைக்களத்துக்குக் கொண்டு சென்றவர்கள். பிள்ளையைவிடாத பெற்றோரைத் தமது சப்பாத்துக் கால்களால் உதைத்தவர்கள். இறுதி வரை தமது சயனற் குப்பியாலோ அல்லது தாம் வைத்திருந்த ஆயுதங்களாலோ தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளாமல் குடும்பத்துடன் தப்பி வந்துவிட்டார்கள். இப்போதுதான் பிரபாகரன் முதலாவதாகவும், இறுதியான தோல்வியைச் சந்தித்துக்கொண்டார். இதில் இன்னொரு வேடிக்கையுமிருக்கின்றது. அப்படிப்பட்டவர்களில் சிலரை அரசத் தரப்பே தடை முகாமிலிருந்து விடுதலை செய்திருக்கின்றது.
இறுதியாக முள்ளிவாய்க்காலும் வீழ்ச்சியுற்றது. விசுவாசமான போராளிகள் நேர் எதிரே நின்று போரிட்டு மாண்டுபோனார்கள். மற்றவர்கள் துப்பாக்கிகளையும், சயனற் குப்பிகளையும் கழற்றி எறிந்துவிட்டு, எவரிடம் மக்களை மண்டியிடக் கூடாது என்று சொன்னார்களோ தடுத்தார்களோ, அவர்களிடமே மண்டியிட்டார்கள்.
மக்கள் சொத்துடமைகளையெல்லாம் விட்டுவிட்டு, இழப்புக்களின் வேதனைச்சுமையையும், போர் தந்த தழும்புகளையும் சுமந்துகொண்டு எப்போதுமே எதிரியாகக் கற்பனை செய்திருந்த அரசப் படைகளைச் சரணடைந்திருந்தார்கள்.
1. யாழ்ப்பாண வீழ்ச்சியினை விடு தலைப்புலிகள் தற்காலிகப் பின்னடைவென்றே இறுதிவரை சொல்லிவந்திருக்கின்றார்கள். ஆனால் மிகமுக்கியமான குறிப்பு என்னவென்றால் மீண்டும் யாழ்ப்பாணத்தினை இறுதிவரை அவர்கள் கைப்பற்ற முடியாதவர்களாகவே இருந்தார்கள்)
2. யுத்தநிறுத்தமானது அரசப் படைத்தரப்பால் உடைக்கப்பட்டதென விடுதலைப்புலிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்கள். ஆனால் இரண்டு தரப்புக்குமே சமாதானத்திலும், யுத்தநிறுத்தத்திலும் நம்பிக்கையோ, விருப்போ இல்லை. அவர்களின் பல நடவடிக்கைகள் இதை அப்பட்டமாக வெளிப்படுத்தின.
3. செல்வந்தர்கள் தமது முழுச் சொத்துக்களையும் விடுதலைப் புலிகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டுப் போன நிகழ்வுகளும் நடைபெற்றிருக் கின்றன.
4. சில அரசியல்வாதிகளும், புலம் பெயர் நாட்டிலிருந்த சிலரும் மக்கள் புலிகளை விட்டுவர விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள் என்று அப்போதும் சொல்லிக்கொண்டிருந்தது.
ஓவியங்கள் : புகழேந்தி
நன்றி: உயிர்மை
1 விமர்சனங்கள்:
evrything is good in this article but why you didnt discuss before the desth of ltte leader.
if the person is not achived the victory this the people story.
am i ask one thing around the world all the religion people are living to gether supporting to gether.
but in tamil the zre seeing the time to drag the people.
this shit is in this article too.
Post a Comment