எங்கே பிழைத்தது எங்கள் ஆயுதப் போராட்டம்?
5,000 தொன்களிற்கு மேலான கந்தகத்தை விழுங்கி, செல்கள், விமானக் குண்டுகள், சன்னங்களென இரும்புத் துண்டங்களையே விளைநிலத்தின் பயிர்களாகக் கொண்டு விடுதலை மேனிகளின் உதிரத்தையும், உடலங்களையும் உரமாக்கி ஒரு அவலக்காடாக மாறிப்போயுள்ள எங்கள் வன்னி நிலம் அழிந்து கொண்டிருக்கிற ஒரு பூமியாக.......
இந்த மாத ஆரம்பத்தில் நியூஸ்வீக் சஞ்சிகை உலகில் இருந்து காணமல் போகக்கூடிய இடங்கள் 100 என ஒரு விசேட பதிப்பொன்றை வெளியிட்டிருந்தது. அதில் இலங்கையில் மாறிவரும் தட்டவெட்ப நிலையால் நுவரெலியா தேயிலை உற்பத்தியின் மையம் என்ற பெருமையை இழக்கலாம் எனக்கூறி இலங்கையிலிருந்து நுவரெலியா தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்தபோது எனக்குள் எழுந்த கேள்வி யாதெனில்,
5,000 தொன்களிற்கு மேலான கந்தகத்தை விழுங்கி, செல்கள், விமானக் குண்டுகள், சன்னங்களென இரும்புத் துண்டங்களையே விளைநிலத்தின் பயிர்களாகக் கொண்டு விடுதலை மேனிகளின் உதிரத்தையும், உடலங்களையும் உரமாக்கி ஒரு அவலக்காடாக மாறிப்போயுள்ள எங்கள் வன்னி நிலம் இந்த மேற்குலக ஊடகங்களிற்கு அழிந்து கொண்டிருக்கிற ஒரு பூமியாகத் தெரியவில்லையே என்பதேயாகும்.
30,000 மேற்பட்ட போராளிகள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காவு கொடுக்கப்பட்டு விருட்சமாக வியாபித்திருந்த ஒரு போராட்டம், நிழலரசைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு இனம் இவ்வாறு முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது எதோ ஒரு எதிர்பாராத விபத்தல்ல. மற்றவர்களின் மீது பழிபோட்டுத் தப்பிவிடும் காரியத்தில் கெட்டிக்காரரான நாங்கள் சர்வதேசத்தை மாத்திரம் பழிகூறித் தப்பிக்க இது ஏதோ சிறு தவறுமல்ல. எனவே அலசி ஆராய்வோம் வாருங்கள்.
சர்வதேசத்தின் வேண்டுகோளிற்கமைய ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று மே 17ம் திகதி நாங்கள் எங்களையே தேற்றிக் கொண்டது 2009 பெப்ரவரி மாதம் 23ம் தேதி சர்வதேச சமூகத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கான பதிலாக. ஆனால் அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது 27 சதுரகிலோ மீற்றர் பரப்பளவு நிலத்திற்குள் விடுதலைப்புலிகளும் வன்னி வாழ் மக்களும் முடக்கப்பட்டிருந்தனர். ஆனால் மே 17ல் நாங்கள் ஆயுதங்களைக் கையளிக்க முன்வந்த போது எங்களிடம் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை.
இந்த மூன்றைரை மாதக் காலங்கடத்தல் என்பது எங்களின் மகா தவறு என்பதை மறுத்து எல்லாமே முடிந்த பிறகு உங்களின் வேண்டுகோளிற்காகவே நாங்கள் ஆயுதங்களை மே 17ல் கையளிக்க முன்வந்தோம் என சர்வதேசத்தின் மீது பழிபோட்டுத் தப்பிக்க முயல்வது மடமை. அத்தோடு இந்த இழப்பு பத்தோடு பதினொன்றான விடயமல்ல. தமிழர்களின் வரலாறே அழிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. இதற்கான காரணத்தை நாங்கள் ஆராய்ந்து உசாரடையாவிட்டால் மீண்டும் எங்கள் இனம் எங்கள் சொந்தங்களாளேயே ஏமாற்றப்பட்டுவிடும்.
இந்தப் போராட்டத்தின் பின்னடைவிற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு.
முதலாவது பேச்சுவார்த்தைக்கான ஒரு தரப்பாக விடுதலைப்புலிகள் சமபலத்துடன் பேசமுன் வந்த சமயம் இடம்பெற்ற ஒரு நிகழ்வு. வெளிநாடுகளிலுள்ள பிரதான விடுதலைச் செயற்பாட்டாளர்களை தமிழீழத்திற்கு அழைக்கிறார் தமிழீழ நிழலரசின் வெளியுறவு அமைச்சர் கஸ்ரோ. ஆனால் அவருக்கு கிடைத்த பதில் அண்ணையூடாக (கே.பி.) அழையுங்கள் என்பதாகும். வெளிநாட்டிலுள்ளவர்கள் அதுவரையும் கே.பி.யூடான தொடர்பையே பேணியதால் அவர்களுடைய பதிலிற் பிழையில்லை. ஆனால் கஸ்ரோவின் புரிதலில் தவறு ஏற்படுகிறது.
இந்தச் செயலைத் தனது ஆளுமைக்கான அவமானமாகக் கருதிய கஸ்ரோ தலைவரிடம் முறையிடுகிறார். கே.பி. தனி ஆவர்த்தனம் வாசிப்பதாகவும் அவரிற்கென்ற தனிப்பட்ட செல்வாக்கு வளையமே வெளிநாடுகளில் கோலோச்சுவதாகவும் செய்த முறைப்பாடு காரியமாக்கப்பட்டது. கே.பி. தொடக்கம் ஒவ்வொரு நாடுகளிலும் தலைமைத் தொடர்பாளர்களாக இருந்த அனைவருமே மாற்றப்படுகின்றனர். கஸ்ரோவின் சிபாரிசிலானவர்கள் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள்.
விடுதலைப்புலிகளின் புலம்பெயர்ந்த ஊடங்களிலும் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் மாற்றப்படடு கஸ்ரோ சார்பானவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அத்தோடு தனது நேரடியணியிலிருந்து மூவரை மேற்குலக ஊடக செயற்பாட்டை வழிநடத்தவென அனுப்பி வைக்கிறார். இவ்வாறு விரைவாகச் செயற்பட்ட கஸ்ரோ தனக்கான அதிகார அணியாக அரசியற்துணைக்குழு என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒருவரை நியமித்து ஒரு குழுவை அமைத்து அவர்களை வழிநடத்துநர்களாக அதிகார மையமாக வலம்வர விடுகிறார்.
எந்தவித அனுபவமுமில்லாத இந்த இளைஞர்கள் மற்றையவர்களைப் புறந்தள்ளி தங்களின் திட்டங்களை முதன்மைப்படுத்தி சிறுபிள்ளை வேளாண்மையாக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முயன்றது.
அனுபவதாரிகளின் நுட்ப வலைப்பின்னலில் இருந்து ஆயுத விநியோகமும் இவ்வாறு கை மாற்றப்பட புதியவர்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவிலான பின்வாங்கல்களை பரிசாகப் பெற்றுக் கொள்கின்றனர். இவர்களில் மட்டும் பிழையில்லை இந்தக் கணப்பொழுதில் இலங்கையும் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றிருந்ததால் கப்பல்களைக் கண்காணித்ததும் ஒரு காரணம். இருந்த போதும் அனுபவமின்மை பல சறுக்கல்களை பரிசாகக் கொடுத்தது.
கஸ்ரோவின் பொறுப்பெடுப்பின் பின்னான காலத்தில் சென்ற 13 கப்பல்களும் இந்துமா கடலிற்கு இரையாகின. விமானங்கள், உலங்குவானூர்திகள், ஆட்டிலறிகள் என இன்னோரன்ன ஆயுதங்களும் அவற்றோடு மௌனித்து அடிக்கடலில் சங்கமித்தன.
இங்கே தான் விடுதலைப் போராட்டத்தின் ஆணி வேரே புடுங்கப்பட்டது. தீவொன்றில் இருந்தவாறே போராடும் இனமொன்றிற்கு கடற்போக்குவரத்தே உயிர்மூச்சு என்பதையறிந்து கடற்புலிகளை இந்துமா சமுத்திரத்தின் மூன்றாவது படையணியாக உருவாக்கிய விடுதலைப்புலிகளின் கடல் வலைப்பின்னலைக் கையாள்வதில் கஸ்ரோவின் அணி தோல்வி கண்டது.
இரண்டவாது காரணம் வெளிநாட்டு உறவுப் பேணல். புலம்பெயர்ந்த நாடுகளிற்கான சிறப்புப் பிரதிநிதிகளாக கஸ்ரோவால் நியமிக்கப்பட்ட நபர்கள் இராஜதந்திர உறவுப் பேணலை மேற்கொள்ளக்கூடிய தகமையற்றவர்களாக இருந்த காரணத்தால் அவர்கள் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் விடுதலைக்கான ஊடகங்களிற்கூடாக செயலாற்ற விடப்படுகின்றனர்.
இதற்கு எந்தவிதத் தங்குதடையில்லாமல் முக்கிய ஊடகப் பொறுப்பாளர்கள் லண்டன், பாரிஸ், ரொறன்ரோ (ஐ.பி.சி, ரி.என்.ரி, சி.எம்.ஆர்) ஆகிய முக்கிய தளங்களில் கஸ்ரோவின் ஆதரவாளர்களாக மாற்றப்பட்டதால் இதன்வழியான கருத்துப் பரிமாறல்கள் மூலமாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை உண்மையானதாகத் திரிபுபடுத்தி வலம்வர விடுகிறார்கள். இது விடுதலைப்புலிகளின் பலம் தொடர்பான ஒரு மாய நிலையை புலம்பெயர்ந்த மக்களிடையே எற்படுத்தியது.
இதனோடு இவர்களால் முனைப்புப்படுத்தப்பட்ட போராட்டங்களும் விடுதலையின் தேவையைப் பறை சாற்றுவதாகவோ அல்லது மக்களின் வலியினைப் பறைசாற்றுவதாகவோ அல்லாமல் ஏனைய இனத்தவர்களை கோபமுறச் செய்வதாகவும், இந்தக்குழு தங்களது சொந்தப் பலத்தை தலைமைக்கு நிரூபிப்பதற்கான ஒரு தளமாகவும் பாவிக்கப்பட்டது.
எந்த ஒரு மேற்குலக நாட்டிலுமே எந்த ஒரு இராஜதந்திர வலைப்பின்னலையும் வெற்றிகரமாக ஏற்படுத்த முடியாதவர்களாக கஸ்ரோவினால் நியமிக்கப்பட்டவர்கள் இருந்தபோதும் அவர்களால் மற்றையவர்களை அரவணைத்துச் செல்வதற்கான புரிந்துணர்வும் இல்லாமல் இருந்ததே மிகப்பெரும் வீழ்ச்சியாக அமைந்தது.
இத்தோடு இவர்களை வழிநடத்தவென கஸ்ரோவால் அனுப்பப்பட்டவர்கள் விடுதலைப்போராட்டம் தொடங்கியதன் பின்னான காலத்தில் பிறந்த இளம்வயதினர் என்பதோ புலம்பெயர் நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பான அனுபவம் அறவேயில்லாதவர்கள் என்ற காரணத்தால் அவர்களிற்கு இவர்களின் சொல்லைக் கேட்பதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. இவர்களே சக்கர நாற்காலியின் துணையடன் இயங்கும் கஸ்ரோவின் கதாநாயகர்கள் ஆகின்றார்கள்.
இவர்களிலொருவர் நோர்வேயிலிருந்து சென்ற மாணவியொருவரைக் காதலித்து நோர்வேக்கு குடிபுகுந்த ஒரு சாதாரண போராளி. வெளிநாடுகளிலிருந்து போவோருக்கு பயண வழிகாட்டியாக இருப்பதே தமிழீழத்தில் அவரது முழு நேர வேலை. அவரே இப்போதைய தலைவராக போற்றிப்பாடப்படுகிற நெடியவன் என்கிற போராட்ட காலத்திற்குப் பிறகு பிறந்த ஒரு பாலகன். இது புலம்பெயர்ந்த மக்களிற்கான ஒரு துன்பியல் வரலாறு.
இவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் வழிநடத்துனர்கள் என்பதை விட தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்பவர்களாகவே இருந்தனர். மத போதகர்கள் போல அதீதமான நம்பிக்கையை இரு தரப்பிற்கும் கொடுத்துக் கொண்டிருந்த இவர்களிற்கு களத்துடனோ அல்லது புலத்துடனோ பரிச்சயமான தொடர்பு இறுதிக்காலத்தில் இல்லாததே இப் பெரிய அழிவின் காரணம்.
இந்த தன்மையை இறுதியாகப் புரிந்து கொண்ட விடுதலைத்தலைமை கே.பி.யே வெளியுறவுப் தொடர்புகளிற்கான பொறுப்பாளர் என்று ஜனவரி 30, 2009ல் அறிவித்து சமாதான நகர்வுகளிற்கும், சர்வதேச உறவிற்கும் கே.பி.யே முதன்மைத் தொடர்பாளராக இருப்பார் என்பதையும் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கிறது. இதனால் மீண்டும் தாங்கள் பழைய நிலையை அடையலாம் என விடுதலைப்புலிகள் நினைத்திருந்தாலும் நிலைமை தலைகீழாகவே இருந்தது.
ஏனெனில் சகல நாடுகளிலும் அப்போது பொறுப்பாளராக இருந்தவர்கள் கஸ்ரோவால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள். எனவே இவர்கள் கஸ்ரோவிடம் இருந்து தகவல் வந்தாலே தாங்கள் செயற்பட முடியும் என்ற அடாவடித்தன முடிவுகளையெடுத்து அதனை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார்கள். இது கே.பி.யை செயநிலையற்ற ஒருவராக பெயருக்கு மாத்திரம் இருக்க மாத்திரமே வழி செய்தது.
அத்தோடு கே.பி.யின் தகவற் பரிமாற்றத்திலும் தடைக்கல்லாக கஸ்ரோவின் அணி விளங்கியது. கே.பி.யால் சொல்லப்பட்ட தகவல்கள் கூடத் தலைவருக்கு செல்லாமல் இடைநடுவிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டு அதன்படியே நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவையனைத்தையும் தலைவர் தெளிவாக அறிந்த போது போராட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தது. இந்தத் தவறுக்கான முழுமுதற் காரணமாக கஸ்ரோவும் அவரது வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களுமே என்பதையுணர்ந்த தலைவர் கஸ்ரோவைச் சந்திப்பதையோ உரையாடுவதையோ தவிர்க்கிறார். கடைசியாக கஸ்ரோவிற்கான நஞ்சருந்திச் சாகும்படி உத்தரவும் போகிறது. போராட்டம் முடிவடைவதற்கு 10 நாட்களிற்கு முன்பே கஸ்ரோ இவ்வுலகை விட்டு மேலுலகு செல்கிறார்.
எல்லாமே முடிந்தாயிற்று. தேசியத்தலைவர் கடைசியாக யாரைத் துரோகிகள் என்று அடையாளம் காட்டினாரோ அவர்களே இப்போதும் துரோகத்தின் உச்சியில் இருக்கிறார்கள். ஆனால் தாங்களே தேசியத்தின் வாரிசுகள் எனக் கூறிக் கொண்டு தேசியத் தலைவனிற்கு அவமரியாதை செய்து கொண்டு அவரைத் தங்களின் தேவைகளிற்குப் பலிக்கடாவாக்கிறார்கள். அத்தோடு உருத்திகுமாரனைத் துரோகி என்பதில் இருந்து நாடுகடந்த அரசைச் செயலிழக்க வைப்பதிலிருந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரித்தது வரை எல்லாக்காரியங்களையும் இந்தக் கூட்டமே செய்து கொண்டிருக்கிறது.
தேசத்தின் தலைவன் இறுதியாக யாரைத் துரோகியாக அடையாளம் கண்டு கொண்டாரோ அவர்களை நாங்களும் அடையாளம் கண்டுகொள்வோம். ஏனென்றால் மே 17ம் திகதி வன்னி அழிந்து முடிகிற தறுவாயில் இவர்கள் தேசியக் கொடி பற்றி அலசி ஆராய்ந்து அது புலிக் கொடியல்ல பல நூற்றாண்டுகளிற்கு மேலாக கொடி என்பது பற்றியே பேசிக் கொண்டிருந்தனரே தவிர, மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கிறார்கள் அவர்களைக் காப்பாற்றுங்கள் என்பது பற்றியல்ல.
மேரி மைந்தன் mainthanm173@gmail.com
Tamilwin
0 விமர்சனங்கள்:
Post a Comment