ஒரிசாவில் கொடூரம் மகன், தங்கை, சிறுமி நரபலி அரசு ஊழியர் கைது
புவனேஷ்வர், அக். 12: ஒரிசாவில் மகன், தங்கை, அவருடைய மகளை நரபலி கொடுத்து நள்ளிரவில் பூஜை நடத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். இரும்பு தடியால் தாக்கப்பட்ட ஊழியரின் மகன், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.
ஒரிசாவில் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள அனிபஜாடா கிராமத்தை சேர்ந்தவர் பன்சிதார் மதியால். அரசு ஊழியர். அருகில் உள்ள கவுடகான் கிராமத்தில் வசித்த இவருடைய தங்கை கதினா நாயக் (35), தனது மகள் ரேகாவுடன் (10) தசரா விழாவை கொண்டாடுவதற்காக மதியால் வீட்டுக்கு வந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் காளிதேவிக்கு மதியால் பூஜை செய்துள்ளார். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் ஜெகன் (13), தங்கை கதினா. அவருடைய மகள் ரேகா ஆகியோரை இரும்பு தடியால் பலமாக தாக்கி உள்ளார். இதில் கதினாவும் ரேகாவும் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தனர். பலமான காயத்தால் ஜெகன் மயக்கம் அடைந்து விட்டார். ஆனால், மூவரும் இறந்து விட்டதாக நினைத்து மதியால் பூஜையை தொடர்ந்துள்ளார்.
மூன்று பேரையும் மதியால் தாக்கியபோது வலியால் அவர்கள் போட்ட சத்தத்தை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே விரைந்து வந்த போலீசார், மதியாலை கைது செய்தனர். ஜெகனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். நரபலி கொடுத்தது பற்றி மதியாலிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment