தொடர்ந்து பூஜை செய்வேன்: சொல்கிறார் பின்னியக்காள்
உசிலம்பட்டி அருகே துர்க்கையம்மன் கோவில் பூஜாரியாக பணியாற்ற ஐகோர்ட்டில் அனுமதி பெற்றுள்ள பின்னியக்காள், கோவிலில் தினமும் பூஜை செய்யப் போவதாகக் கூறியுள்ளார். மதுரை, உசிலம்பட்டி அருகே உள்ள நல்லுத்தேவன்பட்டியில், வனதுர்க்கையம்மன் கோவில் உள்ளது. பின்னத்தேவர் என்பவர் பூஜாரியாக இருந்தார். அவர் இறந்ததைத் தொடர்ந்து, ஆண் வாரிசு இல்லாததால் அவரது பங்காளிகள் வகையறாவில் வாசுதேவன் என்பவரை கிராமத்தினர் பூஜாரியாக தேர்வு செய்தனர்.
"பின்னத்தேவரின் பெண் வாரிசான நான்தான் பூஜாரியாக வேண்டும். பெண் என்பதால் என்னை பூஜை செய்ய விடாமல் தடுக்கின்றனர்' என, பின்னத் தேவர் மகள் பின்னியக்காள், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, பின்னியக்காள் பூஜாரியாக செயல்படவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் உதவவேண்டும் எனவும் உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, பின்னியக்காள் பூஜை செய்ய ஆர்.டி.ஒ., அப்பாவு தலைமையில், அதிகாரிகள் போலீஸ் பாதுகாவலுடன் சென்று பின்னியக்காள் பூஜாரி பொறுப்பேற்று, கோவிலில் பூஜை செய்ய நேற்று முன்தினம் உதவினர்.
இதுகுறித்து பூஜாரி பின்னியக்காள் கூறியதாவது: நான் சிறு வயதில் இருந்தே அப்பாவுடன் கோவிலுக்கு சென்று பூஜைகள் நடத்துவதில் உதவி வந்துள்ளேன். எனக்கு, பால்ராஜ் என்பவருடன் திருமணமாகி, நான்கு குழந்தைகளும் உள்ளனர். எனக்கு 50 வயதாகி விட்டது. என்னுடைய தந்தைக்கு வயதான போது, நான்தான் கோவில் பூஜைகளை நடத்தி வந்தேன். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் காலையில் கோவிலுக்குச் சென்று ஐந்து வகை அபிஷேகம், பூஜைகள் நடத்தி, மக்களுக்கு வாக்கு சொல்வேன். என்னுடைய வாக்கு பலிக்க துவங்கியதும், கேரளப் பகுதியில் இருந்தும், தமிழகத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரத் துவங்கினர். நான் வெளியூர் செல்லும் நேரத்திலும், கோவிலுக்கு போக முடியாத நேரத்திலும் என்னுடைய கணவர் பூஜைகளை கவனித்து வந்தார்.
கோவிலுக்கு கூட்டம் அதிகமாக வருவதால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர், பெண் பூஜாரியாக இருக்கக் கூடாது என தகராறு செய்து, வேறு ஒருவரை பூஜாரியாக கொண்டு வர முயற்சித்தனர். இரண்டு ஆண்டுகள் பொறுமையாக போராடி, பூஜாரியாகியுள்ளேன். தற்போது, பாதையை மறித்து பிரச்னை செய்கின்றனர். கோவிலுக்கு செல்ல மாற்று பாதைக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். கோவில் சாவியும் என்னிடம் கொடுக்க உள்ளனர். இனிமேல் வழக்கம் போல் பூஜைகளை நடத்துவேன். இவ்வாறு பின்னியக்காள் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment