மனம் திறந்த பிரபாகரன்!
ஈழத் தமிழர்கள் மீது கொடூரமான யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. புலிகளின் தலைநகரான கிளிநொச்சியைப் பிடிப்பதற்காக விமானங்கள் மூலம் தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது ராணுவம். பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள்வரை கொத்து கொத்தாக படுகொலை செய்யப்படுகிறார்கள். ராணுவத்தினரின் விமான குண்டு வீச்சிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சொந்த வாழ்விடங்களை விட்டு காடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள் தமிழர்கள். உணவும், இருப்பிடமும் இல்லாமல் போதிய மருத்துவ வசதிகளும் கிடைக்காமல் தவிக்கின்றனர். குண்டு வீச்சில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு செல்கிற வழியிலேயே மரணமடைவது அதிகரித்து வருகிறது. தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால், நீர்நிலைகளில் விஷ ஜந்துக்களின் உற்பத்தி பெருகி வருகிறது. காடுகளில் தஞ்சமடைந்துள்ளவர்கள் அந்த விஷ ஜந்துக்களுடனேயே வசிக்க வேண்டியதிருப்பதால், கடந்த வாரத்தில் மட்டும் பாம்புக்கடிக்கு ஆளாகி 120 பேர் இறந்து போயுள்ளனர். அதில் 47 பேர் குழந்தைகள். ஒரு இளநீர் மட்டுமே ஒருவரின் ஒருநாள் உணவாக அங்கு இருக்கிறது. காடுகளில் கிடைக்கும் கிழங்குகளை சாப்பிட்டுவிட்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார். குடிப்பதற்கு ஒரு வாய் நல்ல தண்ணீர்கூட கிடைப்பதில்லை.
இலங்கை அரசு பொருளாதார தடை விதித்திருப்பதால் ஒரு கிலோ அரிசி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவும் போதுமான அளவில் கிடைப்பதில்லை. ஒவ்வொரு பொருளின் விலையும் எட்டாத உயரத்தில் இருக்கிறது.
இந்த மக்கள் மீதுதான் குண்டுகளை வீசி ராணுவத்தினர் படுகொலை செய்து கொண்டிருக்க... அந்த மக்களை பாதுகாக்க போராடி வருகிறார்கள் புலிகள். ஈழத்தின் நிலவரங்களை தெரிவிக்க, பிரபாகரன் பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதில்லை. மாறாக, அந்த பொறுப்பினை புலிகளின் அரசியல்துறை ஏற்றுக்கொண்டிருக்கிறது. பத்திரிகைகளின் கேள்விகளை ஈ மெயி-ல் பெற்றுக்கொள்கிற அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், அதற்கான பதில்களை பிரபாகரனின் ஒப்புதல் பெற்றே பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கிறார்.
அந்த சூழலில், ஈழத்தில் நிகழ்ந்து வரும் நெருக்கடியான நிலை குறித்து, பல்வேறு கேள்விகளை அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனுக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தோம். நடேசனும் நமது கேள்விகளுக்கான பதில்களை பிரபாகரனோடு ஆலோசித்து பதில்களாக்கி நக்கீரனுக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரபாகரனின் மனம் திறந்த பதில்கள் அடங்கிய பேட்டியி-ருந்து...
கேள்வி-1980களுக்குப் பின்னர் தமிழகத்தில் எற்பட்டுள்ள ஈழத் தமிழருக்கு ஆதரவான தற்போதைய எழுச்சியான சூழல் குறித்து?
பதில்-இலங்கைத் தீவில் 1983 காலப்பகுதியில் சிங்கள அரச படைகளாலும் பேரினவாத அரசியல் தலைமைகளினாலும் வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு பெரியதொரு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், தமிழர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்விடங்களை விட்டு புலம் பெயர்ந்து அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் கேட்கும் அளவிற்கு... இனப்படுகொலையின் தாக்கம் இருந்தது. அந்த கொடூரங்கள் இன்னும் மறக்க முடியாதவை. இதனைக் கண்டு தமிழக மக்களும் அரசியல் தலைமைகளும் அரசியல் வேறுபாடுகளுக்கும் அப்பால் கொதித்தெழுந்தனர். அதுபோலவே, இன்றும் சிங்கள அரச படைகள் தனது தரைப்படை, கடற்படை, விமானப் படை ஆகிய முப்படைகளையும் பயன்படுத்தி பாரிய அளவில் இனப்படுகொலைகளை நடத்தி வருகிறது. தினமும் மக்கள் கொல்லப்பட்டும், வாழ் விடங்களை விட்டு அகதிகளாக்கப்பட்டும் தவியாய் தவிக்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கு சொல்லொணா இன்னல்கள், ஆற்றுப்படுத்த முடியாத கொடூரங்கள் எற்படுகிற போதெல்லாம் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள். அவ்வாறான ஒரு சூழலே தற்போது தாய்த் தமிழகத்தில் எற்பட்டுள்ளதாகவே நாங்கள் பார்க்கிறோம். அந்த எழுச்சியான சூழல் உங்களுக்கு பலம் சேர்க்கும்.
கேள்வி-சமீபத்தில் தி.மு.க. நடத்திய சென்னை பொதுக்கூட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு அதரவான உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்தினார் தமிழக முதல்வர் கலைஞர். அதனை அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, "இலங்கையில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிங்கள அரசின் யுத்தத்தை நிறுத்த இந்திய அரசு இருவார காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழக நாடாளுமன்ற எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள்' என்கிற நிலையை எடுத்துள்ளார் கலைஞர். தமிழகத்தில் ஆளும் தி.மு.க., இத்தகைய ஆதரவான நிலையில் இருப்பது பற்றி?
பதில்-தமிழக முதல்வர் கலைஞர் தமிழ் உணர்வுமிக்கவர். ஈழத் தமிழர்கள் மீது ஆழமான அன்பும், பாசமும் எப்போதும் கொண்டிருப்பவர். அதனை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். தமிழீழத்தில் சிங்கள அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிய போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களுக்காக ஒங்கிக் குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதனை செயலிலும் காட்டி வருபவர். தற்போது, ஈழத்தில் தமிழர்களுக்கு எற்பட்டிருக்கும் சொல்லொணா துயரம் கண்டு அத்தகைய ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பது எம்மையெல்லாம் பூரிப்படைய வைத்துள்ளது. அந்த ஆதரவை நாங்கள் என்றென்றும் எதிர்பார்க்கிறோம்.
கேள்வி-உங்கள் இயக்கத்தை கடுமையாக எதிர்ப்பவரும் இயக்கத்துக்கு தடைவிதிக்க காரணமாக இருந்தவருமான
ஜெயலலிதா, இருவாரங்களுக்கு முன்பு ஈழப் பிரச்சினையில் ஆதரவான நிலையை எடுத்தார். தற்போது அதை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் மனநிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்-தற்போது ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையின் தாக்கம், முழுத்தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் எமக்கான ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவும் ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், தற்போது அதனை மாற்றிக் கொண்டிருக்கிறாரெனில்... அதுபற்றி நாங்கள் என்ன சொல்ல?
கேள்வி-உங்களின் தற்போதைய தலைநகரான கிளி நொச்சியைப் பிடித்து விடுவோம் என்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்சே. இலங்கையின் உண்மையான போர்க்கள நிலைமை என்ன?
பதில்-இலங்கை அரசு, பல்வேறு வெளிநாடுகளிடமிருந்து ஏராளமான ராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது. ராணுவ தளவாடங்களை வாங்கிக் குவிக்கிறது. அதனைக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போர் ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் எமது தாயகத்தில் எமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்குள் நுழைந்து கிளிநொச்சி நகருக்கு அண்மையில் சிங்கள அரச படைகள் நிலை கொண்டுள்ளன. எமது விடுதலைப் போராளிகளும் சிங்கள அரச படைகளை கிளிநொச்சிக்குள் நுழைய விடாமல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த தாக்குதலில், ராணுவத்தினர் பாரிய அளவில் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால், இலங்கை ராணுவத்தினர் விமானங்கள் மூலம் தமிழர்களின் குடியிருப்புகள் மீது கண் மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடத்துகின்றனர். அதில் ஒரு லட்சத் துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் உள்ளூரிலேயே தமது வாழ்விடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களைத் தேடி அகதிகளாக நகர்ந்த வண்ணம் உள்ளனர். ஆனால், கிளிநொச்சியை பிடித்து விடுவோம் என்பது ராஜபக்சேவின் பகற்கனவு.
கேள்வி-இலங்கை ராணுவத்திற்கு பல்வேறு நாடுகள் உதவி செய்துவரும் நிலையில், எந்த ஒரு நாட்டின் ஆதரவும் இல்லாத உங்களால் வெற்றி பெற்றுவிட முடியுமா?
பதில்-உலகத் தமிழ் மக்களின் ஆதரவு எம்பக்கம் உள்ளது. எமது மக்கள் முற்று முழுதாக எம்மோடு இணைந்து நிற்கிறார்கள். ஒரு இனத்தினுடைய விடுதலைப் போராட்டத்தில் மக்களின் ஆதரவும் பலமுமே முதன்மையானது. அதுதான் விடுதலை போராட்டத்தின் வெற்றிக்கு வழி வகுப்பதாகும். அந்த வகையில், உலக தமிழ் மக்களின் எகோபித்த ஆதரவு தொடர்ந்து எங்களுக்கு கிடைத்து வருவதால்... இறுதி வெற்றி எங்களுக்குத்தான். அந்த வெற்றி... தமிழர்களின் வெற்றியாக இருக்கும்.
கேள்வி-போராளிகளின் எண்ணிக்கையை 3 ஆயிரமாக குறைத்து புலிகளை பலகீனப்படுத்தி விட்டோம் என்கிறதே இலங்கை ராணுவம்?
பதில்-எங்கள் மீது ராணுவம் நடத்தும் தாக்குதலில், சிங்கள ராணுவத்தினர் தான் இழப்புகளை அதிகம் சந்திக்கின்றனர். இந்த உண்மைகளை சிங்கள அரசு திட்டமிட்டே மறைத்து வருகிறது. சிங்கள அரசின் சார்பு ஊடகங்களும் அதனைத்தான் செய்து வருகின்றன. அத்தகைய அரசு சார்பு ஊடகங்கள் வழியாக ஒரு பொய்ப்பிரச்சாரத்தை திட்டமிட்டே செய்து வருகிறார் அதிபர் ராஜபக்சே. எங்களுக்கு எதிரான ஒரு கருத்தோட்டத்தை உருவாக்கும் முயற்சிதான் அதிபர் ராஜபக்சேவின் பொய்ப் பிரச்சாரம். எங்களின் ராணுவ வலிமை முன்னெப்போதும் போல் பலமாகவே இருக்கிறது.
கேள்வி-விமான குண்டுகள் மூலம் உங்களின் மறைவிடங்கள், புலிகளின் விமான ஒடுபாதை, சந்திக்கும் ரகசிய ஆடங்கள் அகியவற்றை அழித்துவிட்டதாகவும் சிங்கள ராணுவம் கூறி வருகிறதே?
பதில்-எங்களின் மறைவிடங்கள், விமான ஒடுபாதை எதையும் சிங்கள ராணுவத்தினரால் சேதப்படுத்தப்பட முடியாது. ராணுவத்தினரின் கண்மூடித்தனமான விமான குண்டுவீச்சில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள், மருத்துவ மனைகள், கல்விச்சாலைகள், ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன. வளமான செழிப்பான காடுகள் மீது குண்டுகளை வீசி இயற்கை வளங்களையும் அழித்து வருகிறது ராணுவம். தமிழீழத்தையும் தமிழ் இனத்தையும் அழிப்பதற்காகவே, மக்களின் வாழ்விடங்களையும் இயற்கை வளங்களையும் அழித்துவிட்டு... எங்களின் மறைவிடங்களை அழித்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறது ராணுவம்.
கேள்வி-சமீபத்தில்கூட உங்கள் அரசியல்துறை தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளதே? அப்போது நீங்கள் அங்கு இருந்தீர்களா?
பதில்-தாக்குதல் நடந்தது. ஆனால், எந்த சேதமும் எற்படவில்லை. தாக்குதல் நடந்தபோது அங்கு இருக்கவில்லை.
கேள்வி-வடக்குப் பிரதேசத்தில் நீங்கள் பதில் தாக்குதல் எதையும் நடத்த முடியாததற்கும் உங்களின் பலவீனத்திற்கும் கருணா இல்லாததுதான் காரணம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறதே?
பதில்-இயக்கத்திற்கு துரோகம் இழைத்தவர் கருணா. அவரது துரோகத்தால் இயக்கத்திலிருந்து நிராகரிக்கப்பட்டவர். புலிகள் இயக்கம் எப்போது அவரை நிராகரித்ததோ... அப்போதிருந்தே தமிழ் மக்களிடமிருந்தும் நிராகரிக்கப்பட்டவர். இயக்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இழைத்த துரோகத்தால், சிங்கள அரச படைகளின் ஒட்டுக்குழுவாக இயங்கி வருபவர். எமது மக்கள் முற்றுமுழுதாக அவரை நிராகரித்து விட்ட நிலையிலும், எமது மக்களின் முழு பலமும் எம்மோடு இருக்கின்ற நிலையிலும்... இந்தக் கேள்வியை முழுதாக மறுக்கின்றேன்.
கேள்வி-கருணாவை இலங்கை எம்.பி.யாக மகிந்த ராஜபக்சே நியமித்திருப்பது பற்றி?
பதில்-தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப்போரை நடத்திவரும் சிங்கள அரசு, உலக நாடுகளை ஏமாற்றி ராணுவ உதவிகளைப் பெறுவதற்காகவே கருணாவை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது. அதற்காக, துரோகி கருணாவிற்கு பதவி தந்துள்ளார் ராஜபக்சே. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்ததற்காக, அடக்குமுறை அரசின் தலைவர் ராஜபக்சேவால் வழங்கப்பட்ட ஒரு "கைக்கூலியாகவே" அதனைப் பார்க்கின்றோம்.
கேள்வி-இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆயுத உதவி அளித்து வருவதாக நீங்கள் குற்றம்சாட்டி வருகிறீர்கள்? அந்த அடிப்படையில் அதனை முன்வைக்கிறீர்கள்?
பதில்-இலங்கை ராணுவத்தினருக்கு ஆயுதத் தளவாடங்களை இந்தியா வழங்கி வருவதாகவும் பயிற்சி அளிப்பதாகவும் பல்வேறு செய்தி உடகங்கள் பதிவு செய்துள்ளன. வவுனியா தளத்தில் ராடார் கருவியை இயக்குவதற்கான பயிற்சியை சிங்கள ராணுவத்தினருக்குக் கொடுக்க இந்திய தொழில்நுட்பவியல் வல்லுநர்கள் செயல்பட்டு வந்தனர் என்பதும் ஊடகங்கள் மூலம் உலகிற்கு அண்மையில் தெரியப்படுத்தப்பட்டது. அது எங்களுக்கு கவலையளிக்கிறது.
கேள்வி-இலங்கை அரசு மேற்கொண்டு வரும் யுத்தம் நீடிக்குமா? அல்லது மீண்டும் பேச்சுவார்த்தை நடை பெறும் சூழல் உள்ளது என கருதுகிறீர்களா?
பதில்-சிறீலங்கா அரசின் அரசியல், ராணுவ நிலைப்பாடுகளைப் பொறுத்தே அவ்வாறான சூழலை எதிர்பார்க்கலாம். ஆனால், கடந்த காலத்தில் நிலைநிறுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அவர்களே தாமாக விலகியது மட்டுமல்லாமல் ராணுவத் தீர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர்.
கேள்வி-இலங்கை இனப்பிரச்சினையில் எந்த மாதிரியான பங்களிப்பை இந்தியா செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்-தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, எமக்கு ஆதரவு நல்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
கேள்வி-சமீபத்தில் இலங்கை ராணுவத்தின் முன்னாள் துணை தளபதி ஜனகபெரேராவை உங்கள் இயக்கத்தின் தற்கொலைப்படை கொன்றுள்ளதே?
பதில்-அவ்வாறான சம்பவங்களின் போதெல்லாம் எமது இயக்கத்தின் மீது குற்றம் சாட்டுவதையே வழமையான நட வடிக்கையாக வைத்திருக்கிறது சிங்கள ராணுவம். சிங்கள ராணுவத்தினருக்குள்ளேயே ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் அளவிற்கு முரண்பாடுகள் உள்ளன.
கேள்வி-"தற்கொலைப்படைத் தாக்குதலையும் அப்பாவி சிங்களர்களையும் அழிக்கும் புலிகளை ஒடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது' என்று இந்தியாவிடம் இலங்கை அரசு கூறிவருகிறது. இந்த நிலையில், தமிழர்களுக்குச் சாதகமான ஒரு பங்களிப்பை இந்தியாவிடம் புலிகள் எப்படி எதிர்பார்க்கலாம்? என்று இந்திய அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்களே?
பதில்-நாங்கள் ஒருபோதும் அப்பாவி சிங்களர் மீது தாக்குதல் மேற்கொள்வதில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகிற ஒர் விடுதலை இயக்கம் எங்களுடையது. எந்தவொரு சாதாரண மக்களையும் கொல்வதால் பிரச்சினைக்கு தீர்வு எற்பட்டுவிடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருப்பவர்கள். இந்திய அரசியல் நோக்கர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அதனை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
கேள்வி-""புலிகளின் தலைவர் பிரபாகரன் நீண்டகாலம் பதுங்கு குழியில் வாழ்ந்துவிட முடியாது என்றும் அவர் சரணடைந்துவிட வேண்டுமென்றும்'' இலங்கை ராணுவம் எச்சரித்து வருகிறதே?
பதில்-பதுங்கு குழிகளில் வாழவில்லை. மக்களுடனேயே வாழ்ந்து, மக்களுக்காகப் போராடி எமது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தி வருகிறோம். கடந்த 30 வருடங்களாக சிங்கள ராணுவம் அவ்வாறான வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து வருவது வழமையான ஒன்று.
கேள்வி-தற்போதைய நெருக்கடியான களச்சூழலில் என்ன மனநிலையில் உள்ளீர்கள்?
பதில்-உறுதி தளராத நம்பிக்கையுடன் எமது விடுதலை போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் மனோவல்லமையுடன் இருக்கிறோம். கடந்த 30 வருட விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து அவ்வாறான சந்தர்ப்பங்களையெல்லாம் எமக்கு சாதகமாக மாற்றியுள்ளோம்.எங்களது உறுதி தளராத மனநிலையைப் பற்றியும் தலைமைத்துவம் பற்றியும் இந்திய அமைதிப்படையின் ராணுவத் தளபதிகளாக இருந்தவர்களே பாராட்டி எழுதியுள்ளனர். எந்த நெருக்கடிகளிலும் உறுதி தளராத மனோதிடம் பெற்றுள்ளோம்.
கேள்வி-பிரபாகரன் வெளிநாட்டிற்கு அகதியாக தப்பிச் செல்ல முயற்சிப்பதாக இலங்கை ராணுவம் கூறி வருவது பற்றி?
பதில்-வழமையான பொய்ப் பிரச்சாரத்தைத் தவிர வேறில்லை.
கேள்வி-பிரபாகரன் சரணடைந்தால் உயிரோடு இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்கிறாரே ராஜபக்சே?
பதில்-ராஜபக்சேவின் பல கனவுகளில் அதுவும் ஒன்று.
கேள்வி-முப்பது வருடமாக நீடித்துவரும் இனப் பிரச்சினையில் தமிழகத்தின் பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
பதில்-எமது மக்களுக்கான விடுதலை கிடைக்கும்வரை தொடர்ச்சியான வழமையான ஆதரவை நல்கி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைப்பதற்கு செயல்பட வேண்டுமென்பது எங்களின் எதிர்பார்ப்பு.
கேள்வி-சர்வதேச நாடுகளுடனான புலிகளின் தொடர்புகள் நீடிக்கின்றனவா?
பதில்-சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எங்களின் வழமையான தொடர்புகள் இருந்து வருகின்றன.
கேள்வி-இப்போதும் நீங்கள் தமிழீழக் கோரிக்கையைத் தான் தீர்வாக முன்வைக்கிறீர்களா?அல்லது ஒரு குறைந்தபட்ச சுயாட்சி கொண்ட நிர்வாக அமைப்பாவது தீர்வாக இருக்கட்டும் என நினைக்கிறீர்களா?
பதில்-1977அம் அண்டு காலத்திலிருந்தே எமது மக்கள் தமது அரசியல் அபிலாசைகள் என்னவென்பதை ஒவ்வொரு தேர்தல்போதும் வெளிப்படுத்தியே வந்துள்ளனர். அதுதான் இனச்சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
நக்கீரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment