இந்தியாவுக்கு "மீண்டும் திரும்பும்' பிரபாகரன்
[28 - October - 2008] [Font Size - A - A - A]
தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் அமைச்சர்கள் (மத்திய அரசிலுள்ள) ஏன் ராஜிநாமா (பின் திகதியிடப்பட்ட) கடிதங்களை கையளித்தனர்?
இந்தியாவின் முன்னணி இணையத்தளமான தெகல்ஹாவில் வினோஜ்குமார் தான் கண்டு கேட்டதை விரிவாக எழுதியுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
2002 இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவையும் ஏனைய அரசியல்வாதிகளையும் இலங்கைத் தமிழ் போராளிகளின் ஆதரவாளர்களென கூறிக் கைது செய்திருந்தார். 6 வருடங்களின் பின்னர் நிலைமை முழுமையாக தலை கீழாக மாறியுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் மன நிலை தமிழ்க் கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது. மாநிலத்தின் இரு முன்னணி ஊடக இல்லங்களான "நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்', தமிழ் வார இதழான "ஆனந்த விகடன்' ஆகியவை மேற்கொண்ட அண்மைய கருத்துக் கணிப்பீட்டின் பிரகாரம் இலங்கைத் தமிழ் விடுதலை இயக்கத்துக்கும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அடிமட்டத்தில் அபரிமிதமான ஆதரவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்களின் இழப்புகள் அதிகரித்து வருவது தொடர்பான செய்திகள் பிரபாகரன் மீதும் புலிகள் இயக்கத்தின் மீதுமான பொதுமக்களின் அனுதாபத்தை வலுவடையவே செய்துள்ளது.
கடந்த இரு வாரங்களாக மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்கள் பரவலாக இடம்பெற்றன. பல இடங்களில் இலங்கை அரச தலைவரின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன. சிங்களவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றதென்ற குற்றச்சாட்டில் ஆங்கில தினசரியான "இந்து'வின் பிரதிகள் எரிக்கப்பட்டன. கோயம்புத்தூரில் "இந்து' அலுவலகம் மீது தாக்குதல் இடம்பெற்றது. மாணவர்கள் வகுப்புகளைப் பகிஷ்கரித்தனர். சட்டத்தரணிகள் நீதிமன்றங்களை புறக்கணித்தனர். அக்டோபர் 19 ஆம் திகதி திரைப் படத்துறையினர் இராமேஸ்வரத்தில் மாபெரும் எதிர்ப்புப் பேரணியை நடத்தினர்.
பாராளுமன்றத் தேர்தலில் கண் வைத்திருக்கும் அரசியல் கட்சிகள் ஈழப் பிரச்சினையை கையிலெடுக்க வேண்டிய நிலைமைக்கு வலிந்து தள்ளப்பட்டனர். திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த தமிழ் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காவிடில் பதவியை இராஜிநாமா செய்து விடப் போவதாக மிரட்டியுமிருந்தனர். ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசுக்கு ஆதரவளிக்கும் (16 தி.மு.க., 5 பா.ம.க., 10 காங்கிரஸ், 2 ம.தி.மு.க., 2 ம.தி.மு.க. அதிருப்தியாளர்) இந்த எம்.பி.க்களின் அச்சுறுத்தலையடுத்து முகத்தை காப்பாற்றிக் கொள்ளும் தீர்வுக்காக இந்திய அரசு கொழும்புடன் தொடர்பு கொண்டுள்ளது.
அதேசமயம், சென்னையிலிருந்து தென்மேற்கே 375 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் சேலம் மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் இருக்கின்றனர். "குடும்ப உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டால் உங்கள் குடும்ப அல்பத்திலிருந்து அவரின் படத்தை எடுத்து வீசிவிட மாட்டீர்கள். அவர் இப்போதும் குடும்ப உறுப்பினராக இருக்கிறார். எங்கள் குடும்பங்களின் ஒரு உறுப்பினரே பிரபாகரன். அவர் குறித்துப் பெருமைப்படுகிறோம். அவர் விடுதலைப் போராளி என்று கூறுகிறார் கொளத்தூர் மணி. அவர் பெரியார் திராவிடக் கழகத் தலைவராவார். கொளத்தூர் பகுதியிலுள்ள கிராமங்களிலுள்ள பல வீடுகளின் சுவர்களில் பிரபாகரனின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலில் பிரபாகரன் போட்டியிட்டால் வெற்றி பெறுவாரென உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
கொளத்தூர் பட்டின பஞ்சாயத்தில் 10 கிராமங்கள் வரை இருக்கின்றன. சனத்தொகை 75 ஆயிரமாகும். 1980 களில் பிரபாகரனின் உறுப்பினர்கள் 2 ஆயிரம் பேர் கும்பரப்பிட்டி போன்ற இக்கிராமங்களில் பயிற்சி பெற்றனர்.
"பையன்கள் சுமார் 3 வருடங்கள் இங்கு இருந்தனர். அவர்களுக்கு உணவும் புகலிடமும் கிராம மக்கள் வழங்கினர் என்று பால சுப்பிரமணியம் கூறுகிறார். இந்த முகாம்களில் தொண்டர் சேவைகளை இவர் மேற்கொண்டவராகும்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் பையன்கள் மிகவும் ஒழுக்கக் கட்டுப்பாடுடையவர்கள். அவர்களில் பலர் இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்கள். செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்த பையன்களும் இருந்தனர். அவர்கள் பலவற்றையும் இழந்தவர்கள். தமது தாய்மார், சகோதரிகள், தமது கண்முன்னால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் என்று பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையில் புலிகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பதையோ புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்பதான விடயங்களோ இக்கிராமங்களில் உள்ளோருக்கு ஏற்றுக் கொள்ள முடியாத கடினமான விடயங்களாகும். பலர் தமது பிள்ளைகளுக்கு பிரபாகரனின் பெயரை வைத்திருக்கின்றனர். வீடமைப்புத் திட்டங்கள் பலவற்றுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன், திலீபன் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
கடந்த வருடம் ஈழத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்தபோது இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொன் கணக்கில் அரிசியை சேகரித்தனர். விடுதலைப்புலிகளின் முகாமுக்கு பொறுப்பாக இருந்த பொன்னம்மானின் ஞாபகார்த்தமாக குப்பிப்பிட்டியில் பஸ் தரிப்பிடமொன்றை கட்டியுள்ளனர். பலவழிகளில் உதவி புரியும் அவர் கிராமத்தவர்களின் அன்பைப் பெற்றிருந்தார். "பழைய ஜீப்பொன்றை புலிகள் வைத்திருந்தனர். கொளத்தூர் சந்தையிலிருந்து பொருட்களை வாங்குவதற்கு அதனை அவர்கள் பயன்படுத்தினர். நோயாளிகளை பொன்னம்மான் அந்த ஜீப்பில் ஆஸ்பத்திரிக்கு ஏற்றிச் செல்வார்' என்று உள்ளூர் வாசியான தண்டபாணி நினைவு கூருகிறார்.
பஸ் தரிப்பிடம் 1989 இல் நிர்மாணிக்கப்பட்டது. இலங்கையில் பொன்னம்மான் இறந்த போது இது அமைக்கப்பட்டது. இரு வருடங்கள் கழித்து ராஜீவ்காந்தி கொலையுண்டபின் காங்கிரஸ்காரர்கள் அந்த பஸ்தரிப்பிடத்தை நாசப்படுத்திய போது கிராமவாசிகள் அவர்களுடன் சண்டையிட்டனர். "ராஜீவ்காந்தியை எப்போதாவது நாங்கள் பார்த்ததுண்டா? அவர் எங்களுடன் இருந்து உணவருந்தினாரா? என்று அவர்கள் அச்சமயம் கேள்வி எழுப்பியிருந்தனர். பொன்னம்மான் அவர்கள் மத்தியில் மூன்று வருடங்கள் தங்கியிருந்து அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டவர்' என்று மணி கூறுகிறார்.
2006 இல் சிறுவர்கள் காப்பகத்தில் 60 பிள்ளைகள் இலங்கை விமானப் படையின் தாக்குதலில் பலியான போது இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 500 பாடசாலை மாணவர்கள் எதிர்ப்புப் பேரணி நடத்தினர். இந்தப் பேரணி தன்னார்வத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகும். ஏனென்றால் ஈழத் தமிழர்கள் எமது சகோதர சகோதரிகள் என்று பாலகிருஷ்ணன் கூறுகிறார். விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவர் "ரைகர் பாலு' என்று அழைக்கப்படுகிறார். அவர் தனது கடைக்கு "ரைகர்ஸ் ஓட்டோ எலெக்ரிக்கல் வேர்க்ஸ்' என்று பெயரிட்டுள்ளார். பெயர் பலகையில் புலிகளின் சின்னம் காணப்படுகிறது. புலியின் தலையில் சன்னங்கள் சுற்றிவர உள்ளன. "நான் புலிகளின் ஆதரவாளன்' என்று கூறுகிறார் நல்லதம்பி. "எனது குடும்பத்தவர்கள் யாவருமே பிரபாகரனை விரும்புபவர்கள்' என்று மாது கூறுகிறார். தனது சிகையலங்கார நிலையத்திற்கு திலீபனின் பெயரை அவர் சூட்டியிருக்கிறார். "எந்தவிதமான ஆதரவையும் புலிகளுக்கு வழங்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். முன்னரும் நாம் அவர்களுக்கு ஆதரவு வழங்கினோம். தொடர்ந்தும் அதனைச் செய்வோம் என்று உணர்ச்சிவசப்பட்டவராக அவர் தெரிவித்தார்.
1991 இல் ராஜீவ்காந்தி படுகொலை இடம்பெற்ற பின்னரும் கொளத்தூர் புலிகளின் நடவடிக்கைக்குரிய இடமாகவே இருந்து வருகிறது. 1993 இல் புலி உறுப்பினர் கிருபன் திருச்சி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் தப்பிச் சென்றார். கடல் வழியாக ஈழத்திற்குச் செல்வதற்கு முன்னர் அவர் கொளத்தூரிலேயே தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
பொலிஸாரிடமிருந்து அவர் தப்பிச் செல்ல அமர்த்தப்பட்ட கார் கொளத்தூருக்கு சமீபமாகவே எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. விடுதலைப்புலி உறுப்பினர் தப்பிச் செல்ல உதவியதாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 1994 இல் மணி தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் வேலூர் கோட்டையிலிருந்து 43 புலி உறுப்பினர்கள் தப்பிச் சென்றதில் தொடர்பு இருந்ததாக மணி மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தார். 126 அடி நீளமான சுரங்கப் பாதை அமைத்தே அவர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. இலங்கைக்குப் போவதற்கு முன்னர் தப்பிச் சென்றவர்கள் பலர் கொளத்தூர் காடுகளிலேயே தங்கியிருந்ததாக கிராமவாசிகள் கூறியுள்ளனர்.
இரு வருடங்களுக்கு முன்பு வரை கொளத்தூரிலுள்ள பலர் புலிகளின் பிரசுரமான எரிமலையை வாங்கிப் படித்து வந்தனர். இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்த பின்னர் சஞ்சிகை நிறுத்தப்பட்டு விட்டது. ஆயினும் தமிழீழத் தொலைக்காட்சி மூலம் என்ன நடக்கின்றது என்பதை அப்பகுதி மக்கள் அறிந்து கொண்டிருந்தனர். தினமும் இரு மணித்தியாலங்கள் விடுதலைப்புலிகளால் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. ஆனால், கடந்த 6 மாதங்களாக ஒளிபரப்பு இல்லை என்று கற்கிடங்கு உரிமையாளரான ரி.எஸ்.பழனிச்சாமி என்பவர் தெரிவித்தார். புலிகளின் ஒளிபரப்புக் கோபுரம் சேதமாக்கப்பட்ட பின் ஒளிபரப்பு சேவை இடைநிறுத்தப்பட்டு விட்டது. இந்திய ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்படுவதாக உள்ளூர் வாசிகள் குற்றம்சாட்டுவதுடன், சர்வதேச வானொலிகளை கேட்கின்றனர். சில இடங்களில் ஒளிபரப்பு நாடாக்கள் கிடைக்கின்றன.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான உணர்வலைகள் இங்கு உயர்மட்டத்தில் இருக்கும் போது தமிழக அரசியல் கட்சிகள் பிரபாகரனின் சேனையின் கரங்களில் தம்மை வெளிப்படுத்துவதற்கு பின்னணியிலேயே நிற்கின்றன. ஐக்கிய முற்போக்கு முன்னணியின் நடவடிக்கைகளை எதிர்பார்த்தே அவை பின்னணியில் நிற்கின்றன.அந்தப் பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன.
(தி.மு.க. எம்.பி.க்களின் பதவி விலகல் தீர்மானம் ஒத்தி வைக்கப்படுவதாக கருணாநிதி அறிவித்ததற்கு முன்னராக தெகல்ஹா இணையத்தளம் இக்கட்டுரையை பிரசுரித்திருந்தது.)
http://www.thinakkural.com/news/2008/10/28/importantnews_page60814.htm
0 விமர்சனங்கள்:
Post a Comment