இந்தியாவை ஒதுக்கி வைத்து ஈழத் தமிழர் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு இல்லை
இந்தியாவை ஒதுக்கி வைத்து ஈழத் தமிழர் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு இல்லை: இரா.சம்பந்தன்
[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 05:43 மு.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்]
இந்தியாவை ஒதுக்கி வைத்து ஈழத் தமிழர் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுவிசிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் 'நிலவரம்' ஏட்டுக்கு அவர் அளித்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வன்னி மக்களின் அவலம் தொடர் கதையாக இருக்கின்றது. அனைத்துலக தொண்டு நிறுவனங்களைப் பலவந்தமாக வெளியேற்றிய சிங்கள அரசு அங்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் செல்வதையும் தடுத்து வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல மட்டங்களில் முயற்சி செய்தும் மாற்றம் எதுவும் இன்றி நிலைமை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
வன்னியில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக மக்களுக்கு ஏற்படுகின்ற அழிவுகள், இழப்புக்கள், உயிர்ச் சேதங்கள், தொழில் இழப்புகள், குடிப்பெயர்வுகள் போன்ற விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு மட்டங்களில் குரல் கொடுத்து வந்திருக்கின்றோம்.
இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியுடன் இந்த விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக நாங்கள் உரையாடி வந்திருக்கின்றோம். அவர்களுக்கு வன்னியில் இருந்து வெளியேறும் நோக்கம் இருக்கவில்லை. தங்களுடைய கடமைகளைப் புரிவது கஸ்டமாக இருந்த போதிலும், மேலும் கஸ்டங்கள் ஏற்படலாம் என அவர்கள் எதிர்பார்த்த போதிலும் கூட வெளியேற வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை. நிச்சயமாக அரசாங்கத்தின் வற்புறுத்தல் காரணமாகத் தான் அவர்களும் ஏனைய அனைத்துலக தொண்டு நிறுவனங்களும் வன்னியில் இருந்து வெளியேறி இருக்கின்றார்கள்.
அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் இந்த விதமாக நிறுவனங்களை வெளியேற்றினால், கட்டாயப்படுத்தினால் மக்களுடைய கஸ்டங்கள் அதிகரிக்கும். இவ்வாறு மக்களுடைய கஸ்டங்கள் அதிகரித்தால் அதன் காரணமாக மக்கள் தாங்களாகவே அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறி தங்களுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருவார்கள் என அரசாங்கம் எண்ணியிருக்கலாம். ஆனால், அரசாங்கத்தின் அந்த நோக்கம் கைகூடவில்லை. மக்கள் வரவில்லை.
மக்கள் வரமாட்டார்கள் என்ற கருத்தை நாங்கள் முன்கூட்டியே பகிரங்கமாகக் கூறியிருந்தோம். அரசாங்கத்தின் இந்த விதமான போக்குத் தான் இன்றைக்கு தாமதித்தாவது அனைத்துலக சமூகம் இதைப்பற்றித் தங்களுடைய நிலைப்பாட்டைப் பகிரங்கமாகச் சொல்வதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கின்றது.
இறுதியாக நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை விவாதத்தின் போது இது பற்றித் தெளிவாக நான் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தேன். இது அனைத்துலக மனித உரிமைகளை, அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களையும், உரிமைகளையும் மீறுகின்ற ஒரு செயல். இது இனப் படுகொலைக்குச் சமமானது எனக் கூறியிருந்தேன். தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இனப் படுகொலை ஒரு தொடர்கதையாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. தொடர்ந்தும் அனைத்துலக சமூகம் இதில் மௌனம் சாதிக்கக்கூடாது. அவர்கள் இந்த விடயங்களைத் தமது கவனத்தில் எடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம்.
இது சம்பந்தமாக நாங்கள் இங்கே ஐ.நா. சபை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று- அவர் தற்போது ஜெனீவாவில் இல்லை - அங்குள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மூவரைச் சந்தித்து அவர்களுக்கு நாங்கள் இந்த விடயத்தை விளக்கிச் சொன்னோம். கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சம்பந்தமாக, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட அழிவுகள் சம்பந்தமாக, மீள்குடியமர்வதில் மக்கள் எதிர்நோக்கும் கஸ்டங்கள் சம்பந்தமாக, அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனம் அவ்விதமான செயல்கள், அந்தவிதமான நடவடிக்கைகள் மக்கள் குடியேறுவதில் தங்களுடைய வாழ்க்கையை மீள ஆரம்பிப்பதில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், எதிர்நோக்குகின்ற விடயங்கள் சம்பந்தமாக பல அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் வெளியிட்ட அறிக்கைகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத்தில் நான் நிகழ்த்திய உரைகளின் பிரதிகளை அவர்களுக்குக் கையளித்து அது விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் கவனத்திற்கு அவர் ஜெனீவா திரும்பியதும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இது விடயம் சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணையாளர் தன்னுடைய கருத்தை வெளியிட வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டிருக்கின்றோம்.
இந்தியாவும் தற்போதைய நிலைமையை உணர்ந்து இந்த நிலைமை தொடர முடியாது என்றொரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றது என்று தோன்றுகின்றது. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் சிறிலங்கா அரசாங்கம் இந்தப் பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களை அந்த நாட்டு குடிமக்களாக கருதவில்லை. அவர்கள் இந்த நாட்டு குடிமக்களே அல்ல அந்நியர்கள் என்ற அடிப்படையில் தான் சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. இதை நாங்கள் நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றோம்.
இந்த விடயங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தால் கூறப்படும் தகவல்கள் அநேகமாக உண்மைக்கு மாறானவை. கிழக்கு மாகாணத்தில் போர் காரணமாக ஒரு தமிழர் கூடச் சாகவில்லை என அரச கூறுகின்றது. ஆனால், எங்களுடைய கணிப்பின்படி, பல்வேறு மனித உரிமை அமைப்புகளுடைய அறிக்கைகளின் அடிப்படையில் குறைந்தது 300 பேர் கொல்லப் பட்டிருக்கின்றார்கள் 261 பேரின் பெயர் விபரங்களை நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறேன். இதனைச் சமர்ப்பித்து மூன்று பேர் அடங்கிய ஆணைக்குழு நியமிக்கும் படியாக அரசுக்கு ஒரு அறைகூவல் விடுத்தேன். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் மூவரையும் உள்ளடக்கி ஒரு ஆணைக்குழுவை நியமித்து இந்த விடயம் தொடர்பாக உண்மையை அறிந்து ஒரு அறிக்கையை வெளியிடுமாறு நான் அரசாங்கத்திடம் கேட்டேன். அந்தக் குழுவின் தலைவராக முஸ்லிம் ஒருவரையே நியமிக்குமாறும் கேட்டிருந்தேன். ஆனால், அரசு அதனைச் செய்யவில்லை. செய்யவும் மாட்டாது. ஏனென்றால், அவ்வாறு விசாரணை மேற்கொண்டால் உண்மை வெளிவந்துவிடும்.
ஐ.நா. மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் அவர்கள் கடும் முயற்சியெடுத்தும் இலங்கையில் ஐ.நா. சபையினுடைய ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்க முடியவில்லை. அதாவது சகல விடயங்களும் சம்பந்தமாக அவதானிப்பதற்கு ஒரு கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்துவதற்கு அவர் கடும் முயற்சி எடுத்தபோதும் அது கைகூடவில்லை. சிறிலங்கா அரசு அதற்கு இனங்கவில்லை.
இவையெல்லாம் எதை உணர்த்துகின்றன வென்றால் தாங்கள் தொடர்ச்சியாக மனித உரிமைகளை மீறலாம். தமிழ் மக்கள் மீது சொல்லொணாத் துயரங்களை அவர்கள் திணிக்கலாம். இது வெளிவராமல் தாங்கள் மறைக்கலாம் என சிறிலங்கா அரசாங்கம் நினைக்கின்றது. அது நடைபெறக்கூடிய விடயமல்ல. தற்போதும் அது நடைபெறவில்லை. எப்போதும் நடைபெறக்கூடிய விடயமும் அல்ல. இதனுடைய விளைவுகளை சிறிலங்கா அரசு எதிர்நோக்க வேண்டிய காலம் விரைவில் வரும் என நான் நினைக்கின்றேன்.
தென் தமிழீழப் பிரதேசத்தில் குறிப்பாக திருமலை மாவட்டத்தில் மீளக் குடியமரும் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. உண்மையில் அங்கு நிலைமைகள் எவ்வாறு உள்ளன?
கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக திருகோணமலையில் அதுவும் தற்போது அதீத உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் பிரதேசத்தில் மக்கள் மீளக் குடியமர்வது கடினமான விடயம். அது சட்டத்தால் தடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டு சிறப்பாக அந்தப் பகுதியில் மக்களுடைய வீடுகள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. அங்கு தோட்டங்களோ பயிர்களோ எதுவுமே இல்லை. தான் நினைத்தவாறு புதிய பாதைகளை அரசாங்கம் அமைத்து வருகின்றது. தங்களுடைய தேவைகளுக்காக அந்தப் பாதைகளை அமைக்கின்ற பொழுது தமிழ் மக்கள், முஸ்லிம் மக்களுடைய சொந்தக் காணிகள் அவர்களுடைய குடியிருப்பு நிலங்கள், வயல்கள் இந்த விதமான காணிகளைச் சுவீகரித்து அவர்கள் இதை அமைக்கிறார்கள். மக்களுக்கு எதுவிதமான நட்ட ஈடு வழங்காமலும், அவர்களுடைய ஆலோசனையைப் பெறாமலும் சேருவிலவையும் பொலனறுவையையும் இணைக்கும் தெருவொன்று அமைக்கப்படுகின்றது.
மாவிலாறு ஊடாக வெலிகந்தயையும் பொலனறுவையையும் இணைத்து மற்றுமொரு தெரு அமைக்கப்படுகின்றது. இளைப்பாறிய இராணுவத்தினருக்கு வீடுகள் கட்டித் தர பாரியளவில் காணிகள் துப்பரவாக்கப்பட்டு ஆரம்ப வேலைகள் நடைபெறுகின்ற தருணத்தில் இந்த விடயம் பற்றி நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், எவ்வளவு காலத்திற்கு என்று கூற முடியாது.
அந்தவிதமாக சிங்கள மக்களை அங்கு குடியேற்றுவதற்கும் பலவிதமான முயற்சிகள் நடைபெறுகின்றது. இறால்குழி எனும் இடத்தில் 32 சிங்களக் குடும்பங்கள் குடியேற வந்தன. ஆனால், சிறிது காலத்தின் பின் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். ஏனெனில், அங்கே தமக்குப் பாதுகாப்பு இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.
புதிய வர்த்தக வலயங்கள், தொழில் வலயங்கள் என்று பல ஆரம்பிக்கப்பட்டு அவை மூலமாக அங்கே சிங்களக் குடியேற்றத்தைத் தொடர்வதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. சிங்கள அரசினால் ஆரம்பத்தில் கையாளப்பட்ட நடைமுறைகள் அதன் விளைவுகளை எல்லாம் அறிந்த பிறகும் கூட அவற்றை முழுமையாகக் கைவிடும் நோக்கம் அவர்களுக்கு இல்லை.
கிழக்கு மாகாணத்தில் சிங்களப் பெரும்பான்மை ஏற்படுத்தப்பட வேண்டும். என்பதில் அரசாங்கம் மிகவும் உறுதியாக இருந்து செயற்படுகின்றது. இது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல. முஸ்லிம் மக்களுக்கும் பாதிப்பு. உதாரணமாக தற்போது அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவர்கள் ஆழிப்பேரலையால் பாதிகப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு வீடுகள் கட்டித்தர சில முயற்சிகள் எடுத்தபோது அந்த முயற்சிகள் துவேசத்தைக் கக்கும் சில தேசிய இயக்கங்களால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அதேவிதமாக முஸ்லிம் மக்களுடைய ஆட்சியில் நீண்டகாலமாக இருந்த பல காணிகள் தற்போது சூழல் சுற்றாடல் அமைச்சின் சில நடவடிக்கைகள் மூலமாக அவை முஸ்லிம் மக்களுடைய உரிமைகளை இல்லாமலாக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
ஆதலால் கிழக்கு மாகாணத்தில் தற்போது உருவாகி வரும் நிலைமை தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் - தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் - ஏற்பட்டு வருகின்ற ஒரு நிலைமை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தில்; இதை நன்றாக உணர்ந்த முஸ்லிம் மக்கள் தங்களுடைய நிலைப்பாட்டை கிழக்கு மாகாணத்தில் தாங்கள் பாதுகாப்பாக இருந்தால் அது தாங்களும் தமிழ் மக்களும் ஒன்றாகச் சேர்ந்து சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த மக்கள் என்ற அடிப்படையில் ஒருமித்து போராடுவதன் மூலமாகத் தான் அதை அடையலாம் என்பதையும் இன்று அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். அதை இன்னமும் வலுப்படுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. அது வலுப்படுத்தப்பட வேண்டும். அந்தக் கிழக்கு மாகாண மண் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் உரிய மண். அதனால் இந்த விடயத்தில் நாங்கள் தற்போது கூடிய அக்கறை செலுத்தி வருகின்றோம்.
2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2009 ஏப்ரலில் 5 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இந்நிலையில் மீண்டுமொரு பொதுத் தேர்தல் நடைபெறுமானால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் த.தே.கூ. போட்டியிடக்கூடிய நிலை இருக்கிறதா? அத்தகைய உகந்ததொரு சூழல் ஒன்று உருவாவதற்கான அறிகுறிகள் இருக்கிறதா?
எதிர்காலத்தைப் பற்றி இப்போது பேச நான் விரும்பவில்லை. ஆனால், தமிழ்பேசும் மக்கள் நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் தந்தை செல்வாவினுடைய தலைமையின் கீழ் குறிப்பிட்ட சில கொள்கைகளை முழுமையாக பின்பற்றி, கைப்பற்றி அவற்றைப் பின்தொடர்ந்து வந்திருக்கின்றார்கள். அதை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள்.
அதாவது, தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம். அவர்கள் சரித்திர ரீதியாக தமிழ்பேசும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வடகிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். அந்தப் பகுதிகளில் அவர்கள் எப்பொழுதும் பெரும்பான்மையாக இருந்து வந்திருக்கின்றார்கள். ஒரு காலகட்டத்தில் அவர்கள் மிகவும் பெரிய பெரும்பான்மையாக இருந்திருக்கின்றார்கள்.
அந்த அடிப்படையில் அந்த மக்களுக்கு அந்தப் பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு. இது தான் எங்களுடைய அரசியல் சித்தாந்தம். இதிலிருந்து தமிழ் மக்கள் இன்னமும் மாறவில்லை என்பது என்னுடைய கருத்து.
இந்த நிலைப்பாட்டில் இருந்து எங்களுடைய மக்களால் மாற முடியாது. மாறவும் மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு பல்வேறு குழப்பங்களின் காரணமாக அரசாங்கத்தினுடைய பலவிதமான தலையீடுகளின் காரணமாக, பல்வேறு வகைகளில் நடைபெறுகின்ற தலையீடுகளின் காரணமாக சிலவேளை குழப்பங்கள் இருக்கலாம். ஆனால், இந்த அடிப்படையை தொடர்ந்தும் மக்கள் பின்பற்றுவார்கள் என்பதில் எனக்கு எதுவித சந்தேகங்களும் இல்லை. ஏனென்றால், 60 வுருடங்களுக்கும் மேலாக மக்கள் இதனைத் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கின்றார்கள்.
ஆகவே அவர்களுடைய அரசியல் சித்தாந்தம் அது தான் அவர்களுக்கு விடிவைத் தரக்கூடிய ஒரு நிலைமை. எங்களுடைய சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதாவது எங்கள் விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்ற எந்தப் பிரதேசத்திலும் எடுக்கின்ற முடிவுகள் எங்களுடைய மக்களின் பிரதிநிதிகளால், எங்களுடைய மக்களால் எடுக்கப்பட வேண்டும். அது கொழும்பில் எடுக்கப்பட முடியாது. சிங்கள அமைச்சர்களால் எடுக்கப்பட முடியாது. அவர்களுடைய கையாட்கள் மூலமாக எடுக்கப்பட முடியாது.
ஆகையால் இதை உணர்ந்து உண்மையை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பில் அனைத்துலக சமூகத்துடன் தொடர்புகளைப் பேணி வருகின்றவர் நீங்கள். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக அனைத்துலகம் எத்தகைய தீர்வைப் பரிந்துரைக்கின்றது? இது தொடர்பில் முன்னைய நிலைப்பாட்டில் இருந்து ஏதும் மாற்றங்கள் தெரிகின்றதா?
அனைத்துலக சமூகம் எப்பொழுதும் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தைத் தான் முன்வைத்தது. முன் வைத்துக் கொண்டு வருகின்றது. இந்தியாவும் அந்த நிலைப்பாட்டைத் தான் பின்பற்றி வந்திருக்கின்றது.
ஆனால், எங்களுடைய சந்திப்புகளின் போது கடந்த சில வருடங்களாக நாங்கள் ஒன்றை மிகவும் தெளிவாகக் கூறி வருகின்றோம். அரசியல் தீர்வு, இலங்கையினுடைய ஒருமைப்பாடு, ஒற்றுமை என்பவை வெறும் முழக்கங்களாக இருக்க முடியாது. அவற்றுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். இலங்கையினுடைய ஒற்றுமை, ஒருமைப்பாடு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களுக்கும் அவர்களுக்குரிய அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். கிடைக்காமல் அதைப்பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. இதுபற்றி பாரதப் பிரதமருக்குக் கூட நாங்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை நாங்கள் சந்தித்தபோது இந்த விடயங்களை அவரிடம் நான் மிகவும் தெளிவாகக் கூறியிருக்கின்றேன்.
இலங்கை ஒரு நாடாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் சரித்திர ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசம் இலங்கை - இந்திய அனைத்துலக ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிலைப்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டும். தொடர்ந்து அது நடைமுறையில் இருக்க வேண்டும். சூழ்ச்சிகளின் மூலமாக வடக்கு - கிழக்கை பிரித்துவிட்டு அதற்குப் பிறகு இலங்கை ஒரு நாடாக இருக்க வேண்டும் எனப் பேசுவதில் அர்த்தம் இல்லை.
வடக்கு - கிழக்கைப் பிரிப்பதாக இருந்தால் எந்த நாளும் இலங்கை ஒரு நாடாக இருக்க முடியாது. வடக்கு - கிழக்கு இலங்கைக்கு வெளியே உள்ள பிரதேசமாக இருக்க வேண்டும். இந்த உண்மைகளை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
எங்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையைத் தந்து சுயமரியாதையுடன் அரசியல் அதிகாரத்துடன் வாழக்கூடிய நிலைமை எமக்குக் கிடைக்காவிட்டால் அனைத்துலக சட்டத்தின் பிரகாரம் அது முழுமையான வெளி சுயநிர்ணய உரிமைக்கு உரித்தைத் தருகின்றது.
தொடக்கத்தில் நாங்கள் பிரிவினையைக் கேட்கவில்லை. தனிநாட்டைக் கேட்கவில்லை. நாங்கள் சமஸ்டியின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய உரிமையைத் தான் கேட்டோம். இன்றும் அதனை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனால், சிறிலங்கா அரசாங்கம் தர மறுக்கின்றது. தர மறுத்தால்? எங்களுடைய உரிமை மறுக்கப்படக்கூடாது என்பதை அனைத்துலக சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனை நாம் அவர்களக்குச் சொல்ல ஆரம்பித்து விட்டோம். மிகவும் தெளிவாகச் சொல்லுகின்றோம். அவர்களும் அதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள். அதனுடைய நியாயத்தை அவர்கள் தற்போது புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள்.
ஈழத் தமிழர் விவகாரம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மீண்டுமொருமுறை விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைத் துறக்கப் போவதாக எச்சரித்திருக்கின்றார்கள். கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி உட்பட பலர் தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த மீள் எழுச்சிக்குக் காரணம் என்ன? இது தொடரும் என நினைக்கின்றீர்களா?
இந்த மீள் எழுச்சிக்குக் காரணம் என்னவென்றால், எனது கணிப்பின்படி சமீப காலங்களில் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு உணர்வு உருவாகியிருக்கின்றது. அது என்னவென்றால் சிறிலங்கா அரசாங்கம் ஒரு போதும் அங்கே வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நீதி நியாயம் வழங்க மாட்டாது. அதற்கு மாறாக சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை அழித்து ஒழிப்பதற்கு இன்றைக்கு ஒரு போரை நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இதுவே உண்மை. புலிகளை சிறிலங்கா அரசாங்கம் குற்றம் கூறி தமிழ் மக்களை விடுவிப்பதற்குத் தாங்கள் செயற்படுகின்றோம் என்று கூறினால் தமிழ் மக்களுக்கு ஒரேயொரு அரசியல் தீர்வை தாராளமாக சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும். அந்தவிதமான ஒரு தீர்வை வழங்காமல் இந்த போரில் ஈடுபட்டுக்கொண்டு தமிழ் மக்களை விடுவிப்பதற்காக நாங்கள் செய்கிறோம் எனக் கூறமுடியாது. இதனை இன்றைக்கு தமிழ் நாட்டில் உள்ள மக்கள் நன்கு உணரத் தொடங்கியுள்ளார்கள்.
நானறிந்த வகையில், சமீபத்தில் செய்திகளில் படித்த வகையில் ஆனந்த விகடன் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் கூட இந்த விடயங்கள் சம்பந்தமாக மக்களிடம் இருந்து கருத்துக்கணிப்பு எடுத்த போது இந்த நிலைமை தெரிய வந்தது. ஆகையால், இதுவே இந்த மாற்றத்துக்குக் காரணம் என நான் நினைக்கின்றேன். ஆனால், இதை மிகவும் பக்குவமாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் உண்டு.
இந்த எழுச்சி தொடருமா?
தொடர வேண்டும். தொடருமா இல்லையா என்பது பல்வேறு நிகழ்வுகளில், நகர்வுகளில், பல்வேறு கருமங்களில் தங்கியிருக்கின்றது. ஆனால், எங்களுடைய கருமங்களை நாங்கள் தெளிவாக முன்னெடுத்தால் நிலைமை தொடரும். ஏனென்றால் இது நீண்டகாலமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்துக்கள், சிந்தனைகளின் அடிப்படையில் உருவான ஒரு நிலைப்பாடு. பலவிதமான கசப்பான நிகழ்வுகளின் மத்தியில், பலவிதமான கருத்து வேறுபாடுகளின் மத்தியில், நீண்ட காலமாக மக்கள் அங்கத்தைய நிலைமையை அவதானித்த பிறகு உருவாகிக் கொண்டு வருகின்ற ஒரு நிலைப்பாடு. ஒரு உணர்ச்சியின் அடிப்படையில் உருவான நிலைப்பாடு மாத்திரமல்ல. ஆகவே இது தொடரும். தொடரக்கூடிய வகையில் நாங்களும் செயற்பட வேண்டும் என நான் நினைக்கின்றேன்.
இத்தகைய பின்னணியில் நீங்கள் பாரதப் பிரதமரை மீண்டும் சந்திக்க இருப்பதாகத் தெரிகின்றது. இந்த சந்திப்பில் எது பற்றிக் கதைக்க இருக்கின்றீர்கள்?
பேச வேண்டிய விடயங்கள் சகலவற்றையும் பற்றிப் பேசுவோம். பாரதப் பிரதமரைச் சந்திக்கும் போது அது பற்றிப் பார்ப்போம். அது பற்றி இப்போது சொல்ல முடியாது. அது அநாகரிகமாக இருக்கும். ஆனால், பாரதப் பிரதமரோடு பேச வேண்டிய அத்தனை விடயங்களையும் ஒளிவுமறைவின்றி மிகவும் தெளிவாக மிகவும் உறுதியாகப் பேசுவோம்.
தமிழர்கள் பிரிந்துபோக விரும்புகின்றார்கள். இந்தியாவோ ஐக்கிய இலங்கைக்கு உள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவின் அனுசரணையுடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவது சாத்தியமா?
இந்தியாவை நாங்கள் ஒரு போதும் ஒதுக்கி வைக்க முடியாது. எங்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணுவதில் இந்தியாவுக்கு முக்கியமான பங்கு இருக்கின்றது. அந்தப் பங்களிப்பை இந்தியா செய்ய வேண்டும். இந்தியா எமது பக்கத்தில் நிற்காது விட்டால் அனைத்துலக சமூகம் எங்கள் பக்கத்தில் நிற்காது. அமெரிக்காவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது ஐக்கிய இராச்சியமோ அல்லது வேறெந்த நாடோ எங்கள் பக்கத்தில் நிற்கும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது.
இந்தியா எங்களுடன் இருக்குமாக இருந்தால் அனைவரும் எங்களுடன் நிற்பார்கள். நாங்கள் தனியே நிற்க முடியாது. இதனை எல்லோரும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு போதும் தனியே நிற்க முடியாது. எங்களுக்கு உதவி தேவை. எங்களுக்கு உதவக்கூடிய ஒரேயொரு நாடு இந்தியா. மற்ற விடயங்கள் காலப்போக்கில் முறையாகக் கையாளப்பட வேண்டிய விடயங்கள். அதைப்பற்றி நான் தற்போது பேச விரும்பவில்லை.
தமிழரின் விடுதலைக்காக களத்திலே புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துலக இராஜதந்திர மட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராடிக் கொண்டிருக்கின்றது. புலம்பெயர் தமிழர்களும் தங்களால் முடிந்தளவு பங்களிப்பை நல்கி வருகின்றனர். இதில் புலம்பெயர் தமிழர்கள் இன்றும் காத்திரமாகச் செய்யக்கூடிய பணி ஏதாவது உள்ளதா?
புலம்பெயர்ந்த மக்கள் சிறப்பாக தாங்கள் வாழுகின்ற நாடுகளில் இன்று ஓரளவிற்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் அவர்கள் தமிழர்களுடைய தாயகம், தமிழர்களுடைய தேசியப் பிரச்சினை, தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமை போன்ற கருமங்களைப் பற்றி அவர்கள் மிகவும் அவதானிப்புடன் இருக்க வேண்டும். தங்கள் தங்கள் நாடுகளிலே தங்களுடைய அரசாங்கத்திற்கு எங்களுடைய மக்களுடைய கோரிக்கைகளின் நியாயத்தை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். அதற்காக ஆதரவு திரட்ட வேண்டும்.
நாங்கள் நியாயத்தைக் கேட்கின்றோம். இன்றைக்கு இலங்கையில் வன்முறைகள் நடைபெறுகின்றதாய் இருந்தால் தமிழ் மக்களுக்கு உரிய நேரத்தில், உரிய காலத்தில், உரிய முறையில் நியாயம் வழங்கப்படாத காரணத்தின் நிமித்தம் தான் இன்றைக்கு அங்கு வன்முறை நிலவுகின்றது. இன்றைக்குக் கூட அந்த நியாயத்தைத் தருவதற்கு சிறிலங்கா அரசு தயாராக இல்லை. அந்தக் கருத்தை புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்க வேண்டும். சகல வழிகளிலும் தமிழர்களுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டிய வகையில் தமிழர்களுடைய நீண்டகாலப் போராட்டம் வெற்றி பெறக்கூடிய வகையில் உதவிகளை புலம்பெயர் மக்கள் செய்து வரவேண்டும். அது உங்களுடைய கடமை.
புலம்பெயர் மக்களில் சாதாரண மக்கள் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்கள், கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்கு பற்றி வருகின்றார்கள். ஆனால், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ப் புத்திஜீவிகளில் அநேகர் - குறிப்பாக கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழ்வோர் இன்னமும் ஒதுங்கியே இருக்கின்றார்கள். அவர்களுடைய பங்களிப்பு குறைவாகவே உள்ளது. அவர்களை சிறப்பாக எமது செயற்பாடுகளில் பங்கெடுக்கச் செய்ய என்ன செய்யலாம்?
அதைப்பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் கூறுகின்ற கருத்தை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்துப் புத்திஜீவிகளும் அந்த நிலைமையில் இல்லை. தொடக்கத்தில் பலரும் மிகவும் அக்கறையாக இருந்தார்கள். பெரும் ஆர்வமாக இருந்தார்கள். அது விடயம் சம்பந்தமாக ஆய்வு செய்து விசாரித்து நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட வேண்டியிருந்தால் அதனை நாங்கள் செய்ய வேண்டும் என்றார் சம்பந்தன்.
Puthinam.com
0 விமர்சனங்கள்:
Post a Comment