கிளிநொச்சியில் தற்பொழுது பொதுமக்கள் எவரும் இல்லை - பசில் எம்.பி. தெரிவிப்பு
பொதுமக்களுக்கு சில கஷ்டங்கள் இருப்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவற்றை நாம் குறைக்க வேண்டியுள்ளது. கிளிநொச்சியில் தற்போது பொது மக்கள் இல்லை . அவர்கள் எமது தாக்குதல் எல்லைக்கு அப்பால் புலிகளின் பிரதேசத்திற்குள் சென்றுவிட்டனர் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், புதுடில்லியும் கொழும்பும் உண்மையான நண்பர்கள் என்று தெரிவித்துள்ள அவர், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புக்களை குறைந்த மட்டத்தில் பேணிவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பசில் ராஜபக்ஷ எம்.பி, அந்நாட்டின் அமைச்சர்கள் மட்டத்திலான உயர்மட்ட குழுவினரை சந்தித்த பின்னர் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அச்செய்திச் சேவைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கில் இடம்பெறும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் தற்போது பெய்துவரும் பருவ மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது. இரு நாடுகளும் மிகவும் உண்மையான தோழமையுடன் செயற்படுகின்றன. இரு நாட்டிலுள்ள பொதுமக்களும் அவ்வாறே இருக்கின்றனர்.
இந்தியா இலங்கைக்கு ஒரு சிறந்த நண்பன் என்பதை நிரூபித்துள்ளது. அத்துடன் இலங்கையிலுள்ள பிரச்சினையையும் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளது. யுத்தம் நடைபெறும் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பிற்காக எம்மால் முடியுமான அனைத்து ஏற்பாடுகளையும் செய் வேண்டும் என்பதில் நாம் தெளிவடைந்துள்ளோம்.
இது விடயமாக இந்திய உயர்மட்ட அதிகாரிகளுடனும் நாம் கலந்துரையாடினோம். நாம் மனித அழிவுகளை பூச்சிய நிலைக்கு கொண்டுவரவேண்டும் அல்லது மிகக் குறைந்த மட்டத்திற்கு குறைத்துக்கொள்ள வேண்டும். அங்கு பொதுமக்களுக்கு பல்வேறு கஷ்டங்கள் இருக்கின்றன. அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதனை நாம் குறைக்க வேண்டியுள்ளது. இப்போது கிளிநொச்சியில் பொதுமக்கள் இல்லை. அவர்கள் தாக்குதல் நடைபெறும் எல்லையை தாண்டி விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் சென்று விட்டனர்.
கிளிநொச்சி நகர்ப்பகுதியில் வைத்தியசாலையை தவிர வேறு அரச அலுவலகங்கள் எதுவும் தற்போது இயங்கவில்லை. அனைத்து பொதுமக்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். அப்படி யாராவது அங்கிருப்பார்களானால் அவர்கள் விடுதலைப்புலிகளேயாவர்.
முல்லைத்தீவு மக்கள் இன்னும் தங்கள் வீடுகளில் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் கொள்வனவு செய்யக்கூடய சக்தி இல்லை. உணவுப் பங்கீட்டு அட்டைகளை வழங்குவதற்காக அவர்களை நாம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் என அழைக்கின்றோம். தவிர மன்னார் மற்றும் கிளிநொச்சி மக்களே தற்போது இடம்பெயர்ந்துள்ளனர்.
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment